• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 10

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 10

அசௌகரியத்தை கொடுத்த புடவைகளை களைந்து ஒரு இலகுவான மேற்சட்டை மற்றும் முட்டியைவிட்டு இரண்டடி தாண்ட முயன்ற கால்சட்டைக்கு மாறியிருந்த யாஷ்வியால் அப்பொழுது தான் ஓரளவு இயல்பாய் உணர முடிந்தது. தலையில் இருந்த பூவை முழுவதுமாக எடுத்து டேபிளில் வைத்தவள் பின்னலை அவிழ்த்து மயிரிழைகளை நன்றாக மடக்கி மேல் நோக்கி வளைந்து அதை ஒரு கிளிப்பில் அடக்க முயன்றிருந்தாள் கழுத்தை விட்டு உயர்த்தி. அந்த அடர்த்தியான கேசங்களோ முழுவதுமாய் அடங்க மறுத்து ஆங்காங்கே சில கற்றைகளாய் ஆலம் விழுதை போல் பாந்தமாய் சுருண்டு தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தை உறுத்திக் கொண்டிருந்த நகைகளையும் கழற்றியவளை தாலியுடன் இணைந்த மெலிதான ஜெயினும் செவியை ஒரு சிறிய காதணியும் ஆக்கிரமித்திருக்க நீண்டதொரு பெருமூச்சை இழுத்து விட்டவள் நன்றாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி ஓய்வறையை விட்டு வெளியில் வர, நவீன் இன்னும் பால்கனியை விட்டு அசையவில்லை. அப்படியே அங்கிருந்த கம்பிகளை ஆடவனின் கரம் இறுக பற்றியிருக்க விழிகளோ தன் முன்னிருந்த வெண் மதியை கபளீகரம் செய்ய இதழ் வளைந்திருந்து மந்தகாச புன்னகையை தூக்கி சுமந்து நின்று. முகத்தை தீண்டி மீளும் தென்றலும் அவ்விடத்தை நிறைத்துக் கொண்டிருந்த நிலவொளியும் மனம் முழுவதிலும் குளுமையை பரவ செய்து இதமாகியிருக்க வதனமும் அதை பிரதிபலித்துக் கொண்டிருந்தது சற்றே கூடிப்போன பொலிவுடன்.



அறையை மங்கலான விளக்கொளி வியாபித்திருக்க அதனுடன் இணைந்து நவீன் அவனுடைய வாசனை திரவியத்தின் மணமும் பாவையின் நாசியை தீண்டி நுரையீரலை நிரப்பிக் கொண்டிருந்தது. ஆம், அது
நவீனுடைய அறையே தான். பின்னங்கழுத்தை வருடிய நவீன் விழிகள் இயல்பாய் அறைக்குள்
திரும்ப யாஷூம் அவனையே பார்த்தப்படி தான் நின்றிருந்தாள் லேசாக ஆக்கிரமித்திருந்த சோபையான புன்னகையை கரைய விடாது ஓய்வறையின் கதவில் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு!


ஆடவனின் புருவம் உயர்ந்து, 'என்ன?' என்ற வினாவில் தொக்கி நிற்க பெண்ணவளின் தலை இருபுறமும் அசைந்தது, 'ஏதுமில்லை' எனும் ரீதியில். நவீனின் கரங்கள் லேலெழுந்து அவளை நோக்கி அழைப்பு விடுக்க கால்கள் பேதையின் அனுமதியின்றி ஆடவனிடம் விரைந்தது அடைக்கலமாகும் பொருட்டு. நொடிகளில் அவனருகில் நின்றிருந்தவளின் விழிகள் நவீனை எதிர்கொள்ள இயலாது கீழே தூரத்தில் காற்றை கிழித்து பறந்து கொண்டிருந்த வாகனங்களை நோக்கி அலைபாய்ந்தது. என்ன முயன்றும் எழ முயலும் சிலிர்ப்பை பாவையால் அடக்க முடியவில்லை அவனருகாமையில். நவீன், பால்கனியின் ஓரத்தில் நின்றிருக்க யாஷ்வியும் அவனுக்கு பக்கமாய் சுவற்றை ஒட்டி நின்றிருந்தாள். ஆடவனின் பார்வை தன்னையே கபளீகரம் செய்வதை உணர்ந்தாலும் சுவற்றில் லேசாக தலையை ஒரு புறமாக சாய்த்து விழிகளை மூடிக் கொண்ட பேதையின் வதனத்தை அத்தனை அசதியை மீறியும் ஒரு வித உற்சாகம் தொற்றியிருந்தது. சற்று முன்பிருந்த ஒரு வித பதகளிப்பு இருந்த இடம் தெரியாது பறந்து தான் போயிருந்தது நவீனின் இலகுவான அணுகுமுறையில்.



