• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 14

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 14



அந்த அதிகாலை பொழுதில் பால்கனியில் நின்றிருந்த நவீனின் விழிகள் வானை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தது. வீடு முழுக்க விளக்கொளியால் ஜொலிக்க மறுநாளுக்கான சமையல் ஒரு புறம் மளமளவென நடந்தேறிக் கொண்டிருந்தது கீழ் தளத்தில். நாளை காலை அக்ஷிதாவிற்கு வளைகாப்பின் பொருட்டு இத்தகைய ஏற்பாடு. முகத்தில் வந்து தீண்டி சென்ற தென்றல் ஏனோ சுகிக்கவில்லை இப்பொழுதெல்லாம். ஒவ்வொன்றையும் ரசித்து லயித்து வாழ்ந்தவன் எல்லாவற்றையும் யாஷோடே முற்றிலுமாக தொலைத்திருந்தான். அலட்சிய பாவனை அந்த மிடுக்கான தோரணை, ம்ம்...எல்லாமே இருந்த இடம் தெரியாது போயிருந்தது. ஒரே ஒரு இழப்பு அவனை தலைகீழாய் மாற்றியிருந்தது. விரக்தி புன்னகை சிந்தியவன் கரங்கள் தலையை கோதிக் கொள்ள எச்சிலோ தொண்டை விட்டு இறங்க மறுத்தது இயலாமையில். மறந்தால் தானே அவளை நினைப்பற்கு. உயிரில் கலந்து ஊனோடு உறைந்து ஒவ்வொரு அணுவிலும் கலந்து விட்டவளை கடப்பது ஒன்றும் அத்தனை இலகுவான காரியமில்லை ஆனால் இல்லாமலே போய் விட்டவளை கொண்டு உடன் இருப்பவர்களையும் வருத்தவும் மனதில்லை. ஆக, இது தான் வேண்டும் என்பதை விடுத்து நீ எங்கே செல்கிறாயோ அதை நோக்கியே நானும் நகர்கிறேன் என்ற ரீதியில் தான் சுழன்று கொண்டிருக்கிறான் வாழ்க்கையின் பின்பு. அக்ஷியின் வரவும் இனி வரவிருக்கும் மழலையின் எதிர்பார்ப்பும் எங்கோ ஒரு மூலையில் அவனை இழுத்து பிடித்து சற்றேனும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அவளின் வரவொன்றும் அத்தனை சுலபமாக நடந்தேறி விடவில்லையே! இனி ஏதுமில்லை என்று தளர்ந்தவனின் கரங்களில், 'நாங்கள் இருக்கிறோம்' என்ற ரீதியில் ஒய்யாரமாய் சம்மனமிட்டு அமர்ந்து கொள்ள தாங்கி பிடித்துக் கொண்டான் இறுக்கமாகவே.



"இங்க என்ன பண்றீங்க மாமா?" என்ற அக்ஷியின் குரல் அவனது செவியை தீண்ட தலையை திருப்பினான் சட்டென்று உதித்த லேசான புன்னகையுடன். ஆடவனை நோக்கி வந்தவள் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள் இலகுவாக சாய்ந்து. "நீ ஏன் அதுக்குள்ள எழுந்த? இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே" என்றபடி அவளருகில் வந்திருந்தவன் கரங்கள் பாவையின் முகத்தை ஆக்கிரமித்திருந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட, அக்ஷியின் விழிகள் அவனிடம் தான் அலைபாய்ந்தது. அந்த புன்னகையை மீறி அவனது விழிகள் பிரதிபலித்த வலியை இப்பொழுதெல்லாம் சட்டென்று பெண்ணால் அவதானிக்க முடிகிறது. எப்பொழுதும் அவளிடம் வெளிக்காட்டிக் கொள்தில்லை என்றாலும் சில சமயம் அவனையும் மீறி வந்து விடுகிறது. அவளுக்கு தெரியுமே அவனின் ஆகச்சிறந்த பலவீனம் யாஷ்வி தானென்று. அவன் கலங்குவதென்றால் ஒன்று யாஷ் மற்றொன்று ராகவன்!.. அமர்ந்தவாக்கிலே அவனை அணைக்க முயன்றாள் முன்னால் நகர்ந்து சற்றே சிரமப்பட்டு. அவளின் செயல் புரிந்து சைகையிலே, 'இரு' என்றவன் இன்னும் சற்று இரண்டடி முன்னால் நகர்ந்து அவளுக்கு நெருக்கமாக நிற்க விரிந்த புன்னகையுடன் அவன் இடையை சுற்றி கரங்களை படர விட்டு இறுக்கமாக அணைத்துக் கொண்டவள், "என்னாச்சு? யாஷ்க்கா நியாபகமா?" என்றாள் முகத்தை மட்டும் நிமிர்த்தி அவளை பார்த்து சோபையான புன்னகையை கொடுத்து. 'ஆம்' என தலையை இருபுறமும் அசைத்தவன் தொண்டை குழி ஏறி இறங்கியது. "அவங்க எங்கயுமே போகலை, இங்க தான் இருக்காங்க உங்ககிட்ட" என்றவள் விரல் மேலெழும்பி அவனின் மார்பை சுட்டிக் காட்ட விரிந்த புன்னகையுடன், 'ஆமாம்' என்பது போல் தலையசைத்தவன் அவளருகில் அமர்ந்து கொள்ள அவன் தோளில் முகத்தை அழுத்தி புதைத்துக் கொண்டாள் அமைதியாய். இருவரின் எண்ணங்களுமே தறிக்கெட்டு அலைபாய்ந்து கொண்டிருந்தது வெவ்வேறு திசைகளில். நவீன் அருகிலிருந்தவளை தான் கிரகிக்க முயன்றான். வளர்ந்த குழந்தை தான் அவள், எவ்வித விகல்பமும் கிடையாது. யாஷ்வியின் நினைவோடு போராடுபவனை எளிதில் திசை திருப்பி விடுவாள்.


