• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 18(ii)

Messages
47
Reaction score
2
Points
8
*சொல்லாமல்....!*

*மௌனம் 18(ii)*

*இன்று...*

அனைவரும் அலைந்து திரிந்து அவர்களின் தாத்தாவைத் தேட விருட்டென கிளம்பிச் சென்ற தன் மகனை நினைத்து மனம் வெதும்பிற்று,
அவருக்கு.

என்ன தான் செய்ய இயலும்..?
தொழில் என்று ஓடி பணத்தின் பின்னே அலைந்து மகன் மனதிலும் பாசத்துக்கான இடத்தை அழித்து விட்டவர் ஆயிற்றே.

குற்றவுணர்வில் நெஞ்சம் குறுகுறுக்க அதை தடுக்கும் வழி தெரியவில்லை,
அவருக்கு.

தன் நெற்றியை மெல்ல நீவி விட்டுக்கொண்டார்,
கௌரவ்.

தந்தை தழிழ்நாட்டைச் சேர்ந்தவர்.தாய் வட இந்தியாவை இருப்பிடமாக கொண்டிருக்க பிள்ளைகளுக்கு கொஞ்சம் வடக்குப் பாணியிலே பெயரை வைத்திருந்தார்,
அவரின் தாயார்.

ஓரமாய் நின்று கொண்டு இவை அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்,
ஒருவன்.

கௌரவ்வின் இளைய மகன்.
அவனுக்குள்ளும் எந்த வித உணர்வும் இல்லை.
இயந்திரமயமாய் வளர்க்கப்பட்டவன் ஆயிற்றே.
அதனாலோ என்னவோ..?

அதற்குள் அவனருகே வந்த ஆர்த்திக்கு அவனின் பதட்டமில்லாத முகம் கோபத்தை தந்திருக்க வேண்டும்.
"இந்த நேரத்திலயுமாடா உங்க கோபத்த காட்டுவீங்க..?" எரிச்சலை அடக்க முடியாது அவள் கேட்டிட அவனோ இதழை மெல்ல இழுத்து சிறு புன்னகையை தவழவிட்டான்.

"செஞ்ச பாவத்துக்கு அனுபவிச்சி தானே ஆகனும்.." என்று நெற்றியில் கோடு வரைந்து தலைவிதி என்று சைகை செய்து காட்டிட அத்தனை கோபம் அவளுக்குள்.

அதே நேரம்,
அந்த பெரிய மயானத்தில் ஒரு கல்லறையின் முன்னே அமர்ந்திருந்தவரின் விழிகளில் இருந்து நீர் கொட்டிக் கொண்டே இருந்தது.

செய்த தவறுகள் முதுமைக் காலத்தில் தானே உரைக்கும் போலும்.
"என்ன மன்னிச்சுருடா..பெரிய தப்பு பண்ணிட்டேன்டா.."தன் மாரில் அடித்துக் கொண்டு அவர் அழுதிட உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவின் செவிகளை அது எட்டிடுமா என்ன..?

அப்படியே எட்டினாலும் நிச்சயம் அவரின் தவறுக்கு அந்த ஆன்மா மன்னிப்புக் கொடுக்காது என்பது சர்வநிச்சயம்.

ஏனென்றால்,அவர் செய்ததால் பாதிக்கப்பட்டது இறந்தவர் அல்லவே.
இறந்தவரின் உயிர் நாடி ஆயிற்றே.

கொஞ்சம் கனமேகங்கள் வானில் சூழ்ந்திருக்க சிறு தூறலாய் மழையும் அடிக்கத் துவங்கிற்று.

அப்போதும் எழுந்து கொள்ளவில்லை,
அவர்.குற்றவுணர்ச்சி எதையும் உணர விடாது செய்திருந்ததோ என்னவோ..?

அடிக்கும் மழை நீர் அவர் மேனியை நனைத்திட சிலையென அமர்ந்திருந்தவரின் முன்னே வந்து நின்றான்,ஒருவன்.

