• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
நேரம் – 36 💜

கழுத்தை சற்றே உயர்த்தி அந்த வானவெடிக்கையைப் பார்த்தாள் இசைவாணி. ‘வில் யூ மேரீ மீ இளா?’ என்ற கேள்வி தாங்கி வண்ணமயமாக அது ஒளிர, கீழே இளமதி முட்டிப் போட்டு பரிதி முன்னே அமர்ந்து பூங்கொத்தை நீட்டினாள்.

அவன் முகத்தில் முகத்தில் புன்னகை, இன்ப அதிர்ச்சி என மாறி மாறிப் போட்டிப் போட்டது. அவன் இதை எதிர்பார்க்கவில்லை. அவனாக ஒருநாள் அவளிடம் காதலைத் தெரிவிக்கலாம் என்றெண்ணியிருக்க, மதி முந்திக் கொண்டாள்.

சுற்றியிருந்தவர்கள் எல்லாம் கைத்தட்டி, “சே யெஸ் இளா... சே யெஸ் இளா!” என ஆரவாரம் செய்ய, இவன் சிரிப்புடன் அவள் கையிலிருந்த பூங்கொத்தை சின்ன கூச்சத்துடன் வாங்கினான். சுற்றியிருந்தவர்கள் ஆர்ப்பரித்து கத்தி தங்களது மகிழ்ச்சியை வெளியிட, மீண்டும் ஒரு வானவெடிக்கை வெடித்து சப்தம் காதைப் பிளந்தது. வாணி அனைத்தையும் அமைதியாகப் பார்த்துவிட்டு, கடைசியாய் இருந்த இருக்கையேத் தேடியமர்ந்தாள்.

இளமதி அவனை இறுக அணைத்து உதட்டில் அழுத்தி முத்தமிட, இவள் தன் பார்வை அவசரமாக விளக்கினாள். ஆனால் மற்றவர்களுக்கு அது பெரிதாய் தெரியவில்லை போல. இன்னுமே கரவொலியும் கேலி கிண்டலும் நிற்காமல் தொடர, நண்பர்கள் பரிதியையும், இளமதியையும் வாழ்த்தினர். சிலர் முன்கூட்டியே தங்களது இநத் விஷயம் தெரியும் என்பது போல பரிசுப் பொருட்களைத் வழங்க, என அவ்விடமே இன்னும் மகிழ்ச்சியில் சலசலத்தது.

இளமதியின் அத்தையும், மாமாவும் இவனிடம் அன்போடு பேசினர். அவர்களது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர். இருவீட்டிலும் பேசி முறையாய் திருமணம் செய்யலாம் என அவர்கள் மேலே பேச, “ஆன்ட்டி... அதெல்லாம் இப்போதைக்கு வேணாம். வீ வாண்ட் டூ என்ஜாய் அவர் லைஃப். இன்னும் டூ இயர்ஸ் போகட்டும். அதை அப்புறம் பார்க்கலாம்!” என இளமதி அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

வாணி சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தாள். இந்தியர்கள் ஜோடி ஜோடியாக குழந்தைகளோடு அமர்ந்து பேசி சிரித்தனர்.
அவர்களோடு இணைய இயல்பாக இவளுக்கு வரவில்லை. என்னவோ தன்னையே தனிமைப்படுத்திக்கொள்ளவே விரும்பினாள். எனவே கண்களைச் சுழற்றி வெறுமனே பார்த்திருந்தாள். வினோத் ஏதோ குறுஞ்செய்தி அனுப்பவும் அதில் கலைந்தவள், அப்படியே குனிந்து அலைபேசியில் புதைந்தாள்.

