• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 11

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 11



தன் முன்னிருந்த சூடான தேநீரை இரண்டு மிடறு உள்ளே இறக்கியவள் விழிகள் வாயிலை நோக்கி அலைபாய்ந்தப்படி இருந்தது. அவள் சாரா, சென்னையில் உள்ள பிரபல உணவகத்தில் நடுமையமாக அமைந்திருந்த ஒரு டேபிளில் அமர்ந்திருந்தாள். பெண் பார்க்கும் படலத்திற்கான காத்திருப்பு இது.
"ம்மா" என்று தயங்கியவளுக்கு அதற்கு மேல் வார்த்தை இல்லை தான். ஆம், என்ன கூறி தள்ளி போடுவது, 'என்னுடைய முன்னாள் காதலை மறக்கவே முடியவில்லை என்றா? இல்லை இன்னும் அவனிடம் மண்டியிட முனையும் மனதை அடக்க தெம்பின்றி அபலையாய் சுற்றி திரிகிறேன் என்றா?'...


"கார்த்தி கல்யாணம் முடிஞ்சு ஆறுமாசமாகிடுச்சு, நீ கேட்ட ஒரு வருஷத்தை தாண்டி வேலை பார்த்திட்டு இருக்க. மாப்பிள்ளை உங்கண்ணியோட தூரத்து சொந்தம், ரொம்ப நல்ல பையனாம். அவளோட அம்மா கேரண்டி கொடுக்கிறாங்க, வேறென்ன வேணும்? நாங்க எல்லாமே பேசி முடிஞ்சாச்சு. அவர் பார்க்காமலே சம்மதம் சொல்லிட்டார் ஆனா நீ இருக்கியே?" என்று சலித்து சாராவின் காதை தீய வைத்தே மல்லிகா அலைபேசியை கீழே வைத்திருந்தார். வேறு வழியே இன்றி வற்புறுத்தலின் பேரில் வந்து அமர்ந்திருந்தாள். எப்பொழுதென்றாலும் நடக்க வேண்டிய ஒன்று தான் ஆனால் ஏனோ திருமணம் என்ற வார்த்தையை கேட்டால் கூட உடல் மட்டுமின்றி உள்ளமுமே நடுங்க தொடங்கி விடுகிறது பெண்ணிற்கு. ஏற்கனவே கண்டு விட்ட காயத்தின் வடுவாக கூட இருக்கலாம். மல்லிகா கூறியது போல் இது ஏறக்குறைய முடிவாகி விட்டதை போன்றதொரு நிகழ்வு தான். இரண்டு புறமும் எந்தவித தடங்கலுமே இல்லை சாராவை தவிர!


நெற்றியை நீவி கொண்டவளுக்கு அத்தனை சலிப்பாக இருந்தது வாழ்க்கை மீது, அதை விட அவளின் காதல் மீதும் அதில் திளைத்து உருக செய்திட்ட காதலன் மீதும். 'ம்ம், நீயும் கொஞ்சமே கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் சாரா' என்று மனது தார்க்கம் செய்தாலும் ஆடவன் செயல் பேதையை மொத்தமாக உடைத்து நொறுக்கி தன்னுள் விழுங்கி இருந்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை. இப்பொழுது எண்ணினால் கூட விழிகள் இரண்டும் நீரில் தத்தளிக்க தொடங்கி விடும்...எப்பொழுதும் போல், 'போடா' என்பதாய் உதட்டை கடித்து உள்ளிழுத்துக் கொள்வாள் அசட்டையாக.

சித்விக் கையை தன்னுடன் இணைத்து நின்ற பிருந்தாவை கண்டு அப்படியொரு வலி பாவையிடத்தில். உண்மையிலே அந்த சூழலை பேதையால் கையாள முடியவில்லை என்பதை விட கிரகிக்க முடியவில்லை என்று கூறினால் தகும். வேறு யாராவது இப்படி என்று சித்விக்கை பற்றி கூறியிருந்தால் கூட கண்டிப்பாக ஒரு பிரளயத்தையே உருவாக்கி இருப்பாள் ஆனால் தன்னெதிரே எல்லாமே அரங்கேறிக் கொண்டிருக்க யாரை குற்றம் சுமத்துவது...


