• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 16

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
அத்தியாயம் 16


அந்த பேருந்தின் இருக்கையில் அமர்ந்து சாரளத்தின் கம்பிகளில் தலையை சாய்த்தப்படி இருந்தவளின் விழிகளோ வெளியில் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது இலக்கின்றி. ஆனால் அவளது கவனத்தில் எதுவுமே பதியவில்லை. மனதை அமிழ்த்திக் கொண்டிருந்தது ஆடவனின் நினைவுகள். ஏனோ அவளை அதீதமாகவே ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியிருந்தது அவனுடனான நினைவுகள் இந்த நிமிடங்களில்.

பேருந்து இயங்கத் துவங்க கண்களை இறுக மூடிக் கொண்டவளின் கன்னங்களில் நீர் கோடுகளாய் இறங்க சட்டென்று கைக்குட்டை எடுத்து
துடைத்துக் கொண்டவளின் அலைபேசி ஒலித்தது. ஆவலாக எடுத்தவளின் விழிகளில் ஏமாற்றம் மேலோங்க பெருமூச்சுக்களை வெளி விட்டவள் அழைப்பை ஏற்று, "சொல்லுங்க அத்தை" என்றாள். "பஸ் ஏறிட்டியா சாரா, மூவ் ஆகிடுச்சா? ரீச்சாகிட்டு கூப்பிடும்மா. கவனமா போ" என்று வரிசையாக அடுக்கி கொண்டிருந்தவர் அகிலாவே தான்.

"ம்ம், சரிங்கத்தை, நீங்க ஷர்மியை பார்த்துக்கோங்க. இப்ப நார்மலா தான இருக்காங்க, எந்த தொந்தரவும் இல்லையே?" என்று பரஸ்பர விசாரிப்புக்கள் முடிய, "நான் சித்கிட்ட பேசிட்டேன் சாராம்மா" என்றவரின் பேச்சு மனைவிக்கு அத்தனை உவப்பானதாக தோன்றவில்லை. அவர்களுக்கிடையில் யாரையும், ஏன் அகிலாவை முதற்க்கொண்டு கொண்டு வருவதில் பாவைக்கு உடன்பாடு இருந்திருக்கவில்லை. ஆனால் அவளவன் செய்திட்ட செயல்கள் அவரை நாட வேண்டிய சூழலில் நிறுத்தி விடுகிறது. அதுவே பேதைக்கு அத்தனை அழுத்தத்தை கொடுத்திருந்தது.


"அத்தை, செக்ண்ட் கால்ல அம்மா கூப்பிடுறாங்க. நான் பேசிட்டு உங்களுக்கு கூப்பிடுறேன்" என்று அவரின் அந்த பேச்சுக்களை மட்டுமின்றி அழைப்பையுமே துண்டித்து விட்டாள். சித் அவனின் பெயரை கேட்டாலே அத்தனை எரிச்சல் மேலிட்டு விடுகிறது பாவையின் மனதினுள் கடந்த சில நாட்களாக.


'நான் அப்படி என்ன செய்து விட்டேன். எனக்கு திருமணம் பிடிக்கவில்லை வீட்டை விட்டு கிளம்பி சென்றேன். இதிலொன்றும் அத்தனை தவறிருப்பதாய் எனக்கு தெரியவில்லையே' என்று சிந்திக்கும் பொழுது சலிப்பே மிஞ்சும். ஆக, அன்று தொடங்கி ஊடல் இன்று வரை முடிவுக்கு வரவில்லை. மாதங்களோ ஒன்றை கடந்திருந்தது. அதில் சிறப்பொன்று என்னவென்றால் நான்கு நாட்களுக்கு முன்பு ஆடவன் கட்டிய மஞ்சள் கயிறோ பாவையின் மார்பில் நின்று ஒய்யாரமாய் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. ஆம், திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கடந்திருந்தது.

இன்னும் அவன் கட்டிய மஞ்சள் கயிற்றின் வாசனை கூட இம்மியளவும் குறையாது அவளின் வாசனை திரவியத்தோடு இரண்டற கலந்து அவ்விடத்தை மயக்கம் கொள்ள செய்து கொண்டிருக்க ஸ்பரிசிக்க வேண்டியவனோ தலையை இறுக பிடித்தப்படி தொலைதூரத்தில் அமர்ந்திருந்தான். சற்று முன் அகிலா கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆடவனை பதம் பார்த்திருக்க மடியில் வீற்றிருந்த மடிக்கணினியை படுக்கையில் தூக்கி போட்டவனுக்கு அத்தனை ஆத்திரம்.


'என்ன ஆனாலும் இவளுக்கு வாய் மட்டும் குறையுதானு பாரேன்' என்று முணுமுணுத்தவனுக்கு தன்னுடைய செயல் அதிகப்படி என்று இன்னும் மூளைக்கு உரைக்கவில்லை. ஏற்கனவே ஏற்பட்டு விட்ட ஒரு வருட இடைவெளியையே நிரப்ப வழியறியாது ஆடவன் தவித்து தடுமாறி கொண்டிருக்க பாவையின் அடுத்தடுத்த செயல்கள் அவனை முழுவதுமாக செயலிழக்க செய்து அடியாழத்தில் அமிழ்த்தியிருந்தது.