பெரியவர்கள் அனிச்சலை வெட்டி முடித்து அனைவருக்கும் கொடுத்ததும் ஒரு நிமிடம் அந்த இடத்தில் மின்னிணைப்புத் துண்டிக்கப்பட, மறுநொடியே இணைப்பு கிடைத்தது. அப்போதுதான் அனைவரையும் சுற்றி நிற்க வைத்து, பரிதியை நடுவில் இழுத்துவந்த இளமதி தன் காதலைத் தெரியப்படுத்தியிருந்தாள். பரிதிக்கும் இன்ப அதிர்ச்சியாகத்தான் போயிற்று. ஆனாலும் சின்ன நெருடலுடன்தான் அவள் கையிலிருந்த பூங்கொத்தை வாங்கினான். இன்னும் அவன் தனக்கும் வாணிக்கும் இடையேயான ஒப்பந்த திருமணத்தைப் பற்றி மதியிடம் பகிர்ந்திருக்கவில்லை. அந்த உறுத்தல் இருந்த போதும் இந்த நிமிடத்தின் மகிழ்ச்சியைக் குலைக்க விரும்பவில்லை அவன். அதனாலே புன்னகையுடன் அவள் காதலை ஏற்றுக் கொண்டான். அனைவரின் முன்பும் ஒருவரையொருவர் முழுதாய் வெளிப்படுத்தியிருந்தனர்.

“இளா... லெட்ஸ் ட்ரிங்க்!” என மதி அவனிடம் மதுபானம் நிரம்பிய கோப்பையைக் கொடுத்தாள். அவனுக்கு தற்செயலாக வாணியின் நினைவு வந்தது. அவளை இவன்தான் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தான். அப்படியிருக்கையில்
அவளைப் பத்திரமாக அழைத்துச் செல்லும் பொறுப்பு இவனுடையதுதானே எனத் தோன்ற, அவளைத் தேடினான். கடைசி மேஜையில் ஒற்றையாக அமர்ந்து அலைபேசியில் தலையைப் புதைத்திருந்தாள் அவள். அவளிடம் பேசச் சென்ற விஷயமும் அப்போதுதான் நினைவும் வந்தது.

அவன் பார்வை சென்ற திசையைப் பார்த்த இளமதி, “உங்கக்காவை யாரும் தூக்கிட்டுப் போய்ட மாட்டாங்க இளா. வா, நம்ப என்ஜாய் பண்ணலாம்!” என அவனை மேலும் யோசிக்க விடாமல் அழைத்துச் செல்ல, இவனும் நண்பர்களுடன் அமர்ந்து குடிக்கத் தொடங்கினான்.

விலையுயர்ந்த மதுபானங்கள் நிரம்பி கிடக்க, “இதை ட்ரை பண்ணு இளா... இது நல்லா இருக்குல்ல?” எனக் கேட்ட மதி அவனை மூச்சு முட்டுமளவிற்கு குடிக்க வைத்துவிட்டாள்.

அவன் நிதானம் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்க, “எனாஃப் மதி...” என்றான் குழறலாக. அவளுமே போதையின் உச்சத்திலிருந்தாள். இரவு விருந்து முடிந்து குடும்பம் குடும்பமாக அனைவரும் அகலத் தொடங்க, வாணிக்கும் அதற்குமேல் பொறுமையில்லை. எழுந்து பரிதியைத் தேடி சென்றாள்.

அவன் குடித்தது போதுமென எழுந்து நிற்க முடியாது தள்ளாட, வாணி அவனருகே வர, அவள் முழங்கையோட தன் கரத்தைக் கோர்த்து அவள் மீது தன் பாரத்தை சுமத்தினான். அவனிடமிருந்து வந்த மதுவின் வாசனை பிடிக்காது முகத்தைப் பக்கவாட்டாகத் திருப்பினாள் அவள்.

“வானு... சாரீரீ!” என்றவன் மேலும் பேச முடியாமல் குழற, “நீ இங்கேயே ஸ்டே பண்றீயா? இல்ல என்னோட வர்றீயா?” எனக் கடுப்புடன் கேட்டாள்‌ அவள். அவனிருந்தக் கோலத்தில் அவளுக்கு சினமேறியது.

“சாரி வானு...நான் வேணாம்னுதான் சொன்னேன். இந்த மதி... மை பிலவ்ட் ப்யூச்சர் வொஃய்ப், மை லைஃப் அவதான் ஊத்திவிட்டா!” என்றான் திணறலாய். இசைவாணி ஒரு மகிழுந்தை வர வைக்க, மதியிடம் வருகிறேன் என தலையசைத்தான் பரிதி.

“இளா... இன்னும் பார்ட்டி முடியலை. ஸ்டே வித் அஸ்!” என்ற மதி அவனை விடாது பிடித்திழுத்தாள். ஆண்களும் பெண்களும் ஆட்டமும் பாட்டமுமாக போதையின் உச்சத்தைத் தொட, இசைவாணி அருவருப்பில் முகத்தைச் சுளித்தாள்.