விடாது தன் தலையை வருடியவன் கரங்களை எடுத்து தன் வயிற்றில் வைத்துக் கொண்டாள். குழந்தை அங்குமிங்கும் அசைய அதை உணர்ந்து நொடியில் நவீனின் உடல் சிலிர்த்தது. ஆர்வமாய் அவள் புறம் திரும்பி அமர்ந்தவன் மெதுவாய் அவள் வயிற்றை நோக்கி குனிந்து பேச்சுக் கொடுக்க அசைவு இன்னும் வேகமெடுத்து குழந்தை அங்குமிங்கும் உருள துவங்க ஆடவனது விழிகளோ பளபளப்பாய் மின்னியது. "ரொம்ப சேட்டை பிடிச்ச பேபியா இருக்கும் போல உன்னை போல, உள்ளவே இப்படி சுத்துதே வெளிய வந்து என்ன பண்ண போகுதோ?" என்று நவீன் முகத்தை சுருக்கி அக்ஷிதாவை பார்க்க, "கட்டிக்கிட்டிங்க தான சமாளிங்க" என்று கண் சிமிட்டினாள். புன்னகையுடனே லேசாக அவளின் தலையில் தட்டியவன் கழுத்தில் கைக்கொடுத்து தன்னோடு சாய்த்துக் கொண்டான். பேச்சுக்கள் நீண்டு கொண்டே சென்றது. "எனக்கு பசிக்குது" என்றவள் நவீனின் தோளை சுரண்ட, "இரு ஏதாவது கொண்டு வரேன்" என்று எழுந்து சென்றான்.


வாணி அறை மூடியிருக்க வீட்டிலுள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஆம், வளைகாப்பிற்காக அக்ஷிதா வீட்டிலிருந்தும் நெருங்கிய உறவினர் வட்டமும் வீட்டை நிறைத்திருந்தனர். பாதி பேரை அருகிலிருக்கும் தங்கும் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான் நவீன். அடுப்பறையில் பார்வை செலுத்தியவன் சட்டென்று கீழே நோக்கி இறங்கி விட்டான். யாஷ்விக்கு பிறகு அவனின் கால்கள் அடுப்பறை நுழைந்தில்லை. பயம், எங்கோ உடைந்து விடுவோமோ என்று... அதிகமாகவே அவனுள் ஆதிக்கம் செலுத்தியவள் அல்லவா? வெளியில் தெரியாது ஆனால் உள்ளுக்குள் உருகி மருகி தவிப்புடன் தான் திரிவான், மின்தூக்கியில் ஏறிட மாட்டான். பயணங்களையு தவிர்த்து விட்டான் இன்னும் இன்னும் அவன் ஒதுக்கியது ஏராளங்கள்!..

கீழே சமையல் வேலை பரபரப்பாய் நடந்து கொண்டிருக்க அவனை பார்த்து தலையசைத்த சமையல்காரர், "என்ன தம்பி எதுவும் வேணுமா?" என்று விசாரிக்க, "ஆமா, ரெண்டு காபி கிடைக்குமா?" என்றவன் சமையல் எந்தளவிற்கு நடைபெற்றிருக்கிறது என ஆராய்ந்து வேறு எதாவது தேவையா என விசாரித்து விட்டு தேநீர் குவளையுடன் மேலேறி இருந்தான்.


