• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
நேரம் – 26 💜
செர்ரீ மரத்தின் கீழே நிழலுக்காகப் போடப்பட்டிருந்த மரநாற்காலியில் அமர்ந்திருந்தாள் இசைவாணி. சற்றுமுன் ஏற்பட்ட நிகழ்வில் அவள் முகம் கசங்கியிருக்க, விழிகள் எதிரேயிருந்த பஞ்சாபி உணவகத்தை வெறித்துப் பார்த்தன. கோபம், ஆற்றாமை எல்லாம் தாண்டி ஒரு மாதிரி மனத்தில் வெறுமை படர்ந்திருந்தது. பரிதியின் குரலிலிருந்த எள்ளலிலும் அலட்சியத்திலும் இவளுக்கு மனம் அடிவாங்கியது. இவன் யார்? இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்னைக் காயப்படுத்த என உள்ளம் குமைய அமைந்திருந்தாள்.
“ஆமா ஆன்ட்டி... ஒரு கிலோ இல்லை... ரெண்டு மூனு கிலோ வெயிட் குறைஞ்சிருப்பேன். எல்லாம் உங்க மக கைப்பக்குவம்தான். ஒழுங்கா எனக்கு சமைச்சுப் போட மாட்றா. என்னென்னு நீங்களே கேளுங்க!” முன்னுச்சியில் படர்ந்திருந்த ஈரத்தை உதறியவாறே இசைவாணியை இடித்துக்கொண்டு அருகே அமர்ந்தான் பரிதி.
“வார வாரம் கடைக்குப் போய் அது இதுன்னு வாங்கிட்டு வரேன்னு சொல்லுவா பாப்பா. நான் கூட உங்களுக்கு நல்லா வகையா சமைச்சுப் போடுறான்னு பார்த்தா, நீங்க இப்படி சொல்றீங்க தம்பி!” அவன் பேச்சைத் தொடர்ந்து சுந்தரியின் குரலும் செவியில் விழ, மூச்சை இழுத்துவிட்டு முகபாவனையை மாற்றி இவன்புறம் திரும்பினாள் இசைவாணி.
“பொய் சொல்றா ஆன்ட்டி அவ. கலர் கலரா ட்ரெஸூ, லிப்ஸ்டிக், மேக்கப் ஐட்டம்ஸ்னு வாங்க போறா. என் வயித்தைக் காயப் போட்றா. இப்போ கூடப் பாருங்க, மார்னிங் எழுந்ததுலருந்து பச்சைத் தண்ணியைக் கூடக் கண்ல காட்டாம இயற்கைய ஆராய்ச்சி பண்ண வந்துட்டா!” என்றவன் கைகள் இசைவாணியின் தோளைச் சுற்றிப் படர்ந்தன. அவள் தன் முகத்தில் அசௌகரியத்தை காண்பிக்காது சுந்தரி அவளை அதட்டியதற்கு முயன்று இயல்பாக பதிலளித்தாள். அவளை ஒட்டியபடியே அமர்ந்திருந்தவனின் மீது புதிதாய் ஓர் வாசனைத் திரவியத்தின் சுகந்தத்தை நாசி உணர்ந்தது. பத்து நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு வைத்தவன், அப்படியே தன் வீட்டினரிடமும் பேசினான்.
பரிதி அழைப்பு விடுக்க எடுத்துக்கொண்ட இடைவெளியில் வெடுக்கென அவன் கையைத் தட்டிவிட்டு தள்ளியமர்ந்தாள் இசைவாணி. இவன் அதைப் பெரிதாய் எடுக்காது தன் வீட்டாட்களிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, அவன் முகத்தைத் கூடப் பார்க்க பிடிக்காது இசைவாணி விறுவிறுவென எழுந்து நடந்தாள்.
‘ஹக்கும்... ரொம்பத்தான்!’ தோளைக் குலுக்கினான்‌.
“யாரந்தப் பொண்ணு?” ஆங்கிலத்தில் கேட்டவாறே விராஜ் அவனருகே வந்தான்.
“மை பிலவ்ட் பிக் சிஸ்டர்!” கேலியாக உரைத்தவன் அவனோடு வீட்டை நோக்கி நடையிட்டான்.
“பட், அவ உன்னை மாதிரி இல்லையே! சாக்லேட் ப்ரௌன் கலர்ல அழகா இருக்கா. அவளோட கண்கள் அட்ராக்டீவா இருக்கு. ஷீ லுக்ஸ் ப்யூட்டி ஃபுல்!” விராஜ், வாணியைத் திரும்பிப் பார்த்தபடியே கூறினான்.
“ப்யூட்டி இஸ் ஆல்வேய்ஸ் டேஞ்சர் மச்சான். அவளும் அப்படித்தான். பார்க்குறதோட நிறுத்து!” அவன் பின் தலையில் வலிக்காமல் கொட்டி அழைத்து வந்தான். விக்னேஷ் பரிதிக்காக வாயிலிலே காத்திருந்தான். அவன் முகத்தில் கோபம் தெரிந்தது.
‘இவனை வேற சமாளிக்கணுமா?’ அலுத்த பரிதி, “என்ன டா... என்ன தெரியணும் உனக்கு?” எனக் கேட்டு குறுகலான படியில் அமர்ந்தான்.
