• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,279
Reaction score
3,751
Points
113
நேரம் – 5 💜

“ஏங்க, இந்தாங்க... இந்த மோரைக் குடிங்க. பெருங்காயத்தூள் போட்டிருக்கேன்!” சிந்தாமணி பதற்றத்துடன் கணவர் கையில் குவளையைத் திணித்தார்.

“எனக்கு ஒன்னும் இல்ல டீ. புள்ளைங்களை பயமுறுத்தாத நீ!” மனைவியை அதட்டிய மார்த்தாண்டம் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரருகே அஜித் முகத்தில் அப்பிய பயத்துடன் நின்றிருந்தான். அவன் கை தந்தையின் தோளை ஆதரவாகத் தொட்டது.

“என்னாச்சு மா? எதுக்கு அவசரமா கூப்பிட்ட என்னை?” எனக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் பரிதி. தந்தை அமர்ந்திருந்ததையும், அவனருகே தாயும் தம்பியும் பதற்றத்துடன் நிற்பதைக் கண்டவனுக்கு எதையும் ஊகிக்க முடியவில்லை. ஆனாலும் படபடத்துப் போனான்.

“ப்பா... என்னப்பா? என்ன பண்ணுது உங்களுக்கு?” நொடியில் அவரை சமீபித்திருந்தான்.

“டேய்... எனக்கு ஒன்னும் இல்ல டா. லைட்டா நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னேன். ஊசி குத்துற மாதிரி குத்துது. வாயுத் தொல்லை டா. உங்கம்மாதான் பயப்படுறா!” அவர் மகனை சமாதானம் செய்ய விழைந்தார்.

“எந்தப் பக்கம் வலிக்குதுப்பா? தோள் பட்டையெல்லாம் வலி பரவியிருக்கா? வேர்த்து ஊத்துதா?” அவன் அடுக்கடுக்காய் கேட்டான்.

“அண்ணா... அப்பாவுக்கு ரெண்டு நாளா கையைத் தூக்க முடியாத வலி. இப்போ கூட வேர்த்து ஊத்திடுச்சு!” கீர்த்தனாவின் கண்களில் நீர் நிரம்பத் துவங்க, தேம்பியபடி கூறினாள்.

“ஏய் ஆத்தா... இங்க வா. அப்பாவுக்கு ஒன்னும் இல்ல!” மகளின் கைப்பிடித்து வாஞ்சையாகத் தடவினார் பெரியவர். அவரது அழுகையில் இவருக்குப் புன்னகை பிறந்தது.

“அப்பா... கைவலியா? ஏன் என்கிட்ட நீங்க சொல்லலை? முதல்ல எழுந்திரிங்க. வாயுத் தொல்லையா இல்ல வேற ப்ராப்ளமான்னு டாக்டர் சொல்லுவாரு!” அவரது கையைப் பிடித்திழுத்து நிறுத்தினான் பரிதி. அவனுக்கு நெற்றியெல்லாம் வியர்த்தது.

“டேய்... காய்கறி மூட்டையைத் தூக்குனதால வந்த வலிடா இது!” அவன் கையை உதறியவர்,

“இங்க பாரு... மேல ஓட்ற ஃபேன் காத்து பத்தலை. வெக்கையால உனக்கும் வேர்த்து ஊத்துது!” என அவன் நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைத்தார் மனிதர்.

அந்தக் கையை அப்படியே கீழே இறங்கவிடாது பிடித்தவன், “ப்பா... இதுல எல்லாம் கேர்லெஸ்ஸா இருக்க கூடாதுப்பா. ப்ளீஸ் வாங்க, ஒரு தடவைப் போய் டாக்டரைப் பார்த்துட்டு வரலாம்!” என்றான் மனத்தின் பரிதவிப்பை முகத்தில் காண்பித்து.

“ஏங்க... புள்ளைங்க பயப்படுதுங்க. ஒரெட்டுப் போய் என்னென்னுப் பார்த்துட்டு வாங்க. நீங்க நல்லா இருக்கீங்கன்னு டாக்டர் சொன்னா நாங்க நிம்மதியா இருப்போம்!” என்ற சிந்தாமணி சமையலறைக்குள் நுழைந்து அரிசி பானையில் போட்டிருந்த பணப்பையைத் துழாவி சில பல ஐநூறு ரூபாய் நோட்டுகளை உருவினார்.

