• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,286
Reaction score
3,781
Points
113
நேரம் – 1 💜



தன் முன்னிருந்த கணினி திரையை வெறித்து பார்த்த இளம்பரிதிக்கு மண்டை காய்ந்தது. ஒருமுறை இமைக்காமல் அந்த மின்னஞ்சலை உற்று வாசித்தான். மனம் அதிலிருந்த செய்தியை உறுதிப்படுத்த, சட்டென்று கோபமும் எரிச்சலும் மூண்டது‌.

எழுந்து சென்று பால்கனியில் நின்றவன் என்ன செய்வது எனத் தெரியாது சூடாகிப் போன மூளையை சமநிலைப்படுத்தும் பொருட்டு, தலையைப் பரபரவென தேய்த்தான்.

அந்நொடி எதுவுமே மூளை விளக்கெரியாது கையை விரித்துவிட, சட்டென்று உள்ளே நுழைந்து என்றைக்கோ எங்கே தூக்கி எறிந்தோம் என நினைவிலே இல்லாத புகையிலைப் பெட்டியைத் துழாவத் தொடங்கினான்.

கடைசியாய் எங்கே வைத்தோம் என்பது கூட அவனுக்கு நினைவில் இல்லை. ஒரு வருடத்திற்கு முன்னே தாய், தந்தையிடம் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று சண்டையிட்ட போது புகைப்பிடித்தது. அதற்குப் பின்னே அது பெரிதாய் தேவைப்படவில்லை.

இப்போது தலையும் வேறு வலிக்கத் தொடங்கியது. மெத்தையை தூக்கி புகையிலை இருக்கிறதா எனப் பார்த்தவன் அது கிடைக்காததில் கடுப்பாகி மடிக்கணினியை அடித்து அணைத்தான்.


“ஏன்யா பரிதி, இம்புட்டு நேரமா என்ன பண்ற, உங்க அப்பாவே கடைய அடைச்சிட்டு சாப்பிட வந்துட்டாரு. சாப்பிட்டு வந்து வேலைய பார்க்கலாம் இல்லையா?” சிந்தாமணி குரல் கொடுத்தவாறே மகன் அறையை எட்டிப் பார்த்தார்.


“வரேன் மா, போங்க” அமர்ந்த இடத்திலிருந்து அசையாது பேசியவனைப் பார்த்தவர்,

“ஏன்யா பரிதி முகம் ஒரு மாதிரி இருக்கு?” என அக்கறையாய்க் கேட்டார்.


அவர் குரலில் நிமிர்ந்தவன், “ம்ப்ச்... ஒன்னும் இல்லைமா. இம்சை பண்ணாம போங்க” என்றான் கடுப்பை மறைத்த குரலில்.


“அம்மா சாப்பிட கூப்பிட்டா ஏன்ண்ணா முகத்தைக் காட்டுற? வா... எல்லாரும் உனக்காகத்தான் வெய்டிங்!” அஜித் அண்ணன் கையை பிடித்திழுத்து கூடத்திற்கு அழைத்து வந்தான்.


மார்த்தாண்டம் அப்போதுதான் முகம் கை கால் கழுவி வந்து தரையில் விச்ராந்தையாய் அமர்ந்திருந்தார். முகம் கைகால் எல்லாம் குழாய் நீரோடு உவர் நீரும் வழிந்தது. கழுத்திலிருந்த துண்டால் அவற்றைத் துடைத்தவாறே தொலைக்காட்சியில் ஒலிபரப்பான எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றை ஓரக்கண்ணால் பார்த்தார். கீர்த்தனா மோர் எடுத்து வந்து அவருக்கு கொடுத்தாள். மே மாத வெயிலுக்கு அந்த மோர் அமிர்தமாக அவரது தொண்டையில் இறங்கிற்று.


“ஏன்டி, சாப்பிடுற நேரத்துல அவர் வயித்த மோர் கொடுத்து நெப்பிட்டு இருக்க? கூறுகெட்டவளே!” என்ற தாயின் வார்த்தைகளை காதில் வாங்காத கீர்த்தனா சுடசுட ஆவி பறக்கும் கோழி குழம்பை இறக்கி கொண்டு வந்து தரையில் வைத்தாள். சிந்தாமணி சோறையும் ஆட்டுக்கறி பிரட்டலையும் எடுத்து வைக்க, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டே அமர்ந்தான் பரிதி. நால்வரும் அமர, சிந்தாமணி உணவைப் பரிமாறினார்.