மெதுவாக இருள் விலக துவங்கியிருந்த அந்த ரம்மியமான அதிகாலை பொழுதின் பனித்துளிகளோடு சூடான தேநீரை ஒவ்வொரு மிடறாக இரசித்து உள்ளிறக்கிய அக்ஷிதா அப்படியே ஊஞ்சலில் அமர்ந்த வாக்கிலே நவீனின் மடியில் படுத்துக் கொள்ள, "ஹேய் என்னடி பண்ண நீ? விழுந்து கிழுந்து வைச்சிடாத. படுக்கணும்னா பெட்ல்ல போய் படு" என்று பதறி அவளை பார்க்க அவளோ அதை சட்டை செய்யாது லாவகமாய் படுத்துக் கொண்டிருந்தாள். 'ஊப்ஸ்..' என இதழ் குவித்து ஆயாசமாக ஊதிய நவீனின் பாவனையில் தோன்றிய புன்னகையை விழுங்கியவள் அவனிடம் பேச்சுக் கொடுத்தப்படியே உறங்கியும் போயிருந்தாள்.
அவனும் அப்படியே பின்னால் தலை சாய்த்து கண்ணயர்ந்து விட ஒரு கரமோ அக்ஷிதாவை இறுக பிடித்திருந்தது பாதுகாப்பாய் விழுந்து விடக் கூடாதென்று எச்சரிக்கையோடு. வாணி அவர்களின் அறைக்கதவை தட்டிய பின்பே இருவரும் அடித்து பிடித்து எழுந்தனர். அன்றைய பொழுது மிகச்சிறப்பாகவே விடிந்திருந்தது.


அக்ஷிதா பயந்தது போல் அவளின் தந்தை சிவக்குமார் பெரிதாக எதிர்ப்பொன்றும் தெரிவிக்கவில்லை. அக்ஷிதா அவரின் இளவரசியாய் வலம் வந்தவள் தான் ஆனால் எல்லா இளவரசியும் அரியணை மட்டும் ஏறி விடுவதில்லையே சிறை சென்ற காலமும் வரலாறும் உண்டு தானே!
நவீன் பிரசவத்தை இங்கே பார்த்துக் கொள்கிறேன் என்றதற்கு சிறிது நேரம் யோசித்தவர் அவனை மறுக்காது தலையசைக்க மங்கை தான் மனது கேட்காது, "நான் வேணா கூட இருந்து பிரசவம் முடிஞ்சதும் கிளம்பி வரேன். வாணி அண்ணி எல்லாத்தையும் தனியா எப்படி பார்ப்பாங்க" என்று கணவனிடம் பேசி நவீனிடமும் பேசியிருந்தார்.


அக்ஷிதா மென் பட்டுசேலை கட்டி எளிமையான ஒப்பனையுடன் மனையில் ஓவியமாய் அமர்ந்திருந்திருக்க நவீன் அவளை விட்டு அகலாது அருகிலே நின்று கொண்டான். ஆம், அவள் பிடித்து வைத்துக் கொண்டாள். விருந்தினர் பார்வை எல்லாமே தன் மீதே விழ ஒரு வித அசௌகரியத்தை உணர்ந்தவள் பிடித்திருந்த நவீன் கையை விடவேயில்லை. அவனது அலுவலகத்திலிருந்த ஆட்கள் வந்திருக்க, "நான் போய் இன்வைட் பண்ணி சாப்பிட அனுப்பிட்டு வரேன் அக்ஷிம்மா" என்று கெஞ்சியதற்கு கூட, "அதெல்லாம் வாணித்தை பார்த்துப்பாங்க. நீங்க என்னைப் பாருங்க" என்று பிடித்து வைத்துக் கொண்டாள். இடுப்பில் கையூன்றி முறைத்தாலும் நவீன் அவளை விட்டு அசையவேயில்லை.


இதில் புகைப்படக்காரர் வேறு அக்ஷிதாவை அங்கு திரும்பி இங்கு திரும்பு அப்படி நில் என்று போட்டு படுத்தி எடுக்க அவள் நவீனை தான் கொலைவெறியாய் முறைத்தாள். அவள் புகைப்படம் வேண்டாமென்றிருக்க அவன் தான் கட்டாயப்படுத்தி ஏற்பாடு செய்திருந்தான்.