“நாலஞ்சு மாசம்தானே டா காண்டாக்ட்ல இல்லை. அதுக்குள்ளே கல்யாணமாகி பொண்டாட்டியைக் கையோட கூட்டீட்டு வந்துட்ட?” அவன் கடுப்புடன் கேட்க,
“டேய்... அவ என் பொண்டாட்டிலாம் இல்ல. பொண்டாட்டி மாதிரி...” என இவன் இழுத்தான்.
“வாட்... அதென்ன டா‌ மாதிரி?” அவன் புரியாது விழித்தான்.
“அது அப்படித்தான் டா. அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இட்ஸ் ஜஸ்ட் ம்யூட்சல் ஹெல்ப். தட்ஸ் இட்!” என்ற பரிதி சுருக்கமாக தங்கள் திருமணக் கதையைக் கூற, விக்னேஷ் அதிர்ந்தான்.
“டேய்... அறிவிருக்கா உனக்கு? கூறுகெட்டதனமா பண்ணிருக்க? அந்தப் பொண்ணுக்குத்தான் அறிவில்ல. சின்ன பொண்ணு, அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஏதோ தெரியாம வந்து கேட்டுச்சுன்னா நீ புத்தி சொல்லி அனுப்பாம‌, தலையாட்டி தாலிகட்டி வச்சிருக்க?” அவன் பொரிந்தான்.
“ஆளைப் பார்த்து அவளை எடை போடாதடா. அவளுக்கு என்னைவிட ரெண்டு வயசு கூட. அதுவும் இல்லாம ரொம்ப விவரம் அவ. நீ கவலைப்பட்ற அளவுக்கெல்லாம் அவ இல்ல டா. இன்னும் ஒன்றரை வருஷம் தானே? நானும் ஒரு ஜாப்ல செட்டிலாகிட்டா டிவோர்ஸ் வாங்கிடலாம். அப்புறம் அவளுக்கும் எனக்கும் ஒட்டும் இல்ல, உறவும் இல்ல!” பரிதி அசட்டையாகக் கூற, விக்னேஷ் அவனை முறைத்துப் பார்த்தான்.
“எதெதுல விளையாட்றதுன்னு தெரியாத அளவுக்கு நீங்க ரெண்டு பேரும் சின்ன குழந்தைங்க இல்ல டா. என்னமோ பண்ணுங்க. ஆனாலும் அந்தப் பொண்ணுகிட்டே நீ இப்படி சிடுசிடுன்னு பேசுறது தப்பு டா. உனக்காக உடம்பு முடியாத அம்மாவைத் தனியா விட்டுட்டு இவ்வளோ தூரம் வந்திருக்கு. கல்யாணம் முடிஞ்ச பின்னாடி விசா வாங்கித் தர மாட்டேன்னு சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப?” என இவன் சடைத்தபடியே அவனருகே அமர்ந்தான்.
“சொல்லுவா... சொல்லுவா. இந்தப் பரிதியைப் பார்த்தா கேனப்பையன் மாதிரி இருக்கா என்ன? அப்படி மட்டும் அவ சொல்லிருந்தா அவங்கம்மா முன்னாடி வச்சு நான் கட்டுன தாலியை அறுத்தெரிஞ்சுருப்பேன்!” இவன் அன்று போலே இன்றும் வஞ்சம் வைத்துப் பேச, மற்றவன் முகம் அதிர்ந்தது.
“சீ... என்ன மனுஷன் டா நீ? உன் உண்மையான குணம் என்னென்னு தெரியாம அந்தப் பொண்ணு வந்து உன்கிட்டே மாட்டிக்கிச்சு. பாவம்!” இவன் வெடுக்கென எழுந்து சென்றான்.
இந்த சில வருடப் பழக்கத்திலே பரிதியைப் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து வைத்திருந்தான் விக்னேஷ். அவன் ஒரு சில விஷயங்களில் சுயநலவாதி என்று தெரியும்தான். ஆனால் அவனது கொடூர குணத்தை இப்போது பார்க்கையில் இசைவாணிக்காக மனம் வருந்திற்று. சீக்கிரம் அவளுக்கு இவனிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமென எண்ணினான்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, பரிதியும் தன்னால் இயன்றவரை நேர்முகத் தேர்வை நன்றாய் செய்ய முயன்றான். ஆனாலும் அவனால் முதற்கட்டத்தைக் கூடக் கடக்க முடியவில்லை. இத்தோடு நான்கைந்து நேர்முகத் தேர்வில் வெளியேற்றப்பட்டிருந்தான். நுழைவு இசைவு கிடைப்பதுதான் அரிது. அது கிடைத்துவிட்டால் வேலையை எளிதில் தேடிக் கொள்ளலாம் என அவனின் எண்ணம் பொய்த்துப் போனது. அவனைப் போலவே முதுகலை படித்து முடித்துவிட்டு வேலைத் தேடும் இளைஞர்கள் பல்லாயிரக் கணக்கானோர் இருந்தனர்.
பலர் இரண்டு வருடம் வரையிலுமே சரியாக வேலை கிடைக்காமல் நாடு திரும்பியதைக் கண் கூடாகப் பார்த்தவனுக்குள் மெல்ல மெல்ல பயம் படர்ந்தது. தன்னுடைய செலவிற்கென அவன் எடுத்து வந்த பணம் இரண்டு மாதங்களுக்கு மேலே கையில் நிற்கவில்லை. தேவைக்கு செலவழித்திருந்தால் மூன்று மாதங்களைத் தாக்குப் பிடித்திருக்கலாம். ஆனால் இளமதியோடு மாதத்திற்கு இரண்டுமுறை வெளியே சென்று வந்தான். அவளே முன்வந்து அனைத்து செலவுகளை ஏற்றாலும் இவனால் ஓரளவிற்கு மேலே அவள் பணத்தில் சுற்றுவது பிடிக்காமல், தன்னுடைய பணத்தை எடுத்து செலவழித்தான்.