“பரிதி இந்தா... அப்பாவைக் கூட்டிட்டு போ!” மகன் கையில் பணத்தை திணித்தார் பெண்மணி.

“காசைக் கரியாக்காம உங்களுக்கு எல்லாம் உறக்கம் வராது போல!” முனகிக் கொண்டே ஆணியில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து அணிந்தார் மார்த்தாண்டம். பரிதி விரைந்து தன் இருசக்கர வாகனத்தை முடுக்கினான்.

“அண்ணா... இந்தா ஃபோன், டாக்டரைப் பார்த்ததும் கால் பண்ணு!” அஜித் ஓடி வந்து தமையனின் சட்டைப் பையில் அலைபேசியைத் திணித்தான்.

“சிந்தாமணி.. பயந்துட்டு கிடக்காத. நீ இன்னும் சாப்பிடலை. போய் சாப்பிட்டு தூங்குங்க. நாங்க போய்ட்டு பத்து நிமிஷத்துல வந்துடுவோம்!” மார்த்தாண்டம் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தைரியம் சொல்லியபடியே மகன் பின்னே ஏறி அமர்ந்தார்.

பத்து நிமிடத் தொலைவில் தனியார் மருத்துவமனை இருந்தது. பரிதி அதை நோக்கித்தான் சென்றான். “பரிதி... தனியார் ஆஸ்பத்திரி வேணாம். காசைப் புடுங்கிடுவாங்க. நீ கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போ!” என்றார் பெரியவர்.

“ப்பா...” முன்புற கண்ணாடி வழியே பார்த்து அவன் ஆட்சேபணை தெரிவித்தான்.

“டேய்... நான்தான் உனக்கு அப்பன். ஒழுங்கா நான் சொல்றதைக் கேளு!” அவர் அதட்டல் வேலை செய்ய, அரசு மருத்துவமனை முன்பு வாகனத்தை நிறுத்தினான். அவசர சிகிச்சை பிரிவு எங்கே இருக்கிறது எனக் கேட்டு உள்ளே சென்றனர். இரவு நேரப்பணி மருத்துவர் அமர்ந்திருந்தார்.

இவர்கள் உள்ளே நுழைய, “என்னாச்சு?” எனக் கேட்டு மார்த்தாண்டத்தை சோதித்தார் அவர்.

“திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்றாரு டாக்டர். என்னன்னு செக் பண்ணுங்க!” பரிதி தந்தைக்கு முன்னே பதிலுரைத்தான். அவருக்கு என்னென்ன அறிகுறிகள் தென்படுகிறது எனக் கேட்டறிந்த மருத்துவர், செவிலியரை அழைத்து ஏதோ பணித்தார்.

“ஐயா... இங்க வாங்க!” செவிலியர் மார்த்தாண்டத்தின் ரத்த அழுத்தத்தை பரிசோதித்துவிட்டு இரண்டு மாத்திரையைக் கொடுத்தார்.

“இந்தாங்க ஐயா! இந்த மாத்திரையைப் போட்டுட்டு பத்து நிமிஷம் உக்காருங்க. அப்புறம் நூத்தி மூனுல போய் ஈ‌.சி.ஜி எடுத்துட்டு வாங்க!” என்றபடியே மாத்திரையும் தண்ணீரையும் கொடுத்தார். மார்த்தாண்டம் மாத்திரையை விழுங்கினார்.

“சிஸ்டர்... ஏன் பத்து நிமிஷம் வெயிட் பண்ணணும். இப்பவே ஈ.சி.ஜி எடுக்கலாம் இல்ல?” இவன் குரலை உயர்த்த, அவனைக் கண்கள் இடுங்கப் பார்த்தார் அந்த செவிலியர்.