ஆம், மேலேறி அறைக்குள் நுழைந்த யாஷின் விழிகள் அப்படியொரு அலைப்புறுதலுடன் இருக்க நவீனை தான் தேடியது. ஆடவனை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் இலகுவான உரையாடல்கள் இருந்திட்டாலும் அந்த நிமிடம் ஏனோ அவளையும் அறியாதொரு கிலியை விழிகள் அப்பிக் கொண்டது. பாவையின் விழிகள் பால்கனியை நோக்கி ஆராய சட்டென்று ஓய்வறை கதவை திறந்து வெளியே வந்த நவீன் முன்பு அணிந்திருந்த பட்டு வேட்டி சட்டையை மாற்றி இலகு உடைக்கு மாறியிருந்தான். யாஷ் அப்படியே உறைந்து நிற்க, குறுஞ்சிரிப்புடன் கண்களை சிமிட்டி பேதையின் கன்னங்களை லேசாக தட்டியவன் அவளின் அசௌகரியத்தை உணர்ந்து, "உனக்கு கம்பர்டபிளா இல்லைன்னா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ யாஷ்" என்று இடைவெளி விட்டு பால்கனியில் சென்று நின்று கொண்டான். ஆம், அவளை ஆடவனுக்கு தெரியுமல்லவா? எப்பொழுதும் தளர்ந்த உடையிலே சுற்றுபவளை அதிகபடியான ஆபரணங்கள் அலங்கரித்ததே கிடையாது.



செல்பவனையே பார்த்திருந்தவள் விழிகள் கீழே குனிந்து தன்னுடையை ஆராய்ந்தது, ரூபா தான் தயார் செய்து அனுப்பினாள் ஏதேதோ பேசி, கூறி. ஆனால் பேதையின் செவியிலிருந்து எதுவுமே மூளைக்கு ஏறவில்லை தான், எல்லாபுறமும் தலையசைத்தவள் நவீனின் அறையை நோக்கி வந்திருந்தாள். உடலை அழுத்தாத லேசான மென் இளஞ்சிவப்பு பட்டுசேலையும் அதற்கேற்றாற் போல் ஒரு சில ஆபரணங்களுடன் எளிமையான ஒப்பனை தான் என்றாலும் அச்சூழலும் நவீனின் அருகாமையும் யாஷிற்கு மூச்சடைக்க செய்தது. காலையிலிருந்து அவனுடன் தான் இருந்தாலும் அந்த தனிமையும் ஆடவனின் பார்வையும் பெண்ணிற்கு ஒரு வித பரவசத்தை கொடுத்திருந்தது. தலையில் வேறு இயல்பை விட அதிகமாக வைத்திருந்த பூவும் கனக்க செய்ய அவளது விழி உடைக்காக அறையை வலம் வர படுக்கையில் தயாராய் எடுத்து வைத்து விட்டே அகன்றிருந்தான் நவீன். அந்த செயலில் பாவையின் இதழிலும் மெலிதான புன்னகை பரவ அதனோடு ஓய்வறை நுழைந்திருந்தாள் உடை மாற்றும் பொருட்டு.