“நோ மதி... வாணி இஸ் மை ரெஸ்பான்சிபிலிட்டி. அவளைப் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டுப் போகணும்!” என்றவன் தள்ளட்டாத்துடன் மகிழுந்தில் ஏற, அவனை ஏறயிறங்கப் பார்த்தாள் இசைவாணி.

‘நீ இருக்க நிலைமைக்கு உன்னைத்தான் நான் பத்திரமா கூட்டிட்டு போகணும்!’ மனத்தில் நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை அவள். அப்படியே உரைத்தாலும் கூட அது பரிதியின் புத்திக்கு உறைக்காது.

சிறிது நேரம் அமைதியாக வந்தவன், “வானு...” என அழைத்தான். அவள் பதிலளிக்கவில்லை.

“வானு... உன்னைத்தான் கூப்பிட்றேன்!” அவள் வெற்றுத் தோளைச் சுரண்டினான். அவன்

கையைத் தட்டிவிட்டவள்,
“சொல்லு...” என்றாள்.

“இன்னைக்கு நான் ரொம்பபப சந்தோஷமாக இருக்கேன்!” என இரண்டு கைகளையும் விரித்துக் காண்பித்தவன், “மதி... பேரழகி அவ? இறக்கை மட்டும் இருந்தா ஏஞ்சல் என் ஆளு. அப்சரஸ்க்கு மீனிங்கே என் மதிதான். இன்னைக்கு அவ அவ்ளோ அழகாருந்தா. அப்படியே தூக்கிட்டுப் போய் தாலி கட்டி குடும்பம் நடத்தலாம்னு கூடத் தோணிடுச்சு எனக்கு. அப்படிப்பட்ட அழகான அவளா வந்து என்கிட்டே ப்ரபோஸ் பண்ணிருக்கா? என்ன கெத்து மொமண்ட்ல வானு?” என தொங்கிய தலையைத் தூக்கி அவள் முகத்தை ஏறிட்டான். அவனை சில நொடிகள் அமைதியாகப் பார்த்திருந்தவள், பெருமூச்சுடன் தலையசைத்தாள்.

“பாரு... நீயே ஒத்துக்குற? அவ குயின் ஆஃப் ப்யூட்டி லேடி. நான் அவளை என் ப்ரெண்ட்ஸ்கிட்டே இன்ட்ரோட்யூஸ் பண்ணும்போது எல்லாரும் வாயைப் பொளந்தானுங்க. எங்க ஜோடி செம்மையா இருக்குன்னு சொன்னாங்க. அவளுக்கு ஆஃபிஸ்லயே ஹெவி காம்பெடிஷன் தெரியுமா வாணி? பட், அந்த லக்கி பெர்சன் நான்தான். நாளைக்கு நாங்க மேரேஜ் முடிஞ்சு ஜோடியா போகும்போது எல்லாரும் மேட் ஃபார் ஈச் அதர்னு சொல்வாங்க. என் பொண்டாட்டியை அழகின்னு புகழ்வாங்க. அதை நினைச்சாலே போதை ஏறுது வாணி!” என்றான் முயன்று கண்ணை சிமிட்டி. இசைவாணி அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டே சாளரம் வழியே வேடிக்கைப் பார்த்தாள்.

“மதியை என் அம்மாகிட்டே கூட்டிட்டுப் போனா அவங்க கூட இவ்வளோ அழகான பொண்ணு நம்ப மருமகளான்னு ஷாக்காகப் போறாங்க!” என்றவன்,

“ஆனால் பாரு... அவங்களுக்குப் பிடிச்ச ஃபேவரைட் மருமக நீதான். நான் எவ்வளோ சண்டை மூட்டிவிட ட்ரை பண்ணாலும் உன்னைப் பத்தி என்கிட்டே பேசும்போது நல்லவிதமா சொல்றாங்க. அதுக்குத்தான் நான் உன்னை அம்மாவோட ரொம்ப அட்டாச்சாகதன்னு சொன்னேன். ஆனால் நீ வீட்லருக்க எல்லாரையும் கவர் பண்ணிட்ட. இப்போ எப்படி நான் உன்னைக் கெட்டவன்னு பொய் சொல்றது?” என சோகத்துடன் கேட்டான்.

