• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 18

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 18


மாபெரும் சத்தமாக ஒலித்த அவனின் யாசிப்பு பேதையின் செவியை மட்டுமின்றி மனதையும் நிறைத்திருந்தது. 'இல்லை, நீ சமாதானம் செய்தாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், போடா' என்று அவள் செய்த சபதமெல்லாம் காற்றோடு கரைந்து தான் போனது போலும். அமைதியாய் அமர்ந்திருந்தவளின் மனம் மட்டுமின்றி உடலுமே சற்று இளகி கரைய துவங்கியது அவனின் ஸ்பரிசத்தில். இத்தனை நாளாக பேதையை சூழ்ந்திருந்த அலைப்புறுதல்களையெல்லாம் ஒரே நாளில் வடிய செய்திருந்தது ஆடவன் அருகாமை. அது தான் எப்பொழுதும் அவளின் ஆகச்சிறந்த வருத்தமும் கூட. 'நான் ஏன் இவனிடம் மட்டும் இவ்வளவு பலவீனமாகி போகிறேன்? அவன் கட்டுப்படுத்துக்கிறானா? இல்லை நான் அவனுள் அடங்கி விடுகிறேனா?' என்ற வினாக்கள் எப்பொழுதும் போல் மனதை வியாபிக்க துவங்க அது அதீத காதலின் அங்கமென்பது இன்னும் அவள் உணரவில்லை தான். அவனை கண்டு கொண்ட நாளிலிருந்து இந்த விடையறியாத வினாக்களை மனது தன்னுள் நிரப்பியிருந்தது.



மௌனம் சூழ்ந்த நொடிகள் நீண்டு கொண்டே செல்ல பாவையின் மனது மட்டுமின்றி உடலுமே அதிர்ந்து சிலிர்த்து எழ என்ன மாதிரியாக உணர்கிறாள் என்று அவளுக்கே புரிபடவில்லை. அவனருகில் முற்றிலும் உடைந்து கரைய துவங்கி இருந்தாள். இத்தனை நாளின் ஆதங்கமெல்லாம் மொத்தமாக ஒன்று திரண்டு வந்து தாக்க மனதின் எங்கோ ஒரு மூலையில் அதீதமாக வலித்தது!


அந்த வலி சட்டென்று நீராக மாறி வெளியேற துவங்கியது. இமையின் ஓரம் ஈரம் துளிர்க்க அவளால் அதற்கு மேல் அமர்ந்திருக்க முடியவில்லை. எழுந்து நகர முயன்றவளின் இருபுறமும் கையூன்றி நெருக்கமாக வழியை மறைத்து நின்றவனுக்கு அவளின் விழி நீர் பொறுக்க முடியவில்லை தான். கத்தி, சண்டையிண்டு ஆர்பாட்டம் செய்திடும் கணங்களில் கூட வெகு சுலபமாக கையாண்டு அவளை தன்னுள் அடக்கி கொள்பவனால் உண்மையிலுமே அவளின் கண்ணீரை எதிர் கொள்ளும் தைரியம் துளியளவேணும் இருந்திருக்கவில்லை. ஆக, அவளின் பலவீனம் அவனென்பது போல் அவனின் பலவீனம் பாவையின் விழி நீர். ஏனோ அதை காணும் பொழுது அவனுடைய மனதும் அதீத கனமேறிக் கொள்கிறது. அதிலும் அதற்கு காரணம் தான் எனும் பொழுது மனதளவில் மரணித்து தான் மீள்கிறான்.


"கோபம் வந்தா என்னை அடிச்சிடு சாரா, அழாத டி ப்ளீஸ். வலிக்குது ரொம்பவே..இங்க" என்று தன்னிதயத்தை சுட்டிக் காட்டியவன் இறைஞ்சுதலோடு அவளின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்திக்கொண்டான். ஆம், எதையும் பேசி யார் மீது குற்றமென்று வாதாடி தீர்ப்பெழுத ஆடவனுக்கு விருப்பமில்லை. இருவருக்குமிடையில் இருக்கும் குற்றத்தை ஆராய்வது அபத்தமென்பதை நன்கு உணர்ந்திருந்தது அவன் மனது. நடந்து விட்டதற்கு முற்றுப்புள்ளியிட்டு இனி புது அத்தியாங்களை எழுத விழைந்தான்.