விழிகளாலே, 'என்னை காப்பாற்று, இல்லை உனக்கு இருக்கு மவனே!' என்று அபிநயம் படித்தவளை உணர்ந்து அடக்கிய புன்னகையுடன் அவர்களை நெருங்கியவன், "போதும்ண்ணா நீங்க போய் சாப்பிட்டு வாங்க. மீதிய அப்புறம் பார்த்துக்கலாம்" என்று புகைப்படக்காரரை அனுப்பி அக்ஷியை அவரிடமிருந்து மீட்டு வந்து அமர வைத்து உணவு கொடுத்திருந்தான். ஒவ்வொரு விருந்தினராய் வர வீடு நிரம்பியது, பெரிதாக அல்லாது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நவீன் அலுவலக ஊழியர்கள் பிறகு வாணியின் நடனப்பள்ளி ஊழியர்கள் என்று குறைந்தளவிலே ஆட்களை அழைத்திருந்தனர். விழா சிறப்பாகவே துவங்க ஒவ்வொருவராய் வந்து அக்ஷிதாவையும் நவீனையும் ஆசிர்வாதம் செய்து வளையலிட்டு குங்குமம் சந்தனம் பூசி பரிசு பொருட்கள் கொடுத்து என்று அந்த இடமே சற்று கலகலப்பாக இருந்தது. வாணிக்கு கண்களோடு இணைந்து மனதும் நிறைந்து போக உற்சாகமாகவே சுற்றினார். நவீனும் அவ்வப்பொழுது அவரையும் இழுத்து பிடித்து அமர வைத்து உண்ண வைத்துக் கொண்டிருந்தான்.


மதியத்திற்கு மேல் ஒவ்வொராய் கிளம்ப துவங்க சிவக்குமாரும் அக்ஷியின் தமையன் விஜயனும் எல்லோரிடமும் கூறிக் கொண்டு கிளம்பியிருந்தனர். மங்கை கூறியது போலவே மகளுடனே இருந்து கொண்டார். ஆம், இன்னும் இருபது நாட்கள் பிரசவத்திற்கு மருத்துவர் குறித்திருந்தனர். அவரின் இருப்பு நவீனையும் வாணியையும் சற்று ஆசுவாசமாக்கி இயல்பாய் உணர வைத்தது. அவர் வீட்டில் மகளுடனே துணையாய் இருந்து கொள்ள அலுவலகம் சென்று விடும் நவீன் அவ்வப்பொழுது அழைத்து அவளின் நலம் விசாரித்துக் கொள்வான். வாணி நவீனின் அக்கறையும் தன்னிடம் கூட எடுக்க முனையாத உரிமையை மகள் அவர்களிடம் வெகு ஸ்வாதீனமாக எடுக்கும் பாங்கும் மங்கை தள்ளி நிறுத்தி வேறாக உணர செய்திருந்தது. சில சயங்களில், 'நான் அவளுக்கு அம்மாவா இல்லை வாணி அண்ணியா?' என்ற எண்ணங்கள் கூட வியாபித்தது உண்டு. ஆனால் அவரோ அதை பெரிதாக கொள்ளாது மகளின் வாழ்வு நிறைந்ததை எண்ணி மகிழ்ந்திருந்தார்.



அதுவொரு அதிகாலை பொழுது, அடிவயிற்றிலிருந்தொரு வலி கிளம்பி உடல் முழுவதும் விரவ துவங்க ஆழந்த உறக்கத்தில் அப்பொழுது தான் ஆழந்திருந்த அக்ஷிதா அடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள். ஆம், பிரசவத்திற்கான நாட்கள் நெருங்க நெருங்க அவளின் உறக்கம் முழுவதுமாகவே பறி போயிருந்தது. அவளுடன் இணைந்து நவீனின் உறக்கமும். "நீங்க தூங்குங்களேன் மாம்ஸ், நான் கொஞ்ச நேரத்தில தூங்கிடுவேன்" என்றவளை சட்டை செய்யாது அவளுடனே அவனும் அமர்ந்திருப்பான். முதலில் கூறி பார்த்தவள் அவன் கேட்கப் போவதில்லை என்பதை உணர்ந்து எனக்கு அது வேண்டும், இது வேண்டும், டெரஸ்க்கு போகலாமா? கார்டனுக்கு போய் வாக் பண்ணலாமா? என்று அவனை வேலை வாங்க துவங்கியிருக்க அவனும் அசரவெல்லாம் மாட்டான். அக்ஷியின் அரவம் கேட்டு நவீனும் உடனே எழுந்து விட்டான். இப்பொழுதெல்லாம் அவனின் உறக்கத்திலும் ஒரு வித எச்சரிக்கை உணர்வு உண்டு. அவள் அசைந்தாலே விழித்து விடுவான்.