“ஆனால்... இதை நான் சொல்லியே ஆகணும் வாணி. நீ ரொம்ப நல்லவ. நீ... நீ என் அம்மா மாதிரி. நான் சின்ன வயசுலருந்தே அம்மாகிட்டே மட்டும்தான் சண்டை போடுவேன். எடுத்தெறிஞ்சு பேசுவேன். அப்பான்னா பயம்.
அம்மான்னா டேக் இட் ஃபார் கிராண்டட். வெளிய சண்டைன்னா கூட வீட்டுக்கு வந்து அம்மாகிட்டே மூஞ்சியைக் காட்டுவேன். அப்படியிருந்தும் ஒருநாள் கூட என் அம்மா என்னைத் திட்டுனது இல்ல. பட்டினி போட்டது இல்ல. அப்பா அடிச்சாலும், இடையில் வந்து தடுப்பாங்க. என் முகத்தைப் பார்த்தே பசில இருக்கேன்னு கண்டு பிடிச்சுடுவாங்க...” என்றவன் தலை அவளது வெற்றுத் தோளில் பொத்தென விழுந்தது. அவனை விலக்கவில்லை இவள். அவள் கரத்தோடு தன் கையை இறுகப் பிணைத்தான்.

“அதே மாதிரித்தான் நீயும், நான் பசில இருக்கது தெரிஞ்சு என் வயித்தை நிரப்புவ வாணி. ரெண்டு வருஷம் என்னை நல்லா பார்த்துக்கிட்டே. பேசாம அக்ரீமெண்டை கிழிச்சுப் போட்டுட்டு உன்கூடவே வாழ்ந்துடலாம்னு கூட தோணும் வானு!” என்றவனை நெஞ்சம் திடுக்கிடத் திரும்பி பார்த்தாள் வாணி.

அவள் கையில் வாகாகப்படுத்து அவள் வாசத்தை நுகர்ந்தவன், “ஷாக்கை குறை. எல்லாரையும் மயக்குற மாதிரி என்னையும் மயக்கிட்டே இசைவாணி. உண்மையிலயே நீ நல்லவதான். ஆனால் நான் ரொம்ப கெட்டப் பையன். உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது. அப்படியே உன் கூட லைஃப் லாங் ட்ராவல் பண்ண நினைச்சாலும், என்னால உன்னை அப்செப்ட் பண்ண முடியாது வாணி. ஏன்னா உனக்கு என்னைவிட ரெண்டு வயசு கூட. நீ எனக்கு அக்கா மாதிரி. என்னை சின்ன பையன் மாதிரித்தானே ட்ரீட் பண்ற. என்னைக் கேர் பண்ற. அன்பா, அக்கறையா பார்த்துக்கிறே.‌ ஐ யம் கோயிங் டூ மிஸ் யூ வாணி. மதி கூட என்னை இவ்ளோ நல்லா பார்த்துக்கிட்டது இல்ல. யூ ஆர் வெரி ஸ்வீட் பெர்சன் வாணி!” என்றவனை மெதுவாய் தன் தோளிலிருந்து அகற்றி கதவில் சாய்த்தாள்.

“நீ எனக்கு அம்மா, அக்கா மாதிரி வாணி. ரொம்ப சாரி... உன்னை நான் நிறைய ஹேர்ட் பண்ணிருக்கேன். நான் ஷார்ட் டெம்பர். என்ன ஏதுன்னு யோசிக்காம பேசிடுவேன். எதையும் மனசுல வச்சுக்காத!” என்றவன்,

“இதை சொன்னா என்னை முறைக்காத வாணி. இந்த சேரில நீ ரொம்ப செக்சியா இருக்க. ஈவ்னிங்கே சொல்லலாம்னு நினைச்சேன். ஆனால் நீ திட்டுவன்னு சொல்லலை. இப்போ ஆல்கஹால் தைரியம் கொடுத்துடுச்சு!” என அசடு வழிய சிரித்தவனை, இவள் கடுமையாய் முறைத்தாள்.

“சாரி வானு...” என்றவன் மீண்டும் அவளருகே வந்து அவள் தோளில் முகத்தை புதைத்து, அவள் மீது தன் பாரத்தை அழுத்தினான்.