வேகமாக எழுந்து உடையை மாற்றியவன் கைகள் காரின் திறவுகோலையை தேடிப்பிடிக்க இரவு நேரத்தை கருத்தில் கொள்ளது கிளம்பி இருந்தான். 'இவளை... நான் அமைதியாவே இருக்கிறதால என்ன வேணும்னாலும் பேசலாம்னு நினைக்கிறா போல! கொஞ்சமில்ல உடம்பு மொத்தமுமே கொலுப்பு தான். ஏன் இவ பேசுறதை என்கிட்ட பேச மாட்டாளாக்கும்?' என்று சலித்து வார்த்தையால் மென்று விழுங்கியவன் நேரிலும் அவளை விழுங்கவே புறப்பட்டு விட்டான்.
எத்தனை மகிழ்வாய் ஆர்பரிக்க வேண்டிய தருணமெல்லாம் இருவரின் வீம்பிலும் சில்லு சில்லாக சிதறியிருந்தது ரசிக்கப்படாமலே.


மகனின் அமைதியில், "சித் லைன்ல்ல இருக்கியா நீ?" என்ற அகிலா குரல் மீண்டும் மேலெழும்ப, தன்னை சுதாரித்தவன், "ம்ம், வரேன்ம்மா" என்றான் சலிப்பான குரலில்.

"அடேயப்பா, எதுக்குடா இவ்வளவு சலிப்பு. நிச்சயம் உனக்கு தான? பிடிக்கலைன்னா சொல்லு உடனே நிறுத்திடலாம்" என்று புன்னகையை மறைத்தது மகனை சீண்டி அகிலா பேசியிருக்க, "ம்மா.." என்று பல்லைக்கடித்தவன் அதற்கு மேல் பேசாமல் அலைபேசியை துண்டித்திருந்தான்.


அன்னையின் பேச்சில் இருபது நிமிடங்களில் பறந்து வந்திருந்தான் ஆடவன். ஆனால் கோபமெல்லாம் இன்னும் பிரவாகமாகி பாவையின் மேல் தான் திரும்பி இருந்தது. அவளின் பேச்சுக்களும் செயல்களும் அவனை மேலும் கிளர்ச்சியுறவே செய்து இருவருக்கிடையிலான இடைவெளியை பெரிதாக்கும் பணியை செம்மையாக செய்து கொண்டிருக்கிறது என்பதை பாவை அறியாமல் போனது தான் பரிதாபம்.


இம்முறை ஆடவனுள் பொங்கிய கோபம் அத்தனை எளிதில் அடங்குவதாக தெரியவில்லை. அருகில் நின்றவளை ஏறக்குறைய கடித்தே குதறியிருந்தான். "நீ நினைக்கிறது மட்டும் தான் நடக்கணுமா சாரா? நீ மட்டும் உன்னிஷ்டத்துக்கு ஆடுவ? அப்புறம் நான் எதுக்கு? நான் சொல்றதை எதையாவது கேட்குறீயா நீ?" என்றவன் பல்லைக் கடிக்க அவனின் வார்த்தைகளைப் பெரிது படுத்தாமல் அமைதியாய் நின்றிருந்தாள் பெண்.

அது கூட ஆடவனுக்கு தவறாய் தோன்ற, "இப்ப கூட நான் பேசுறதை கண்டுக்காம நிற்கிற நீ? திமிர் டி உனக்கு" என்று அதற்கும் சேர்த்தே பேசினான். அவன் பேச்சை பற்றி அவளுக்கு தெரியமல்லவா? சத்தமின்றி ஆனால் அவளை கடிந்திருந்தான். அவள் பேசத் தொடங்கினால் பிரளயமே வெடிக்கும், அவளுக்கு தான் மெதுவாகவே பேச தெரியதே! சூழ்நிலை கருதி, "சித் ப்ளீஸ்" என்று அவனை சமாதானம் செய்ய விழைய அவளின் கையை தட்டி விட்டிருந்தான், "கிட்ட வராத நீ, அன்னைக்குத்தான் அத்தனை பேசியிருந்தேன். நீ எப்பயுமே என்னை நம்ப மாட்ட, நான் உனக்காக எதுவுமே செய்ய மாட்டேன் நினைக்கிறல்ல நீ? சரி இனிமே அது உண்மையாவே இருக்கட்டும். இனி நான் எதுவுமே செய்ய மாட்டேன். நீ பேசாம போய் காரை ஒருத்தன் மேல இடிச்சிருக்க. அவனுக்கோ இல்ல உனக்கோ எதாவது ஆகியிருந்தா என்னடி பண்ணியிருப்ப? உன்னை பத்தி மட்டும் தான் யோசிக்கிற ரொம்ப சுயநலமா. நான், என்னோட சூழ்நிலை எல்லாம் உனக்கு தேவையேயில்ல எப்பயுமே" என்றவன் இன்னும் இன்னும் பேசியிருந்தான். அவனின் வார்த்தைகள் பெண்ணை குத்தி கிழித்து உடைய செய்திருந்தாலும் உறுதியுடன் நின்று கொண்டாள். ஆம், அவளே விரும்பி, 'இவன் தான் வேண்டும்' என பிடிவாதமாக ஒற்றைகாலில் நின்று நடந்து கொண்டிருக்கும் நிச்சயமல்லவா?
பாவையை வாயை இறுக மூடி அமர்ந்து கொண்டாள். ஏனென்றால் அவள் இவனை விட அதிகமாகவே பேசி இருக்கிறாள். இனிமேலும் பேசுவாள் தான். ஆக நிச்சயத்தன்றே ஒரு களேபரம் இருவருக்குமிடையில் நடந்தேறியிருந்தது யாருமறியாமல்.


