• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 15

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் - 15


இந்துவிடம் சம்மதம் கூறி விட்டாள் தான். ஆனால் மனதோ துளியளவும் அதை ஏற்க தயாராக இல்லை. புதிதாக ஒரு உறவு என்பதை அவள் சிந்தித்தது கூட கிடையாது. திரிலோகேஷின் இடத்தில் இன்னும் அவளால் யாரையும் ஒப்பிட்டுக் கூட பார்த்திட முடியவில்லை.

கண்டிப்பாக எதையுமே ஏற்க முடியாது என்று மனது ஓலமிட்டது. அவளது கோபம் முழுவதும் அவன் மீது தான் திரும்பியது. 'நீ என் லைப்ல வாராமலே இருந்திருந்தா நான் எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பேன்!' என்று நினைத்தவளின் கன்னங்களின் கண்ணீர் கோடுகளாக வழிந்தது.

உணர்வற்று பள்ளிக்கு சென்றவளுக்கு அன்றைய தினம் முழுவதுமே எதுவுமே ஓடவில்லை. எதையோ பறிகொடுத்தது போல் ஒரு உணர்வு. இந்த கட்டாயத்தை தன்னால் மறுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம். 'அவன் எனக்கில்லைன்னா எதுக்கு அவனை என் வாழ்க்கையில நீ கொண்டு வந்த?' என்று கடவுளிடம் தான் மானசீகமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

எவ்வாறு இந்த சூழலை கடப்பது என்று புரியாமல் சிக்கி தவித்தவள் மாலையில் வீட்டிற்கு செல்ல, "மீனு, நாளைக்கு லீவு போடும்மா. மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்க" என்று இந்து கூற தூக்கி வாரி போட்டது.


"ம்மா... காலையில தான சம்மதம் சொன்னேன். அதுக்குள்ளேயா?" என்று சலிக்க, "இதுவே லேட் டா, நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்ல்ல. நம்ம சொந்தம் தான். ரொம்ப நாளாவே கேட்டிட்டு இருந்தாங்க. மாப்பிள்ளை உன்னை ஏதோ பங்ஷன்ல்ல பார்த்திருப்பார் போல, ரொம்ப பிடிச்சிருக்காம். குடும்பமும் நல்ல குடும்பம் மீனும்மா" என்றவர் முகத்தில் அவ்வளவு பூரிப்பு.

எப்படியாவது இந்ந திருமணம் நன்றாக முடிந்து விட வேண்டும் என்ற தாய் உருகி இறைவனிடம் மன்றாட, மகளோ நடந்து விடக் கூடாது என்று மன்றாடினாள்.

இரவு முழுவதும் சிந்தனையிலே செல்ல உறக்கம் என்பது மறந்தே போனது. விடியவே கூடாதென்றெல்லாம் மனது பிதற்ற ஆரம்பித்தது. என்ன செய்கிறாள் நினைக்கிறாள் என்றே அவளுக்கு புரியாத நிலை. மனது அவள் கட்டுபாட்டிலன்றி சிதறிக் கொண்டிருக்க, செயல்கள் எதுவுமே மூளையில் பதியவில்லை. ஏறக்குறைய பித்து பிடித்த நிலை தான்.

கதவை தட்டி காபியை கொடுத்த இந்துமதி, "இந்த புடவைய கட்டிக்கோ மீனும்மா, அதுக்கு மேட்ச்சா நகையும் வச்சிருக்கேன். சீக்கிரம் ரெடியாகிடு. கொஞ்ச நேரத்தில் அவங்க வந்திடுவாங்க" என்று பரபரப்பாய் அவளிடம் ஒப்புவித்து அடுத்து உணவிற்கு ஏற்பாடு செய்ய கிளம்பி விட்டார். மீனு சம்மதம் மட்டுமே தடையாக இருந்தது இவ்வளவு நாளாக. ஏற்கனவே அவளை நிறைய முறை கேட்டுக் கொண்டே இருந்தனர் அவர்கள்.

சில நிமிடம் அவர் வைத்துச் சென்றதை வெறித்து பார்த்தவளுக்கு கிளம்புவதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. பெருமூச்சை விட்டு குளித்து ஆயத்தமாகி அமர்ந்து விட்டாள்.

மீனலோஷினியின் முகத்தில் தெரியும் சோகத்தின் சாயல் பிடிக்கவில்லை என்பதை நேரடியாக காட்டிக் கொண்டிருந்தாலும், இந்துமதி அதை கண்டுக் கொள்ளவில்லை. திருமணம் முடிந்து விட்டால், சரியாகி விடும் என்று எண்ணியவருக்கு முதலில் இதை நல்ல படியாக முடித்து விட வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே.