ஆடவனிடமிருந்து கையை நொடியில் உருவிக் கொண்டவள், அவன் மார்பில் சாய்ந்து முகத்தை வைத்து அழுத்தியிருக்க அப்படியொரு கேவல் எழுந்தது. அவனின் கழுத்தை இறுக பிடித்து புதைந்துக்கொண்டாள் அவனுள். ஆடவனுக்கும் சில நிமிடங்கள் தேவையாயிருந்தது அந்த சூழலை கடக்க. இதுவரை இருந்த இதத்தை மீறி இருவரிடமும் தோன்றிய வலிகள் கரைவது போல் ஒரு எண்ணத்தைக்கொடுத்தது அந்த நிலை.


அவளது சிகையை வருடியவன் கரங்களோ அவளின் இடையை தன்னுடன் அழுத்திப் பிடித்துக் கொண்டது. வலித்தாலும் சில நிமிடங்கள் அவனுடன் ஒன்றி நின்றவள் தலையை நிமிர்த்தி, "எனக்கு இப்படியே இந்த நிமிஷமே உங்களுக்குள்ள புதைஞ்சு போய்டணும்னு தோணுது சித்" என்றிட இதழ்கள் விரிய தலையசைத்தவனுக்கு அதே எண்ண அலைகள் தான் மனதை வியாபித்திருந்தது. ஏனோ ஆடவனை பிடித்தது, காரணங்களன்றி ஒரு வித இறுகிய பிணைப்பு.

"ஏன் உனக்கு என்னை இவ்வளவு பிடிச்சிருக்கு சாரா? நான் உனக்காக அப்படி என்ன தான் செஞ்சுட்டேன்" என்றவனுக்கு உண்மையிலே அவளின் அன்பை கண்டு மூச்சு தான் முட்டியது. ஆம், அவனுக்காக தானே குடும்பதையே கருத்தில் கொள்ளாது வெளியேறினாள். எப்படி ஆராய்ந்தாலும் காரணம் அவனையன்றி வேறொன்றுமில்லை என்று மனது அடித்துக் கூறியது. 'எப்படி எனக்காக இவளால் எல்லாவற்றையும் தூக்கியெறிந்திட முடிந்தது? நான் அப்படியொரு நிலையிலிருந்தால் கூட அவளை போல் செய்திருக்க மாட்டேனே!' என்ற நிதர்சனம் வேறு வந்து முகத்தில் அறைய அந்த கணங்கள் தோன்றியது, பெண்ணை இன்னும் இறுக்கி கொள்ள வேண்டுமென!... அதாவது உயிரை உருக்கி ஊனோடு கலந்திடும் அளவில் இறுக்கமாக, நெருக்கமாக தன்னுடன் பிணைத்திட விழைந்தது அபலை மனது!


பெருமூச்சை வெளியிட்டவள், "உலகத்தில சில விஷயங்களுக்கு காரணமே கிடையாது சித், தென் நீங்க நல்லவங்களா இருந்தது உங்களோட தப்பு, அதை விட பெரிய தப்பு என் முன்னாடி வந்தது. அதனால கூட இருக்கலாம்" என்று கண்களை சிமிட்டியவளின் இதழிலும் புன்னகை நிரம்பியது. யூகத்தினால் கூறிட்டாளே தவிர பேதையாலும் அவனின் மீதான பிரியங்களை வரயறைக்குள் அடக்க முடியவில்லை. ஆம், சிலரின் மீதான பிரியங்கள் வரையறைகளுக்கு அப்பாற்பட்டது தான் அந்த கருமுகிலினங்களை போல்! என்றுமே அது அலாதியானது...


இருவரது இதழையும் உறைந்த புன்னகை ஆக்கிரமித்துக் கொள்ள அந்த நிமிடங்களை அப்படியே கிரகித்து உள் வாங்க முயன்றனர்.... ஆடவன் இதழ்கள் எப்பொழுதும் தன்னை ஈர்த்திடும் அந்த மூக்குத்தியில் பதிந்து கன்னங்களை தழுவி இறுதியில் பெண்ணவளின் கழுத்து வளைவில் இளைப்பாறியது இதமாய். அவனுடைய இதழ் உரசல்களாலும் தன் மீது படர்ந்திடும் வெம்மையான சுவாசத்தாலும் பெண்ணவள் தவித்து போய் சிலிர்த்து நின்றாள். எப்பொழுதுமில்லாத ஒரு நடுக்கம் வந்து ஒட்டிக் கொள்ள உடலுடன் இணைந்து இதழுமே லேசாக நடுங்கியது. அடிவயிற்றில் இருந்து சொல்ல இயலாத உணர்வொன்று மேலெழும்பி ஆர்பரிக்க வதனம் நொடியில் செம்மை நிறத்தை பூசிக் கொள்ள உடம்பிலுள்ள மயிரிழைகள் எல்லாம் கூசி செங்குத்தாய் நிமிர்ந்து நின்றது.