“நீ டஸ்கி ப்யூட்டி. ப்ரௌனி ப்யூட்டி. நீயும் அழகுதான் வானு!” என்றான்.

வேறு ஏதேதோ உளறிக் கொண்டே வந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் கையை எடுத்து தன் கண்ணில் ஒற்றியவன், “விக்கி இப்போதான் சொன்னான் வானு. நீதான் எனக்கு ரெஃபர் பண்ணி வேலை வாங்கிக் கொடுத்தியாம். எனக்கு விசாவும் நீதான் வாங்கிக் கொடுத்திருக்க. உனக்கு திருப்பி என்ன செய்யப் போறேன்னு தெரியலை வாணி. தேங்க் யூ சே மச் வாணி. கண்டிப்பா எனக்கும் மதிக்கும் பொறக்குற புள்ளைக்கு உன் பேரை வைக்கிறேன் நான்!” என்றவன் அப்படியே அந்த நீள்விருக்கையில் சரிந்திருந்தான். இசைவாணி சில நொடிகள் அங்கேயே நின்றிருந்தாள். அவனை உணர்வகளற்றுப் பார்த்தவள், பின்னே தன்னறைக்குச் சென்று உடை மாற்றி சுத்தம் செய்து வந்து படுத்து போர்வையைக் கழுத்துவரைப் போர்த்திக் கொண்டாள்.

உறக்கம் கண்களை எட்டவேயில்லை. இருபுறமும் புரண்டு படுத்தவள், பெருமூச்சுடன் எழுந்து ஒரு போர்வை, தலையணையை எடுத்துச் சென்றாள். அவன் தலைக்கு தலையணை வைத்தவள், போர்வையை உடல் முழுவதும் போர்த்தினாள். குளிர் தாங்காமல் உடலைக் குறுக்கிப் படுத்திருந்தான்‌ பரிதி. பின்னர்‌ தானும் உறங்கிப் போனாள்.

காலையில் பரிதிக்கு விழிப்பு வந்தாலும் தலைக்கனம் தாங்கவே முடியவில்லை. என்னவோ உடலிலும் சோர்வு அப்பயிருந்தது. எங்கே படுத்திருக்கிறோம் என்ற உணர்வும் இன்றி அப்படியே திரும்பியவன், தரையில் பொத்தென விழுந்தான். முகம் தரையில் விரித்திருந்த கார்பெட்டில் பலமாய் மோதிவிட,
“ஆ... அம்மா!” என் அலறிக் கண்விழித்தான்‌. முக்கிலிருந்து குருதி கசியத் தொடங்கியது.

குளித்துவிட்டு தலையைப் பின்னலாம் என வந்த வாணி, இவன் கத்தலில் வெளியே எட்டிப் பார்த்தாள். மூக்கில் வழியும் குருதியைக் கைக்கொண்டு அவன் துடைக்க, மேலும் ரத்தம் வழிந்தது.

“என்னாச்சு?” எனக் கையிலிருந்த சீப்பை தலையில் சொருகியவள், அவனருகே வந்தாள்.

“சோஃபால படுத்திருக்கது தெரியாம புரண்டு கீழ விழுந்துட்டேன் வாணி. ரத்தம் வருது, வலிக்குது!” என்றான் முகத்தைச் சுருக்கி.

“இரு... நான் ஃபஸ்ர்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வரேன்!” என்றவள் அகல, இவன் எழுந்து நீள்விருக்கையில் அமர்ந்தான்.

அவனருகே சென்ற வாணி, இன்னமும் அவன் மீதான மதுவாடையில் முகத்தைச் சுளித்து சற்றே தள்ளியமர்ந்து முதலுதவி செய்ய, பரிதி அவள் முகத்தைப் பார்த்திருந்தான். சின்னதாய் மூக்கிலிருந்த மூக்குத்தி மின்னியது. அப்போதுதான் அவள் குளித்து வந்ததால், வழலைக் கட்டியின் வாசனை நாசியை நிரடியது.
அவன் குறுகுறுவென்ற பார்வையைக் கண்டு இசைவாணி முறைத்தாள்.