முதலில் மகளிற்காக சம்மதம் கொடுத்து விட்டாலும் சித்விக் குடும்பத்தை ஏதோ ஒரு வகையில் வாசுவிற்கு பிடித்து தான் போனது. திருமண வேலைகள் படுவேகமாக நடைபெற்றது. ஒரே மாதத்தில் திருமண நாளை குறித்து விட அனைவருமே நிற்க நேரமில்லாது சுழல அதற்கு முழுமுதற்காரணமான இருவருமே யாருக்கோ வந்த விருந்து போல் விலகி நின்று கொண்டனர் ஆளுக்கொரு மூலையில்.


பெண் பேச முயற்சி செய்தும் அவன் மறுத்து விட்டான். கோபம் ஆத்திரம் அவனை ஆக்கிரமித்திருந்தது அதை விட வேலையும் தன்னுள் விழுங்கி கொள்ள திருமணத்திற்கு நான்கு நாள் வரை பூனாவில் இருந்தான். அவர்களின் நிறுவனம் பல மாநிலங்களில் தங்களுடைய கிளைகளை துவங்கி இருக்க அவன் ஒருவனே எல்லா இடங்களுக்கும் சுற்றித் திரிந்தான்.



சாரா, அவளும் நிச்சயத்திற்கு மறுநாளே சென்னை கிளம்பி சென்று விட்டாள். அவள் வேலையை விட வேண்டுமென்றால் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பாவது உயர் அதிகாரிக்கு நோடீஸ் அளிக்க வேண்டும். சித்விக் அதை பற்றி மட்டுமல்ல எதை பற்றியுமே பேசவில்லையே! அவளும் என்ன தான் செய்வாள்?

எல்லாமே நல்லபடியாக நடந்தேறிக் கொண்டிருந்தாலும் மல்லிகாவிற்கு மகளின் செயலில் தோன்றிய அதிருப்தி முழுதாக கரையவில்லை என்ற பொழுது அங்கும் அவளுக்கு உறவு தாமரை இலை தண்ணீர் போல தான். அஸ்வினுக்கு அழைத்தே தகவல்கள் எல்லாமே அவளுக்கு ஒலிபரப்பப்படும். ஆக அவளுக்கு இருபுறமும் இடி தான். திருமணப்பட்டு எடுப்பதில் இருந்து பத்திரிக்கை தேர்வு செய்வது வரை அவள் விருப்பம் மட்டுமே. அன்று அவனுடைய அழைப்புக்களை அவள் ஏற்காமல் நிராகரித்து விட்டதோடு சரி இருவருக்கும் அலைபேசி உறவும் துண்டாகியிருந்தது. இல்லை இல்லை அவன் துண்டாக்கி விட்டிருந்தான். ஆம், அன்றைக்கு ஒரு நாளே ஆடவனை அத்தனை அலைப்புற செய்திருந்ததே. உயிரை கையில் பிடித்துக் கொண்டல்லவா சுற்றித்திரிந்தான். 'அவள் கிளம்பி விட்டாள்' என்பதை இன்னுமே ஆடவனால் ஜீரணிக்க முடியவில்லை. 'நான் தான் அவளை பெரிதாக நினைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் ஆனால் அவள் என்னுடைய வார்த்தைகளை கூட மதிக்கவில்லை' என்ற எண்ணமே அவனை அலைக்கழித்தது. காதலின் தொடக்கத்தில் அவள் இருந்த நிலையை இப்பொழுது தான் ஆடவன் எட்டியிருப்பான் போலும்!



சாரா, இடையில் ஒரு முறை அகிலாவிற்கு அழைத்து பேசினாள். அன்று சித்விக் வீட்டிற்கு வருகை புரிந்திருக்க அலைபேசி ஷர்மிளா மூலமாக அவனின் கைகளுக்கு தஞ்சமடைந்திருந்தது. காணொளியில் திரையை நிறைத்திருந்தவளை பார்க்காது கணினியில் ஆடவன் கவனம் குவித்திருக்க பெண் பேசினாள்.