“மா, குழம்புல உப்பு பத்தல போலமா” ஒரு வாய் உண்டதும் கீர்த்தனா முகத்தை சுளித்தாள்.

“ஏன்டி அத்தனை பேரும் அமைதியா சாப்பிடும்போது உனக்கு மட்டும் என்ன உப்பு பத்தலை. பேசாம சாப்பிடு” சிந்தாமணி சிடுசிடுத்தார்.

அவரை முறைத்தவள் அரைதட்டு சப்பாட்டை அரைமணி நேரமாய் உண்ண, பரிதி படக்கென சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

“ஏன்டா போதுமா, அதுகுள்ளேயும் எழுந்துட்ட?” என்ற சிந்தாமணியின் வார்த்தைகளை காதில் வாங்காமல் அறைக்குள் அடைந்தான் அவன்.


“என்னாச்சு உன் மவனுக்கு, ஏன் ஒரு மாதிரியே இருக்கான். என்னென்னு கேட்க வேண்டியது தானே?” தட்டிலிருந்த கடைசி சோற்றை வழித்து உண்டவாறே மார்த்தாண்டம் கேட்க,


“தெரியலங்க, கேட்டேன். முகத்தை தூக்குறான். சரி அவனே சரி ஆகிடுவான்னு விட்டுட்டேன்!” என்றவர், தனக்கும் உணவை தட்டிலிட்டுக் கொண்டார்.


அறைக்குள் நுழைந்த பரிதி, மீண்டும் ஒருமுறை கணினியை உயிர்ப்பித்து அந்த மின்னஞ்சலை உற்றுப் பார்த்தான்.


‘விசா ரிஜெக்டெட்’ ஆங்கில எழுத்துக்களைத் தாங்கி வந்த மின்னஞ்சல் அவன் முகத்தில் அறைந்தது. இளம்பரிதி லண்டன் மாகாணத்தில் புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு அங்கு பணித்தேட தேவையான நுழைவு இசைவுக்கு விண்ணப்பித்து இருந்தான்.

முதல்முறை விண்ணப்பித்தபோது ஆவணங்கள் கோளாறு என்று நிராகரிக்கப்பட்டு விட்டது. மறுமுறை எல்லாம் சிரத்தை எடுத்து சரிபார்த்துதான் செய்திருந்தான். ஆனாலும் சரியான காரணம் கொடுக்காமல் நுழைவு இசைவு நிராகரிக்கப்பட்டிருக்க, அடுத்து என்ன செய்வது என்று தெரியாத திக்கற்ற நிலையில் இருந்தான்.

அவனது அடுத்த ஐந்தாண்டு திட்டம் முழுவதும் லண்டனை சுற்றித்தான் பின்னி வைத்திருந்தான். பரிதி இளங்கலை கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற்றதும் சொற்ப சம்பளத்திற்குத்தான் அவனுக்கு வேலை கிடைத்தது. நான்கு வருடங்கள் வேலை பார்த்தும் அவன் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிட்டவில்லை.

இவன் கல்லூரியில் உடன் பயின்ற மாணவன் ஒருவன் வெளிநாடு சென்று முதுகலை முடித்து அங்கேயே வேலைக்கு அமர்ந்து லட்சங்களில் சம்பளம் வாங்க, இவனுக்குள்ளும் அந்த ஆசை துளிர்விட்டது.

ஆனால் அங்கு சென்று படிக்கும் அளவிற்கு மார்த்தாண்டம் செல்வந்தர் அல்ல. அவர் கடந்த பதினைந்து வருடங்களாக சின்னதாய் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது வருமானம் வாயிக்கும் கைக்கும் போதும் போதாமலும் தான் இருந்தது.

சிந்தாமணி கெட்டிக்கார பெண்மணி என்பதால் சிறுக சிறுக சேமித்து அவர்கள் குடி இருக்கும் வீட்டை கட்டிவிட்டார். மற்றபடி அவர்களுக்கு என்று சொத்தென பெரிதாய் எதுவும் இல்லை. வீட்டு சூழ்நிலை காரணமாகவே பரிதியால் அவன் ஆசைப்பட்ட பொறியியல் படிப்பை படிக்க முடியாமல் போயிற்று. இளங்கலை கிடைத்ததைப் படித்திருந்தான். அதற்காக அவன் ஒன்றும் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனும் அல்ல.