அக்ஷிதா முகம் முழுவதும் வியர்வையில் குளித்திருத்த, "என்னாச்சு அக்ஷி, பெய்ன் வருதா?" என்று அவளை ஆராய்ந்து முகத்தை துடைத்து விட்ட நவீனிற்கு பதில் கூற முடியாதளவு பெண்ணினுள் வலி. இதழை அழுத்தி கடித்தப்படி அமர்ந்திருந்தவளின் கரங்களோ நவீனின் தோள்பட்டையை அழுத்தமாக ஆக்கிரமிக்க அவளின் முகபாவத்திலே உணர்ந்தவன் அடுத்து பேசாது மருத்துவரை அழைத்து விவரம் கூறியபடி வாணியையும் மங்கையும் எழுப்பி அவளை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டான்.


நவீனிற்கு தான் உடலெல்லாம் நடுங்கியது அவள் கத்திய கதறலில். மகன் அருகில் நின்று கொண்ட வாணி அவனின் கைகளை மெதுவாக தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஆதரவாக. அவனும் அன்னையின் கரங்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். மங்கை கணவருக்கும் மகனுக்கும் அழைத்து விவரத்தை கூற அப்பொழுதே இருவரும் கிளம்பியிருந்தனர்.



இரண்டு மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆண் குழந்தை என்று செவிலி சொல்லி செல்ல அடுத்ததாக பூந்துவாலையில் சுற்றப்பட்ட ரோஜா கொத்தொன்று நவீனின் கைகளில் கொடுக்கப்பட்டிருந்தது. கைக்கால் முளைத்த பட்டாம்பூச்சியொன்று கைகளில் நின்று அசைவதை போல் விழியசைக்காது பார்த்திருந்தவன் மனது அத்தனை ஆசுவாசமாக உணர்ந்தது. கைக்கால் இதழ்கள் என்று மெதுவாக வருட துவங்கியவன் கைகள் நடுங்கியது மெலிதாக. ஒரு வித ஆர்பரிப்பான பூரிப்போடு மகனை கையிலேந்தியிருந்தான். அடுத்து மங்கை வாணி என்று கைமாற்றப்பட்டு இறுதியாக மீண்டும் உள்ளே எடுத்து சென்று விட்டனர். அக்ஷிதா நலமாக இருக்கிறாள் அவளை அறைக்கு மாற்ற மேலும் சில பல மணி நேரங்கள் ஆகும் என்ற தகவலை செவிலி சொல்லி செல்ல நவீன் அங்கிருக்கும் சிற்றுண்டி சாலைக்கு சென்று தேநீர் அருந்தி மங்கைக்கும் வாணிக்கும் வாங்கி வந்து கொடுத்தான்.



அக்ஷிதா இருந்த அறை வாயிலிலே நவீன் அங்குமிங்கும் பூனை போல் மெதுவாக நடை பயின்று கொண்டிருக்க வாணியும் மங்கையும் நாற்காலியில் அமர்ந்து வளவளக்க துவங்கி இருந்தனர். நவீனின் இதழை கரைய விரும்பாத புன்னகையொன்று ஆக்கிரமிக்க சற்று முன் மகனை ஏந்திய கைகளை அவ்வப்பொழுது தூக்கி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளம்குருத்தின் அசைவுகள் கரங்களிலே நீடித்தது போல் தோன்ற உடம்பிலுள்ள மயிரிழைகளெல்லாம் சிலிர்த்து எழுந்தது. என்ன மாதிரி உணர்விது என்று அவனுக்கு விவரிக்க தெரியவில்லை.




அவனின் தவிப்பை வெகு நேரம் நீட்டிப்பு செய்யாது அக்ஷிதாவை விரைவாகவே அறைக்கு மாற்றியிருக்க பாவை அரை மயக்கத்தில் தான் படுக்கையில் இருந்தாள். வாணியும் மங்கையும் அவளையும் குழந்தையும் மீண்டுமொரு முறை பார்த்து திருப்தி கொண்டு வீட்டை நோக்கி கிளம்பியிருந்தனர் ஓட்டுநரை வரவழைத்து. அவர்கள் வீட்டிற்கு சென்று குளித்து உண்டு, நவீனிற்கு உணவெடுத்துக் கொண்டு தயாராகி வர, நவீனோ குழந்தையை கைகளில் வைத்துக் கொண்டு அக்ஷிதாவிடம் காட்டிக் தேங்கிய புன்னகையுடன் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். தூரத்திலே மகனையும் அவன் கைகளிலிருந்த அவனின் மகனையும் பார்த்தே வாணிக்கு விழிகள் பனித்தது. சட்டென்று சேலை தலைப்பால் துடைத்துக் கொண்டவரின் இதழை மனதிலிருந்த உதித்த புன்னகையொன்று நிறைத்தது.
இருவரும் முகத்திலும் அப்பியிருந்த புன்னகை வாணிக்கும் அத்தனை உற்சாகத்தை கொடுத்தது. உள்ளே வந்தவுடனே மருமகளை அணைத்துக் கொண்டு தோளோடு பிடித்தப்படி அவளின் நலத்தை விசாரித்து பார்வையை பேரன் புறம் திருப்பினார். மங்கை நெகிழ்ந்தே போனார் வாணி, நவீனை குறித்து.