"நீங்க செய்றது சரியில்லை. கல்யாணம் நமக்கு தான் நினைவு இருக்கா என்ன? உங்க சொத்தை எல்லாத்தையுமா நான் எழுதி வாங்கிட்டேன். முகத்தை லேசா சிரிச்ச மாதிரி வைச்சா குறைஞ்சிடுவீங்களா? இப்ப முகத்தை திருப்பிட்டு பின்னாடி என்னை சமாதானம் செய்ய வந்தீங்கன்னா கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டேன். திரும்ப முதல்ல இருந்து கல்யாணம் பண்ண சொல்லி கேட்பேன். இது எல்லாம் எவ்வளவு ஸ்வீட் மெமரிஸ் ஆனா நீங்க என்னை எதையுமே ஃபீல் பண்ண விடலை" என்றெல்லாம் ஆதங்கம் தெறிக்க பேசினாள்.


எல்லாவற்றையும் அமைதியாய் கேட்டு முடித்தவன், "முடிச்சிட்டியா, இன்னும் வேற ஏதாவதா இருக்கா? கால் கட் பண்ணனும்" என்று இறுகிய முகத்துடன் கூற, 'போடா டேய், நீ என்ன பெரிய இவனா?' என்று எப்பொழுதும் போல் பாவையிடத்தில் கோபம் வந்து ஒட்டிக் கொள்ள, 'நீ என்னடா கட் பண்றது நானே பண்றேன். இனி உன் கிட்ட பேசுனேன் வை என்னை எதையாவது கொண்டு அடி' என்று அழைப்பை துண்டித்தவள் தான் அதற்கு பின் அழைக்கவே இல்லை.



திருமணமும் வெகுசிறப்பாகவே நடந்தேறியது எந்தவித குறையுமின்றி. சாராவின் பார்வை அவனையே தொடர அவன் நிமிரவேயில்லை. அப்படியே இரண்டு மூன்று முறை புன்னகைத்தாலும் அது வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்தது போல் இருக்க, "ப்பா, இதுக்கு சிரிக்காமலே இருந்திருக்கலாம். நானென்னமோ உங்களை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி ரியாக்ஷன் கொடுக்குறீங்க நீங்க" என்று அவன் காது படவே அவள் முணுமுணுத்தாலும் பாவையை கண்டு கொள்ளாது அவளருகில் நின்ற கார்த்திக்கிடம் பேசினான். ஆம், இருவருக்கும் நேரடி பேச்சு மட்டும் தான் இல்லை மற்றபடி அவள் குடும்பத்தில் அவனும், அவன் குடும்பத்தில் அவளும் நன்றாகவே பொருந்தி போனார்கள்.


திருமண முடிந்த மதியம் எல்லோரும் சித்வித் வீட்டில் குழுமியிருக்க ஷர்மி சட்டென்று மயங்கி சரிந்தாள். மருத்துவமனை அழைத்துச் செல்ல, "ப்ளட் ப்ரெஷர் அதிகமாகிடுச்சு, வீக்கா இருக்காங்க. அப்சர்வேஷன்ல்ல வைச்சிடுவோம். ப்ரெஷர் குறைஞ்சா தான் வீட்டுக்கு அனுப்ப முடியும்" என்றிருக்க அகிலாவும் மூர்த்தியும் அவளுடன் இருந்து கொண்டு, "மோனி, நீ சாராவையும் சித்தையும் வீட்டுக்கு அழைச்சுட்டு போ. நடக்க வேண்டியதை பார்த்துக்கோ. நாங்க ஷர்மியை பார்த்துக்கிறோம்" என்று சித்விக் மறுத்தாலும் அவர்கள் இருவரையும் மோனிஷாவுடன் அனுப்பி வைத்தார் அகிலா.


சூழல் சற்று அசௌகரியமாக இருந்தாலும் அதை அனைவரும் இயல்பாக்க முயன்றனர். மோனிஷா தான் வீட்டில் நின்று பார்த்துக் கொண்டாள். இதில் அவளது குழந்தைகள் வேறு அழுது படுத்தி எடுக்க, "நீங்க போங்க அண்ணி, நான் பார்த்துக்கிறேன்" என்று சாரா தான் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை வரவேற்று அகிலாவையும் மூர்த்தியையும் குறித்து கேட்டவர்களிடம் பதில் கூறி அனுப்பி வைத்தாள். புதிதாக வந்திருந்த வீடு போல் அல்லாது வெகு இயல்பாய் பொருந்தி நின்றாள் பெண். இத்தனை நாள் அமைதியாய் முகம் திருப்பி சுற்றித் திரிந்த மல்லிகா மகள் சென்றவுடனே அழுகையில் கரைந்தார். கார்த்திக் தங்கைக்கு அழைத்து விட வரிசையாக ஒவ்வொருவராக பேசி முடித்து நிமிர பொழுது இரவை நெருங்கியிருந்தது. சாராவிற்கு அத்தனை அசதியாய் தோன்றியது. உடுத்தியிருந்த உடை வேறு உறுத்த துவங்க சித்விக் அறைக்குள் நுழைந்திருந்தாள். கிளம்பிக் கொண்டிருந்தவன் மீண்டும் ஷர்மிளாவை காண சென்றிருந்தான்.


