• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
அத்தியாயம் 16

அக்கருவி முடிவை காண்பிக்கும் இரண்டு நிமிடங்களில் இவளுக்கு இதயம் மத்தளம் வாசிக்க தொடங்கிவிட்டது…


உள்ளுக்குள் உணர்வுகள் ஆர்ப்பரித்து கடல் அலையாய் கிளம்பியது.


இருந்தும் இதயத்தின் ஓரத்தில் சிறிதாக அச்சம் அச்சாரமிட்டிருந்தது‌. இல்லையென்று ஆகிவிட்டால்.‌‌..


தனது கற்பனை கானல் நீராக போய்விட்டால் என்ன செய்வது என்றும் எண்ணம் அலைமோதியது.


ஒரு நொடி விழிகளை மூடி ஆழ்ந்து சுவாசித்தவள் தன்னை நிதானப் படுத்தி கொண்டு கண்களை திறந்து பார்த்தாள்…


இரண்டு கோடுகளை முடிவாக காண்பித்து அவளை அந்நொடி மொத்தமாக இன்பத்தில் உறைய செய்து விட்டது.‌‌..


சடுதியில் விழிகள் கலங்கிவிட்டது. இதை தான் ஆனந்த கண்ணீர் என்பார்களோ…


சொல்ல முடியாத ஒன்று நெஞ்சை அடைத்தது மகிழ்ச்சியில்…


வார்த்தையால் விவிரிக்க முடியாத நிலை. ஒவ்வொரு பெண்ணும் அலாதியாக உணரும் இன்பம்.


அதனை தானும் அனுபவித்தவள் விழிகளில் இருந்து வழிந்த நீரை துடைத்தாள்…


அந்த கருவியை எடுக்க கரங்கள் சற்று நடுங்கியது. அவர்களது சிறிய உலகத்தில் புதிதாக முளைத்திருக்கும் புது மொட்டை உறுதி செய்திருந்த அதனை பார்க்கும் போதே இதழ்கள் புன்னகையில் வளைந்தன.‌..


நிறைவான புன்னகை என்பார்களே அது அவளது இதழில் குடி கொண்டிருந்தது.‌‌..


பூமிக்கே வலிக்காத வகையில் மெதுவாக பாதத்தை எடுத்து வைத்து நடந்து வந்தவள் ஹாலில் உள்ள நாற்காலியில் அமர்ந்துவிட்டாள்…


அவளுக்கு நேரம் தேவைப்பட்டது விழிகள் கண்ட உண்மையை உள்ளம் உணர்ந்து கொள்ள ஆசுவாசம் கொள்ள…


அறையில் அத்தனை அமைதி அவளது இதய துடிப்பு மட்டுமே அவளுக்கு கேட்டது…


இதில் தங்களது குழந்தையின் இதய துடிப்பும் கேட்குமே என்று நினைத்தவளின் விரல்கள் வயிற்றில் ஊர்ந்தது.


இப்போதே இந்நொடியே ஹரியை பார்க்க வேண்டும். தங்களது வீட்டில் புது உறுப்பினரை பற்றி கூற வேண்டும் என்று அவா பேரலையாய் எழுந்தது.‌‌


தொலைபேசியை எடுத்தவள் ஹரிக்கு அழைப்பு விடுத்தாள். அழைப்பு போய் கொண்டே இருக்க அவன் ஏற்கவில்லை.


அழைப்பு துண்டாகியது. மீண்டும் அழைப்பு விடுத்தவளுக்கு அப்போது தான் அவனுக்கு இன்று மீட்டிங் இருப்பதாக கூறியது நினைவு வர அழைப்பை நிறுத்திவிட்டாள்…


நிமிடங்கள் கடக்க எந்த வேலையும் செய்ய தோன்றவில்லை.


அப்படியே நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள். கடிகாரம் வழக்கத்திற்கு மாறாக இன்று மெதுவாக ஓடுவது போல பிரம்மை…


எழுந்து சென்று சமையலறையில் வேலை எதாவது இருந்தால் செய்யலாம் என்று நினைத்தவள் மெதுவாக எழுந்து சென்றாள்.


பாத்திரங்களை கழுவி கொண்டு இருக்கும் நேரம் திடீரென தாயின் நினைவு வந்தது. தான் கருவுற்றிருப்பதை கேள்விப்பட்டதும் எத்தனை மகிழ்ந்திருப்பாள்.


குடும்பமே மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். அனைவரும் என்னை வாழ்த்தியிருப்பார்கள். தீபி என்னை கலாய்த்திருப்பாள்.


தான் மட்டும் அவர்களுடன் சுமூகமான உறவுடன் இருந்திருக்க கூடாதா என்று மனது எண்ணமிட்டது.


தாயின் அருகாமைக்காக மனம் ஏங்கி தவித்தது.


இச்சமயம் அதை செய்ய கூடாது இதை செய்ய கூடாது. இதை தான் சாப்பிட வேண்டும் என்று ஆயிரம் அறிவுரைகளை வழங்கியிருப்பார்.