பன்னிரெண்டாம் வகுப்பில் முயன்று படித்தும் எழுபது சதவீத மதிப்பெண்களுடன் பரிதி தேர்ச்சி பெற்றிருக்க, அவன் மதிப்பெண்ணுக்கு பொறியியல் படிப்பு அவனுக்கு எட்டாக்கனியாகிப் போனது.


அதனாலே அவன் மதிப்பெண் அடிப்படையில் அருகிலிருந்த கலை கல்லூரி ஒன்றில் கணிப்பொறி அறிவியல் சேர்ந்தான். விருப்பமே இல்லாமல் தான் படித்து முடித்தது. அதற்கு பின்பும் சம்பளம் குறைவாக கிடைக்க, இன்னுமே கடுப்பாகிப் போனான்.

நண்பனைப் பார்த்து வெளிநாடு சென்று படிக்கும் ஆசை பிரவாகமாகப் பொங்கிற்று. எப்படியும் படித்து முடித்து நல்ல வேலையில் அமர்ந்துவிட்டால் தங்கள் பொருளாதார நிலையும் உயரும், தம்பி தங்கையையும் அவர்கள் ஆசைப்பட்ட படிப்பில் சேர்த்து விடலாம்.

அஜித் வேறு மருத்துவம்தான் படிப்பேன் என உறுதியாய் இருக்க, தனியார் கல்லூரியில் அவனை சேர்க்க தங்கள் பொருளாதாரம் ஒத்துழைக்காது என்பதை உணர்ந்தவன், தாய் தந்தையிடம் தன் எண்ணத்தை பகிர, முதலில் மார்த்தாண்டம் அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை.


“வேண்டாம் பரிதி, அகலக் கால் வைக்க வேண்டாம்டா. இப்போ நீ வாங்குற சம்பளமே நல்லாதானே இருக்கு. இருபது இருபத்து ஐஞ்சு லட்சம் என்ன சும்மாவாடா இருக்கு உனக்கு. வெளிநாடு எல்லாம் போக வேண்டாம். இங்கயே எதாவது வேலையைப் பாரு போதும்” என ஆரம்பத்திலே முட்டு கட்டை போட்டு விட்டார் மனிதர்.

ஆனால் மகன் விடவில்லை. அடம்பிடித்து சண்டை போட்டு தாயை வைத்து தந்தையை சம்மதிக்க வைத்திருந்தான். அதன் பின்னே வேலைகள் துரிதகதியில் நடந்தன. அவர்கள் வீட்டு பத்திரத்தை வைத்து வங்கியில் கல்விக்கடன் பெற்று லண்டன் சென்று விட்டான்.

அங்கே சென்று நல்லபடியாய் படித்து முடித்து நாடு திரும்பியவன் வேலை தேட வேண்டும் என்று நுழைவு இசைவுக்கு விண்ணப்பிக்க, அது கிடைக்காமல் போயிற்று.

இன்னும் நான்கு மாதங்களில் வங்கி கடனுக்கு வட்டி கட்ட தொடங்க வேண்டும். எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்று அசட்டையாய் இறுமாப்புடன் இருந்தவனுக்கு இது பேரிடியாகத் தலையில் இறங்கிற்று. அந்த வேலையை வைத்துதான் தங்கைக்கு திருமணம், தம்பியின் படிப்பு என எல்லாமே திட்டமிட்டிருந்தான். அந்த மடை இப்போது அடைபட்டுக் கிடக்க, வேறு என்னவென யோசித்தான்.

தற்போதைக்கு வங்கிக்கடன் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாய் கழுத்தை நெரிக்க, பிடரியைக் கோதியவாறு சற்று முன்னே கண்டு பிடித்த புகையிலையை எடுத்து உதட்டுக்குக் கொடுத்தான். அதற்கு முன்னர் அறைக் கதவை நன்றாய் சாற்றினான்.

இல்லை என்றால் மார்த்தாண்டம் இவனை வெளுத்து விடுவார். அவருக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம். பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் கூட பெரிதாய் திட்ட மாட்டார். இது போல சுருட்டு, மது, மாது என்று திரிந்தால் வீட்டிற்குள்ளே சேர்க்க மாட்டார். அந்தளவிற்கு கண்டிப்பு நிறைந்த மனிதர் அவர்.