சிறிது நேரத்தில் அவர்கள் வந்து விட, மீனுவை அழைத்து வந்தார். அவளால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. ஏதோ பொம்மை போல் அவர்கள் முன் நின்று கூறுபவற்றை செய்தாள்.


"பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்மா, இன்னைக்கே பூ வச்சு தாம்பூலம் மாத்தி நாள் குறிச்சிடலாம். கல்யாணத்தை கிராண்டா வச்சிடலாம்" என்று மாப்பாள்ளையின் தந்தை கூற மீனுவை ஒரு பார்வை பார்த்த இந்துமதி, "சரிண்ணா, எங்களுக்கு சம்மதம்" என்று விட்டார்.


கண நேரத்தில் எல்லாம் அவள் கண் முன்னே நடந்தேறிற்று ஆனால் தடுக்க முடியவில்லை. மனது முழுவதும் வெறுமை சூழ்ந்திருக்க, அந்த சூழல் இன்னும் எரிச்சலூட்டியது. எப்பொழுது அறைக்குள் சென்று இந்த அலங்காரத்தை கலைத்து போடலாம் என்றே அவளுக்கு தோன்றியது. எதிலுமே பிடிப்பற்று அமர்ந்திருக்க அவளை சூழ்ந்துக் கொண்ட மாப்பிள்ளையின் சொந்தங்கள், "என்னம்மா படிச்சிருக்க. எங்க வேலை பார்க்கிற?" என்று கேள்வியால் துளைக்க, ஒரு வரியில் பதிலளித்துக் கொண்டிருந்தாள் செய்கையாக ஒட்ட வைத்திருந்த புன்னகையுடன்.

"அதான் நிச்சயம் முடிஞ்சிருச்சிசே! நீங்க ஜோடியா நில்லுங்க. ஒரு செல்பி எடுக்கலாம்" என்று மாப்பிள்ளையின் தங்கை மீனுவை மாப்பிள்ளையின் அருகில் நிறுத்தி விட்டாள். அதை கண்ட இந்துமதிக்கு அவ்வளவு பூரிப்பு. மாப்பிள்ளையும் நன்றாக அவளுக்கு பொருத்தமாக இருப்பதாகவே அவருக்கு தோன்றியது. இத்தனை நாட்கள் சேர்த்து வைத்த ஏக்கமெல்லாம் நொடியில் கரைந்து விட்டது போல் ஒரு மாயை.

மீனுவுக்கு ஏதோ நெருப்பில் நிற்பது போல் தோன்றியது. விட்டால் அழுது விடுபவள் போல் முகத்தை வைத்திருந்தாள். முகம் மட்டுமின்றி அவளது அகமும் கசங்கி இருந்தது.

மேலும் அவளை படுத்தாமல் அவர்கள் சிறிது நேரத்தில் கிளம்பி விட, அடுத்த நொடியே அறைக்குள் அடைந்து கொண்டாள். இந்த சூழல் அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. பிடிக்கவில்லை. ஆனால், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம். கோபத்தில் தலையில் இருந்த பூவை எல்லாம் பறித்து எறிந்தாள். இது எனக்கு வேண்டாம் என்று கத்தி அழுக வேண்டும் போல் இருந்தது. ஆனால் இந்துமதிக்காக பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்.

அவர்களை அனுப்பி விட்டு வந்து மீனுவின் அறைக் கதவை தட்டினார்.
வேகமாக கண்ணீரை துடைத்து கண்ணாடியில் சரி பார்த்து சிதறிய பூவை எல்லாம் அள்ளி ஓரம் வைத்து கதவை திறந்தாள்.


"என்னம்மா, மாப்பிள்ளை பிடிச்சிருக்கா? உன்னை கேட்காம சம்மதம் சொல்லிட்டேன். உனக்கு ஒண்ணும் வருத்தமில்லையே" என்று அவளின் தலையை வருடியவாறு கேட்க, மகிழச்சியில் மிளிர்ந்த அவரை வருத்த விரும்பாது வார்த்தைகளால் கூறாது சம்மதமாக தலையாட்டினாள்.


"ப்பா... இப்ப தான் நிம்மதியா இருக்கு. அவங்க அம்மா ரொம்ப நல்லா பேசுறாங்க. தங்கமானவங்களா இருக்காங்க" என்று சில்லாகித்து மகளின் எதிர்காலத்தை எண்ணி கண்ணில் ஒளிரும் ஆர்வத்துடன் கூற இப்பொழுதும் அவளது பதில் தலையசைப்பு மட்டுமே.

"ஏன் மீனு, எதுவுமே பேச மாட்ற?" என்று சற்று பதற்றமாக இந்து வினவ, "ஒண்ணுமில்லைம்மா, லைட்டா தலைவலி, அதான்" என்று சமாளித்தவள் சில நிமிடங்களில் மீண்டும் உள்ளே நுழைந்து கொண்டாள்.