அலுவலக்ததிற்கு விடுப்பு எடுத்துக் கொண்ட நவீன் அக்ஷிதாவோட செட்டில் ஆகி விட ஒவ்வொருவராய் வந்து பார்த்து சென்றனர். சிவக்குமாரும் விஜயனும் வந்திருந்தனர். பேரனையும் கையில கூட வாங்காது மகளையும் தூர நின்று ஒரு பார்வை பார்த்து கிளம்பியிருந்தார் மனிதர். அவரின் செயலில் மங்கை தான் தளர்ந்து போக நவீனும் சரி அக்ஷியும் சரி அதை பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை. இருவருக்குமே மகன் மட்டுமே மனதையும் சிந்தனையும் நிரப்பியிருக்க மற்றதெல்லாம் பின் சென்றிருந்தது.


ஒரு வாரம் தங்கியிருந்தே கிளம்ப வேண்டும் என்று மருத்துவர் அறிவுரை கொடுத்திருக்க வாணி மட்டும் வீடு நடனப்பள்ளி என்று ஒரு சுற்றி சுற்றினார். பகலில் மகளுடன் இருக்கும் மங்கையும் இரவில் கிளம்பி விட நவீன் மட்டும் அக்ஷிதாவையும் குழந்தையும் விட்டு அசையாது மருத்துவமனையிலே கழித்தான். நவீனிற்கு உறங்கும் மகனை ஆராய்ச்சி செய்வதற்கே பொழுது சரியாக இருந்தது. இடையில் அக்ஷிதா உறங்கும் பொழுது மடிக்கணினியை வைத்துக் தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொள்வான். சுகப்பிரசவம் என்பதால் அக்ஷிதா நன்றாகவே எழுந்து நடமாடிக் கொண்டிருந்தாள்.


அன்று அக்ஷிதாவையும் குழந்தையையும் பரிசோதித்த மருத்துவர் சில மருந்துகளை வாங்கி வருமாறு பரிந்துரை செய்திருக்க நவீன் மருந்தகம் நோக்கி விரைந்திருந்தான். இவர்கள் இருப்பது குழந்தைகள் மற்றும் பிரசவத்திற்காகவே சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட நவீன மருத்துவமனை. மருந்தகத்தில் இருந்து வெளியேறிய நவீனின் விழிகளில் விழுந்தது என்னவோ தூரத்தில் தெரிந்த மனோவும் ரூபாவும் தான். மனோ மடியில் அமர்ந்திருந்த முயல்குட்டியை கண்டு கண்கள் கலங்குவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. யாஷ்விக்கு பிறகு அவளை நெருங்கவே நவீன் முயற்சி செய்யவில்லை, யாஷ்வி குறித்து அவள் எழுப்பும் வினாவிற்கு தனக்கே பதில் தெரியாத பொழுது அவளுக்கு எங்கனம் விடை பகர்வான். கிட்ட தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு பார்க்கிறான். நன்றாகவே வளர்ந்திருந்தாள், கண்களில் எப்பொழுதும் மின்னும் குறும்பு குறைந்திருந்திருக்க அந்த வயதிற்குரிய முதிர்ச்சியுடன் இருந்தாள். ஆனால் முகம் மட்டும் மாறவேயில்லை. தொண்டையில் ஏதோ திரண்டு வந்து அடைத்தது, யாஷூடனான நிமிடங்களில் எண்ணங்கள் லயிக்க. சற்று முன்னிருந்த இதம் எங்கோ ஓடி ஒளிந்துக் கொண்டது. எப்பொழுது யாஷில் லயித்தாலும் அழுத்தமானதொரு வலி ஆடவனின் அங்கமெல்லாம் ஆக்கிரமிக்கும் அதற்கு பயந்தெல்லாம் அவளின் நினைவுகளை விடுவதாய் அவன் இல்லை. பேதை கொடுத்து சென்ற வலியையும் காயங்களையும் வருடி விரும்பியே ஏற்றான். பாவை கொடுத்து சென்றது வலியே ஆயிணும், அவள் கொடுத்தாள் என்பதற்காக இறுக பற்றிக் கொண்டான்.