தன் பையிலிருந்த இலகு உடையை எடுத்து குளியலறை புகுந்தவள் குளித்து உடை மாற்றி வர உறக்கம் கண்கள் நிரப்பி இருக்க படுக்கையில் அமர்ந்திருந்தவள் அவளையும் அறியாமல் உறங்கியும் போனாள். குழந்தைகளுக்கு உணவு கொடுத்து உறங்கு வைத்து வந்த மோனிஷா கண்டது என்னவோ உறங்கும் சாராவை தான். தம்பியை தேடியவள் அவனுக்கு அழைக்க, "ஹாஸ்பிடல்ல இருக்கேன்க்கா, நீ போய் படு. நான் வந்திடுவேன்" என்றிருந்தான்.


(தொடர்ந்து கீழே படிக்க)
 
Last edited by a moderator:
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93

அகிலாவிற்கு அழைத்து சில நிமிடங்கள் பேசியவள் உறங்க சென்றுவிட சித்விக் வீடு திரும்ப மணி பதினொன்றை நெருங்கி இருந்தது. அவனும் உடை மாற்றி படுக்கையில் விழுந்து விட மறுநாள் சாராவின் வீட்டிற்கு கிளம்பி விட்டனர். இருவருமே மறுத்தாலும் அகிலா விடவில்லை. காலையில் சாராவுடன் சிறிது நேரமிருந்து உணவை முடித்து மீண்டும் மருத்துவமனை கிளம்பி சென்று விட்டான். சூழல் கருதி யாரும் எதுவும் வாய் திறக்கவில்லை.


ஆக, மூன்று நாட்களும் இருவருக்கும் பொழுது எவ்வாறு கடந்ததென்றே தெரியவில்லை. மருத்துவமனை,வீடு என்று சுற்றி திரிந்தவர்கள் நிதானம் பெறவே மூன்று நாட்கள் பிடித்தது. அவள் வரும் பொழுது அவன் உறங்கியிருப்பான் அல்லது அவள் உறங்கி இருப்பாள் இரண்டுமே இல்லையென்றால் இருவரும் ஷர்மியுடன் மருத்துவமனையில் இருப்பார்கள். ஒரே வீட்டில் ஒரே அறையில் இருந்தாலும் அமர்ந்து முகம் பார்த்து பேசிட நேரமிருக்கவில்லை. முன்பிருந்த சின்ன சின்ன பார்வைகள் சீண்டல்கள் கூட ஏதும் பாவையிடத்தினுள்ளும் இல்லை. மனநிலை இருவருக்குமே சீராக இல்லாத பொழுது ஒருவரை ஒருவர் நெருங்க முயற்சிக்கவில்லை. விலகி நின்றனர், அவனின் மனநிலை கருதி பெண் தயங்க அவனும் அவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.


மோனிஷா வீட்டில் சமையல் பார்த்துக்கொள்ள சாரா தான் சித்விக்குடன் அகிலாவிற்கு உணவை கொண்டு செல்வது. சித்விக்கிடம் பேச்சு வார்த்தை குறைவு என்பதை விட இருவரும் பேசவில்லை என்றே கூறிடலாம். ஆடவனும் முயலவில்லை அவளும் தான். ஆனால் முன்பு போல் இறுகியல்லாது சாதரணமாக தான் இருந்தான் ஆடவன்.

அன்று தான் அவன் விழித்திருக்கும் பொழுது அறைக்குள் நுழைந்தாள். அவளுக்கு விடுப்பு முடிந்திருக்க நாளை அலுவலகத்திற்கு வருமாறு மின்னஞ்சல் வந்திருந்தது. எப்பொழுதும் இயல்பாய் நடக்கும் பேச்சுக்கள கூட இந்த ஒரு மாதத்தில் அற்றுப் போயிருக்க வார்த்தைகள் மேலெழும்ப மறுத்தது. அவனுக்கெதிரே இருந்த ஷோஃபாவில் அமர்ந்து கொள்ள அரவத்தில் மடிக்கணினியில் இருந்து தலையை நிமிர்த்தி பார்த்தவன் முகத்தில் லேசாக புன்னகை அரும்ப, 'என்ன?' என்பதாய் புருவம் உயர்த்தினான் ஆடவன். வெகு நாட்களுக்கு பிறகான புன்னகை பாவையையும் தொற்றிக் கொள்ள இருபுறமும் தலையசைத்தவள் பேச விழைய சித்விக் அலைபேசி ஒலித்திருந்தது.