இவனாக அழைக்காவிடினும் அவளாக அடிக்கடி இவனிடம் அழைத்துப் பேசினாள். இளமதிக்கு இவனை ஏதோ ஒரு வகையில் பிடித்திருந்தது. பரிதி அவளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பிடித்தது. இருவரும் வெளியே சுற்றும் பொழுதுகளில் அவளுக்காகவென அவனின் அக்கறையான செயலில் மனம் கரைந்தது. அதற்காக காதலென்று இதை அவர்கள் உடனடியாக அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த விரும்பவில்லை. முதலில் சில காலம் பழகிப் பார்த்து இருவரது குணங்களும் ஒத்துப் போனால் அடுத்ததைப் பற்றி சிந்திக்கலாம் என மற்றவற்றைக் கிடப்பிலிட்டனர்.
பரிதிக்கு பணத்தேவை அதிகமாக இருந்தது. முழுநேர வேலை கிடைக்கும்வரை பகுதி நேர வேலைக்குச் செல்லலாம் என அவன் அருகேயிருந்த உணவகம், கடைகள் என ஏறியிறங்கினான். ஆனால் பகுதிநேர வேலை கூட தற்போதைய வேலையின்மை திண்டாடத்தில் அவனுக்கு கிட்டாமல் போனது.

அவனது அறைத் தோழன் சலீம் பணிபுரியும் இடத்தில் சொல்லி வைத்திருந்தான். மற்றபடி எந்தப் பக்கம் பந்தை எறிந்தாலும் அவன் முகத்திலே திருப்பி வந்து விழுந்தது அது. ஒரு மாதிரி எரிச்சலுடன் சுற்ற ஆரம்பித்தான். கையில் போதியளவு பணமும் இல்லை. வீட்டிற்கு அழைத்தும் கேட்க முடியாது. கடை வருமானத்தை மட்டும் வைத்து வீட்டு செலவை சமாளிப்பது கடினமாக இருக்கிறதென சிந்தாமணி புலம்பியதை கேட்க நேர்ந்தது. மூத்த மகனாய் இவன் தானே குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் தற்போதைய அவன் சூழ்நிலை நிரம்ப மோசமாகிவிட்டது.
மூன்று மாதங்கள் கழிந்ததும், வீட்டு வாடகை கொடுக்கப் பணமில்லாமல் திண்டாடிப் போனான். இளமதியிடம் கேட்டால் அவள் கொடுத்திருப்பாள்தான். ஆனால் அவளிடம் கேட்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. விக்னேஷும் இவனைப் போல கல்விக்கடன் பெற்றுத்தான் படித்து முடித்திருக்க, அதைத் திருப்பி செலுத்திக் கொண்டிருக்கிறான். அவனிடம் ஒரு நிலைக்கு மேலே பணம் கேட்க சங்கடமாயிருந்தது.
யாரிடமும் புலம்ப முடியாது மனத்தைப் போட்டு அழுத்திற்று. அன்றைக்கு அழைத்துப் பேசிய சிந்தாமணி, “என்னய்யா... போய் மூனு மாசம் ஆச்சு. இன்னும் வேலை கிடைக்கலையா? பேங்க் லோனுக்கு வட்டி கட்டணும் இல்ல. அம்மா ரெண்டு மாசம் கட்டுனேன். இந்த மாசம் கடை சரியா ஓடலை. உன்கிட்ட காசிருந்தா அனுப்பு!” என அவர் தயங்கி கேட்க, இவனால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த இயலாமையைக் கோபமாய்க் காண்பித்தான்.
“இங்க வேலை கிடைக்காம நான் லோ லோன்னு ரோடு ரோடா அலையிறேன்மா. எல்லாம் உங்களுக்காகத்தானே? ரெண்டு மாசம் லோனுக்கு வட்டி கட்டுனதும் மூனாம் மாசம் என்கிட்டே சொல்லி காட்டுற. சோத்துக்கே பஞ்ச பாட்டு பாட்ற நிலைமைலதான் நான் இருக்கேன். வேலை கிடைச்சதும் நானே சொல்றேன். நொய்நொய்ன்னு கேட்காதம்மா நீ!” என அவன் பட்டென அழைப்பைத் துண்டித்துவிட்டான். சிந்தாமணிக்கு மனதே கேட்கவில்லை.
மகன் அங்கே சரியாய் உணவு கிடைக்கவில்லை எனக் கூறியதும் இவருக்கு மனம் பதறிற்று. மருமகள் உடனிருக்கிறாளே. அவள் வேலைக்குச் செல்வதால் மகன் சம்பாரிக்கவில்லை என்று ஏதும் பேசிவிட்டாளோ? அதனால் மகன் வருந்துகிறானோ என எண்ணி தவிப்புற்றவர், உடனே மருமகளுக்கு அழைத்திருந்தார். வாணி வேலையில் இருந்ததால் அவரது அழைப்பை பார்க்கவில்லை.