சாராவைக் கண்டு சித்விக்கும் அதிர்ந்தான், தலையை கோதிக் கொண்டவனுக்கும் ஆகப்பெரும் அவஸ்தை தான். 'இவளை யார் இங்கு வர சொன்னது?' என்று மானசீகமாக நொந்து கொண்டவனுக்கு தற்சமயம் வாய் பூட்டு போடப்பட்ட நிலையே! அவளவனாக பாவையின் மனநிலையை கணிக்க முடிந்திட்டாலும் எதுவும் செய்ய முடியாத கையறுநிலையே அவனது.



'இருந்தாலும் நீ எங்களை இப்படியொரு தர்மசங்கடமான நிலையில் நிறுத்தி இருக்க கூடாது ஆண்டவா' என்று நொந்து கொண்ட சித்விக்கிற்கு நிறையவே நம்பிக்கை இருந்தது சாராவின் மீது. பெண் புரிந்து கொள்வாள் தன்னையும் தன்னுடைய நிலையையும். பிறகு பேசலாம் என்று எப்பொழுதும் போல் நிதானத்தை விடாது கையிலெடுத்துக் கொண்டான். அது தவறென்பதை அவள் தலையில் அடித்து உணர்த்தி செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லையென்பதை ஆடவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

ஆனால் அவளோ எரிமலையாய் வெடித்து சிதற தயாராகி இருந்தாள். கண்கள் மட்டுமல்ல முகம் முழுவதுமே நொடியில் செம்மையேறி போனது ஆற்றாமையின் வெளிப்பாடாய். வேகமாக வழிய ஆயத்தமாகிய கண்ணீர் துளிகளை உள்ளிழுத்தவள் சட்டென்று எழுந்து அந்த அறையின் மூலையில் இருந்த ஓய்வறைக்குள் புகுந்து கொண்டாள்.


சித்விக்கை கண்டு ஆர்வத்தில் அந்த பட்டாளம் கோரசாக சத்தமெழுப்பி ஆர்பரிக்க சாராவை கண்டு கொள்ள அங்கு ஆள் இல்லை தான். மஹிமாவுமே பிருந்தா அருகில் எழுந்து சென்றிருந்தாள். பெண்ணவளின் பின் சென்ற விழிகளை திருப்புவது ஒன்றும் அத்தனை சுலபமாக இருக்கவில்லை ஆடவனுக்கு. பத்து நாட்களுக்கு பிறகான சந்திப்பு, அவளை அணைத்து ஆரத்தழுவிட கை பரபரக்க கால்களும் அவளை நோக்கி விரைய உந்தி தள்ள பரிதவிப்புடன் ஏக்கங்களை விழிகளில் நிரப்பி நின்றிருந்தவனின் கரங்களை பிருந்தாவின் கைகள் சற்று இறுக்கமாகவே பற்றி இருந்தது அவனின் அனுமதியின்றியே.



வேகமாக தனது பையில் கை விட்டு துழாவியவன் அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைக்க அந்தோ பரிதாபம் மேஜை மீது ஒளிர்ந்து கொண்டிருந்தது பெண்ணவளின் அலைபேசி. நெற்றியை தட்டிக் கொண்டவனுக்கு அதற்கு மேல் அவகாசம் கொடுக்கவில்லை அந்த நண்பர்கள் படை. ஆடவனை சூழ்ந்து கைப்பற்றி வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்க அந்த இடைவெளியில் பாவை வெளியேறி இருந்தாள்.



அவளுக்கு மட்டுமா ஆடவனுக்கு தற்போதைய நிகழ்வில் பேரதிர்ச்சி தான். "நானே கூப்பிடுறேன் சாரா, தொந்தரவு செய்யாத. ஷர்மிய பொண்ணு பார்க்க வராங்க" என்று அழைப்பை துண்டித்த சித்விக்கிற்கு அரைமணி நேரத்தில் தகவல் வந்திருந்தது, "சார், நம்ம மதுரையில கட்டிட்டு இருக்க பில்டிங்ல்ல பயர் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு, அதனால பனிரெண்டாவது மாடியில கட்டியிருந்த இருந்த சாரமும் அறுந்து விழுந்து பத்து பேர்க்கு மேல் அவசரசிகிச்சை பிரிவுல சேர்த்திருக்கோம்" என்பதாய்.