யாஷ்வியின் வதனத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாய் தழுவியிருந்த நீர் துளிகள் கொஞ்சம் கொஞ்சமாய் நெற்றி, கன்னத்திலிருந்து கழுத்தை நோக்கியிறங்கி கரைய முயன்றது. முகத்தை கழுவியிருந்தவள் அதை துடைத்திருக்கவில்லை. நவீனின் கரம் இயல்பாய் மேலெழுந்து அந்த நீர் துளிகளை துடைத்து விட யாஷ் அவனின் செயலை உணர்ந்தாலும் அசையாது அப்படியே நின்றிருந்தாள் மேலும் விரிந்த இதழுடன். ஆடவனின் விரல்கள் தழுவிய இடமெல்லாம் நீரின் குளுமை குறைந்து சட்டென்று வெம்மையை பரவ துவங்க உடலே ஒரு வித மயக்கத்தில் தான் ஆழந்து அதிர்ந்து கொண்டிருந்தது.


"யாஷ், ஆர் யூ ஓகே?" என்றவன் வினாவிற்கு அவளின் தலை மேலும் கீழும் அசைய வதனத்தில் இருந்த ஆடவனின் கரங்கள் அவளின் இடையில் பதிந்தது. அழுத்தாது அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டவன் நாடி அவளது தலையில் குன்றியிருக்க விழிகளோ மீண்டும் சந்திரனை நோக்கி அலைபாய துவங்கியது. சுவற்றில் சாய்ந்திருந்த யாஷின் தலை நவீனின் செயலால் ஆடவனின் கழுத்தடிக்கு இடம்பெயர்ந்திருக்க அவனின் ஏறியிறங்கும் தொண்டைக்குழியும், சுவாசத்தில் சுருங்கி விரியும் மார்பும் தன் வதனத்தில் அவ்வப்பொழுது தீண்டி மீளும் சூடான சுவாசக்காற்றும் பாவைக்கு ஒரு வித அவஸ்தையை கொடுத்திருந்தது.



ஆடவனுக்கு மிக நெருக்கமாக நின்ற நிலையில், பேதையுள் எழுந்த படபடப்பு மேலும் அதிகரித்து அவளுள் அதிர்வலைகளாய் ஊடுருவ துவங்க, உடல் தனக்கு மிக நெருக்கமாக நின்றவனுக்கும் அதை கடத்தியது.
அவளை உணர்ந்து கொண்டவன் பேதையின் கரத்தை எடுத்து தன் கன்னங்களில் வைத்து அழுத்தி, "யாஷ்" என்றான் மீண்டும். தாடியடர்ந்த கன்னங்களிலிருந்த மயிரிழைகள் அவளின் மென்கரங்களில் உரசி கூச செய்ய, அந்த மிக மெதுவான அழைப்பே நிசப்தம் சூழ்ந்த இடத்தை முழுவதுமாக நிரப்பி மாபெரும் ஒலியை போல் காற்றில் கரைந்து யாஷின் செவியில் எதிரொலித்தது. சட்டென்று விழிகளை மலர்த்தி பார்த்து புன்னகையுடன், 'என்ன?' என்ற வினாவோடு சற்று விலகி நின்றிருந்தாள் அவனை விட்டு.


அவளின் தோளின் இருபுறமும் முழங்கையை வைத்து அழுத்தி கைகளை பாவையின் கழுத்தை சுற்றி கோர்த்துக் முகத்தருகில் அவளை இழுத்துக் கொண்டவன், "அவுட்டிங் போகலாமா யாஷ்?" என்றிட, "இந்த நேரத்திலயா?" என்று முணுமுணுத்தவள் விழிகள் இயல்பாய் அறைக்குள் தெரிந்த கடிகாரத்தில் நிலைக்க அதுவோ பதினொன்றை தாண்டும் முயற்சியில் கர்ம சிரத்தையுடன் இருந்தது.