“தம்பி... இப்போதானே வந்திருக்கீங்க. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணாதான் மூச்சு சீராகும். ஈ.சி.ஜி‌ ரிப்போர்ட் கரெக்டா வரும். சத்தம் போட்ற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. எங்க வேலையை நாங்க சரியா பார்க்குறோம். போய் ஓரமா அந்த பெஞ்ச்ல உக்காருங்க!” என அவர் சிடுசிடுத்துவிட்டுச் செல்ல, மகன் தந்தையை முறைத்தான்.

“இதுக்குத்தான் பிரைவேட் ஹாஸ்பிடல் போகலாம்னு சொன்னேன் நான்!” அவன் தந்தையை முறைத்து வைத்தான்.

“டேய், என்னடா முறைப்பு? அதான் நர்ஸம்மா சொல்றாங்க இல்ல. படிச்ச அவங்களுக்குத் தெரியாதா? உன் வாயை வச்சிட்டு சும்மா இரு டா!” என மகனோடு சென்று அருகிலிருந்த மேஜையில் அமர்ந்தார் மார்த்தாண்டம். பத்து நிமிடம் எப்போதடா கடக்கும் என அலைபேசியை பார்த்தவன், சரியாய் பத்தாவது நிமிடத்தில் அந்த செவிலியர் முன்பு போய் நின்றான்.

“இந்தாங்க... நூத்தி மூனுல போய் ஈ.சி‌‌.ஜி எடுத்துட்டு ரிப்போட்டோட வாங்க!” என அவர் கொடுத்த சீட்டை விரைந்து வாங்கியவன், நூற்று மூன்றாம் பகுதிக்குச் சென்று பத்து நிமிடம் காத்திருந்து ஈ.சி.ஜி எடுத்து முடித்ததும், மேலும் அரைமணி நேரம் உட்கார்ந்து அதன் தரவுகளை வாங்கிக்கொண்டு சென்று மருத்துவரைப் பார்த்தான்.

“உங்களுக்கு பயப்படுற மாதிரி எதுவும் இல்ல ஐயா. வாயு தொந்தரவுதான். இப்போ வலிக்குதா?” மருத்துவர் கையிலிருந்த தரவை ஆராய்ந்தபடி கேட்டார்.

“இல்ல டாக்டர், இப்போ வலி போய்டுச்சு!” என்றவர், ‘நான் சொன்னா நம்ப மாட்டீங்க?’ என மகனை முறைத்தார். தந்தைக்கு எதுவும் இல்லை என்றுணர்ந்தவனின் மூச்சு அப்போதுதான் சீரானது.

“மதியம் என்ன சாப்டீங்க?” மருத்துவர் கேட்க,

“பருப்பு உருண்டை குழம்பும், உருளைக் கிழங்கு பொரியலும் சாப்பிட்டேன்!” இவர் பதிலுரைத்தார்.

“பாருங்க... ரெண்டுமே கேஸ் ட்ரிபள் பிராப்ளத்தை ஏற்படுத்தும். இனிமே பருப்பு வகைகளை குறைச்சுக்கோங்க. காய்கறி, முட்டை எல்லாம் சாப்பிடுங்க. இப்போ வாயு தொந்தரவுக்கு மாத்திரை தரேன்!” என்றவரிடம் தலையசைத்து மாத்திரையைப் பெற்றுக்கொண்டு இருவரும் வெளியே வந்தனர்.

“கோட்டு போட்டிருக்க டாக்டர் சொன்னா நம்புவீக. நான் சொல்றதைக் கேட்க மாட்டீங்க. இப்போ அலைச்சல்தான் மிச்சம். வண்டியை எடு டா. நேரத்துக்குப் படுத்தாதான் காலைல மார்க்கெட் போய் காய்கறியை வாங்கிட்டு வர முடியும்!” மகன் தோளில் கண்டிப்புடன் தட்டினார்.

“ப்பா... இனிமே நானே காலைல எழுந்து காய்கறி வாங்கிட்டு வரேன். நீங்க அலையாதீங்க!” என்றவன் வாகனத்தை உயிர்ப்பித்தான்.