“ஃபர்ஸ்ட் டைம் நம்ம ரெண்டு பேருக்கும் சண்டை வந்தப்போ நான் கீழே விழுந்து வாரிட்டேன். அப்பவும் நீதானே எனக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிவிட்ட வாணி?” எனக் கேட்டான் அவன்.

“ஓ... அப்படியா? எனக்கு ஞாபகமில்ல” என்றவள், அவன் கையில் ஒரு மாத்திரை அட்டையைத் திணித்து, “ரொம்ப வலிச்சா போட்டுக்கோ...” என்றுவிட்டு அகன்றாள்.

பரிதி தண்ணீர் எடுக்க சமையலறைக்குள் நுழைந்தான்.
ஒரு குவளையில் எலும்பிச்சை பிழிந்து வைத்திருந்தாள். அப்போதுதான் அவனுக்கு மறந்து போன தலை வலியும் நினைவிற்கு வந்தது. மனத்திலே அவளுக்கான நன்றியுடன் அதை எடுத்து படக்கென குடித்துவிட்டு மாத்திரையும் விழுங்கினான்.
பின்னர் இசைவாணியின் அறை வாயிலருகே சென்று நின்றான்.

அவள் கண்ணாடி முன்பு நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள். சுருட்டை முடிக் கற்றைகள் முன்னே வந்துவிழ, அவற்றை இழுத்துப் பிடித்து, சின்ன கவ்வியில் அடக்கினாள். பின்புறமிருந்த முடியை முன்னே கொண்டு வந்து சிக்கெடுத்து பின்னலிட்டாள். பரிதி அமைதியாய் தன்னையே பார்ப்பது தெரிய, “என்ன வேணும்? எதுக்கு வாட்ச்மேன் மாதிரி அங்கேயே நிக்கிற?” எனக் கண்ணாடியூடு அவனைப் பார்த்துக் கேட்டாள். பதிலுரைக்காதவன், உள்ளே சென்று அவளுடைய மெத்தையில் அமர்ந்தான்.

வாணி ஏதோ இரண்டு முகப்பூச்சை புறங்ககையில் சற்றே பிதுக்கி எடுத்து வைத்துக்கொண்டு, சின்ன சின்ன புள்ளிகளாக முகத்தில் இட்டுப் பின்னர் முழு முகத்திலும் அதை தடவினாள்.

“சாரி வாணி... சீரியஸ்லி சாரி. நான் நேத்து உன்னைக் கூட்டிட்டு போய்ருக்கோம், சோ குடிக்க கூடாதுன்னுதான் நினைச்சேன். பட், மதி ப்ரபோஸ் பண்ண எக்ஸைட்மெண்ட்ல கண்ட்ரோல் மிஸ்ஸாகுற அளவுக்கு குடிச்சிட்டேன். நீதான் என்னை அங்கிருந்து கூட்டிட்டு வர்ற மாதிரி ஆகிடுச்சு. நான் வேணும்னு பண்ணலை!” என்றான் மன்னிப்பை வேண்டி. அவள் பதிலுரைக்காமல் தன் வேலையைப் பார்த்தாள்.

“நீ கோபமா இருப்பேன்னு தெரியும். இதுல இந்த விக்கி நாய் வேற. என்ன எண்ணத்துல உன்னோட பழகிருக்கான் ராஸ்கல். அவனை நேர்ல பார்க்கும்போது மூஞ்சியை உடைச்சு விடுறேன்!” என்றான் கையைக் கோபத்தில் மடக்கி.

அவனைத் திரும்பிப் பார்த்தவள், “அவரை ஏன் நீ அடிக்கணும்?” என அழுத்தமாய்க் கேட்டாள்.

“அவன் உன்கிட்ட தப்பான எண்ணத்துல பழகிருக்கான். ப்ரபோஸ் பண்ணிட்டேன்னு என்கிட்டவே சொல்றான். எவ்வளோ தைரியம் அவனுக்கு!” இவன் குரலில் ஆத்திரமிருந்தது.

“என்னைப் பிடிச்சிருக்குன்னு அவர் டீசண்டா சொன்னாரு. நான் வேணாம்னு தன்மையா மறுத்துட்டேன். லவ் பண்றது தப்பா? இதுல என்ன தப்பை பார்த்த நீ?” அவள் சூடாக கேட்டாள்.