நவீன் அவளை விலக்கி உள்ளே நுழைந்து மகிழுந்தின் திறவுகோலை எடுக்க, "நவீன் இப்ப வேணாமே! இன்னொரு நாள் போகலாம். கீழ யாராவது முழிச்சிருந்தா?" என்று தயக்கமாக இழுத்த யாஷ் அவனை தடுக்க முயல, "யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க, நீ வா. நான் இருக்கேன்ல்ல" என்றவன் கதவை திறந்து வெளியேற, 'ம்க்கும்...சொல்றதை கேட்குறாரா பார்?' என்று அவனையே ஆயாசமாக பார்த்து நெற்றியை தேய்த்தவளும் ஆடவனுடன் இணைந்து கீழிறங்கியிருந்தாள். அன்று காலை தான் திருமணம் முடிந்திருந்தது. யாஷ்வி வீட்டிற்கு சென்று வந்து மீண்டும் நவீன் வீட்டில் அடைக்கலமாகியிருக்க மணமக்களுடன் தங்கி அவர்களை மீண்டும் மறுவீடு அழைத்து வருவதற்காக மனோவையும் ரூபாவையும் அவர்களுடன் சவிதா அனுப்பியிருந்தார். யாஷின் விழிகள் வாணி அறையிலும் மனோ தங்கியிருந்த விருந்தினர் அறையிலும் விழுந்து மீள ஒரு வித ஆசுவாசம். ஆம், ஆள்நடமாட்டமின்றி இருந்தது. எல்லோரும் உறங்கியிருப்பார்கள் போலும்.


வாயிற்கதவை திறந்த நவீன் தன் பின்னால் வந்தவளை காணாது, "யாஷ்" என்று சத்தம் கொடுக்க, 'மெதுவா கூப்பிடுறானா பார்!...இவனோடு, தூங்கிறவங்களை எழுப்பி விட்டுடுவான் போலயே!' என்றெண்ணியவள் பதறி அவசரமாய் அவனிடம் விரைய தன்னிடமிருந்த திறவுகோலை கொண்டு வீட்டை பூட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய இயல்பான செய்கையிலே இது வழக்கமான ஒன்று தான் என்பதை அவளுக்கு எடுத்துக் காட்ட நிமிர்ந்து பார்த்து கண்களை சிமிட்டியவனும், "எனக்கு எப்ப தோணுதோ அப்ப கிளம்பிடுவேன். அம்மா உள்ள இருந்தே ஓபன் பண்ணிப்பாங்க" என்று பதில் கொடுத்தப்படி மகிழுந்தில் ஏறியிருக்க அவனின் பேச்சுக்களை கிரகித்து தலையசைத்தப்படி பாவையும் அவனுக்கு இசைந்துக் கொடுத்தாள்.



நேரம் நள்ளிரவை தொட முயன்றதால் என்னவோ சாலை ஆள் அரவமின்றி இருக்க வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் அவர்களை கடந்து பயணிக்க சாரளத்தின் கதவை திறந்து தலையை லேசாக வெளியில் சாய்த்து வேடிக்கை பார்த்திருந்தாள் யாஷ். நவீனின் கரங்கள் வாகனத்தை இயக்கியப்படி
காரிலிருந்த வானொலியை ஆராய்ந்து ஒலிபரப்ப செய்து கொண்டிருந்தது.




பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்!

நீ முத்த பார்வை பார்க்கும் போது என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்!
நீ தானே மழை மேகம் எனக்கு என் ஹார்மோன் நதியில் வெள்ளப் பெருக்கு!
வா சோகம் இனி நமக்கெதுக்கு யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு!
உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா...?