“அதெல்லாம் வாய் சொல்லுக்கு சரியா இருக்கும்டா. தினமும் காலைல ஏழு மணி வரை தூங்குறவன் நீ. நாலு மணிக்கு எழுந்துடுவீயா?” கேலியாகச் சிரித்தவரை முறைத்தவன்,

“அதெல்லாம் நான் சரியா எழுந்து வேலையைப் பார்ப்பேன். நீங்க என்னைக் குத்தம் சொல்லாம இருந்தா சரிதான்!” இவன் ரோஷத்துடன் பதிலளித்தான்.

“சரித்தான்... உன் செயல் வீரம் என்னென்னு நானும் பார்க்குறேன்!” தந்தையும் மகனும் வாயடித்துக்கொண்டே வர, “குல்ஃபி... குல்ஃபி!” என்ற சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றான்.

“டேய்! வீட்டுக்குப் போகாம எங்குட்டுடா போற?” மார்த்தாண்டம் மகன் தோளைத் தட்டினார்.

“உங்க சின்ன மக அழுதுட்டா இல்ல? அவளுக்கு ஐஸ் வாங்கிட்டுப் போவோம். ஹாஸ்பிடல்ல இருக்கும்போதே நாலு தடவை கால் பண்ணிட்டா!” என்றவன், ஐந்து பனிக்கூழை வாங்கினான். இவர்கள் வீடு செல்ல, சிந்தாமணி அப்போதுதான் பழைய சாதமும் பருப்பு உருண்டை குழம்புமாக எடுத்து வந்து கூடத்தில் அமர்ந்து உண்டார்.

“ஏன் டீ... மணி எத்தனையாச்சு? நான் போகும்போதே சாப்பிட சொன்னேனா இல்லையா?” மனைவியை அதட்டிக் கொண்டே பெரியவர் சட்டையைக் கழற்ற, கீர்த்தனா எழுந்து வந்து தந்தையை அணைத்துக் கொண்டாள். அவள் உடலில் நடுக்கம் இன்னும் மிச்சமிருந்தது.

“அப்பாவுக்கு ஒன்னும் இல்ல ஆத்தா!” மார்த்தாண்டம் மகள் தலையைப் பரிவாகத் தடவினார்.

“ஏன்டீ... அவரைக் கட்டிப்பிடிச்சு பேசக் கூடாதுன்னு சொல்லிருக்கேனா இல்லையா?” சிந்தாமணி மகளைக் கடிந்தார்.

“சின்ன புள்ளைதானே சிந்தா... விடு!” என்ற கணவரையும் அவர் முறைத்தார். வாகனத்தை பூட்டிவிட்டு பரிதி உள்ளே நுழைந்தான்.

“குட்டி சாத்தான்.‌.. அப்பாவை விடு. இங்க வா!” தங்கையை சகஜமாக்கும் பொருட்டு அவன் அழைக்க, அண்ணனை முறைத்துக் கொண்டே அவன் கையிலிருந்த பையை வெடுக்கெனப் பிடுங்கினாள் இவள்.

என்ன இருக்கிறது என அசுவாரஸ்யமாய் பையைத் திறந்தவளின் முகம் நொடியில் மலர, “ஐ! குல்ஃபி ஐஸ்!” என்றாள் உற்சாகத்துடன்.

“எனக்கு ஐஸ்!” தரையில் படுத்து தலைக்கு மேலே புத்தகத்தை வைத்திருந்த அஜித், பனிக்கூழைப் பார்த்ததும் படக்கென எழுந்து வந்தான்.

“பூராத்தையும் புடுங்காத அஜித். இரு நானே எடுத்து தரேன். எத்தனை இருக்குன்னு பார்க்குறேன்!” முதுகிற்குப் பின்னே கையைக்கொண்டு சென்ற கீர்த்தனா எத்தனை என எண்ணிவிட்டு தனக்கொன்றும் அவனுக்கொன்றும் கொடுத்தாள். பரிதி அவள் தருவாள் எனக் காத்திராது அவனே எடுத்தான்.