அடுத்தடுத்து நாட்களில் மாப்பிள்ளையிடமிருந்து இவளுக்கு அழைப்பு வந்து கொண்டிருக்க, "வேலையிருக்கு, நான் ஸ்கூல்ல இருக்கேன். வெளியில இருக்கேன். தலைவலி" என்றெல்லாம் கூறி பேச மறுத்து போக்கு காட்டிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன், "மீனு என்னை ஏன் அவாய்ட் பண்ற? உனக்கு உண்மையிலே என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா? இல்ல உங்க வீட்டுல கட்டாயப்படுத்துறதுக்காக சம்மதம் சொன்னீயா?" என்று நேரடியாகவே கேட்டு விட, அதற்கு மேல் மறைக்க விரும்பதவள், "யெஸ்ஸ்... எனக்கு விருப்பமில்லை" என்று அழுத்தமாக கூற அழைப்பை துண்டித்து விட்டான்.

மறுநாளே அவன் வீட்டில் கூறி திருமணத்தை நிறுத்தி விட்டான். ஆனால் மீனுவை முன்னிருத்தாமல் சாக்கு போக்கு சொல்லிட இந்துமதி அழுக ஆரம்பித்து விட்டார். அவனுக்கு அவளை பழிக்க விருப்பமில்லை. அவனுடைய நடவடிக்கையால் சற்று ஆச்சரியமடைந்தவள் அவனுக்கு அழைத்து நன்றி கூற, "பரவாயில்லை, உங்களுக்கு பிடிக்கலைன்னா முதல்லே சொல்லிடுங்க. அடுத்தவங்க வாழ்க்கையோட விளையாடதீங்க. இது ஒண்ணும் சாதரண விஷயமில்லை. எங்க வீட்டுக்கு உண்மை தெரிஞ்சா, கண்டிப்பா உங்களை சும்மா விட மாட்டாங்க. அதான் என் மேல பழிய போட்டு நிறுத்திட்டேன். கல்யாணம்ன்றது கட்டாயத்தால என்னைக்குமே இருக்க கூடாது. அப்படி இருந்தா ரெண்டு பேர் வாழ்க்கையுமே நரகமாகிடும். இனிமேலாவது இது மாதிரி நடக்காதீங்க!" என்று கடுப்பாக கூறி அழைப்பை துண்டிக்க, மீனுவிற்கு தன்னுடைய செயலை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது.

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்து தன்னை தானே கடிந்து கொண்டவளை, "இது போனா என்ன? இதை விட நல்லா இடமா நான் பார்க்கிறேன்" என்று இந்துமதி கூற சற்று முன்னிருந்த ஆசுவாச மனநிலை எங்கோ பறந்திருந்தது.

இதை இப்படியே விட்டால் சரி வாராது என்றுணர்ந்தவள் நிறைய யோசித்து மூளை மனது இரண்டிடமும் போராடி தவித்தாள். என்ன செய்வது என்ற எண்ணமே அவளை வியாபித்திருக்க, இரண்டு வாரம் கடந்த நிலையில் இன்னொரு போட்டோ ஜாதகத்துடன் வந்து நின்றார் இந்துமதி.

அதை கண்ட மீனுவிற்கு ஐயோ! என்றானது. இவர் சுலபத்தில் தன்னை விட்டு விட மாட்டார் என்று உணர்ந்தவளுக்கு ஒன்றே ஒன்று மட்டும் அழுத்தமாக உரைத்தது. தன்னால் திரிலோகேஷை தவிர யாரையும் ஏற்க முடியாது என்பதை.

அவனது செயல்களால் அவனையும் ஏற்க முடியாது தான். ஆனால், தற்பொழுது இருக்கும் இக்கட்டிலிருந்து அவனால் மட்டுமே வெளிக் கொண்டு வர முடியும் என்றெண்ணியவள் விரல்கள் அவனது எண்ணை அழுத்த, அழைப்பு சென்றது. இது மீனலோஷினி இன்று எடுத்த முடிவு அன்று.

தனக்கு இந்து மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்திய கணங்களில் எடுத்து விட்டாள். ஆயிரம் அல்ல இலட்சம் முறை அலசி ஆராய்ந்து விட்டாள். அதை செயல்படுத்திட அத்தனை தயக்கம். ஆனால், இதை செய்தே ஆக வேண்டும் என்று நிலையிலிருக்கும் பொழுது அவனிடம் சென்று நிற்கும் முடிவை எடுத்து விட்டாள்.

அவளது எண்ணை பார்த்து யோசனையோடு அழைப்பை ஏற்றவன், "சொல்லு மீனு" என்றான்.