மருண்ட விழிகளுடன் திணறிய பாவையின் புருவத்தை நீவி ஆசுவாசமாக்க முயன்றவன் விழிகள், 'சாராவிற்கு பயமா? அதுவும் என்னிடமா?' என்றதொரு பார்வையை கொடுக்க அவ்வளவு தான் பெண் நெகிழ்ந்து உருகி கரைந்திட்டாள் அவனுடைய கைகளில் எந்த வித சிறு எதிர்ப்புமின்றி. ஏனோ தன்னுடைய விழியும் மனமும் எப்பொழுதும் தன்னை விட அவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பது போலொரு எண்ணமெழ இதழ்களுடன் இணைந்து மனமும் நிறைந்தது, எல்லா கணங்களிலும் மேலிடும் எரிச்சலோ ஆதங்கமோ அல்லாது ஒரு வித கர்வம் வந்து ஒட்டிக்கொண்டது. ஆடவன் ஈர்த்தான், அவனுடைய கரங்களும் இதழ்களும் செய்திட்ட செயல்கள் மதியை மயக்கியது, பேதையின் பாவனைகளும் அசைவுகளும் ஆடவனின் சித்தம் கலங்க செய்து பித்தனாக்கியது. ஆக, இருவரும் ஒருவரை ஒருவர் மொத்தமாக மிச்சமின்றி விழுங்க முனைந்தப்படி மாய உலகத்தில் தான் பயணித்தனர். உணர்வுகள் எல்லையை கடக்க துவங்க அவர்களின் தயக்கங்களும் உடைந்து கரையை கடந்திட்டது.



வார்த்தைகளுக்குள் அடைக்க முடியாத உணர்வு குவியலொன்று இருவரையும் தழுவிக்கொள்ள தன்னுள் முழுவதுமாக பாவையை நிரப்ப முயன்றான் ஆடவன். ஆம், அவள் கூறியது போல் ஒருவருள் ஒருவர் புதைந்த நிலை தான். அத்தனை சுலபத்தில் மீள விரும்பாத நிலை! ஆம், நடுநிசி வரை மீளவில்லை தான்.


எல்லாம் சரியாகி விட்டதா? ஆம், அவன் அப்படியொரு எண்ணத்தை தன்னிடம் மட்டுமின்றி அவளிடமும் விதைத்திருந்தான். இருவருமே கடந்தவைகளை கைவிட்டு அந்த நிமிட ஏகாந்தங்களில் லயித்து கரைய துவங்கினார்கள்.

உறக்கம் கலைந்து விட்டாலும் எழ மனதின்றி, தன் தோள் மீது தலை வைத்து நித்திரையில் ஆழ்ந்திருந்தவளை இன்னும் சற்று அழுத்தி இறுக அணைத்து பிடித்தப்படி அவளது கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டான். பாவையின் ஸ்பரிசங்களை நாசி வழியாக கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுத்து நுரையீரலுக்குள் நிரப்ப முனைந்தவன் மனது நேற்றிரவின் நினைவுகளில் ஊஞ்சலாடியது.



அவனையும் அறியாமல் இதழை புன்னகை ஆக்கிரமித்துக்கொள்ள மனதை மொத்தமாக மனைவி நிரப்பி இருந்தாள். முழுவதுமாக ஒவ்வொரு அணுவிலுமே நிறைத்துக் கொண்டான் தன்னை விட்டு அகலாதவாறு பாவையை. அந்தோ பரிதாபம்! அவனது தவம் வெகு நேரம் நீடிக்கவில்லை. அலைபேசி ஒலி அவனை அபஸ்வரமாய் அழைத்திருந்தது. அவளின் உறக்கத்தை கலைக்க விரும்பாதவனாக விரைவாய் அவளை விலக்கி படுக்க வைத்து, எழுந்து அலைபேசியை அணைக்க முயல பாவை உறக்கம் கலைந்து அரக்க பறக்க எழுந்தமர்ந்திருந்தாள்.