“ம்மா... இந்தா உனக்கொன்னு!” அவன் தாயிடம் ஒன்றை நீட்ட, “எனக்கு வேணாம் டா... நைட்டு நேரத்துல ஐஸ் திண்ணா தொண்டைக் கட்டிக்கும். மிச்சதை ஃப்ரிட்ஜில வை. உன் தங்கச்சி காலைல சாப்பிடுவா!” என்றார் அவர். பரிதி மீதவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் முன்னே பை இழுபட, ஆளுக்கொன்றாய் எடுத்தனர் சின்னவர்கள்.

“இந்நேரத்துல ஐஸ் திண்ணாவே சளி பிடிக்கும். இதுல ரெண்டு பேரும் ரெண்டு ஐஸ் சாப்பிட்றீங்க? காய்ச்சல் வந்து படுங்க. அப்போ ரெண்டு பேரையும் வெளுக்குறேன்!” சிந்தாமணி குரலை உயர்த்தியவர், சாப்பிட்ட தட்டைக் கழுவி வைத்துவிட்டு வந்து கூடத்தில் கால் நீட்டி அமர்ந்தார். பரிதி படக்கென அவர் மடியில் தலை வைத்து ஆறடி உடலை குறுக்கிப் படுத்தான்.

“ஏன்யா பரிதி இங்கனப் படுக்குற? காத்தே வராது, வெக்கையா இருக்கும். போ நீ போய் ரூம்ல படுத்துக்கோ!” என்றவர் முந்தானையால் அவன் நெற்றியில் பூத்திருந்த வியர்வையைத் துடைத்தார். அவர் சேலையைக் கையோடு பிடித்துக் கொண்டவனுக்கு இன்னுமே மனத்தின் நடுக்கம் குறையவில்லை.

தந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயம் அவனது உடலெங்கும் வியாபித்திருந்தது. இத்தனை வருடங்களாக தூண் போல வீட்டைக் காத்து நிற்கும் மனிதர் அவர். அவரில்லாமல் ஒரு வாழ்க்கையா என யோசித்துப் பார்த்தாலே தலைச் சுற்றியது மகனுக்கு. தங்கள் வாழ்வில் அவரது இன்றியமையாமையை பூரணமாக உணர்ந்தான்.

இருபத்தியாறு வயது முடிந்தாலும் கூட பரிதியால் ஒரு குடும்பத்தை சரியாய் நிர்வகிக்க முடியாது. அவன் அத்தனைப் பக்குவப்பட்ட மனிதன் அல்ல என்பது அவனறிந்த ரகசியம். விளையாட்டுத்தனத்தைக் கைவிட்டு விட்டு, இனிமேலாவது கொஞ்சம் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் எனப் பெருமூச்செரிந்தவன், “இன்னைக்கு உங்களோட ஹால்லயே படுத்துக்குறேன்மா!” என்றான் சின்ன குரலில் சலுகையாக.

“ஏனாம்... என்ன கொணடிட்டு கிடக்கான் உம்மவன்?” எனக் கேட்ட மார்த்தாண்டம் பாயைத் தரையில் விரித்தார். மகன் அவரை முறைத்தான்.

“ப்ம்ச்... ஒருநாள் அவன் இங்கப் படுத்தா உங்களுக்கு என்ன?” கணவரிடம் உயர்ந்த சிந்தாமணியின் குரல், “போயா பரிதி... தலைகாணி எடுத்துட்டு வந்து படு. அப்படியே அந்தப் ஃபேனையும் எடுத்து இங்கப் போட்டுவிடு. எல்லாரும் ஒன்னா படுத்தா காத்தே வராது!” என்றார் இவனிடம் வாஞ்சையாக.

“ஹம்ம்...” எனத் தாயின் வாசத்தை சில நொடிகள் உணர்ந்தவன், பின்னர் எழுந்து சென்று அவர் பணித்ததை செய்துவிட்டு தந்தையருகே பொத்தெனப் படுக்க, அவனுக்கு அடுத்து அஜித், கீர்த்தனா, சிந்தாமணி படுத்தனர்.

சில நிமிடங்கள் கடக்க அஜித் அண்ணன் மீது கை, காலைப் போட்டான். “கையை எடு நாயே! எனக்குத் தூக்கம் வராது!” பரிதி அவன் கையை வெடுக்கெனத் தட்டிவிட, சரியாய் அவன் கரம் கீர்த்தனாவின் மூக்கில் பட்டுவிட்டது.