அழைப்பை ஏற்று நகர்ந்து விட்டான் பால்கனி புறமாக. அரைமணி நேரத்திற்கு மேல் அமர்ந்து பார்க்க அவன் வரும் அறிகுறியே இல்லாது போயிற்று. ஆடவன் நடவடிக்கை பெண்ணவளுக்கு அவன் தன்னை விலக்குவது போலொரு பிரம்மையை கொடுக்க தன்னையுமறியாது கண்ணீர் துளிர்த்தது. சட்டென்று முளைத்து விட்ட கோபத்துடன் படுக்கையில் விழுந்து விட்டாள். வெகு நேரம் கழித்து அவள் உறங்கிய பிறகே உள்ளே நுழைந்தவனுக்கு தலை வலிப்பதாகவே தோன்றியது. ஆம், பாதியில் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தில் சில குளறுபடிகள் நடந்தேறியிருக்க வீட்டின் உரிமையாளர் ஒரு பூகம்பத்தை கிளம்பியிருக்க அவன் உடனே மதுரையை நோக்கி கிளம்ப வேண்டிய கட்டாயம். இவ்வளவு நேரம் அவருடன் தான் தார்க்கம் புரிந்து கொண்டிருந்தான்.


சாராவிடம் கூறலாம் என்று நினைத்தவன் அவளை பார்க்க அவளோ ஆழந்த உறக்கத்தில் இருந்தாள். உடை மாற்றி கிளம்பியவனுக்கு உறங்குபவளை எழுப்ப மனது வரவில்லை. ஷர்மிளா ஓரளவு குணமடைந்திருக்க, "நாளைக்கு ஈவ்னிங் நீங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம் ஆனா இனிமே கவனமா பார்த்துக்கணும்" என்று மருத்துவர் கூறியிருந்தார். ஷர்மியின் கணவனும் மருத்துவமனை வந்திருக்க, "நீங்க வீட்டுக்கு போங்க, நானும் மாப்பிள்ளையும் இருக்கோமே. நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கிறோம்" என்று மூர்த்தியை அகிலா இரவே வீட்டிற்கு அனுப்பி இருந்தார்.


யோசனையில் புருவத்தை நீவிய சித்விக் அலைபேசியை எடுத்தப்படி அறையை விட்டு வெளியில் வர மூர்த்தி வீட்டின் அழைப்புமணியை அழுத்தவும் சரியாக இருந்தது. கதவை திறந்து அவரிடம் சில நிமிடம் பேசியவன் தகவலை கூறி விட்டு கிளம்பியும் இருந்தான்.


காலையில் சாரா எழும் பொழுதே வழக்கம் போல் அவனில்லாத வெற்றறையே வரவேற்றது. நான்கு நாட்களாக எப்பொழுது வருகிறான், உறங்குகிறான் என்பது கூட அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. என்றுமில்லாது மனது இன்று அதீத சலிப்பாக உணர பெருமூச்சு விட்டவள் எழுந்து குளித்து வெளியில் வர மூர்த்தி அமர்ந்திருந்தார். அவரிடம் ஷர்மிளா குறித்து விசாரித்துக் கொண்டவள் மருத்துவமனை கிளம்ப ஆயத்தமாக மல்லிகா அழைத்து விட்டார். நேற்று தான் மோனிஷா ஊருக்கு கிளம்பி இருந்தாள். "உனக்கு தான் சமையல் அவ்வளவா வராதே! அப்ப நீ போகும் நம்ம வீட்டுக்கு வா. நான் சமைச்சு தரேன்" என்று மல்லிகா கூறியிருக்க, "சரிம்மா" என்றவள் மூர்த்தியிடம், "நீங்க முன்னாடி போங்க மாமா, நான் பின்னாடியே வந்திடுறேன்" என்று அவரை அனுப்பி வைத்து அன்னையிடம் விரைந்திருந்தாள்.



அந்த மருத்துவமனையினுள் நுழைந்த சாரா மொபைலை எடுத்து அகிலாவிற்கு அழைத்து விட்டாள். "அத்தை, நான் ஹாஸ்பிடல் வாசல்ல தான் இருக்கேன். ரூம் நம்பர் என்ன?" என்பதாய். இத்தனை நாளாய் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தவர்கள் நேற்று இரவு தான் ஷர்மிளாவை அறைக்கு மாற்றியிருந்தனர்.

"சொல்றதையே கேட்க மாட்டீயா சாரா? நாங்களே ஈவ்னிவ் டிஸ்சார்ஜ் ஆகிடுவோம். எதுக்கு அலையுற நீ?" என்று கடிந்து கொண்டாளும் வாயில் வந்து விட்டார் மருமகளை அழைத்து செல்வதற்காக.


"இப்ப எப்படி இருக்காங்கத்தை, ஹெல்த் ஓகே வா, பேபி எப்படி இருக்கு?" என்ற சாரா தான் கொண்டு வந்திருந்த உணவு நிரம்பிய பையை அகிலாவிடம் கொடுத்திருந்தாள்.

"ம்ம்...இரண்டு பேருமே ரொம்ப நல்லா இருக்காங்க, சாப்பாடு நீயா செய்த?" என்றபடி அறையை நோக்கி நகர, "க்கும்...நான் செஞ்சு கொண்டு வந்தா அப்புறம் ஷர்மிக்கு பக்கத்தில உங்களுக்கும் மாமாவுக்கு ஒரு பெட்டை ரெடி பண்ணிட வேண்டியது தான்" என்றவளின் பேச்சில் முறைத்த அகிலாவிற்கு புன்னகை மேலெழும்பி விட, "நீ இருக்கியே! ஆனாலும் இவ்வளவு வாய் கூடவே கூடாது. பாவம் என்புள்ளை, சத்தமா கூட பேச மாட்டான். அவனுக்கும் சேர்த்து நீயே பேசிடுவ போல" என்று அவளது தோளில் தட்டினார்.