முகத்தில் கோபம் தாண்டவமாட விழிகளில் விட்டேற்றியான பாவமே நிறைந்திருக்க அவனின் பாதங்கள் சரியான இடைவெளியில் ஊன்றப்பட்டு இருந்தன.

பெரிய கருநிற குடையொன்றை தாங்கி தன்னை மழையில் இருந்து காத்துக் கொண்டாலும் ஆங்காங்கே சில இடங்களில் ஈரம்.

கூரிய விழிகளும் விழி மூடும் நேரம் மட்டும் ஒட்டிக் கொள்ளும் அந்த அடர்ந்த இமை முடிகளும் செறிந்த நெற்றிதனில் கொஞ்சம் மேடு பள்ளங்களுடன் செதுக்கப்பட்டிருந்த புருவங்களும் அவனின் விழிகளுக்கு இன்னுமே ஒரு வித தீட்சண்யத்தை கொடுத்தன.

அதிலும்,
ஒற்றைக் கரத்தை பான்ட் பாக்கெட்டில் நுழைத்த படி அவன் நின்றிருந்த தோரணை இன்னும் இரசனையைத் தரக் கூடியதே.

கூர் விழிப் பார்வையால் தன்னை துளைத்துக் கொண்டிருக்கும் அவனை அவர் விழி நிமிர்த்தி பார்க்கவில்லை.
ஏதோ யோசனையாய் இருந்திருக்கும்.

"க்கும்.." அவரை உறவு முறை சொல்லி அழைக்கக் கூட மனமின்றி தொண்டையைச் செருமினான்,
அவன்.

ஏனோ அந்த ஒற்றைச் செருமலிலேயே அப்படி ஒரு அழுத்தமும் அதிகாரமும்.

திடுமென கேட்ட சத்தத்தில் தலைதூக்கி பார்த்தவருக்கு தன் மூத்த பேரனை அவ்விடத்தில் கண்டதும் மனம் தாளவில்லை.
கண்ணீரே வந்துவிட்டது,
அவன் வருவான் என்று துளியும் எதிர்பாராது இருக்கவே.

"ராசா.." என்று வயதின் தள்ளாமையையும் கணக்கில் கொள்ளாது வேக நடையுடன் எழுந்து அவனருகே சென்று அவனைக் கட்டிக் கொள்ள அந்த ஏற்கவும் முடியாமல் அவரை விலத்தவும் முடியாமல் சிலையென நின்றிருந்தான்,
அவன்.

●●●●●

நேரம் இரவு எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அது.

எப்போதும் வரும் கணவனின் அழைப்புக்காக அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்திருந்தாள்,
தர்ஷினி.

அதற்கென்று அழைப்படுத்து அவன் அவளுடன் பேசுகிறான் என்றால் சத்தியமாய் இல்லை.
இன்று வரை அவனிடம் இருந்து அவள் கேட்ட ஒரே ஒரு வார்த்தை "ஹலோ" மட்டுந்தான்.

இவள் தான் வீட்டினரை ஏமாற்ற ஏதாவது பொய்யாக பேசிக் கொண்டு இருப்பாள்.
பல நேரங்களில் இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் அலைபேசியை துண்டிப்பதும் உண்டு.

யோசனையில் மூழ்கி இருந்தவளை கலைத்தது,அலைபேசி சத்தம்.
அவள் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை,
அவனே தான்.

திரையில் விழுந்த அவனின் புகைப்படத்தைக் கண்டதும் "அர்ஜுன்.." என்று அவன் பெயரை உச்சரித்து இரசித்தது மனது.

அலைபேசியை ஏற்றவளின் காதை நிறைத்தது,
அவனின் "ஹலோ..".

பதிலாக அதையே சொல்லிவிட்டு என்றும் போல் இன்றும் அலைபேசியை காதில் வைத்திருந்தாள்.
தொடக்கத்தில் அவன் ஏதாவது பேசுவான் என்கின்ற எதிர்ப்பார்ப்பு நாட்கள் செல்லச் செல்ல காணாமல் போயிருக்க இப்போதெல்லாம் அவன் பேசுவான் என்கின்ற எண்ணமே இல்லை,அவளுக்கு.