என்ற வைரமுத்து வரிகளோடு ஒலித்த மெல்லிசை அந்த மகிழுந்தை மட்டுமின்றி இருவரின் மனதையுமே நிறைக்க நவீனின் இதழும் பாடலோடு இணைந்து அதன் வரிகளை முணுமுணுத்து ஓர விழிகளால் மனைவியை தழுவியது. யாஷூம் இதழ் நிரம்பிய புன்னகையோடு அந்த வரிகளோடு நவீனின் குரலை உள்வாங்கி கிரகிக்க முயல உண்மையிலே பெண்ணின் முதுகு தண்டில் மின்னல் தான் வெட்டியது ஆடவன் பார்வை கொடுத்த போதையால். அதோடு நிறுத்ததாது அடுத்தடுத்து ஒலித்த பாடலோடு லயித்து நவீனின் இதழும் அபிநயம் படிக்க, யாஷ் விழிகளை விரித்து ஆச்சரியமாய் தான் பார்த்திருந்தாள். அவனோடும் இசையோடும் இரவின் குளுமை கலந்தொரு பயணம் பாவையை மெல்லிய மயலிறகால் வருடி ஆழ்ந்ததொரு மயக்கத்தை கொடுத்து பித்தாக்கி கொண்டிருந்தது. முதலில் இருந்த பயம், பதற்றம் அசதியெல்லாம் மெதுவாக குறைத்து அந்த பயணம் பேதையை இயல்பாக்கி இருந்தது. அவனின் குரலோடு ஒன்ற துவங்கியவள் புருவம் சுருக்கி, 'நாட் பேட், நல்லா தான் பாடுறான்' என்று சான்றிதழ் வேறு கொடுக்க அவளின் எண்ணத்தை படித்தவனாக, "சின்னதிலே எனக்கு மியூசிக் ரொம்ப பிடிக்கும் யாஷ், பாட கத்துக்கிட்டேன். நம்ம மூவியிலே ஒரு ஷாங் கூட பாடியிருக்கேன்" என்று தகவல் கொடுத்தான். "அன்னைக்கு ஏன் ஷமீயோட சேர்த்து என்னை கொடுமை படுத்துனீங்க?" என்றாள் அன்றைய நாள் நினைவு வந்தவளாக. இதழோடு இணைந்து குறும்பாக விழிகளும் புன்னகைக்க, "அது சும்மா விளையாட்டுக்கு, உன்னை வெறுப்பேத்த தான்!" என்று கண் சிமிட்டி இதழை கடித்து புன்னகையை விழுங்க முயல அவனை முறைத்த யாஷோ முகத்தை மீண்டும் சாரளத்தின் புறம் திருப்பிக் கொண்டாள். அதிலே அவனின் இதழ் மேலும் விரிய இடது கரம் சட்டென்று மேலெழுந்து அவனின் தாடையை பற்றி தன்னை நோக்கி திருப்ப முயல, "நவீன்..." என்றவளுக்கு உண்மையிலே அவனது முகத்தை காண திராணியில்லை தான். ஆகர்ஷித்தான், குரலோடு மந்தகாச புன்னகையை கலந்து தன்னை முழுவதுமாக விழுங்கியிருந்தான் ஆடவன். எப்பொழுதுமே ஆடவனிடம் பேதைக்கு ஒரு பித்து உண்டு, அதுவோ இப்பொழுது மேலும் உயர்ந்து அவளை செயலிழக்க செய்து கொண்டிருக்க, "நவீன், நான் ட்ரைவ் பண்ணவா?" என்றாள் சூழலை மாற்றும் பொருட்டு.