வீட்டிற்கு வந்து சமைத்து உண்டு முடித்து படுக்கச் செல்லும் முன் தாயிடம் பேசலாம் என அலைபேசியை எடுத்தவள், மாமியாரிடமிருந்து நான்கைந்து தவறி அழைப்புகள் வந்திருக்கவும், என்னவெனத் தெரியாது பதறி அவருக்கு அழைத்தாள்.
“என்ன அத்தை... எல்லாரும் நல்லா இருக்கீங்க தானே? எதுக்கு இத்தனை தடவை கால் பண்ணீங்க?” என படபடத்தாள்.
“அதெல்லாம் நாங்க நல்லா இருக்கோம் வாணி. ஆனால் என் புள்ளைதான் அங்க நல்லா இல்ல. அவன் வேலைக்குப் போகலைன்னு நீ எதுவும் சொல்லித் திட்டிட்டீயா? உங்களுக்குள்ள சண்டையா?” எடுத்ததும் அவர் விசாரணையைத் தொடங்கிவிட்டார்.
“இல்ல அத்தை... அதெல்லாம் பிரச்சனை இல்லையே!” என்றாள் சின்ன குரலில்.
“வாணி... அவனுக்கு வேலை கிடைக்குற வரைக்கும் அவன் செலவை நீ பார்த்துக்குவன்னுதான் நாங்க அசால்ட்டா இருந்துட்டோம். ஆனால் அவன் பேசுறதைப் பார்த்தா அப்படி தெரியலையேம்மா. கட்டுன பொண்டாட்டி கூட இருந்தும் சரியா சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படுறேன்னு என் புள்ளை சொல்றான். அப்படின்னா என்ன அர்த்தம்? நீ அவனை வேலைக்குப் போகலைன்னு குத்திக் காட்டுறேன்னுதானே அர்த்தம்? எனக்கு மனசே கேட்கலை. என் புள்ளை அங்க சாப்பிடாம கிடக்க, இங்க நான் வக்கனையா வயிறு மூட்ட சாப்பிட்டுட்டு இருக்கேன்!” என கோபமாய் பொரிந்தவர்,

“நான் சீட்டுப் போட்ட பணம் இங்கனதான் இருக்கு. உனக்கு அனுப்பிவிடுறேன். பரிதிகிட்டே செலவுக்கு கொடுத்துரு வாணி!” என்றான் ஆற்றாமையில். அவர் பேச்சில் இசைவாணி திகைத்துப் போனாள்.
“ஐயோ அத்தை... என்ன பேசுறீங்க நீங்க? அவர் உங்ககிட்டே இப்படிலாம் சொன்னாரா? நான்... நான் அவரை வேலைக்குப் போகலைன்னு குத்தியெல்லாம் காட்டலை அத்தை‌. நான்தான் போதும்ன்ற அளவுக்கு சம்பாரிக்குறேன். நான் எதுவுமே சொல்லலை. எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்ல!” என்றாள் படபடப்புடன். மார்த்தாண்டம் அலைபேசியை வாங்கினார்.
“வாணி... வேலை கிடைக்கலையான்னு அவன் ஆத்தா கேக்கவும் இப்படி பேசிருப்பான்மா. நீ ஃபோனை அவன்கிட்டே கொடுத்தா. நான் என்னென்னு கேட்குறேன். எல்லாருக்கும் போன உடனேவா வேலை கிடைக்குது. நல்ல வேலையா கிடைக்க நேரம் எடுக்கத்தான் செய்யும்!” மகன் வருந்துவானென்று பெற்றவர்கள் இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு அவன் மீதான அக்கறையில் பேச, இவளால் பதிலளிக்க முடியவில்லை.
“ம்மா... வாணி!” மார்த்தாண்டம் அழைக்கவும், “மாமா... அவர்கிட்டே நான் பேசுறேன்!” என்றாள் பெருமூச்சுடன்.
“சரித்தா... நீ பேசு. இப்போ அவன் இருந்தா ஃபோனைக் குடு. நானும் உன் அத்தையும் ரெண்டு வார்த்தை பேசிட்டு வைக்கிறோம்...” அவர் கேட்க,
“மாமா... உங்கப் புள்ளை இன்னும் வரலை. வந்ததும் நான் கால் பண்ணி உங்கிட்டே பேச வைக்கிறேன்...” தயங்கினாள் இவள்.
“என்ன வாணி நீ... மணி எட்டுக்கு மேல ஆச்சு. இன்னும் அவன் வீட்டுக்கு வரலையா? டெய்லி எத்தனை மணிக்கு வர்றான் அவன்?” மாமியாராய் சிந்தாமணி குரலை உயர்த்திவிட, இவளுக்கு அவரிடம் பதிலளிக்க சலிப்பாயிருந்தது. ஆனாலும் பொறுமையாய் பேசிவிட்டு வைத்தவள், பரிதியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள். அவன் மீதான கோபமும் ஆற்றாமையும் இன்னும் குறையவில்லை. ஆனால் மார்த்தாண்டம் குரலிலிருந்த தவிப்பும் சிந்தாமணியிடம் வெளிப்பட்ட கோபமும் அவளை உந்தியது.
விக்னேஷ் இவளை வரவேற்றவன், பரிதி வீட்டில் இல்லை என்றான்‌. அவன் வரும் நேரம்தான் இது என்று கூறி அவளைக் கூடத்தில் அமரப் பணித்தான்.