“ஆ...” வலியில் அலறியவள், கைக்கு வாகாய் இருந்த அஜித் தலை முடியைக் கொத்தாகப் பிடித்திழுத்து, “பரதேசி... என் மூக்குல ஏன்டா அடிச்ச?” எனக் கேட்டு வலித்த மூக்கைத் தடவினாள். சுள்ளென அவன் கைப் பட்டுவிட, இவளுக்கு அழுகை வரப் பார்த்தது.

தாயின்புறம் திரும்பியவள், “ம்மா... அஜித் என் மூக்கை உடைச்சுட்டான்!” என்றாள் அழுகுரலில்.

“கையைக் காலை சும்மா வச்சிட்டு படு அஜித்து!” சிந்தாமணி அவனை அதட்ட,

“ம்மா... நான் எதுவும் பண்ணலை. எல்லாம் உன் மூத்த மகன் கைங்காரியம்தான். அவன்தான் இப்படி பண்ணான்!” என்ற அஜித், கீர்த்தனாவை முறைத்துக் கொண்டே வலித்த தலையை முடியோடு தடவினான்.

“பிசாசு... பிசாசு... கையா இல்லை வேற எதுவுமா? இவ்வளோ ஹார்ஷா பிடிச்சிழுக்குற?” அவன் சீற, இவள் பதிலுக்குப் பேசும் முன்னே, “பேசாம படுக்கப் போறீங்களா இல்லையா? காலைல அவங்கவங்க சோலியைப் பார்க்கணும்!” மார்த்தாண்டம் சப்தமிட, சின்னவர்கள் ஒருவர் மற்றொருவரை முறைத்து வேறுபக்கம் திரும்பினர்.

பரிதி தந்தையின் கூற்றில் விழிகளைத் திறந்து தலைக்கு மேலிருந்த அலைபேசியை துழாவி எடுத்து நாலு மணிக்கு அலறியை பதிவு செய்துவிட்டு தூங்கிப் போனான்.

காலையில் மார்த்தாண்டம் எழும் முன்னே மகன் எழுந்து முகத்தை கழுவி உடை மாற்றி வெளியே செல்ல தயாராக இருக்கவும், இவருக்குப் பேச்சு வரவில்லை. அவன் வாய் வார்த்தைக்கு சொல்கிறான். எப்படியும் காலையில் குப்புறப்படுத்து உறங்குவான் என எண்ணினார். ஆனால் மகன் அவரது எண்ணத்தைப் பொய்த்துப் போகச் செய்திருந்தான்.

“என்னப்பா.. என்னையே பார்த்துட்டே நின்னா என்ன அர்த்தம்? ஹம்ம்... போங்க... போய் ரெடியாகுங்க. மார்க்கெட் போகலாம்!” அவரை விரட்டினான் சின்னவன். அதில் இவருக்கு மனம் நிறைந்து போனது.

“ஹம்ம்... எத்தனை நாளைக்கு இந்த அரட்டல் உருட்டலுன்னு நானும் பார்க்குறேன் டா!” போலியாக சலித்துக் கொண்டே அவர் தயாரானார்.

பெரியவர் அவரது டி.எவி.எஸ் வாகனத்தை இயக்கச் செல்ல, “என் பைக்லயே போகலாம். எதுக்கு ரெண்டு வண்டி. பெட்ரோலை மிச்சம் பண்ணலாம். வாங்க என் கூட!” எனத் தந்தையை சந்தைக்கு அழைத்துச் சென்றான்.

அதிகாலை வேளையில் ஒரு ஊரே சந்தையை மொய்த்திருந்தது. மார்த்தாண்டம் பேரம்பேசி ஒவ்வொரு கடையிலும் காய்களை வாங்க, இவன் மூட்டைக் கட்டி வாகனத்தில் ஏற்றினான். மறக்காமல் அவர் எங்கே என்னென்ன வாங்குகிறார், எவ்வளவு விலைக்குப் பேரம் பேசுகிறார் என உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டான். எல்லாவற்றையும் வாங்கி முடிந்து அங்கிருந்து கிளம்பியவர்கள், சரியாய் ஐந்து மணிக்கு வந்து சிந்தாமணி ஸ்டோரைத் திறந்தனர்.