இப்போது எதை செய்ய வேண்டும். என்ன சாப்பிட வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்று எதுவுமே தனக்கு தெரியாது என்று பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.


'இப்போது தான் தாயின் நினைவு வந்ததா உனக்கு. இத்தனை நாள் எங்கே போய்விட்டது இந்த பாசம்' என்று மனசாட்சி இடித்துரைக்க,


'இப்போதும் நான் கோபமாக தான் இருக்கிறேன். எனக்கு என் ஹரி இருக்கிறான். இவ்விடயம் கேள்விப்பட்டதும் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குவான். அவனை போல யாராலும் என்னை பார்த்து கொள்ள முடியாது' என்று அதற்கு ஒரு குட்டு வைத்தவள் வேலையை கவனித்தாள்…


பாத்திரங்களை கழுவி முடித்தவள் மதியத்திற்கு தான் டிபன் பாக்ஸில் வைத்திருப்பதை சாப்பிட்டு கொள்ளலாம் என்று நினைத்து குளித்து வர சென்றாள்…


குளித்து வர மதிய உணவு நேரம் வந்திருந்தது. சாப்பாட்டை எடுத்து வைத்து உண்டவள் ஓய்வு எடுப்பதற்க்காக அறைக்குள் செல்ல சாப்பிட்ட அனைத்தும் குமட்டுவது போல இருந்தது.


ஓடிச்சென்று வாஸ்பேஸனில் அனைத்தையும் வாந்தி எடுத்து விட்டாள். குடலே வெளியே வரும் அளவிற்கு வாந்தி எடுத்தவளுக்கு உடலில் உள்ள சக்தி எல்லாம் வடித்துவிட்டது.


முகத்தை கழுவிவிட்டு வந்து மெத்தையில் விழுந்தவள் அசதியில் சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்…


அந்தி சாயும் நேரம் அவளுக்கு விழிப்பு தட்ட மெதுவாக விழிகளை மலர்த்தியவள் நேரத்தை பார்க்க ஐந்தரை என்று காண்பித்தது.


'இவ்வளவு நேரம் உறங்கிவிட்டேனா…?' என்று நினைத்தபடியே எழுந்தவளது வயிறு சத்தமிட்டு தானிருப்பதை உறுதி செய்தது.


சாப்பிட்டால் மீண்டும் வாந்தி வந்துவிடுமே என்று அஞ்சியவள் சிறிது நேரம் சிந்தித்து லெமென் ஜூஸ் அருந்தலாம் என்று முடிவு செய்து அதனை தயாரித்து குடித்தாள்.


இருந்தும் வாந்தி வந்து விடுமோ என்று பயந்தபடியே இருக்க ஏதும் செய்யவில்லை. வயிறும் சற்று அமைதியாகியிருந்தது.


நேரத்தை பார்த்தவள் இன்னும் சிறிது நேரத்தில் ஹரி வந்துவிடுவான் அவனிடம் சொல்ல வேண்டும் தனது மகிழ்ச்சியை அவனுக்கும் கொடுக்க வேண்டும் என்று எண்ணியபடியே அமர்ந்திருந்தாள்.


அவனிடம் எப்படி இதை கூறுவது என்று சிந்தித்தவளுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை.


நேரடியாகவே அவனிடம், 'நீ அப்பாவா போகிறாய்…' இல்லையில்லை,

'நாம் பெற்றோராக போகிறோம்' என்று கூறிவிடலாமா‌‌…? என யோசிக்கையிலையே சிறிதாக நாணம் சிம்மாசனமிட்டது.


உள்ளம் அடித்து கொள்ள எப்படி அவனிடம் கூறுவது என்பது பெரிய பிரச்சனையாக தொன்றியது‌.


'பேசாமல் நமது கூட்டிற்குள் புதிதாக ஒரு மொட்டு முளைத்திருக்கிறது…' என்று சொல்லலாமா…?


'உன்னால் அவன் முகத்தை பார்கத்து வெட்கப்படாமல் கூறமுடியுமா ‌…?' என்று மனது எள்ளி நகையாடியது.


அவனிடம் கூறுவதை நினைத்து இப்போதே கூச்சம் வந்து ஒட்டி கொண்டது…


'ஹையோ…' என்ற படி முகத்தை கைகளால் மூடி கொண்டாள்.


'பேசாமல் நமது வீட்டிற்கு புதிதாக ஒரு உறுப்பினர் வரப்போகிறார்' என்று கூறலாமா…?


'அவன் யாரென்று புரியாமல் வினவினால் என்ன பதில் சொல்வது' என்று தோன்ற அதைவிட்டுவிட்டாள்.


தான் இதுவரை பார்த்த படங்களில் மனைவி கணவனிடம் தனது கர்ப்பத்தினை கூறும் காட்சிகளை மனதில் ஓட்டி பார்ததாள்.