தந்தையிடம் விஷயத்தை பகிர்ந்து, "ப்பா, பார்த்துக்கோங்க. வந்திடுறேன்" என்று இரவோடு இரவாக அடித்து பிடித்து மருத்துவமனை விரைந்திருந்தவன் அவசரத்தில் அலைபேசியை எங்கோ தொலைத்திருந்தான். அவசரசகிச்சை பிரிவில் இருந்த இரண்டு தொழிலாளர்கள் வேறு இரண்டே நாட்களில் பரிதாபமாக உயிரிழந்திருக்க சித்விக்கிற்கு கண்களை கட்டிக் கொண்டு வந்து விட்டது. இதற்கு மேல் காவல்துறை வேறு வழக்கு பதிவு செய்து விட வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து அதை பேசி தீர்த்து முடித்து, "ப்பா.." என்று ஆசுவாச மூச்செடுத்து நிமிர்வதற்குள் முழுதாக பத்து நாட்கள் ஓடி கழிந்திருந்தது.

நடந்த கலவரத்தில் பத்து நாட்களாக சாரா மட்டுமல்ல உணவும் உறக்கமும் கூட அவனுக்கு பின் சென்று விட்டது. மருத்துவமனை, காவல்நிலையம் என்று மாற்றி மாற்றி ஓடியவன் யாருக்குமே அழைத்து பேசிடவில்லை. இரண்டு முறை மட்டும் அவனின் தந்தை மூர்த்தி, சித்விக் உதவியாளருக்கு அழைத்து நிலவரத்தை தெரிந்து கொண்டு, "நானும் வரட்டுமா? தம்பிக்கிட்ட கேளுங்க" என்றிருக்க, "இல்ல அப்பா வேண்டாம், நம்மளே பார்த்துக்கலாம்" என மறுத்திருந்தான்.



பத்துநாட்களுக்கு பிறகு ஊர் திரும்பி இருந்தவன் வரும் வழியில் தான் புது மொபைலோடு சிம்கார்டும் வாங்கி வந்திருந்தான். அதிகாலையில் அதை பொருத்தி சாராவிற்கு அழைக்க அவளோ எப்பொழுதும் புது எண்ணிலிருந்து வரும் அழைப்புக்களை ஏற்க மாட்டாள். சித்விக்கே நிறைய முறை கடிந்துள்ளான், "இப்படி பண்ணாத சாரா, யாருக்காவது எம்ரஜெண்ஸியா இருந்தா என்ன பண்ணுவ? ரொம்ப தப்பு" என்று. "பழகிடுச்சு சித், மாத்தவே முடியலை ட்ரை பண்றேன்" என்றவள் இன்னும் அந்த பழக்கத்தை கைவிட்டிருக்கவில்லை.


"ச்சு...இவ நியூ நம்பர்ல கூப்பிட்டா அட்டென் பண்ண மாட்டாளே!" என்று நொந்தவன், 'சரி, நேரில் போய் பார்த்துக் கொள்ளலாம்' என எண்ணி குளித்து தயாராகி வெளியில் வர அவனுக்கு உணவு பரிமாறிய அகிலா, "டேய், ஷர்மிய பொண்ணு பார்க்க வந்த போது சசிண்ணா பேமிலியும் வந்திருந்தாங்க. நம்ம பிருந்தாவுக்கு அலைன்ஸ் பார்க்கிறாங்க போல, அவ உன்னை பிடிச்சிருக்கினு சொல்லியிருக்கா. அதான் சசிண்ணாவும் அப்பாவும் பேசி ஷர்மியோட சேர்த்து உங்களுக்கு என்கேஜ்மெண்ட் வைச்சிடலாம்னு டிசைட் பண்ணிட்டாங்க. இந்த வார கடைசியில நீ ஃப்ரீயா, போய் ட்ரெஸூம் ஜ்வெல்ஷூம் எடுத்திட்டு வந்திடலாம்" என்று பேசிக் கொண்டே செல்ல சித்விக் தட்டை அவ்வளவு
வேகமாக கோபத்துடன் தட்டி விட்டிருந்தான்.

ஒரு நிமிடம் அதிர்ந்த அகிலா, "டேய் என்னடா பண்ணிட்டு இருக்க?" என்றார் அதட்டுதலாக. ஆம், அதிர்ந்து கூட பேசாத மகனின் புது அவதாரம் தாயை மிரள செய்திருந்தது. "யாரைக் கேட்டு நீங்க டிசைட் பண்ணீங்க?" என்றவனுக்கு கோபத்தை அடக்குவது அத்தனை சிரமமாக இருந்தது. ஏனெனில் அவனுக்கு அவ்வளவு சுலபத்தில் கோபம் வந்து விடாது அப்படி வந்து விட்டால் அடக்குவது ஒன்றும் இலகுவான காரியமல்ல.