ரூபா கையில் மற்றொரு குழந்தையிருந்தது. அது அவர்களின் இரண்டாவது குழந்தை. வாணி இடையில் ஒரு முறை கூறியிருந்தார். யாஷ்விக்கு பிறகு அப்படியொன்றும் முற்றிலுமாக உறவு முறிந்து விடவில்லை. வாணி சவிதாவிடம் அவ்வப்பொழுது அலைபேசியில் உரையாடுவார். உறவு முறை விடுத்து இருவருக்குள்ளும் ஒரு மெல்லிய நட்பு படலம் உண்டு. நவீன் திருமணத்திற்கு எல்லாரையும் அழைத்திருந்தார். சவிதாவிற்கும் அவன் திருமணத்தில் மகிழ்ச்சி என்றாலும் அதை நேரில் காணுமளவிற்கு அதாவது மகள் இடத்தில் மற்றொரு பெண்ணை பொருத்தி பார்க்குமளவிற்கு துளியேணும் தெம்பிருந்திருக்கவில்லை. ஆக, மனோவும் ரூபாவும் வந்து வாழ்த்தி சென்றனர். ராகவன் இறப்பிற்கு சவிதா கணவரோடு வந்து வாணிக்கு ஆறுதல் கூறி சென்றிருந்தார். மகளின் இழப்பை கேசவனையும் சவிதாவையும் முழுவதுமாக உருக்கி தளர்த்தி விட அதிகமாக வெளியில் செல்வதில்லை, விட்டோடு அடைந்து போயிருந்தனர். மனோவும் மனைவியின் இரண்டாவது பிரசவத்தின் பொருட்டு சென்னைக்கு இடம் பெயர்ந்திருந்தான் குடும்பதோடு. அவனின் குழந்தைகளுள் இருப்பு ஏதோ ஒரு வகையில் சவிதாவையும் கேசவனையும் உயிர்ப்புடன் இயக்கியது.


"ஹாய் மனோ" என்ற நவீன் அவர்கள் முன் செல்ல சற்று அதிர்ந்தாலும் சட்டென்று புன்னகையை ஏந்திக் கொண்டவன், "ஹாய் நவீன், எப்படி இருக்கீங்க?" என்று பரஸ்பரம் விசாரித்தான். ரூபாவும் புன்னகையுடன் அவனிடம் நலம் விசாரிக்க ஷமீ மட்டும் அவனை யாரென்று தெரியாத பாவனையில் விழித்தாள்.

'மறந்து விட்டாளா?' என்று ஏமாற்றத்தோடு அவளை ஏறிட உண்மையிலே முயல்குட்டியின் நினைவடுக்கில் இருந்து மறைந்தே போயிருந்தான். ரூபா தான், "ஷமீ நவீன் அங்கிளை உனக்கு தெரியலையா?" என்று மகளுக்கு அவளை குறித்து விளக்க நொந்தே போனான் ஆடவன். ஆனால் அதை முகத்தில் காட்டாதிருக்க வெகு பிரயத்தனப்பட்டவன், "நீங்க எப்படி இங்க? எதுக்கு ஹாஸ்பிடல் வந்திருக்கீங்க?" என்று விசாரிக்க, "பிரபு ஞாபகம் இருக்கா? நம்ம ப்ளாட்ல்ல கடைசியில இருந்தானே ரூபாவோட சித்தி பையன். அவனுக்கு மேரேஜ், பொண்ணு ஹைதராபாத் சோ இங்க தான் மேரேஜ் வைச்சிருக்காங்க. வந்த இடத்தில பேபி நைட் முழுதும் தூங்கவே இல்லை அழுதிட்டே இருந்தா அதான் டாக்டர்கிட்ட காட்ட அழைச்சிட்டு வந்திருக்கோம்" என்று கூறி மனோ நவீனிடம், 'நீ எப்படி இங்கே?' என்று பார்வை பார்த்தான்.


"அக்ஷிக்கு டெலிவரிக்கு வந்தோம், மேல ரூம்ல இருக்காங்க, பையன் பிறந்திருக்கான்" என்றவுடன் அவனை அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் மனோவின் மனதின் ஓரத்தில் தங்கையை குறித்து ஆற்றாமை இல்லாமல் இல்லை. ஆனால் அதற்கு நவீன் என்ன செய்ய முடியும்?... நிமிடத்தில் தேறிக் கொண்டான் மனோ. ஆம், யாஷ்வி இழந்த சமயத்தில் நவீனின் நிலையை கண்டு அவனோ அதிர்ந்து போயிருந்தான் அல்லவா. சற்றே புன்னகையுடன் நின்றிருந்தவனால் மனம் இதமாகி இருந்தது மனோவிற்கு.