“என்னமோ எனக்கு இது ஒத்து வரும்னு தோணல சிந்தாமணி. நீயும் உன் மவன் பேச்சை கேட்டு ஆட்ற. இவன் மட்டும் தான் நமக்கு பிள்ளையா என்ன? இவனுக்கு அடுத்து ரெண்டு பிள்ளைக இருக்கு. அதுலயும் பொம்பள பிள்ளையை வேற பெத்து வச்சு இருக்கோம். அவளுக்கு கல்யாணம் காட்சி பண்ண வேண்டாமா? இவனை நம்பி, இருக்க ஒரு வீட்டையும் அடகு வைக்க போறோம். ஒழுங்கா படிச்சு முடிச்சு வேலைக்கு போய்டுவான் தானே?” ஒன்றுக்கு நான்கு முறை சொல்லிவிட்டுத்தான் வீட்டு பத்திரத்தையே கொடுத்தார் மார்த்தாண்டம்.


“ம்மா... ரொம்ப பேசுறாரு உன் புருஷன். அப்புறோம் இதே வாய்தான் நான் ஃபாரின் போய் சம்பரிச்சதும் என் மகன்னு பெருமை பேசும். அப்போ வச்சுக்குறேன் அவரை!” இவன் தாயிடம் சலம்பி சென்றது வேறு அலையா விருந்தாளியாக நினைவிற்கு வர, கையை சுட்ட சுருட்டை மிக கவனமாக ஜன்னல் வழியே வெளியே தூக்கி எறிந்தான்.


வெளியே இருந்த வெக்கை உள்ளேயும் படர, பிடரியைக் கோதினான். வியர்த்து வழிய, அறைக் கதவை திறந்தான். கூடத்தில் மார்தண்டம் பாய் விரித்து படுத்தருக்க, அருகில் அமர்ந்து இருந்த சிந்தாமணி அவர்கள் வீட்டு செடியில் பறித்த நித்திய மல்லியை சரமாக தொடுத்துக் கொண்டிருந்தார்.

அவரது கண்கள் சுவர் கடிகாரத்தில் ஒருமுறை படிய, நேரம் நான்கை தொடச் சென்றது.

கணவரை இவர் எழுப்ப செல்ல, “ம்மா, அப்பாவை எழுப்பாத, நான் போய் கடையைப் பார்த்துக்குறேன்...” என்றுவிட்டு அவரது பதிலை எதிர்பார்க்காது விறுவிறுவென கடை சாவியை எடுத்துக்கொண்டு சாலையில் நடக்கத் தொடங்கினான்.

வெயில் கொஞ்சம் இறங்கியிருக்க, விரைந்து நடந்தவன் சிந்தாமணி ஸ்டோர்ஸ் எனப் பெயர் பொறிக்கப்பட்டிருந்த சின்ன மளிகை கடையைத் திறந்து உள்ளே நுழைந்தவன், முதலில் சுவிங்கம் ஒன்றை எடுத்து வாயில் போட்டு மென்றான்.


அடுத்து என்ன செய்வது என மூளை இப்போது சுவாதீனமாய் ஆராய, சிலபல நிமிடங்கள் யோசித்துவிட்டு நண்பனுக்கு அழைத்தான். பரஸ்பர நல விசாரிப்புகள் முடிய, இவன், தான் அழைத்த விஷயத்திற்கு வந்தான்.


“பாபு, விசா ரிஜெக்ட் ஆகிடுச்சு டா!” என்றான் சின்ன குரலில்.


“ஏன்டா, என்ன ப்ராப்ளம்? அப்பீல் பண்ணலாம் டா... டோன்ட் வொர்ரீ” பாபு கூறியதும் இவனிடம் பெருமூச்சு எழுந்தது.


“அப்பீலும் போச்சு டா!” என்றான் சோர்ந்த குரலில்.


“என்ன சொல்ற மச்சான், அப்படிலாம் ஆகாதே. ரெப்ஃயூசல் லெட்டரை எனக்கு ஃபார்வர்ட் பண்ணு டா. நான் எனக்கு ப்ராசெஸ் பண்ண ஏஜென்சிகிட்டே பேசுறேன்டா. பட் அவுனுங்க அமௌண்ட் கேட்பாங்க டா. உனக்கு ஒகே தானே?” அவன் தயக்கமாய் கேட்டதும் இவனிடம் சில நிமிடம் மௌனம்தான்.