“இல்லங்க... நான் வெளிய வெயிட் பண்றேன்...” என்றவள், படியில் அமர்ந்துவிட்டாள். அரைமணி நேரம் அவள் காத்திருந்தும், பரிதி வரவேயில்லை. சலிப்புடன் அவள் தெருவையே பார்த்திருக்க, விக்னேஷ் கையில் பழச்சாறுடன் வந்தான்.
“சிஸ்டர்... ஜூஸ் குடிங்க!” அவன் தன் முன்னே நீட்டிய குவளையைப் பார்த்து தயங்கிய வாணி வேண்டாமென்றாள்.
“என்னைத் தம்பி மாதிரி நினைச்சுக்கோங்க!” அவள் சங்கடத்தைப் போக்கும் நோக்கில் அவன் கூறவும், தம்பி என்ற வார்த்தையில் வாணி முகம் மாறாது முறுவலுடன் அதை வாங்கி ஒரு மிடறு மட்டுமே அருந்தினாள். விராஜ் அப்போதுதான் வந்தான். வாணியைப் பார்த்ததும் அவன் நின்றுவிட்டான்.
“ஹாய், ஐ யம் விராஜ். யுவர் ப்ரதர்ஸ் ஃப்ரெண்ட்” ஆர்வமாய் அவன் தன்னை அவளிடம் அறிமுகம் செய்ய விழைய, அவள் அவனைப் பார்த்து விழித்து எழுந்து நின்றாள்.
“விராஜ்... என்ன உளர்ற?” விக்னேஷ் அவனைத் தனியே அழைத்துச் சென்றான்.
“பரிதி இந்தப் பொண்ணை அவனோட சிஸ்டர்னு சொன்னான். அதான் நான் இன்ட்ரோவானேன்!” இவன் கூற, விக்னேஷிற்குத் தன் தலையிலே அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

அவ்வப்போது இவனே பரிதியிடம் இசைவாணியைப் பற்றிக் கேட்டறிந்ததில், அவன் செய்த முட்டாள்தனங்களும் தெரிய வந்தது. நண்பனாக அவனைத் திருத்த முயன்றான் விக்னேஷ். ஆனால் பரிதி காதிலே வாங்கவில்லை. அவளை சுயநலவாதி, விஷம், வயதை மறைத்து திருமணம் செய்துவிட்டாள் என தவறான பெண்ணாக சிந்தரிக்கவே முயன்றான். இவன் வெறுத்துப் போய் அவனுக்கு அறிவுரை சொல்வதை நிறுத்தியிருந்தான்.
இப்போது விராஜ் கூற்றில் அவனுக்கு கோபம் வந்தது. சில நொடிகள் தயங்கியவன், “ஷீ இஸ் மேரீட். சோ, அவங்ககிட்டே தள்ளியே இரு..” என விராஜை அனுப்பிவிட்டு வந்தான். அதற்குள்ளே இசைவாணிக்கு அவன் பேச்சின் சாராம்சம் புரிந்து போயிற்று. பரிதி தன்னை அக்காவென அறிமுகம் செய்து வைத்திருக்கிறான் போல என்று கேலியாய் எண்ணியவளின் கண்கள் ஒருமுறை தன் கழுத்திலிருந்த தாலியில் பட்டு மீண்டன.
மணி ஒன்பதரையைத் தொட்டும் இன்னும் பரிதி வரவில்லை என்றதும் இசைவாணி எழுந்து நின்றாள். தனியாய் வீட்டிற்கு செல்ல வேண்டும். தன் பாதுகாப்பை எண்ணி அவள் அகலப் பார்க்க, கூடத்தில் அமர்ந்து அவளையே பார்த்திருந்த விக்னேஷ் எழுந்து வந்தான்.
“சிஸ்டர்... அவன்கிட்டே எதுவும் சொல்லணுமா? என்கிட்டே சொல்லுங்க. நான் கன்வே பண்றேன்...” அவள் முகம் பார்த்தான் இவன்.
சில நொடிகள் தயங்கியவள், “அத்தையும் மாமாவும்...” என்றவள், “அது... அவனோட அம்மா, அப்பா பேசணும்னு சொன்னாங்க. அவங்க கால் பண்ணாங்களாம். பரிதி அட்டென்ட் பண்ணலை. சோ, பேசணும்னு சொன்னதால இங்க வந்தேன்...” என்றாள் பெருமூச்சுடன்.
“சரிங்க சிஸ்டர்..‌ அவன் வந்ததும் மறக்காம நான் இதை சொல்லி அம்மா, அப்பாகிட்டே பேச சொல்றேன்...” விக்னேஷ் வாக்குறுதி அளிக்க, அங்கிருந்து அகலாமல் இன்னுமே தெருவையே பார்த்தாள் இசைவாணி.
“வேற எதுவும் பெர்சனலா சொல்லணுமா? நான் அவனுக்கு கால் பண்றேன்...” விக்னேஷ் அலைபேசியை எடுக்க, அவனைத் தடுத்தவள்,

“இதுல தௌசண்ட் பௌண்ட்ஸ் இருக்கு. லாஸ்ட் மந்த் ரென்ட் கட்டலைன்னு சொன்னான். பே பண்ண சொல்லுங்க. மீதியை செலவுக்கு வச்சுகிடட்டும். நான் கொடுத்தேன்னு சொல்ல வேணாம். அவங்க அப்பா அனுப்பி விட்டாங்கன்னு சொல்லி கொடுத்துடுங்க...” என அவனிடம் பணத்தைக் கொடுத்தாள். அவனும் சரியென்று வாங்கிக் கொண்டான்.