அலைபேசியை அப்படியே காதுக்கு கொடுத்தவாறு சரிந்து படுத்துக் கொண்டவளுக்கு எதிர்முனையில் இருந்து வந்த மூச்சுக்காற்றின் சத்தம் அவனும் தன்னைப் போல் அலைபேசியை காதில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திட விழிகளில் கொஞ்சம் அதிர்வு.

சட்டென அலைபேசியை தூக்கி திரையில் இருந்த பெயரை உறுதிப்படுத்திக் கொண்டு மீண்டும் காதுக்கு கொடுத்திட இன்னும் அந்த மூச்சுக் காற்றின் சத்தம் செவியை வந்து மோதியது.

திடுமென ஏதோ ஒரு படபடப்பு அவளுக்குள்.
இத்தனை நாள் இல்லாது இன்றுணர்ந்த அவனின் இந்த சிறு செயலே அவளுள் பெரும் புயலை கிளப்பி விட்டிருந்தது.

அலைபேசியை கைகளால் இறுகப்பற்றிய படி தன் மூச்சை அடக்கி மெதுவாக இழுத்து விட்டுக் கொண்டாள்,
அவனுக்கு தன் தடுமாற்றம் உரைத்து விடக் கூடாது என்பதற்காக.

ஒரு கணம் அலைபேசியை காதில் இருந்து எடுத்து ஆழ்ந்து மூச்சு வாங்கியவளோ சட்டென அழைப்பை துண்டித்து விட்டிருந்தாள்,முரணாக.

எப்போதும் அவன் தானே அவ்வாறு செய்திடுவான்.
இன்று அதற்கு நேர் மாறாய்.

தலையணையை எடுத்து காதைப் பொத்திக் கொண்டவளுக்கு இன்னும் அந்த மூச்சுக் காற்றின் சத்தம் காதருகே கேட்பது போன்றதோர் உணர்வு.

"என்னாச்சு இன்னிக்கு..இப்டி அடிக்கிது..?" தனக்குள் முனகியவாறு தன் இதயத்தை தொட்டுப் பார்த்தவளுக்கு அவன் தன்னை கவனிக்கிறான் என்கின்ற எண்ணமே ஒரு வித தடுமாற்றத்துடன் பதட்டத்தையும் விதைத்திருந்தது,
ஒருசேர.

இத்தனை நாளில் அவள் இப்படி எல்லாம் உணர்ந்ததே இல்லை.
அதிலும் அவன் அருகில்...
ம்ஹும்..

"என்னாச்சு..இந்தாளுக்கு இப்டி மூச்சு வாங்குது...அது மட்டுல்லாம போன காதுல வச்சகிட்டு இருக்கு.." யோசனை செய்த படி இருந்தவளை திடுக்கிடச் செய்தது,
மீண்டும் ஒலித்த அலைபேசியின் சத்தம்.

முதன் முறையாய் ஏற்பதா வேண்டாமா என்கின்ற பெரும் குழப்பம் அவளுக்குள்.

மணி அடித்துக் கொண்டே இருக்க ஏனோ அந்த அழைப்பை ஏற்கத் தான் மனம் வரவில்லை.
ஒரு முறை அடித்தோய்ந்ததும் பெரும் ஆசுவாசப் பெருமூச்சொன்று அவளிடத்தில்.

ஆனால்,மறு நொடியே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மீண்டும் அலைபேசி ஒலித்திட படுக்கையில் எழுந்தமர்ந்தவாறு ஏற்று காதுக்கு கொடுத்தாள்,
அவள்.

இம்முறை அமைதியாய் ஏற்று காதில் வைத்திருக்க அவனும் அவ்வாறே.
வார்த்தைகள் எல்லாம் தொலைந்து போயிருக்க இருவரின் மூச்சுக்காற்று சத்தம் மட்டுமே பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது,
அலைபேசி வாயிலாக.