“லூசா நீ? அவன் போய் உனக்கு செட்டாவானா?” பரிதி மேலும் பேசும் முன்னே அவன் முன்பு கையைக் காண்பித்தவள்,

“லுக் மிஸ்டர் இளம்பரிதி.‌ எனக்கு யாரு செட்டவா, மாட்டான்னு நான்தான் டிசைட் பண்ணணும். என் லைஃப்ல டிசிஷன் எடுக்க நீ யாரு?” என அழுத்தமாய் கேட்க, அவன் வாயடைத்துப் போனது.

“வாணி... என் மேல இருக்க கோபத்துல உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத. அவன் உனக்குத் தம்பி மாதிரி!” பரிதி படபடக்க, “ஜஸ்ட் ஷட் அப் பரிதி!” என இவள் சீறலில் அவன் திகைத்துப் போனான்.

“மதிக்கு உன்னைவிட வயசு கம்மிதானே? சோ, அவ உனக்கு தங்கச்சி மாதிரியா?” என ஏளனமாகக் கேட்டாள். பரிதி முகம் கன்றியது. பதில் பேச முடியாமல் வெட்கினான்.

“அதெப்படி டா ஆம்பளைங்க இருபது வருஷம் மூத்தவனா இருந்தா கூட நாங்க வாயை மூடிட்டு கல்யாணம் பண்ணணும். ஆனால், நீங்க ரெண்டு வயசு மூத்த பொண்ணை அக்கான்னு மரியாதை பார்ப்பீங்களோ?” என்றாள் எரிச்சலாக.

“அது வேற இது வேற வாணி. நான் உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன். விக்னேஷ் ஒன்னும் அவ்ளோ நல்லவன் இல்ல!” என்றவனைக் கடுப்பாகப்‌ பார்த்தவள்,

“எனக்கு நல்லது செய்ய நீ யாரு? உனக்கும் எனக்கும் என்ன இருக்கு? விக்னேஷைப் பத்தி என் முன்னாடி தப்பா பேசாத. அவரைப் பேசுற அளவுக்கு உனக்கு அருகதையுமில்ல!” என வெடுக்கென நடந்து சென்று உணவுண்ண அமர, இவன் தலையைக் கோதியபடியே அவள் பின்னே சென்றான்.

“சரி விடு... நான் அவனைப் பத்தி பேசலை. ஆனால் நீ எந்த முடிவெடுத்தாலும் யோசிச்சு எடு!” என்றான் பொறுமையாக. அவள் அவனை அசட்டை செய்து சாப்பிட்டாள்.

சில நொடிகள் அமைதியாயிருந்தவன், “நேத்துதான் விக்கி சொன்னான். நீதான் எனக்கு ரெஃபர் பண்ணி ஜாப் வாங்கி கொடுத்தேன்னு. தேங்க் யூ சோ மச் வாணி. நான் இந்த உதவியை எப்பவும் மறக்க மாட்டேன். முன்னாடியே நீ சொல்லிருக்க வேண்டியதுதானே? நீதான் வேலை வாங்கிக் கொடுத்தேன்னு தெரியாம உன்கிட்டேயே சீன் போட்டிருக்கேன் நான்!” என்றான் தன் தலையிலே கொட்டி.

சாப்பாட்டை வாயில் வைக்கச் சென்று பின்னர் நிதானமாக அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அப்போ இதை சொல்லிருந்தா நீ என்ன ரியாக்ட் பண்ணிருப்பேன்னு யோசி!” என்றுவிட்டு உணவை வாயில் வைத்தாள். பரிதி புரியாது அவளைப் பார்த்திருந்தான்.

“வேலை வாங்கித் தந்து உன்னை மயக்கி கூடவே இருக்க ப்ளான் போட்றேன்னு வாய் கூசாம கேட்டிருப்ப நீ?” என எள்ளலாகப் பார்த்தாள். பரிதியால் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

“சாரி... நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன் வாணி. பேசுனாலும் பேசிருப்பேன்தான். நீ சொல்லாததும் நல்லதுக்குத்தான்!” என்றான் சின்ன குரலில்.