“ஏன் இன்னும் அவனுக்கு ஜாப் எதுவும் செட்டாகலை. என்ன ப்ராப்ளம், சீனியர்ஸ் யாராவதிருந்தா ரெஃபர் பண்ண சொல்லலாம் இல்ல? இப்போதைக்கு பார்ட் டைம் பார்த்துட்டே இண்டெர்வியூ அட்டெண்ட் பண்ண சொல்லுங்க!” இவள் தனக்குத் தோன்றியதை உரைத்தாள்.
“எனக்கே சிக்ஸ் மந்த்ஸ் கழிச்சுதான் வேலை கிடைச்சது சிஸ்டர். இப்போ இங்க மாஸ்டர்ஸ் படிக்க வர்றவங்க ஜாஸ்தியாகிட்டாங்க. அன்எம்ப்ளாய்ண்மெண்ட் அண்ட் விசா ப்ராப்ளமும் கூட. இண்டர்வியூல ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல கூட இவன் செலக்டாகலைன்னு புலம்பித் தள்ளுறான். பார்ட் டைம் கூட குதிரை கொம்பாகிடுச்சு...” இவன் நிலைமையை விளக்கினான்.
“நீங்க அவனோட ரெஸ்யூம் எனக்கு பார்வர்ட் பண்ணுங்க. என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே சொல்லி ரெஃபர் பண்ண முடியுமான்னு கேட்குறேன்!” என்றாள் யோசனையுடன்.

விக்னேஷிற்கு அவளைப் பார்த்தால் பாவமாக இருந்தது. பரிதி தன் சுயநலத்திற்காக இவளை சுரண்டுவது போல தோன்றிற்று. போதாத குறைக்கு அவளைப் பற்றி தப்பு தப்பாக தன்னிடம் கூறியதை எண்ணி, இசைவாணியைப் பார்த்தான். அவனால் அவளைத் தவறாக எண்ண முடியவில்லை. அவளிடம் எந்தக் கஷ்மிஷமும் இல்லை. அவனுக்காக அவள் மெனக்கெடும் அளவிற்கு அவன் தகுதியாவன் அல்ல எனத் தோன்ற, அதை வாய் வார்த்தையிலும் சொல்லிவிட்டான்.
அவன் என்ன சொன்னான் எனப் புரியாது வாணி பார்க்க, “ஹீ இஸ் நாட் தட் மச் வொர்த்ங்க. பணம் குடுத்ததோட போதும். அவனுக்குத் திறமை இருந்தா வேலை வாங்கிட்டுப் போறான்!” என்றான் ஆற்றாமாட்டாமல்.
விக்னேஷைப் பார்த்து முறுவலித்த இசைவாணி, “இது அவனுக்காக இல்ல ப்ரதர். அத்தையும் மாமாவும் வருத்தப்பட்டு பேசும்போது எனக்கு கஷ்டமா போச்சு. சோ, அவங்களுக்காகத்தான் செய்றேன்!” என்றாள். பரிதி தங்களுக்கிடையே நடந்த ஒப்பந்த திருமணத்தோடு தன்னைப் பற்றி ஏதோ தவறாக கூறியிருக்கிறான் எனக் கணித்தவளின் உதட்டோரம் கசப்பாய் ஒரு முறுவல் உதிர்ந்தது.
“ஓகே சிஸ்டர்... நீங்க கிளம்புங்க. அவன் இப்போலாம் வீட்டுக்கு வர்ற லேட்டாக்குறான். ஒரு பொண்ணோட சுத்துறான்!” தயங்கியபடியே கூறிவிட்டான். ஒருவேளை இந்தப் பெண்ணிற்கு அவனைப் பிடித்திருந்தால், தேவையற்ற கற்பனையில் வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது என்ற அக்கறையில் கூறினான். அவள் தலையசைத்துக் கிளம்ப யத்தனித்த நொடி, இளமதி மகிழுந்தில் அவனை இறக்கிவிட்டு சென்றாள். பரிதி சோர்வுடன் வந்தவன், இவளைப் பார்த்து புருவம் சுருக்கினான்.
இசைவாணி அந்தப் பெண்ணை ஒருமுறை பார்த்தவள், பின்னர் அலைபேசியை எடுத்து மார்த்தாண்டத்திற்கு அழைத்தாள். “இந்த நைட் டைம்ல கால் பேசணும்னு என்ன அவசியம்? காலைல வர வேண்டியது தானே?” வழக்கம் போல அவன் சிடுசிடுக்க, அதற்கு எதிர்வினையாற்றாத வாணி அலைபேசியை அவனிடம் கொடுத்தாள்.
“ஏன்யா பரிதி... அம்மா பேசுனதுல கோச்சுகிட்டீயா? நான் ஏதோ தெரியாம கேட்டுட்டேன். அதுக்காக நான் ஃபோன் ப்ணணா நீ எடுக்காம இருப்பீயா? இவ்ளோ நேரமா எங்க போன? ஃபோனை எடுத்து ரெண்டு வார்த்தைப் பேசுனா என்ன டா? உன்னை அவ்ளோ தூரம் விட்டுட்டு எங்களுக்கு இங்க பதறுதா இல்லையா?” சிந்தாமணி படபடக்க, வலது கையால் தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.