"என்னடா பேசுற? மோனி கல்யாணத்தப்ப நீ தான சொன்ன நாங்க யாரை கைக்காட்டினாலும் கல்யாணம் பண்ணிப்பேன்னு. பிருந்தா நல்ல பொண்ணுடா சித், நாம பார்க்க வளர்ந்தவ, சசிண்ணாவை பத்தி சொல்லவே வேண்டாம். உங்கப்பாவுக்கு ஆரம்பத்தில இருந்து பிஸினஸ்க்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்கார் தெரியுமா?" என்றிட, "ம்மா, நீங்க ஏன் என்னை கேட்காம டிசைட் பண்ணிங்க?" என்று அதிலே நின்றான் மகன்.


"அது இல்லடா" என்றவர் மகனை சமாதானம் செய்ய விழைய, "ண்ணா, நம்பர் மாத்திட்டியா? பிருந்தா அண்ணி எனக்கு கூப்பிட்டிருந்தாங்க. உன்கிட்ட பேசணுமாம்" என்று ஷர்மி மொபைலை நீட்டி இருந்தாள் அவர்களின் பேச்சை தடை செய்யும் விதமாக. தாயை முறைத்தவன் நெற்றியை நீவிக் கொள்ள, "இங்க கொடு ஷர்மி" என்று அகிலா அலைபேசியை கைப்பற்ற முயல, "விடுங்க, இதை நானே பார்த்துக்கிறேன்" என்று அலைபேசியை வாங்கி காதிற்கு கொடுத்தப்படி அறைக்குள் நுழைந்திருந்தான். பிருந்தாவும் சித்விக்கும் குடும்ப நண்பர்கள் அதை தாண்டி அவளுடைய அண்ணன் உடன் தான் சித்விக் பள்ளி படிப்பை முடித்திருக்க சிறுவயதிலிருந்து இருவருக்கும் நல்ல பரிட்சயமும் பழக்கமும் உண்டு.


"ஆன்ட்டி சொன்னாங்களா? இன்னைக்கு ஈவ்னிங் என்னோட ப்ரெண்ட்ஸ்க்கு பார்ட்டி அரேன்ஜ் பண்ணியிருக்கேன். நெக்ஸ்ட் வீக் ரொம்பவே பிஸியா இருப்போமாமே மம்மி சொன்னாங்க. சோ அதான் இப்படி அவசரமா, ஹோட்டல் லொகேஷன் ஷர்மி நம்பருக்கு ஷேர் பண்ணிடுறேன்" என்றவள் எதிரிலிருப்பவனை பேசவே விடாது அழைப்பை துண்டித்திருக்க அவனுக்கோ எங்காவது சென்று சுவற்றில் முட்டிக் கொள்ளலாமா? என்றே தோன்றியது.

மூச்சை இழுத்து விட்டவனுக்கு இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் பொறுமையாகவே கையாள வேண்டும் என்று தோன்ற பிருந்தாவை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் ஹோட்டலுக்கு கிளம்பி இருந்தான். ஆனால் அங்கு சாராவை துளியளவேணும் எதிர்பார்க்கவே இல்லை. அவளின் காதிற்கே செல்லாமல் ஆடவன் முழுக்கு போட நினைத்த விஷயம் பேதை முன்பே அரங்கேற்றம் செய்யப்பட்டது தான் மிகவும் பரிதாபத்துக்குரியது.



காரில் ஏறி கண் மூடி அமர்ந்த சாராவிற்கு தான் என்ன மாதிரியாக உணர்கிறோம் என்று கூட புரியவில்லை. அவன் தன்னை ஏமாற்றி வஞ்சித்து விட்டது போல் தோன்ற வாழ்க்கை நொடியில் கருமை பூசிக் கொண்டது. 'எப்படி இனி தன்னுடன் அவனில்லை என்பதை எனது அபலை மனதிற்கு உணர்த்துவேன்' என்று பாவையின் எண்ணங்கள் வரையறைகளின்றி சதிராட்டம் ஆடிக்கொண்டிருந்தது. வெடித்து அடங்கிய பூகம்பத்தை ஒத்திருந்தது பாவையின் மனநிலை. ஆனால் முகம் அத்தனை நிர்மலமாக இருக்க மனதோ பலகோடி பாகங்களாக உடைந்து சிதறி போயிருந்தது.