“அதெப்படி டா எல்லாத்தையும் செஞ்சுட்டு கடைசியில் அதை அக்செப்ட் பண்ணி நல்லவனா மாறிடுறீங்க?” என அவனை நக்கல் செய்தவாறே சாப்பிட்ட தட்டைக் கழுவி கவிழ்த்துவிட்டு அலுவலகம் கிளம்பினாள். பரிதி அவளையே கண் அகலாமல் பார்த்திருந்தாள். அவனுக்கு மூக்கு வலித்தது. உடல் சோர்வு என அன்றைக்கு அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு படுத்துவிட்டான்.

இசைவாணி வழிநடத்திய திட்டம் நன்முறையில் முடிவுற்றிருந்தது. முதலீட்டாளர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, இவளது மேலாளரும் அழைத்துப் பார்ட்டினார். பின்னர் அவளுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் வற்புறுத்தலின் பேரில் பிரிவு உபச்சார விழா ஒன்றை வாரயிறுதியில் நடத்த திட்டமிட்டனர். அந்த வாரத்தோடு அவள் அலுவலகம் செல்லத் தேவையுமில்லை. அடுத்த வாரம்‌ பொறுமையாய் பொருட்களை எல்லாம் பையில் அடுக்க வேண்டும். வேண்டாம் என்பனவற்றை தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையோடு வீட்டிற்குள் நுழைந்தாள்.

பரிதியோடு ஒட்டி உரசி இளமதியும் அமர்ந்திருந்தாள். அவனது மூக்கு காயத்தைப் பற்றித்தான் அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

இவள் வந்ததும் கோபத்தோடு எழுந்தவள், “ஏன் வாணி... அவன்தான் கண்ட்ரோல் இல்லாம ட்ரிங்க் பண்ணிருக்கான்னு தெரியுது இல்ல. அப்படியே சோஃபால படுக்கட்டும்னு விட்டுடுவீங்களா? ரூம் வரைக்கும் கூட்டிட்டுப் போய் படிக்க வச்சா என்ன குறைஞ்சு போய்டுவீங்க? ஏன் இப்படி செல்பிஷா நடந்துக்குறீங்க?” என குதித்தாள்.

அவளை அற்பமாய் பார்த்த வாணி விறுவிறுவென அகல, “உன் உன்கிட்டேதானே பேசுறேன்? காது கேட்லையா உனக்கு? இதுவே உன் சொந்த தம்பியா இருந்தா எப்படியோ போன்னு விட்ருப்பியா? அவனுக்கு எப்படி இஞ்சுரியாகியிருக்கு. வலிக்குதுன்னு வேற புலம்புறான்...” அவள் தன்னை மதிக்கவில்லை என்ற கடுப்போடு கத்தினாள் மதி.

அறைக் கதவை திறந்த வாணி அவளை நிதானமாகத் திரும்பி பார்த்து, “அதான் சொல்லிட்டீயே சொந்த தம்பி இல்லைன்னு‌‌. அப்புறம் எதுக்கு நான் அவனைக் கேர் பண்ணணும். அவனைப் பார்த்துக்குற ஆயாவா நான்?” என அவளது கோபத்திற்கு தூபம் போட்டுவிட்டு உள்ளே சென்றாள்.

“பார்த்தியா? பார்த்தியா இளா? எப்படி பேசிட்டு போறான்னு. இதுல இவளோட ஒரே வீட்ல டூ இயர்ஸா ஸ்டே பண்ணிருக்க? ஹம்ம்... சச் அ செல்பிஷ் கை. ஆமா... இவ எப்போ கிளம்புவா?” என மதி கடுப்புடன் கேட்க, “மந்த் எண்ட்!” என அவன் பதிலளித்தான்.

“ரொம்ப நல்லது. ஒழிஞ்சது தொல்லை. அவ போனதும் நான் இங்க ஷிப்ட் ஆகிடுறேன். அப்புறம் நானே உன்னைப் பார்த்திருக்கிறேன்!” என அவள் உருக, “மதி... அதெல்லாம் வேணாம். கல்யாணத்துக்கு முன்னாடி ஒரே வீட்ல த
ங்குறதெல்லாம் நல்லா இருக்காது!” என பரிதி மறுப்பது வரை வாணியின் காதில் விழ, மேலும் அவர்கள் பேச்சு கேட்காத தூரத்திற்கு அகன்றாள்.

தொடரும்...


 
Top