ஏகப்பட்ட தவறி அழைப்புகள். மாலையில் தாயிடம் பேசிவிட்டு வைத்தவனுக்கு இளமதி அழைத்துவிட்டாள். அவன் குரல் சோர்வாய் வர, நேரே வந்து வெளியே அழைத்துச் சென்றாள். அவளுடன் இருந்ததால் இவன் அலைபேசியைப்‌ பார்க்கவே இல்லை.
“ப்ம்ச்... வெளிய போய்ருந்தேன்மா. எடுக்கலைன்னா வேலையா இருக்கேன்னு அர்த்தம். அதுக்காக இத்தனை தடவை கால் பண்ணுவீயா நீ?” அவரை மென்மையாய் கடிந்தான்.
“சரி டா... வேலை பொறுமையா தேடு. ஒன்னும் அவசரம் இல்ல. உன் பொண்டாட்டி எதுவும் சொல்லிட்டாளா உன்னை? நான் கேட்டப்போ இல்லைன்னு சொன்னா? நீ பணத்தைப் பத்தி யோசிக்காத. சீட்டுப் பணம் இருக்கு அம்மாகிட்டே. நான் அனுப்பிவிடுறேன். நீ நல்லா சாப்பிட்டு தெம்பா வேலை தேடு!” அவர் கூறவும், இவனுக்கு ஒருமாதிரியாகிற்று.
“அதெல்லாம் வேணாம்மா. நான் பார்த்துக்கிறேன்!” இவன் மறுக்க, மார்த்தாண்டம் பேசினார். எப்போதும் அதட்டி உருட்டுபவர் அக்கறையாய், அன்பாய், கரிசனத்துடன் பேசவும் இவனுக்கு அவர்களைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றிற்று. யோசிக்காமல் காணொளி அழைப்பை விடுத்து அனைவரிடமும் பேசினான்.
அஜித் கூட, “எப்படியோ சிம்பதியைக் கிரியேட் பண்ணி என்னைப் பேச வச்சுட்டல்ல? உன் மேலருக்க கோபம் அப்படியேதான்டா இருக்கு. ஆனாலும் உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு!” அவன் இவனைக் கேலி செய்ய,

“டேய்..‌. நீயெல்லாம் பாவப்படுற அளவுக்கு ஒன்னும் நான் இல்ல. மூட்டிட்டு ஒழுங்கா எக்ஸாமை க்ளியர் பண்ணி டாக்டராகுற வழியைப் பாரு டா!” என பரிதியும் பேச, கொஞ்சம் இயல்பாக மூச்சுவிட்டான்.
பேசி முடித்ததும் அவள் கிளம்ப, “தனியா எப்படி போவ இசைவாணி? நானும் கூட வர்றேன்...” என்றவன், “இந்த மாதிரி நைட் டைம்ல வராத இனிமே!” என்றான் அழுத்தமாய்.
“வந்த எனக்குப் போகத் தெரியும். உன் ஹெல்ப் தேவையில்ல!” என்றவள் விறுவிறுவென நடக்க, இவனுக்கு கடுப்புதான். ஆனால் தனக்காகத்தானே வந்திருக்கிறாள் என்றெண்ணி அவளுடனே சென்றான். அவள் பேருந்தில் ஏறவும், இவனும் உடன் சென்றான்.
வீட்டு வாயில்வரை வந்தவனை,
‘அவ்ளோ நல்லவனா?’ என்பது போல பார்த்தவள், “போதும்... கிளம்பு!” என்றுவிட்டு வீட்டைத் திறந்து உள்ளே செல்ல, அவனும் பின்னோடு வந்தான்.
அதில் எரிச்சலானவள், “எதுக்கு உள்ள வர்ற?” எனக் கேட்டாள். வீட்டை சுற்றிப் பார்த்தான் பரிதி.
“நீ மட்டும்தான் இருக்கியா?” அவன் ஆராய்ச்சியுடன் கேட்க,
“அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?” அவள் கடுப்புடன் கேட்க,
“இன்னொரு பொண்ணு இருக்காங்களா?” என அவனாக ஊகித்துக் கேட்டவன், “ரெண்டு பேருக்கு இவ்ளோ பெரிய வீடா?” எனக் கேட்டு இருக்கையில் அமர்ந்தவன், “ஏன் இசைவாணி... நம்ப ஒரு டீல் போட்டுக்க கூடாது?” எனக் கேட்டவனைக் கேள்வியாகப் பார்த்தவள்,
“என்ன டீல்?” என்றாள்.
“இல்ல... ஒவ்வொரு டைமும் பொய் சொல்லி சமாளிக்க முடியாம அங்க வர்ற நீ. இதோ இன்னைக்கெல்லாம் நைட் டைம் வந்த? கஷ்டமா இல்லையா உனக்கு?” அவன் போலியான வருத்தத்துடன் கேட்டான்.
“ஆடு நனையுதேன்னு ஒணாய்க்கு என்னப்பா கவலை?” கேலியாகக் கேட்டவள், கைப்பையை மேஜை மீது வைத்தாள்.