"என்னாச்சு இந்தாளுக்கு..? இப்டி மூச்சு வாங்குது..?" மீண்டும் தனக்குள் யோசித்தவாறு இயன்றளவு மெல்லமாய் சுவாசித்துக் கொண்டிருந்தாள்,
அவள்.

அவளுக்கு எங்கே தெரிந்திடப் போகிறது, மறுமுனையில் இருக்கும் அவனின் நிலை.

தன்னறையில் இருக்கும் மேசையில் அருகே அமர்ந்து ஒரு கையால் அலைபேசியை தாங்கிய படி மறுகரத்தின் விரல்களால் பின்னங்கழுத்தை வருடிய படி ஒரு வித பதட்டத்துடன் அமர்ந்திருந்தான்,
அவனும்.

நேற்றில் இருந்து ஏனோ மனம் அவளை அதிகமாக தேடியதை அவனும் உணர்ந்திருந்தானே.
ஏனோ அவளின் அருகாமையும் அவளின் கனிவும் அவனுக்கு அந்த நொடி அவசியப்பட்டதை அவளிடம் சொல்லிடும் ரகமா அவன்..?

அவளின் மூச்சுக்காற்றின் ஓசையை செவிக்குள் நிரப்பியவாறு தான் தடுமாறிக் கொண்டிருந்தான்,
அவனும்.

"வேணும்னே மெதுவா ப்ரீத் பண்றா போல.." அவளின் செயலை தெளிவாக கணிக்கத் தான் செய்தது,அவன் மனம்.

அதிலும் அவள் வழமை போல் எதுவும் பேசாது இருந்ததை உணர்ந்தவனின் மனதில் பெரும் வாட்டமும் ஏமாற்றமும்.

"ஏதாவது பேசித் தொலயேன்.."மௌனமாய் ஆர்ப்பரிப்புடன் அரற்றினான்,
தனக்குள்.

தர்ஷினிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
அவன் கவனிக்கவில்லை என்கின்ற எண்ணத்தில் மற்றைய நாட்களில் வீட்டினரை ஏமாற்ற கண்டதை பேசித் தள்ளுபவளுக்கு இன்று அவனின்
கவனம் தன் பேச்சு மீது தான் என்று புரிந்ததும், ஒரு வார்த்தை கூட எழவில்லை.

அவனின் ஒற்றைப் பார்வையின் முன்னோ சிறு கவனத்தின் முன்னோ அவளின் சர்வமும் அடங்கித் தானோ போகிறது.
அதிலும்,வாய்த்துடுக்டு...
தானா இது என்கின்ற சந்தேகமே வந்திடும் சில நேரங்களில்.

ஒருவேளை அவளுடன் அவன் சகஜமாய் பழகி இருந்தால் இது இருந்திருக்காதோ என்னவோ..?

அதற்குள் தாய் தன்னைறயின் அருகே வந்திடும் சத்தம் கேட்டவளுக்கு பேசுவதை தவிர வேறு வழியில்லையே.

"ஹா..நா சாப்டேங்க..அதான் அம்மாவும் சொன்னாங்க..நீங்க மதியம் வந்துருந்தா நல்லாருக்குமேன்னு.."

"ஆமா..ஆமா..மீன் கொழம்பு தான்..இப்ப கூட கைல வாசம் அப்டியே மிச்சம் இருக்கு.."

"அதுவா இன்னிக்கி ப்ரெஷ் மீனா கெடச்சதுல்ல..அதான் நல்லா வந்துச்சு..நீங்க தான் மீன் கொழம்ப மிஸ் பண்ணிட்டீங்க..அடுத்த தடவ வீட்டுக்கு வரும் போது பெரிய மீனா வாங்கிட்டு வாங்க..நாலு நாளக்கி வாசம் நிக்கற மாதிரி நா செஞ்சு தர்ரேன்.." தனக்குள் நொந்து பொய் விகசிப்பை பூசிக் கொண்டு பேசியவளுக்கு நெற்றியை எங்காவது முட்டிக் கொள்ளலாம் என்கின்ற எண்ணம் தான்.