சம்மதமாக தலையசைத்தவனும் மகிழுந்தை அவளின் கட்டுப்பாட்டில் விட்டு கைகளை கட்டிக் கொண்டு அருகில் நன்றாக சாய்ந்து அசட்டையாக அமர்ந்து விட்டான். "இதுவும் நல்லா தான் இருக்கு, யாராவது ட்ரைவ் பண்ணி நம்ம ஜாலியா என்ஜாய் பண்ணி ஹம் பண்ணிட்டு வரதும்" என்றவன் கரங்கள் லேசாக பாடலுக்கேற்ப தாளம் போட்டுக் கொண்டிருக்க, "என்னை தவிர யாருமே அதிகமா என்னோட காரை யூஸ் பண்ணதில்லை, நான் ட்ரைவிங் கத்துக்கிட்டதுக்கு அப்புறம் ட்ரைவர் வைச்சுக்கிட்டது இல்ல, அப்பாவும் அம்மாவும் அவங்க காரை தான் யூஸ் பண்ணுவாங்க. என்னோடதை தொட மாட்டாங்க" என்றவன் உற்சாகமாகி மேலும் அவளிடம் பேசிக் கொண்ட வர தலையசைத்து புன்னகைத்தவள் கரங்களின் உதவியால் பாந்தமாய் மகிழுந்து சாலையில் வழுக்கிக் கொண்டிருந்தது. யாஷ்விக்கும் அந்த பயணமும் அவனும் அப்படியொரு புத்துணர்ச்சியை பெற்று தந்திருந்தனர். அவளின் வீட்டில் சவிதா, மாலையிலே மகளை வெளியில் அனுமதிக்க மாட்டார், அவள் ஓரளவு வளர்ந்து கல்லூரி செல்ல துவங்கும் பொழுதே மனோவும் ரிதனும் வேலையின் பொருட்டு மனைவிமார்களோடு வெளியூர் பறந்திருக்க இந்த அனுபவம் பெண்ணிற்கு ஒரு வித ஆர்பரிப்பை அள்ளி தெளித்திருந்தது.



ஒரு மணி நேரங்களுக்கு மேல் இலக்கில்லா வீதிகளில் சுற்றியவர்கள் வீடு திரும்பும் பொழுது மழை சில துளிகளாய் தூற துவங்கியிருந்தது. அந்த தூறல் இருவரின் மனதிலும் சாரலாய் விரவ மகிழுந்தை வீட்டினுள் ஏற்றி நிறுத்திய நவீன் கீழிறங்க அவனுடன் இணைந்து இறங்கிய யாஷ், "நவீன், ரெய்ன் ஹெவியா இருக்கு!.. இப்படியே போன நனைச்சிடுவோம். கொஞ்சம் பொறுங்க குறையட்டுமே" என்று அவனுக்கு தடை விதித்திருந்தாள். ஆம், மகிழுந்து நிறுத்துமிடத்திலிருந்து வீட்டு வாயிலுக்கு செல்ல இரண்டு நிமிடங்களாவது எடுக்கும்...


நவீன் மகிழுந்தில் சாய்ந்து நின்று கொண்டிருக்க ஒரு புறமாக யாஷோ அவன் மீது சாய்ந்து மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆடவன் கைகளுக்குள் நெருக்கமாக நின்று கொண்டு. ஆம், தள்ளி நின்றவளை இழுத்து தன் கைக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டான். அவளும் மழையும் ஆடவனுக்கு கிளர்ச்சியை கொடுத்து பலவித வர்ணஜாலங்களையும் இரசாயன மாற்றங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தது. தலையை கோதிக் கொண்டவன், "போகலாம் யாஷ், மழை நிற்கிற மாதிரி தெரியலை, ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிப்போம்" என்று அதற்கு மேல் அவளை சிந்திக்க விடாது இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் விரைந்திருந்தான்.


அதற்குள்ளாகவே இருவருமே நன்றாகவே நனைந்திருந்தனர். யாஷ் முகத்தில் வழிந்த நீரை துடைத்து இடுப்பில் கையூன்றி ஆடவனை முறைக்க இதழ் வளைத்து தோள் குலுக்கி அசட்டையாக புன்னகைத்தவன் அவளை நிற்க விடாது அறைக்கு அழைத்து வந்திருந்தான்.



யாஷ் உடையை எடுத்துக் கொண்டு ஓய்வறை புகுந்து உடை மாற்றி வந்து தலையை உலர்த்தியபடி நவீனை ஆராய, அவன் இன்னும் உடை மாற்றாது ஈரத்துடனே பால்கனியில் நின்று சாரலில் நனைந்து கொண்டிருந்ததான் கைகளை கட்டியபப்படி. 'இன்னும் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணலையா இவர்?' என்ற சிந்தனையோடு, "நவீன்" என்றழைந்தப்படி அருகில் சென்றிருந்தாள்.