அவள் பதிலில் முகத்தைத் தூக்கியவன், “நான் ஒன்னும் எனக்காகப் பேசலை. உனக்காகத்தான் கேட்குறேன். நீ இவ்ளோ கஷ்டப்பட்றதுக்குப் பதிலா நானும் உன்னோட தங்கிட்டா நீயும் பொய் சொல்லி உங்கம்மாவை எங்கம்மாவை சாமாளிக்க தேவையில்லை. எனக்கும் தங்குறதுக்கும் திங்கிறதுக்கும் பிரச்சனை இருக்காது!” என கடைசி வரியை முணுமுணுத்தான்.
“ஓ... ஓசில சாப்பிட, தங்க இடம் வேணும்னு சுத்தி வளைச்சு என்னோட நன்மைக்காக கேட்குறீயா நீ?” அவள் எள்ளலாகக் கேட்டதில் ரோஷம் வரப் பெற்று படக்கென எழுந்து நின்றான்.
“எனக்கொன்னும் உன் காசுல ஓசில திங்கணும்னு ஆசையெல்லாம் இல்ல!” என விறுவிறுவென வாயிலருகே சென்றான்.
“பரிதி!” இவள் அழுத்தி அழைக்க, என்னவென்பதாய் திரும்பி இடுங்கிய கண்களுடன் அவளைப் பார்த்தான்.
“என் ரூமேட் நெக்ஸ்ட் வீக் வெகேட் பண்றா. சோ நீ இங்கேயே தங்கிக்கோ!” என்றவளை நம்ப முடியாது பார்த்தவன், விரைந்து அவளருகே சென்றான்.
அவன் வேகத்தைப் பார்த்து பயந்தவள், “எதுவா இருந்தாலும் தள்ளி நின்னே பேசு!” என முகத்தை சுளித்தாள்.

“ரொம்ப பண்ணாத இசைவாணி...” என சடைத்தவன், “நிஜமா வர சொல்றீயா? நீ அவ்ளோ நல்லவ இல்லையே!” கேள்வியாக அவளைப்
 
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
பார்த்தான்.
அந்தப் பார்வையில் எரிச்சலானவள், “வர இஷ்டம் இருந்தா வா. இல்லைன்னா எனக்கொன்னும் நஷ்டம் இல்ல. இன்பேஃக்ட் உனக்கு செலவு பண்ற காசு மிச்சம்தான். நீ வேலை கிடைக்குற வரை ஹோம்லெஸ் பீபிப்ள் மாதிரி ரோட்ல திண்ணு, தூங்கு. எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல!” அவள் கடுகடுக்க,
“சரி... சரி. கோபப்படாத. நான் வந்து தங்கிக்கிறேன்!” என்றான். அவளை சமாதானம் செய்யும் விதமாக தணிந்து பேசினான். அவனுக்குத்தான் காரியமாக வேண்டியிருந்தது.
“தங்க சொன்னேன்றதுக்காக என்னை ஃபுல் டைம் வேலைக்காரியா மாத்தக் கூடாது. குக்கிங் நான் பண்ணுவேன். மத்த ஹவுஸ் ஹோல்ட் வொர்க் எல்லாம் நீதான் பண்ணணும். ஜாப் கிடைக்குற வரைக்கும் நானே உன் செலவையும் பார்த்துப்பேன். ஒன்ஸ் நீ வொர்க்ல ஜாய்ன் பண்ணிட்டா, எல்லா செலவையும் ஷேர் பண்ணிக்கணும்!” என்றாள் கறாரான குரலில்.
‘மூனு வேளை சோத்துக்கும் தங்குறதுக்கும் இவகிட்டே வீட்டு வேலை பார்க்கணுமா?’ ரோஷமாய் மனம் கேட்டாலும், கையில் ஒரு ரூபாய் கூட இல்லையென மூளை அறிவுறுத்தியது. ஏற்கனவே இந்த இரண்டு மாதத்திலே விக்னேஷிடம் நிறைய கடன் வாங்கிவிட்டான்‌. இதற்கு மேலும் யாரையும் எதிர்பார்த்திருக்க முடியாது. வீட்டு வேலைதானே? கொஞ்ச நாள் செய்யலாம் என இறங்கி வந்து, “ஹம்ம்... எனக்கு ஓகே!” என்றான்.
“சரி... கிளம்பு. நான் சொல்றப்போ ஷிப்டாகிக்கோ...” என அவனை அனுப்பிவிட்டாள்.
இளமதி அவளாக முன்வந்து தன்னுடைய செலவை ஏற்றுக் கொள்வதாக கூறியும் இவன் மறுத்துவிட்டான். ஆனால் இசைவாணியிடம் பணத்தை பெறுவதிலோ, அவளது சம்பாத்தியத்தில் உண்பதிலோ இவனுக்கு எவ்வித உறுத்தலும் இல்லை. என்னவோ மற்றவர்களிடம் தோன்றாத ஒருவித உரிமையும் இணக்கமும் இவளிடம் எப்படி தோன்றிற்று? ரோஷம், கோபம் என எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டுத்தான் அந்த வீட்டிற்குள் நுழையப் போகிறோம் என்ற யோசனையுடனே சென்றான் பரிதி.
தொடரும்







 
Well-known member
Messages
525
Reaction score
380
Points
63
Parithi unnaku vai konjam illa rombha athigam than ava ivolo help panra ah aana ne appo kooda over ah than pesura la ah
 
Well-known member
Messages
602
Reaction score
411
Points
63
இந்த நிலைமையிலும் திமிருக்கு குறைச்சல் இல்ல
 
Top