எதிர்முனையில் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர அவளுக்கு கேட்டு விடக் கூடாது என்பதற்காக உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்,
அவன்.

"ஆமா..நெஜமா தான் சொல்றேன்..நீங்க கொண்டு வாங்க..செஞ்சு தர்ரேன்...நாலு நாள் என்ன பத்து நாளே வாசம் இருக்கும்.." சம்பந்தமே இல்லாமல் பேசினாள்,
அவள்.

"அதுக்கு மீன் கொழம்பு சென்ட் தான் செய்யனும்.." என்று அவன் அவளுக்கு மனதால் பதில் சொன்னது எங்கனம் அவள் செவியை அடைந்திடும்..?

"எப்ப பாரு..சாப்பாட்ட பத்தி தான் யோசன.." பெருவிரலால் புருவத்தில் கீறிய படி இருந்தவனின் விரிய முயன்ற புன்னகையை கட்டுக்குள் வைத்தன,
இதழ்கள்.

அவளின் தாயார் கடந்து சென்றிடவே மூச்சு வந்தது,
தர்ஷினிக்கு.

"என்னத்த ஒளறிக் கொட்டினோமோ..?" எண்ணியவளோ ஒரு வித சங்கடத்தில் எச்சிலை கூட்டி சத்தமாகவே விழுங்கிக் கொள்ள அதுவும் தெளிவாகவே விழுந்தது, அவனின் செவிகளில்.

அவள் ஒன்றும் யோசனை செய்திடவில்லை.
பட்டென அலைபேசியை எடுத்து கட்டிலில் வைத்து விட அதை அவனும் உணர்ந்து கொண்டிருப்பான் போலும்.

அலைபேசியை மேசையின் மீது வைத்தவனின் விரல்கள் ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டதை அவள் உணர்ந்திருக்க மாட்டாளே.

ஓரிரு நிமிடங்கள் கடந்த பின் மீண்டும் அலைபேசியை காதுக்கு கொடுத்தவளுக்கு மூச்சுக்காற்று சத்தம் கேட்காதிருக்க அவன் கவனிக்கவில்லை என்று தப்பாய் கணக்கு போட்டுக் கொண்டது, என்றும் போல்.

"ஆ..ஆமாங்க..அதான்..அதுவே தான்..செம்ம ஜாலி ல..நீங்க வந்தா நாம ரெண்டு பேரும் சேந்தே போலாம்.."

"ஆமா..ஆமா..இன்னிக்கு நா திரும்ப பாத்தேன்..எத்தன தடவ பாத்தாலும் அந்த சீன் எல்லாம் சலிச்சுப் போய்ராது எனக்கு..எப்ப பாத்தாலும் அப்டியே முடியெல்லாம் எந்திரிச்சு நிக்கும்...செம்ம சீன் ல அது..இத்தோட எத்தன தடவ பாத்துட்டேன்..ஆனா கொஞசம் கூட போர் அடிச்சதே இல்ல.."

"யப்பா..ஆமா..ஆமா..அதுன்னா சரி தான்..ரொம்ப ரொம்ப நல்லாருந்துச்சு.." தொடர்ந்தவளாய் பதினைந்து நிமிடம் ஏதேதோ பேசினாள்,
அவள்.

காலை கொஞ்சம் முன்னே நீட்டி சரிவாய் அமர்ந்து தலையை கதிரையின் மேல் விளிம்பில் சாய்த்து விழிகளை மூடி அண்ணாந்து பார்த்தவாறு அமர்ந்தவாறு அமர்ந்திருந்தவனின் இதழ்கள் புன்னகை துளிர்த்து விரிந்திருந்தது,
அவளின் பேச்சால்.

ஏனோ தெரியவில்லை.
எத்தனை அடக்கியும் அவன் மனது அவனைக் கேளாமலே சில நேரங்களில் அவளைத் தேடத் தான் செய்கிறது.

தொடரும்.

🖋️அதி....!
2024.01.24
 
Top