பின்னர் மூச்சை இழுத்துவிட்டு, “ஒகே டா, பார்த்துக்கலாம். நீ பேசிட்டு சொல்லு டா. எனக்கு இபோ விசா ரொம்ப முக்கியம்...” என்றான் சோர்ந்து போனக் குரலில்.


“சரி டா, ரொம்ப யோசிக்காத நீ, பார்த்துக்கலாம் டா. நான் என்னென்னு கேட்டுட்டு உனக்கு கால் பண்றேன்!” பாபு அழைப்பை துண்டிக்கவும், இவன் அப்படியே முகநூலில் உலாவ தொடங்கினான். வண்ண வண்ண‌மாய் உடையணிந்தப் பெண்கள் வந்து வரிசையாய் நடனமாடுவதைப் பார்த்ததும் மனம் கொஞ்சம் இலகுவானது. வெள்ளையாய் நீளமான முடியும் ஒல்லியான உடல்வாகுவுடன் இருந்தப் பெண்ணொருத்தி அவன் கவனம் ஈர்த்தாள். அவளை தனது விருப்பப்பட்டியலில் இணைத்துவிட்டு, பின்தொடரவும் செய்தான்.

பெண்கள் இப்படியிருந்தால்தான் அழகு என அவனால் வரையறுக்கப்பட்ட நிறமும் உடல்வாகுவும் நீள முடியும் இருந்தாலே அவர்களிடம் சட்டென இளகிவிடும் இளகிய மனம் கொண்டவன் பரிதி. கண்ணியரைப் பார்த்ததும் கவலைகள் மறந்தவனாக ஒரு விரலால் சொடுக்கி அடுத்தடுத்த காணொளியைப் பார்க்கத் தொடங்கினான்.

“லேடீஸ் பிங்கர்” என்று தொடங்கிப் பின்னர், சட்டென உள்நாக்கை கடித்துவிட்டு, “வெண்டைக்காய் என்ன பிரைஸ்?” எனக் கேட்டாள் பெண்ணொருத்தி.


“கால் கிலோ பதினைஞ்சு ரூபா’ இவன் தலையை நிமிர்த்தாமல் கூறவும், வெள்ளியில் ஒற்றை வளையல் அணிந்த கரம் ஒன்று எட்டி முன்புறம் இருந்த கூடையை எடுத்து வெண்டைக்காயை வெடுக்கு வெடுக்கென முனை உடைத்து பிஞ்சு காய்களைத் தன் கையிலிருந்த கூடையில் நிரப்ப, அந்த சத்தத்தில் எரிச்சலானவன் ஒருவித முகச்சுளிப்போடு நிமிர்ந்தான்.


“இப்படி நீங்க எல்லாத்தையும் உடைச்சு போட்டுட்டு இருந்தா மத்தவங்க காய் வாங்க வேண்டாமாமா!” குரலை உயர்தியவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள். அவனும் அப்போதுதான் அவளைப் பார்த்தான். கோதுமை நிறத்திலிருந்த பூனைக் கண்கள்தான் முதலில் அவனை ஈர்த்தன.


‘யாரு இவ?’ மனம் கேள்வி எழுப்ப, அன்னிச்சையாக அவளை ஆராய்ந்தான். மாநிறத்தில் இருந்தவளின் முகம் எதிர் வெயிலுக்கு மின்னியது. ஒற்றைக்கால் மூக்குத்தி, கண்ணை உறுத்தாத உதட்டு சாயம், அவள் அணிந்திருந்த வாசனை திரவியம், உடை என் அவள் நிச்சயம் தங்கள் தெருவாசியாக இருக்க முடியாது என அவன் ஒரு முடிவுக்கு வர,


“ஹலோ, எக்ஸ்க்யூஸ் மீ, தக்காளி, வெங்காயம் என்ன பிரைஸ்?” எரிச்சலாய்க் கேட்டாள் அவள். தான் இரண்டு முறை அழைத்தும் விடாது தன்னையே அவன் குறுகுறுவென பார்க்கவும் முகத்தைச் சுளித்தாள். அவள் முகம் போன போக்கில் இவனுக்கு கடுப்பானது.