“பால் பாக்கெட்டை எடுத்துப் பிரிட்ஜ்ல வை டா!” அவர் சொல்ல, சொல்ல மகன் செய்தான்.

எத்தனை நேரம்தான் தூக்கம் வராமலே மெத்தையில் புரள முடியும். இதற்கு மேலும் தலைவலியைத் தாங்கிக்கொள்ள முடியாது என்றுணர்ந்த இசைவாணி எழுந்து அமர்ந்தாள். நேற்றைய நிகழ்வின் கனம் அவளது தலையின் கனத்தையும் கூட்டியிருந்தது.

சூடாய் தேநீரோடு ஒரு மாத்திரையையும் விழுங்கினால் மட்டுமே உடல் சீராகும் என்றெண்ணியவள், முகம் கழுவிவிட்டு நேரே சென்று குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தாள். அதில் பால் இல்லை. கமலா வாங்கி வைக்கவில்லையென அறிந்தவள், நெற்றியைப் பிடித்தாள்.

ஏதோ யோசனை தோன்ற, தன் அறைக்குச் சென்று ஜன்னலைத் திறக்க, மார்த்தாண்டமும் பரதியும் கடையைத் திறந்து வைத்திருந்தனர். நிம்மதி பெருமூச்சோடு காசை எடுத்துக்கொண்டு சப்தம் வராது நடந்து அவர்களை சமீபித்தாள்.

“ஹாஃப் லிட்டர் பால் பாக்கெட் வேணும்!” அவள் குரல் செவியில் நுழைந்ததும், “சாக்லேட் ப்ரௌணி” என முணுமுணுத்து நிமிர்ந்தான் பரிதி. கலைந்த தலை, உறக்கமற்று சிவந்த விழிகள், நலுங்கிய உடை என்றிருந்தவள், அப்போதும் அவன் கண்ணுக்கு அழகாய் தெரிந்தாள். அவனை வசீகரித்தாள். காலை நேரக் காற்றோடு அவளது வாசனை திரவியமும் நாசியை நிரடியது.

'தூங்கும்போது கூட சென்ட் அடிச்சிட்டுத்தான் தூங்குவாளோ? இல்ல லாங் லாஸ்டிங் பெர்ஃப்யூமோ?' அவன் மனம் ஆராய்ச்சியில் இறங்க, கை தன் போல அதன் வேலையைச் செய்தது.

அவள் பார்வையை வெகுகவனமாகத் தவிர்த்து பாலை எடுத்து அவளிடம் நீட்டியவன், “முப்பது ரூவா பாலுக்கு ஐநூறு ரூவாயா? சேஞ்ச் இல்ல!” என்றவன், மிட்டாய் டப்பா மீதிருந்த பாலை பின்னே இழுத்தான்.

“முத போனியை வேணாம்னு சொல்லக் கூடாது பரிதி!” மகனைக் கண்டித்த மார்த்தாண்டம், கல்லாப் பெட்டியில் சில்லறைகள் தேடினார். ஆனால் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இல்லை.

“பரவாயில்லை அங்கிள், நான் அப்புறம் கூட வாங்கிக்கிறேன்!” பரிதியை முறைத்துக்கொண்டே வெடுக்கென அவன் கையிலிருந்த பாலை வாங்கிக்கொண்டு எதிர் வீட்டுக்குள் நுழைந்தாள்.

‘ஹக்கும்... பெரிய பில்லினர் வீட்டு இளவரசி. எப்போ பார்த்தாலும் ஐநூறு ஓவாவை நீட்டுவா!’ இவன் கழுத்தை வெட்டி இல்லாத தூசியைத் தோளில் தட்டினான். பக்கவாட்டாக மார்த்தாண்டம் தன்னை முறைப்பதை உணர்ந்தவன், நல்ல பிள்ளையாய் காய்கறிகளைத் தனித்தனியாகப் பிரித்து கூடையில் வைத்தான்.