"இங்க நின்னு என்ன பண்றீங்க?" என்றவளுக்கு பதில் கொடுக்காதிருந்தவன் அமைதியில் மீண்டும், "நவீன்.." என்றவள் அவனின் கைகளை பிடிக்க அப்படியே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் மார்போடு. விழிகளை விரித்து, "நவீன் என்ன பண்றீங்க நீங்க? என்னோட ட்ரெஸ் ஈரமாகுது..." என்று ஆயாசமாக முணுமுணுத்து ஆடவனை விலக்க முயல அதற்கு அவனின் கரம் அனுமதியளித்திருக்கவில்லை.

"வேற மாத்திக்கலாம் யாஷ், நானே மாத்தி விடுறேன்" என்று மந்தகாச புன்னகையுடன் தன் பேச்சினால் நொடியில் செம்மை பூசிக் கொண்ட பாவையின் கன்ன கதுப்புக்களை வருடியபடி கூறியவனுக்கு அந்த நொடியே அவளுள் ஊடுருவி உறைந்து விடும் வேகம்!


"யாஷ்.." என்று முகத்தை நிமிர்த்தியவன் மயக்கத்தில் அமிழ்ந்த குரலிலும் தன்னை ஆகர்ஷிக்கும் விழியிலும் நொடியில் உருகி கரைந்து நெகிழ்ந்தவள் ஆடவனை உணர்ந்து புன்னகையுடன் எக்கி அவனது கழுத்தில் கரம் கோர்த்து கன்னத்தில் தன் இதழை பதித்திருந்தாள். அந்த இதறொற்றல் பேதைக்கு மட்டுமின்றி ஆடவனுக்குமே அப்படியொரு பரவசத்தை கொடுத்திருக்க நன்றாக விரிந்த இதழுடன் அவளின் வதனத்தில் சுருண்டிருந்த கூந்தலை ஒதுக்கி காதோரத்தில் தள்ளியவன் பாவையின் புருவத்தை நீவியபடி அவளின் இதழை ஆக்கிரமித்திருந்தான். ஆடவனின் செயலில் எல்லாவற்றையும் மொத்தமாய் மறந்து மையலில் ஆழ்ந்திருந்தவளின் பின்னங்கழுத்தில் உரசிச் சென்ற நவீனின் இதழின் ஈரப்பதம் சுயநினைவிற்கு கொண்டு வர பாவையின் இதயத்துடிப்பு பன்மடங்காக எகிறித் துடிக்க துவங்கியது.


அதிர்ந்து மெலிதாக நடுங்க துவங்கியிருந்தவளை முழுவதுமாக தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து மெதுவாக மிக மெதுவாக அவளை உணர்ந்து தன்னையும் அவளுக்குள் கடத்த முயன்றவனின் இதழும் கரங்களும் மனைவியிடம் அத்து மீற துவங்கியிருந்தது.

அவனுடையின் ஈரம் முழுவதும் பாவையின் உடையிலிருந்து மேனிக்குள் ஊடுருவ துவங்க ஆடவனும் முழுவதுமாக அவளுள் ஊடுருவி ஆக்கிரமித்து பித்தாக்கி பிதற்றி அவளையும் பிதற்ற வைக்கும் முயற்சியில் வியாபித்திருந்தான். அந்த மழைத்துளிகளின் குளுமை அவர்களுக்கு மட்டும் குவிர்விப்பதற்கு பதிலாக வெம்மையை பரவ செய்து கொண்டிருந்தது
காதலில் தொடங்கியிருந்த பரிமாற்றங்கள் காமத்தில் முற்றுப் பெற முனைந்து அவர்களையும் வாரிச்சுருட்டி தன்னுள் விழுங்கிக் முக்தி பெற்றுக் கொண்டிருந்தது. ஒருவரில் ஒருவர் லயித்து கரைந்து காதலில் கசிந்துருகி நீட்சியடைந்து கொண்டிருந்தனர் நொடிகளை நிமிடங்களாய் நீட்டித்து....


தொடரும்..
 
Last edited:
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Wow wow naveen yash oda cute love super ra iruku 😍😍💖💖💖
 
Top