அழைப்பை துண்டித்து, "ஹேய் என்னாச்சு சாரா, தூங்கு" என்றவன் அவளை படுக்க வைக்க முயல, 'வேண்டாம்' என மறுப்பாய் தலையசைத்து கண்களை கசக்கியவள் விழிகள் கடிகாரத்தை நோட்டமிட்டது. அதுவோ பணிரெண்டில் நிலைக்க, 'அச்சோ, ஒரு வேளை கடிகாரம் ஓடாமல் இரவிலே நின்று விட்டதோ?' என்றெண்ணியவள் விழிகள் அவசரமாக சாரளத்தை ஆராய்ந்தது.

மூடியிருந்த சாரளத்தின் கண்ணாடி கதவின் மீது சூரிய கதிர்கள் பட்டு ஜொலித்து அவளது அவஸ்தையை அதிகரிக்க, "ஏன் இவ்வளவு நேரம் தூங்க விட்டிங்க, ஆபிஸ் போகணும், போச்சு" என்று நெற்றியை தேய்த்தவள் ஆடவனை முறைத்தாள்.

அவனது இதழிலில் கேலி புன்னகை நிரம்பி வழிய, "நானெங்க உன்னை தூங்க விட்டேன், நீ தான கொஞ்ச நேரமாவது தூங்கிக்கிறேன், தூக்கம் வருதுனு கெஞ்சின. சரி போனா போகுதுனு பர்மிஷன் கொடுத்தா இப்ப என்னையே மிரட்டுறீயா நீ?" என்று புருவம் உயர்த்தினான். அவன் பேச்சின் சாராம்சம் புரிய அவளின் முறைப்பு புன்னகையாக மாற கண்களிலே கண்டனத்தை காட்டியவள் அதற்கு மேல் பேச இயலாது எழுந்து குளியலறை புகுந்து கொண்டாள். ஆம், மேலும் அங்கேயே நின்றால் இன்னும் வம்பு தான் பேசுவான் என்று மனது எச்சரிக்கை விடுத்தது.


அவள் வருவதற்கு முன்பாகவே அவனும் அஸ்வின் அறைக்கு சென்று குளித்து வந்து ஷோஃபாவில் அமர்ந்து கொண்டான். அலைபேசி உரையாடலில் இருந்தவன் விழிகள் முழுவதும் அடுப்பறையில் நின்றிருந்தவளின் மீதே அலைபாய அவளால் தான் தன்னை ஊடுருவும் பார்வை வீச்சை தாங்க முடியவில்லை. அவ்வப்பொழுது திரும்பி பார்ப்பவள், 'என்ன?' என்று புருவமுயர்த்தினாலும் இருபுறமும் தலையசைப்பவனின் பார்வை மட்டும் மாறவேயில்லை.


தேநீர் குவளையை அவனின் முன்பு ஒன்றை வைத்தவள் தனக்கொன்று எடுத்துக் கொண்டு உணவு மேஜையில் அமர்ந்து விட்டாள். நகரவில்லை, அங்கேயே அமர்ந்திருந்தவன் இதழ்கள் ஒவ்வொரு மிடறாக தேநீரை உள்ளிறக்க விழிகளோ பாவையை விழுங்கிக் கொண்டிருந்தது.


"இப்படி பார்த்திட்டே இருந்தா என்னால சாதரணமா இருக்க முடியலை சித்" என்று அவனிடம் நேரடியாகவே கூறி விட்டாள். அதை கேட்டு அவனுடைய இதழ்கள் தாராளமாய் விரிய விழிகளோ, 'நீயும் இப்படி தானே என்னை ஒரு காலத்தில் படுத்தி வைத்தாய்? நீ மட்டும் பார்க்கலாமா, நானும் பார்ப்பேன் போடி' என்றொரு பாவனையை கொடுக்க, அவளும் 'போடா' என்பதாய் சலித்து அடுப்பறை நுழைந்து கொண்டாள்.



சில நிமிடங்களில் கணினியுடன் அமர்ந்திருந்தவனுக்கு துளியளவேணும் கூட கவனம் அதில் இருந்திருக்கவில்லை. எவ்வளவு முயன்றும் தடுமாறியவனுக்கு ஆயாசமாக இருக்க அதை மூடி வைத்து அடுப்பறையில் சென்று நின்று கொண்டான். அமைதியாய் நிற்க பிடிக்காமல் அவளுடன் பேச்சுக் கொடுக்க தொடங்கியவன் அவளுக்கு உதவியும் செய்தான். ஆம், அப்படி தான் எண்ணிக் கொண்டான் போலும். அவள், அவன் செய்த உதவிகளை வரிசைப்படுத்தும் வரை!