சூடான தேநீரையும் மாத்திரையும் விழுங்கியவள், நீள்விருக்கையில் சாய்ந்து கண்களை மூடினாள். இந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காணப் போகிறோம் என பிரதீப் மூளையைக் குடைந்தான். நேற்றைக்கு எப்படியோ தாயின் முகம் பார்க்காமல், அவர் கேள்விக்கு எல்லாம் மழுப்பலாய் பதில் சொல்லி தப்பித்துவிட்டாள். இன்றைக்கு அவர் அதைப்பற்றி கேட்டால் என்ன சொல்வது எனத் தவித்தவள், விரைவாய் அலுவலகம் செல்ல வேண்டும் என முடிவெடுத்தாள்.

முதலில் சமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சமையலறை சென்றவள், “பால் வாங்கும் போதே வெஜிடபிள்ஸ் வாங்கியிருக்கலாம்!” என முணுமுணுத்துவிட்டு துப்பட்டாவை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு சிந்தாமணி கடைக்குச் சென்றாள். பரிதி இல்லை. மார்த்தாண்டம் மட்டும்தான் இருந்தார். இவள் தேவையான காய்கறிகளை வாங்கி வந்து இரண்டு வேளைக்கும் சமைத்தாள்.

சுந்தரி அப்போதுதான் எழுந்தார். மகள் சமையல் வாசனை அவரது அறையை நிறைத்தது. “கல்யாணம்னு சொன்னதும் என் மகளுக்குப் பொறுப்பு வந்துடுச்சு போல?” எனக் கேலி செய்தவரை முறைத்தவள், குளித்து கிளம்பி வந்தாள்.

“இன்னைக்கு மீட்டிங் மா. ஒன் அவர் சீக்கிரம் போகணும்!” பொய்யைக் கூறி மழுப்பி அவரை சாப்பிட்டுவிட்டு மாத்திரை போடுமாறு கண்டித்தவள், விரைந்து வீட்டிலிருந்து வெளியேறினாள்.
அந்நாள் கடந்துவிட, மறுநாளும் அதே போல பொய்யைக் கூறி தப்பித்தாள்.

அவள் பிரதீப்புக்கு கொடுத்த இரண்டு நாள் கெடு முடிந்தது. இன்றைக்கு அவன் பதில் என்னவாக இருக்கும் என்ற பதற்றத்திலே சரியாய் தூங்கவில்லை இவள். என்னவோ உள்ளுணர்வு ஏதோ தவறாய் நடக்கப் போகிறது என்று உணர்த்த, தாயின் மடியில் படுத்தாள். எது வந்தாலும் சமாளிக்க வேண்டும் என மனதில் உருப்போட்டாள். சுந்தரியின் உடல்நிலைதான் அவளை வெகுவாய் பயப்பட வைத்தது. மற்றப்படி பிரதீப் அவள் வாழ்க்கையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவளுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை.

“என்ன வாணி?” எனக் கேட்டவரிடம், “நான் உன் மடியில படுக்க கூடாதாம்மா?” என சலுகையாக கேட்டாள் இவள்.

“நீ படுக்காம யாரு டீ படுப்பா? ஹம்ம்... சரி மறக்காம நாளைக்கு காலைல ஆபிஸ்ல பெர்மிஷன் கேட்டிரு. குலதெய்வத்துக்கு முதல் பத்திரிகையை வச்சிட்டு, ரெண்டாவதா உங்க மாமாவுக்கும் வச்சுடுவோம்!” என்றார் மகளின் தலைக் கோதி. அவரையே சலனமற்றுப் பார்த்தாள் மகள்.

‘அதுவரைக்கும் இந்த மேரேஜ் போகுமா மா?’ இவளிடம் கேள்வி எழுந்தது
. ஆனால் தாயின் பேச்சிற்கு ம்ம் கொட்டினாள். சிறிது நேரத்திலே அவளது அலைபேசி இசைத்தது.

“இரும்மா வரேன்!” என்றவள், அலைபேசியில் சொன்ன செய்தியில் அதிர்ந்து போனாள்.

தொடரும்....

 
Top