அறைக்குள் நுழைந்தவள் அழுகையிலே கரைந்திருந்தாள் இரவு முழுவதும். சாரா அழுவதெல்லாம் அதிசயத்தில் சேர்க்க வேண்டிய விஷயங்கள். ஆம், இதுவரை எளிதில் அழுகை அவளை தீண்டியதில்லை. அதற்கு பெண்ணவளும் அனுமதியளித்ததில்லை. ஆடவன் அங்கேயே பேச முயற்சி செய்திருந்தால் கூட பெண் மனம் சற்று சமாதானத்தை பூசிக் கொண்டிருக்கும். ஆனால் அவன் அப்படியே நின்ற நிலை பெண்ணவளை பலமாக அடி வாங்க செய்திருந்தது.


அதிகாலை எழும் பொழுது மனது மட்டுமின்று தலையுமே கனக்க தீவிர காய்ச்சலில் விழுந்து விட்டாள் பெண். ஆம், நான்கு நாட்கள் மருத்துவமனையில் கழித்தவளை, "நீ நல்லா குணமான பின்னாடி கிளம்பு இல்ல இனிமே வேலைக்கே போக வேண்டாம்" என்ற மல்லிகாவின் பேச்சு கட்டுப்படுத்தி இருந்தது. இரண்டு வாரங்களுக்கு பிறகு அதுவும் கார்த்தியை இங்கு வரவழைத்து மல்லிகா அவனுடன் மகளை அனுப்பி இருந்தார்.


மீண்டு விட்டது காய்ச்சலில் மட்டும் தான் காதலில் அல்ல. அழுவாள், தனிமையில் மட்டுமே. அதுவுமே சில மணி துளிகள் தான். இன்னுமே அவனின் செயல்களை மனது ஏற்க மறுத்து நின்றது ஆடவனுக்கு ஆதரவாக கொடி பிடித்து.



அன்றைய தினம் ஹோட்டலில் வைத்தே சித்விக் தன்னுடைய நிலைப்பாட்டை பிருந்தாவிடம் விளக்கி இருந்தான். "நான் வேறொரு பொண்ணை விரும்புறேன் பிருந்தா, வீட்டுக்கு தெரியாது சோ அதான் இப்படி நடந்திடுச்சு ரியலி சாரி" என்று மன்னிப்பு யாசித்திருந்தான். முதலில் முகம் சுருக்கிய பிருந்தா அவனுடைய தன்மையான அணுகுமுறையில் இளகி இருந்தாள். அவளும் ஓரளவு புரிதல் உள்ள பெண் தான், இழுத்து பிடித்து தன்னுடன் அவனை இணைத்துக் கொள்வதில் அவளுக்கு விருப்பமும் இருந்திருக்கவில்லை. சிறு வயதிலிருந்தே அண்ணனுடன் பார்த்திருந்ததால் அவளை அறியாமல் ஆடவன் மீது ஒரு பிடித்தம் உருவாகியிருக்க தந்தையிடம் கூறி இருந்தாள் அவ்வளவே.


"எங்க மேலயும் தப்பிருக்கு. உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்காம ஏற்பாடு செய்திருக்க கூடாது. நான் டாடிக்கிட்ட பேசிடுறேன். ஆல் தி பெஸ்ட்" என்று கைக்குலுக்கி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருந்தாள் பிருந்தா.


சித்விக்கும் விடாது சாராவிற்கு அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்று தோற்றவன் இரண்டு முறை நேரடியாகவே பெங்களூர் சென்று பூட்டிய வீட்டை பார்த்தே திரும்பியிருந்தான்.

ஒரு முறை அழைப்பை ஏற்று விட்டவள் அவனுடைய, "சாரா" என்ற ஒற்றை அழைப்பிற்கே பொங்கியெழுந்த அழுகையை அடக்கவியலாது அலைபேசியை சுவற்றில் தூக்கி எறிந்து உடைத்து எண்களை மாற்றி இருந்தாள். அது அவன் மீதிருந்த கோபமல்ல, தன்னையும் மீறி அவனிடம் அடைக்கலம் புக முயலும் மனதின் செயலினால் தோன்றிய ஆற்றாமை. ஆடவனின் ஸ்பரிசத்திற்காக உடலும் உள்ளமும் ஏங்குவதை எத்தனை முயன்று பாவையால் தடுக்க முடியவில்லை.