பெண், அவனின் இயல்பான பேச்சில் ஓரளவு மீண்டிருந்ததால் வம்பு பேசினாள். "போனா போகுதுன்னா தான் உங்களை மன்னிச்சேன்... ச்சை, இந்த மனசு ரொம்பவே வெக்கம் கெட்டது. நீங்க வந்து நின்னதுமே உருகிடுது ஆனால் நீங்க அப்படியில்லை, எவ்வளவு கெஞ்சினேன் ஆனா ஒரு வார்த்தைக் கூட பேசவே இல்லை தான" என்றவளுக்கு அடுத்த வார்த்தை வெளியேற முடியாது தொண்டை அடைத்தது. பேசக் கூடாதென்று நினைத்தாலும் அழுத்தியிருந்த வார்த்தைகள் எப்படியோ ஓடி வந்து வெளியில் விழுந்து விடுகிறது தன்னையும் அறியாமல் ஆற்றாமையில்.

அவன் இதழில் உறைந்த புன்னகை சட்டென்று மறைய முகம் வாடியது, அவளின் பேச்சை கேட்ட நொடி. கவனித்தவளுக்கும் பொறுக்க முடியவில்லை, தன் மீதே கோபமெழுந்தது. கையிலிருந்த கரண்டியை கீழே போட்டவளுக்கு ஏனோ அந்த சூழலின் இதத்தை வார்த்தைகள் கெடுத்தது போல் தோன்ற அசௌகரியமாக உணர்ந்தாள்.


அங்கு நிற்கவே பிடிக்கவில்லை, நகர முனைத்தவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டவன், "ரிலாக்ஸ் சாரா" என்று அவளது செவியில் முணுமுணுக்க அப்படியே கண்களை மூடி நின்றாள் சில நிமிடம் அவன் கைகளுக்குள்ளே.


இறுகியிருந்த அவளின் உடல் ஓரளவு தளர அவளை விட்டு விலகியவன் குடிப்பதற்கு தண்ணீரை எடுத்து நீட்டியிருக்க வாங்கி பருகியவளின் விழிகளில் ஒரு வித ஆசுவாசம் வந்து ஒட்டிக் கொண்டது.


அவனை பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றவளின் கைகளை இறுக பிடித்து மார்பில் வைத்து அழுத்தி, "உனக்கு என்ன தோணுதோ பேசிடு, உள்ள வைச்சு அழுத்திக்காத, அடிக்கணும்னா கூட அடி. ப்ளீஸ்" என்று இறைஞ்சும் குரல் அவளை தாக்கியது. அதை விட அவனின் விழியில் தெரிந்த யாசிப்பு பேதையை கரைய செய்திட, "சாரி, இனிமே பேச மாட்டேன், மறந்திடுறேன் எல்லாத்தையும்" என்றாள் தேங்கிய புன்னகையுடன்.


"ஹேய் எல்லாத்தையுமா?, என்னையும் சேர்த்து மறந்திடாத டி" என்றவன் வம்பில் விழி விரித்தவள், 'ப்பா, மறந்துட்டாலும்' என்று இதழ் வளைத்து, "பசிக்குது சித், இப்ப நீங்க கையை விட்டா தான் குறைஞ்சது ஒரு மணி நேரத்திலையாவது சாப்பாடு ரெடியாகும்" என்றாள் பெண்.


"எதுக்கு வொன் ஹவர், நான் ஹெல்ப் பண்றேன், சீக்கிரமே முடிச்சிடலாம்" என்றவன் தன்னிடம் சிறைப்பட்டிருந்த பாவையின் கரங்களுக்கு விடுதலையளித்தான்.


"க்கும், நீங்க தான? வந்ததில் இருந்து அதை இதை எடுக்கிறேன் சொல்லி பத்து முறை என்னை உரசியிருக்கீங்க ஆனா உருப்படியா ஒரு தக்காளியை கூட கட் பண்ணலை பாருங்க. உங்க கூட சேர்ந்தா நான் டின்னர் தான் ரெடி பண்ணுவேன்" என்று குற்றம் சாட்டியவள் புன்னகையை விழுங்க முயல, "அப்ப நீயும் சமைக்கலை, நான் என்ன பண்றேன் நோட் பண்ணிட்டே இருந்தியா?" என்று அதற்கும் வம்பு பேசினான் அவளின் இடையில் கைக்கொடுத்து தன்னை நோக்கி இழுத்தப்படி.