அவரது பேச்சில் தலையை சிலுப்பிக் கொண்டவள், "அம்மா தான் செஞ்சு கொடுத்தாங்க, வரும் போது அப்படியே போய் வாங்கிட்டு வந்திட்டேன். மதியமா அண்ணாவும் அண்ணியும் ஊருக்கு கிளம்பவும் அவங்களும் வரேன் சொல்லி இருக்காங்க" என்று அறைக்குள் நுழைந்தாள். சாரா அகிலாவுடன் முன்பை விட இன்னும் பிணைவாக பொருந்தி போனாள். அவருக்கு முதலில் கோபமிருந்தாலும் அவளை ஏதோ ஒரு வகையில் பிடித்து தான் போனது. அவளின் அலட்டலில்லாத இயல்பான பேச்சுக்கள் அவரை ஈர்த்திருந்தது. நீண்ட நாளைய பழக்கம் போல் இருக்குமிடையில் உரிமையான பேச்சு வார்த்தைகள் நடந்தேறிக் கொண்டிருந்தது. நான்கு நாட்களில் முக்கால்வாசி அவருடன் தானே கழித்தாள் அந்தோ பரிதாபம்.


பேச்சுக்கள் நீள சற்று நேரத்தில் மல்லிகாவும் வந்து விட்டார் கணவருடன். சாராவிற்கு அலுவலகத்தில் இருந்து மீண்டும் அழைப்பு வந்து விட அகிலாவை தனியே அழைத்து கூறியிருந்தாள். யோசனையாய் நெற்றியை சுருக்கியவர், "நேத்தே சொல்லி இருக்கலாம்ல்லம்மா, சித் வேற ஊருல்ல இல்லை. அவன் இருந்தா உன்னை அழைச்சுட்டு போக சொல்லி இருப்பேன். அவன்கிட்ட பேசுனீயா நீ?" என்றிட ஒரு நிமிடம் விழித்தவளுக்கு சட்டென்று முகம் விழுந்து விட்டது. அவன் ஊரில் இல்லையா? வீட்டில் இருந்த எனக்கே தெரியவில்லை. மருத்துவமனையில் இருந்த இவருக்கு தகவல் கொடுத்திருக்கிறான் எனும் பொழுது பெண் மனது நொடியில் கசங்கி தான் போனது. ஏற்கனவே அவன் தன்னை அலட்சியம் செய்வது போலொரு மாயையில் இருந்தவளை இந்த செய்தி அதிகமாகவே பாதித்திருந்தது. கண்ணெல்லாம் கலங்கி அழுகை வரும் போல் தோன்ற அவசரமாக ஓய்வறை சென்று முகம் கழுவி தன்னை சமன் செய்து கொண்டவளுக்கு சுயபச்சாதாபம் எழ மனதோ நிலையில்லாமல் அலைப்புற தொடங்கியது.

மல்லிகா வேறு, "முகம் ஏன் ஒரு மாதிரியாக இருக்கு சாரா?" என்று படுத்தி எடுக்க பெண் திண்டாடி தான் போனாள் சமாளிப்பதற்குள்.


"நான் அப்படியே எங்க வீட்டுக்கு போய்டுறேன் அத்தை, அப்பா சென்னைக்கு பஸ் ஏத்தி விட்டுடுவார்" என்று சாரா அகிலாவிடம் கூறியிருக்க அவரும் பெண்ணை பிடித்துக் கொண்டார். மல்லிகா மகளை அவ்வபொழுது துருவுவதை கவனித்து கொண்டே தான் இருந்தார்.


"என்னாச்சு? நீ நார்மலா இல்லையே?" என்றவர் அவளின் கைகளை பிடித்துக் கொள்ள அதில் பதில் கூறாமல் உன்னை விட மாட்டேன் என்ற குறிப்பிருக்க சட்டென்று தேங்கிய நீர் துளிகளை உள்ளே இழுத்தவள், "நான் போய்ட்டு வரேன்த்தை, ஆனா உங்க பையனே வந்து கூப்பிட்ற வரை வீட்டுக்கு வர மாட்டேன்" என்று கூறி கிளம்பி இருந்தாள். அதற்கு மேல் அகிலா பேசுவதற்கு அவள் அனுமதித்திருக்கவில்லை.