"நான் ஷமீயை அழைச்சிட்டு போகட்டுமா கொஞ்ச நேரம்?" என்று கேட்பதற்குள் அவனுக்கு தொண்டையிலுள்ள நீரெல்லாம் வற்றி தான் போனது. "சரி நீங்க கூட்டிட்டு போங்க டாக்டரை பார்த்திட்டு நாங்க வரோம்" என்ற மனோ ஷமீயை பார்க்க அவளும் அவர்களின் பேச்சை அவதனித்துக் கொண்டிருந்தாள் தான். அருகில் பார்க்கும் பொழுது இன்னுமே நன்றாக வளர்ந்தவள் போல் வித்தியாசமாக தெரிந்தாள் நவீனுக்கு. அவளின் ஒட்டாத அந்த பாவனை நவீனிற்கு அப்படியொரு அழுத்தததை கொடுத்தது. அதற்கு அவனும் காரணம் தானே! யாஷின் பொருட்டு இவளையும் விலக்கி வைத்தானே.


சிற்றுண்டி சாலைக்கு அழைத்துச் சென்று சாக்லேட், பனிங்கூழ் என்று தோன்றியதை வாங்கி கொடுக்க மறுக்கவெல்லாம் இல்லை மெலிதான புன்னகையோடு வாங்கிக் கொண்டாள். "உனக்கு என்னை தெரிகிறதா?" என்று வாய்விட்டே கேட்டும் விட்டான் பதிலுக்கு பெண்ணிடத்தில், 'தெரியவே இல்லையடா மடையா?' என்ற பாவம் தான்.


யாஷை நினைவுபடுத்தியிருந்தால் இவனையும் நினைவடுக்கிலிருந்து பிடிக்க முயன்றிருப்பாளோ என்னவோ?. ஆனால் நெஞ்சை நீவிக் கொண்டவன் அதற்கு பின் வாயையே திறக்காது அக்ஷிதாவின் அறைக்கு அழைத்து சென்று விட்டான்.



'யார் இது?' என்பது போல் பார்த்த மனைவிக்கு சுருக்கமாக பதிலளித்தவன் சற்று தள்ளியிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள ஷமீயோ அக்ஷிதாவோடு படுக்கையில் அமர்ந்திருந்தாள் அக்ஷி கையில் வைத்திருந்த இளம் சிட்டை குறித்து ஆராய்ச்சி பார்வை கொடுத்து வினா எழுப்பியபடி.


"எங்ககிட்டயும் பேபி இருக்கு ஆனா அவன் இவனை மாதிரி குட் பாயா இல்லாம அழுதிட்டே இருக்கான் அதான் டாக்டர்கிட்ட காட்ட வந்திருக்கோம்" என்றவள் அகஷியிடம் புன்னகை முகமாக பேச அவளும் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள் விரிந்த புன்னகையோடு. அவர்களையே பார்த்திருந்த நவீனால் தான் அந்த சூழலின் கணத்தை ஏற்கவே முடியவில்லை. ஷமீயையே விழியகற்றாது பார்த்திருக்க அக்ஷிதா கூட கவனித்து, 'என்ன?' என்பதாய் புருவமுயர்த்த, 'எதுவுமில்லை' தலையசைத்தவன் அழுத்தி பிடறியை கோதிக் கொண்டு கண் மூடி அமர்ந்து விட்டான்.


சற்று நேரத்தில் மனோவும் ரூபாவும் வந்திருந்தனர். ரூபா குழந்தையை தூக்கி கொஞ்சி புன்னகை முகமாக அக்ஷியிடம் விடை பெற்றிருந்தாள். மனோவும் புன்னகைத்தான் ஆனால் அதில் உயிர்ப்பே இருந்திருக்கவில்லை.





தொடரும்...
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Kutty payan👼👼 naveen ku 🤩🤩shami unaku naveen ya nabagam illaya neyum avayum yash ya enna panni irukiga ayooo 🥺🥺naveen ku kastama irukum muyal kutty ku theiryala nu naveen yash epadiyum maraga matan 😢😢entha kutty payan tha atha mathayum ini aashi naveen payan santhosama irugadum 💖💖💖💖
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Yash oda ezhapu naveen entire ah mathi iruku pola shami kutty ku naveen ah niyabagam yae illa pola
 
Top