‘ஆமா இவ என்னமோ ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கா. இவளை சைட் அடிச்சிட்டோம். கலரும் ஆளையும் பாரு. டேய் பரிதி, இவ உன் எக்ஸ்பெக்டேஷன் கிட்டே கூட வர மாட்டா. ஆளு புதுசா இருக்காளேன்னு பார்த்தேன். என் தப்புதான்.’ தன்னையே மானசிகமாக திட்டியவன் அவள் கேட்காத காய்களுக்கும் சேர்த்தே கடுப்புடன் விலையைச் சொன்னான்.


“பத்து ரூவா பேஸ்ட் ஒன்னுதா பரிதி!” ஐம்பது ரூபாய் தாள் ஒன்றை நீட்டிய முதிய பெண்மணி ஒருவர், “ஆமா கண்ணு, எப்போ லண்டன்ல இருந்து வந்த? அங்கேயே படிச்சிட்டு வேலை பார்க்க போறதா உன் ஆத்தா சொன்னா. நீ என்னடான்னா இன்னும் உங்க அப்பன் கடையிலே கெடக்க? எப்போ மறுபடியும் வெளிநாட்டுக்கு போக போற?” அவர் நீட்டி முழக்கி கேட்டதும் இவனுக்கு எரிச்சலானது.

ஆனாலும் முகத்தை சிரித்தது போலவே வைத்திருந்தவன், “இனிமேல் தான் ஆத்தா போகணும்!” என்றான் அவருக்கு மீதி சில்லறையைக் கொடுத்து.


“சரி.. சரி. நல்லபடியா போயிட்டு வா ராசா!” அவர் அகன்றதும் அருகில் காய் பொறுக்குபவளை ஒருநொடி ஓரக்கண்ணால் பார்த்தான். அவள் அவர்கள் பேச்சை கண்டுகொண்டதாய் தெரியவில்லை. தேவையான காய்களை எடுத்து அவனிடம் நீட்டினாள்.


“ஒன் ட்வென்டி ஆச்சு” அவன் அவள் வாங்கியவற்றை நெகிழிப் பையில் போட்டான்.

அவள் ஐநூறு ரூபாய் தாளை நீட்டவும், “ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இல்லை” என்றான் குரலை சின்னதாய் உயர்த்தி அவளை தன்னைப் பார்க்க வைத்திடும் நோக்கோடு.


“பரிதி, உள்ளாற டப்பால சில்லறை வச்சு இருக்கேன் பாருடா...” குரல் கொடுத்துக் கொண்டே வந்த மார்த்தாண்டம் மகனை முறைத்தார். அவர் பார்வையை சந்திக்காதவன் அந்த புதியவளுக்கு மீதி பணத்தை எண்ணிக் கொடுத்தான்.


“அம்மா எப்படி இருகாங்கமா?” அவளிடம் இவர் கேட்டதும் பரிதியின் பார்வை அன்னிச்சையாய் அவளை நோக்கிற்று.


“நல்லா இருக்காங்க அங்கிள்” சின்ன புன்னகையுடன் அவள் எதிரே இருந்த வீட்டின் வெளிக்கதவை திறந்து உள்ளே சென்றாள்.


“நீ போய் வேலை இருந்தா பாருடா. அப்படியே காபியும் குடிச்சிட்டு எனக்கு ஒன்னு உன் தம்பிகிட்டே கொடுத்து விடு!” என்றவருக்கு தலையை அசைத்தவனின் நினைவு பாபுவிடம் பேசிய பேச்சுக்களை அசைபோட, வீட்டை நோக்கி நடந்தான் இளம்பரிதி.


தொடரும்...
 
Last edited:
Well-known member
Messages
502
Reaction score
361
Points
63
Parithi london than poven adam pidicha seri but unnoda visa rejection unnoda life ah mattum.illa ma unnoda family ah yum trouble panna ma irundha seri
 
Well-known member
Messages
582
Reaction score
395
Points
63
நைஸ் ஸ்டார்ட், விசா ரிஜெக்ட் ஆனா அடுத்து பொழைப்புக்கு வழி தேட வேண்டாமா?
 

Lak

New member
Messages
12
Reaction score
4
Points
3
Nice start
 
Top