'நீ அவசரப்படுகிறாய்? அவனிற்கும் ஒரு நியாயமுண்டு, சற்றேனும் காது கொடுத்து கேளேன்டி' என்று மனது அரற்றினாலும் பெண்ணவளின் ஒரே வாதம், "ஏன் எனக்கு அழைத்து பேசி இருக்கலாமே! இவனாய் கூறியிருந்தால் கூட இத்தனை வலித்திருக்காதோ என்னவோ?" என்பதே. அவனின் மீதிருந்த அளப்பரிய நம்பிக்கை நொடியில் துகள்களாக சிதறி இருக்க மீண்டும் அதை புதுப்பிக்க பெண்ணவளுக்கு விருப்பமில்லை. 'போடா' என்று விட்டவளுக்கு உண்மையிலே அவனை நேரில் சந்திக்க திராணி இல்லை தான். ஆம், அவனின் விழிகளை நோக்கி, 'ஏன் இப்படி செய்தாய்?' என்று கேட்பதற்குள்ளாகவே முற்றிலுமாக உடைந்தே விடுவாள், எத்தனை அடாவடியோ அதே அளவு பிடிவாதமும் சாராவிடம் உண்டு. எல்லா இடத்திலும் உடன் நிற்கும் தைரியம் அவன் முன் வலுவிழந்து போவதை பெண் அறவே வெறுத்தாள்.



அவளே எதிர்பாரத விதமாக அலுவலகத்தில் பதவி உயர்வுடன் சென்னைக்கு இடமாறுதலும் கிடைத்திருந்தது. அவளுக்கு வீட்டிலும் சரி வெளியிலும் சரி ஒவ்வொரு இடமும் முகமும் ஆடவனையும் அவனின் வார்த்தைகளையும் நினைவுபடுத்தி காயத்தை கிளறி இன்னும் ஆழப்படுத்தியிருந்தது. "சென்னையில நீ எப்படி தனியா இருப்ப சாரா?" என்று மேலெழும்பிய மல்லிகா குரலிற்கு, "ம்மா, நானும் அஸ்வினும் ரூம் எடுத்து ஸ்டே பண்ணிக்கிறோம். அவன் ஹாஸ்ட்டல் வெகேட் பண்ணிட்டு என்னோட ஜாயின் பண்ணிக்கட்டும்" என்று பேசி பெங்களூரில் இருந்து சென்னைக்கு இருப்பிடத்தை மாற்றி இருந்தாள்.



முதலில் குற்றவுணர்வில் தவித்த சித்விக்கிற்கு பாவையின் நடவடிக்கையில் அப்படியொரு அதிருப்தி. 'என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இவள் எப்படி என்னுடைய பக்கத்தை கூட கேட்காது முடிவெடுக்கலாம். இது தான என் மீதான அவளின் அபிப்பிராயமா? இத்தனை நாட்களில் ஒரு துளி கூட நான் அவளுக்கு நம்பிக்கை அளிக்கவில்லையா? இன்னும் அவளுக்கு என்னை புரியவில்லையா?' என்றெண்ணியவன் ஒரு கட்டத்தில் விலகி நின்று விட்டான். ஆம், இழுத்து பிடிக்கப்படும் எந்த உறவும் இறுதிவரை நிலைப்பதில்லையே! என்று என்னிடம் பேச வேண்டும் என்னை பார்க்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றுகிறதோ தானாகவே என்னை தேடி வரட்டும் என்று விட்டு விட்டான்.



ஆகி விட்டது ஒரு வருடம், பத்து நாள் பிரிவிற்கே ஏங்கி தவித்து தடுமாறிய காதலியிடம் கேட்டால் தெரியும் கடந்த ஒரு வருடத்தின் நாட்கள் எத்தனை கொடுமையாக நகர்ந்ததென்று. ஆனாலும் பிடிவாதம் இரண்டு புறமும் சரிசமமாய் துலாக்கோலில் நிறுத்தப்பட்டு விட சமாதானத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு போனது தான் அங்கு பரிதாபம்.



தொடரும்...
 
Messages
524
Reaction score
403
Points
63
இப்போ இதில் யார் முதல் படி எடுத்து வைத்து பிரச்சனை யை முடிக்க போறாங்கனு தெரியலை
 
Top