"நான் உங்ககிட்ட பேசணும்" என்றிட, "ம்ம்... என்ன விஷயம் சொல்லு?" என்றான்.


"நேர்ல பேசணும்" என்று அவள் கூற, அவனது நெற்றியில் ஆராய்ச்சி கோடுகள் விழ, "எதாவது பிரச்சனையா?" என்றிட, "வர முடியுமா? இல்லையா?" என்றாள் பேச்சை துண்டிப்பது போல்.


"சரி, ஈவ்னிங்கா வீட்டுக்கு வரேன். மேகாவும் உன்னை பார்க்கணும்னு சொல்லியிருந்தா" என்று கூற, "இல்லை, வீட்டுக்கு வேணாம். நாளைக்கு மார்னிங் பக்கத்தில இருக்க காபி ஷாப் வந்திடுங்க" என்று அதன் பெயரை கூறி அழைப்பை துண்டித்து விட, 'என்னாச்சு இவளுக்கு' என்று சிந்தனையில் ஆழ்ந்து விட்டான். மறுநாள் மேகாவை பள்ளியில் விட்டு அவள் கூறிய இடத்திற்கு செல்ல ஏற்கனவே அவனுக்காக காத்திருந்தாள்.


"லேட்டாகிடுச்சா, சாரி" என்றவன் வந்தமர அவளது முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.


பதில் கூறாது தனக்கு காபியை ஆர்டர் செய்தவள் மெனுகார்டை அவன் புறம் நகர்த்த, "எனக்கு எதுவும் வேணாம். இப்ப தான் சாப்பிட்டு வந்தேன்" என்றிட, தோளை குலுக்கியவள் அமைதியாக காபியை பருக, திரிலோகேஷ் கையை கட்டியபடி அவளையே பார்த்து அமர்ந்திருந்தான்.


வெளியில் அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் அதி பெரும் புயலே அவளது மனதிற்குள் சுழன்று கொண்டிருந்தது. அவனுக்கு அவளிடம் ஏதோ சரியில்லை என்று புரிந்தது. ஆனால், இன்னதென்று யூகிக்க முடியவில்லை. கடினப்பட்டு முகத்தை அவ்வளவு நிர்மலமாக வைத்திருந்தாள் மீனலோஷினி.

அவள் குடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன், "எதுக்கு வர சொன்ன மீனு?" என்றிட,


"ஏற்கனவே ஒரு தடவை உங்ககிட்ட ஏமாந்துட்டேன். ஆனாலும் புத்தி வர மாட்டுது. மனசுல உங்களை தவிர யாரையும் நிறுத்த முடியலை. ஆனால் கண்டிப்பா என்னால உங்களை உங்க துரோகத்தை கடைசி வரை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. இத்தனை வருஷமா போராடிட்டு இருக்கேன் மனசுக்கும் மூளைக்கும் இடையில. காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ண முடியாம நடு ரோட்டில விட்டு போனவனையா நீ இன்னும் காதலிக்கிறனு என்னை நானே செருப்பால அடிச்சாலும் திருந்த முடியலை" என்று மெதுவான குரலில் ஆக்ரோஷமாக கூறியவளின் கண்ணீர் திவலைகள் சிதற தன் முன்னிருந்த கண்ணாடி குவளையை கோபத்தில் கைகளை கொண்டு அழுத்த, அது உடைந்து அவளது கையை பதம் பார்த்தது.

முகத்தில் தெறித்த துளி இரத்தத்துடன் கண்ணீர் துளிகள் கலக்க, அவ்வளவு கோபம் அவளது கண்களில் கணன்று கொண்டிருக்க அவளது ஒவ்வொரு வார்தையும் செயலும் அவனுள் சத்தமின்றி கத்தியை இறக்கிக் கொண்டிருந்தது. மீனு அவனை விரும்பியதை விட அதிகமாகவே திரிலோகேஷ் அவளை விரும்பினான். அந்த இடத்தில் தவறியவளால் இன்னும் அந்த போதையிலிருந்து மீள முடியவில்லை. அடிமையாகினாள் என்றே கூற வேண்டும்.

"மீனு" என்று வலி நிறைந்த குரலில் அழைத்தவன் அவளது கையை பிடிக்க முயல, கையை நீட்டி மறுத்து விலகினாள்.

"ஏன்டி பைத்திக்காரி மாதிரி பண்ணீட்டு இருக்க? முதல்ல
வா ஹாஸ்பிட்டல் போகலாம்" என்று பதற அதற்குள் அந்த டேபிள் முழுவதும் இரத்தம் படர்ந்திருந்தது.



தொடரும்..
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Lusu meenu enna pannidu iruka unmaiya paithiyam tha lokesh sonna mari oluga hospital poo
 
Top