"இல்ல இல்ல, உங்களுக்கு என்னமோ ஆகி போச்சு போங்க, அவ்வளவு பொறுமையா அமைதியா சாரா சைட்டடிச்சா கூட அவளை நிமிர்ந்து கூட பார்க்காம
தலையை குனிஞ்சு வெக்கப்படுவார் ஒரு பையன், ம்ம்..பேசுறதுக்கு கூட காசு கொடுக்கணும், அவர் பேர் சித்விக். அவரை காணலை ரொம்ப நாளா" என்று விழிகளை உருட்டியவளின் பாவனையில் அவனிற்கு அப்படியொரு சிரிப்பு பொங்கி வழிய, "ஓஹோ, எப்ப பார்த்தாலும் நீ தான் பார்ப்பியா, நாங்க பார்க்க கூடாதா என்ன?" என்று புருவம் உயர்த்தியவன், "சரி வா, நான் உனக்கு அந்த பையனை தேடித் தரேன். இன்னும் கொஞ்சம் அங்க அடையாளத்தை தெளிவா சொல்லு"என்றான் நக்கல் நிரம்பிய தொனியில்.


தன் பின்னால் நின்றவனை திரும்பி பார்த்தவள், "யார் வேணாம் சொன்னா, போய் முதல்ல மாதிரி தூர உட்கார்ந்தே பாருங்களேன். நான் சமையல் முடிஞ்சிட்டு வந்து அந்த பையனை பத்தி உங்ககிட்ட டிஸ்கஸ் பண்றேன்" என்று அவனின் கரங்களை பிடித்து இழுத்து வலுகட்டாயமாக உணவு மேஜையில் அமர வைத்தாள். அங்கு அமர்ந்து கொண்டும் அவளிடம் வாய் கொடுத்துக் கொண்டிருந்தவனுக்கு அவளை விட்டு அகலும் எண்ணமில்லை தான்.



சிறிது நேரத்தில் உணவு முடிய சாரா அலுவலத்த்திற்கு அழைத்து பேசி விடுப்பிற்கு காரணங்கள் கூறி மின்னஞ்சல் அனுப்பி முடிக்க மணி நான்கை கடந்திருந்தது. அறைக்குள் நுழைய சித்விக் உறங்கியிருந்தான், நின்று சில நிமிடம் அவனையே பார்த்திருந்தவளும் உறைந்த புன்னகையுடன் அப்படியே அருகில் படுத்து அவனை அணைத்து உறங்கியும் போனாள்.


மாலை இருவரும் விழித்தெழும் பொழுது நேரம் ஆறை தொட்டிருக்க எப்பொழுதும் போல் மல்லிகா மகளுக்கு அழைத்து பேசினார், அடுத்து அகிலா. இது வழக்கம் தான். மீண்டும் பொழுதுகள் இரண்டு குவளை தேநீரோடு கழிய இன்றும் சாரா சாமி முன் நின்றிருந்தாள். வீடு மணந்து கொண்டிருக்க நேற்றை போல் பார்வையாளனாய் அல்லாது சித்விக் இன்று அவளருகில் நின்று கொண்டான். கண் விழித்தவள் தன் முன் நிற்பவனை கண்டு சிறிது அதிர்ந்தாலும் சட்டென்று இதழை புன்னகை தழுவிக் கொள்ள தன் முன்னிருந்த திறுநீரை எடுத்து அவன் நெற்றியில் வைக்க மறுக்காமல் குனிந்து வாங்கிக் கொண்டான்.



மனதும் முழுவதுமாக நிறைந்திருந்தது அந்த கணங்களில்....இப்படியே இதழில் உறைந்த புன்னகையுடனே வாழ்க்கை நீட்சியடைய வேண்டுமென்பதே இருவரின் ஆகச்சிறந்த வேண்டுதலாகவும் இருந்தது.



தொடரும்....
 
Last edited:
Messages
524
Reaction score
403
Points
63
அவங்க வேண்டுதல் மட்டும் இல்லை நானும் அதையே வேண்டி கொள்கிறேன் சந்தோஷமா இருக்கட்டும்
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Top