ஷர்மியும் அவரை அவசரமாக அழைத்திருக்க இரவை போல் தான் வீட்டிற்கு வந்து ஆசுவாசமாக அமர்ந்து மகனை அலைபேசியில் பிடித்தார். அத்தனை பேச்சு பேசி தீர்த்து விட்டார். "நீ என்ன தான் செய்ற சித்? நாங்களா உனக்கு பொண்ணு பார்த்தோம். நீயா டிசைட் பண்ணிக்கிட்ட லைஃப் தான? அப்புறம் என்ன உங்க ரெண்டு பேருக்குள்ளயும்? நீயா வந்து கூப்பிடாம வர மாட்டேன் சொல்லிட்டு போறா அவ? இன்னும் நாலு நாள் கூட முடியலை கல்யாணமாகி, நீ அவளை அழ வைச்சிருக்க. ரொம்பவே தப்புடா, நம்ம வீட்டு பொண்ணு இந்த மாதிரி நாலு நாள்ல்ல கண்ணை கசக்கி இருந்தா இப்படி சும்மா இருந்திருப்போமா?" என்று பேசி அவனது காதை தீய செய்திருக்க தலையை பிடித்துக் கொண்ட சித்வித் தற்பொழுது பாவையை தேடி சென்னை நோக்கிய பயணத்தில்.



காலையில் பேருந்தை விட்டு இறங்கியவளை அஸ்வின் சென்று அழைத்து வந்திருந்தான். திருமணம் முடிய அஸ்வினும் நேற்று தான் சென்னை வந்திருந்தான், அவனுக்கு தேர்வு நெருங்கி கொண்டிருப்பதால். "நீ வரேன் செல்லியிருந்தா நான் இருந்து கூட்டிட்டு வந்திருப்பேன்ல்ல சாரா" என்றிட, "எனக்கே தெரியாது டா, நீ வேற" என்று இதழை பிதுக்கியவள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் படுக்கையில் விழுந்திருந்தாள் பயணக்களைப்பில்.



அவள் வந்திறங்கிய ஒரு மணி நேரத்திலே சித்விக்கும் வந்து சேர்ந்திருந்தான். அத்தனை வேகமாக காரை இயக்கி வந்திருந்தான். அழைப்பு மணி ஒலிக்க கதவை திறந்த அஸ்வின் ஒரு நிமிடம் சித்விக்கை கண்டு விழித்து, "உள்ள வாங்க" என்றிட, "சாரா வந்திட்டாளா?" என்றபடி உள்ளே வந்து அமர்ந்து கொண்டான்.


"இப்ப தான் நான் போய் கூட்டிட்டு வந்தேன், உள்ள தூங்குறா" என்ற அஸ்வின் அவனுக்கு குடிப்பதற்கு தேநீர் போட்டு கொண்டு வந்து கொடுக்க வாங்கி பருகியவன் சிறிது நேரம் அவனுடன் அளவளாவிக் கொண்டிருக்க அஸ்வின் கிளம்பி இருந்தான் கல்லூரிக்கு. அவளுடன் சண்டை போடும் வேகத்தில் வந்திருந்தவனை அஸ்வின் இருப்பு தடை போட்டிருக்க அவன் கிளம்பியவுடன் அறைக்குள் நுழைந்தவன் கண்டது என்னவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சாராவை தான்.


நெற்றியை தேய்த்துக் கொண்டவனுக்கு அத்தனை சலிப்பாய் மனது உணர அப்படியே பாவை அருகில் படுத்துக் கொண்டான். அவள் அழுது விட்டாள் என்று அன்னை கூறிய செய்தி ஆடவனை இளக்கியிருந்தது. எங்கே தவறுகிறோம் இருவரும் என்று தேடி வந்தவனுக்கு விடையே கிடைக்காது போக அவளிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தான்!..


அப்படியே அவளையே பார்த்தப்படி ஒருக்களித்து படுத்திருந்தவன் விழிகள் பெண்ணவளை ஆரத்தழுவ நெற்றியை தொட்டு மீளும் சிகையை காதோரம் ஒதுக்கியவன் இதழில் அவனையும் அறியாமல் புன்னகை குடியேறியது. அவனது இதழ்கள் பேதையின் கன்னத்தை நோக்கி நகர ஆடவன் மீசை மயிரிழைகளால் வெண்பஞ்சு கன்னத்தில் உண்டான குறுகுறுப்பில் சட்டென்று மறுபுறம் திரும்பி படுத்திருந்தாள் பாவை அன்னிச்சையாக கைக் கொண்டு முகத்தை மூடியபடி. அவனின் கைகள் பாவையின் கைகளை மெதுவாக மிக மெதுவாக இழுத்து தன்னுடைய கரங்களுக்குள் அடக்க முயன்றது. அவளது மூக்கில் இருந்த அந்த ஒற்றைக்கல் மூக்குத்தி ஆடவனை தன்னை நோக்கி இழுக்க அதை வருடியவன் விரல்கள் அப்படியே இதழை நோக்கி கீழிறங்கி இருக்க சில நிமிடம் அதிலே நீடித்தவன் கைகள் அவளிடையை தன்னுடன் இறுக்கிக் கொள்ள சில நிமிடங்களில் உறங்கியும் போனான்.




தொடரும்....
 
Last edited by a moderator:
Messages
524
Reaction score
403
Points
63
அடக்கடவுளே என்ன இது கல்யாணம் பண்ணியும் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிறாங்களே நேத்ரா மா இவங்க எப்போ தான் சண்டை போடாமல் இருப்பாங்க 🤔🤔
 
Top