தீரன் அதிகாரம் ஒன்று, பட்டாசு பட காட்சிகள் எல்லாம் நன்றாக நினைவில் வர தங்களிடம் அது போல பொருட்கள் ஏதுமில்லை என்று நினைத்தவள் தாமாகவே எதாவது செய்யலாம் என்று பலவாறாக சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்தாள்.


எழுந்து சென்று அந்த கருவியை ஒரு கிஃப்ட் பேப்பரில் சுற்றி பேக் செய்து அதன் மேலே, 'வெல்கம் டூ அவர் நியூ ஃபேமிலி மெம்பர்' என்று எழுதி இரண்டு பெரிய இதயங்களை வரைந்து அதன் இடையில் ஒரு சிறிய இதயத்தை வரைந்து வைத்தவள் அதனை டேபிளின் மேல் வைத்து விட்டு மீண்டும் அவனது வரவை எதிர்பார்த்து அமர்ந்துவிட்டாள்.


நேரம் செல்ல செல்ல அவளுக்குள் ஒரு இன்ப பரபரப்பு பூத்தது. மேலும் கூடவே சேர்ந்து நாணமும் பூத்தது‌.


கண்ணாடி முன் நின்று கூந்தலை அழகாக போனி டெய்ல் இட்டுவிட்டு தன்னுடைய தோற்றத்தை ஒரு முறை பார்த்து கொண்டாள்.


ஸ்கை ப்ளூ நிறத்தில் புல் ஸ்லீவ்வில் ஒரு ஜார்ஜெட் டாப்ஸூம் லைட் க்ரீம் நிறத்தில் அதே ஜார்ஜெட்டில் பூக்களிட்ட தரையை தொடும் ஸ்கர்டும் அணிந்திருந்தாள்.


இவ்வுடை ஆசையாக அவளுக்கு ஹரி வாங்கி தந்தது.


அழைப்பு மணி ஓசையடிக்க இவளது இதய துடிப்பும் அதற்கு தாளம் போட்டது‌.


வேகமாக செல்ல நினைத்தவள் பின்னர் தலையில் தட்டிவிட்டு மெதுவாக நடந்து சென்று புன்னகை முகத்துடன் கதவை திறந்தாள்…


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல முகம் அத்தனை பளபளப்புடன் இருந்தது.


வேலை சற்று அதிகமாக இருந்ததால் மிகவும் களைப்புற்று வந்த ஹரியும் ப்ரஷாந்தியின் புன்னகை முகத்தினை கண்டு புன்முறுவல் பூத்தபடி உள்ளே நுழைந்தான்.


அவன் நுழைந்ததும் கதவை பூட்டிவிட்டு திரும்பியவளின் விழிகள் டேபிளின் மேல் தான் நிலைத்தது.


அவன் வந்ததும் அங்கு தான் தனது பேக்கை வைப்பான்‌. கண்டிப்பாக அவனது பார்வையில் இது பட்டுவிடும் என்று நினைத்து அங்கே வைத்திருந்தாள்.


தானாக கூற ஆயிரம் தயக்கம் அவளுக்குள்.


உள்ளே வந்தவன் டேபிளின் புறம் பார்வையை கூட திருப்பாமல் பேக்கை வைத்துவிட்டு நாற்காலியில் கால்களை நீட்டியவாறு அமர்ந்துவிட்டான்‌.


அவன் அந்த புறம் கூற திரும்பாததில் ஏமாற்றம் அடைந்தவள் இப்போது எப்படி கூறுவது என்ன வருத்தத்துடன் எண்ண தொடங்க,


"ரொம்ப டயர்ட்டா இருக்கு. ஒரு காஃபி கிடைக்குமா…?" என ப்ரஷாந்தியிடம் வினவினான்.


சிந்தனையுடனே இருந்தவள் அவனது கேள்வியை கவனிக்க தவறிவிட,


பதில் கூறாது நிற்பவளை கண்ட ஹரி,

"ப்ரஷாந்தி உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்" என்று மீண்டும் அழைத்தான்.


அதில் சிந்தை கலைந்தவள்,

"ஹான் என்ன ஹரி…? என்ன கேட்ட…?" என திக்கியவாறு முழித்தாள்.


"ஒரு காஃபி கேட்டேன்" என்று அவளை பார்த்து கொண்டே கூறினான்.


"ஹ்ம்ம் கொண்டு வர்றேன். நீ ப்ரெஷ் ஆகிட்டு வா…" என்று கிச்சனுக்குள் சென்றாள்.

ஹரி ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்த பிறகும் வெகுநேரமாக ப்ரஷாந்தி காஃபியை கொண்டு வரவில்லை.


அவளோ அங்கு,

'ஏய் ப்ரஷி உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. அதை ஏன் அவ்ளோ தள்ளி உள்ள வச்ச. அதுனால தான் அவன் பார்க்காம விட்டுட்டான். நீ முன்னாடியே வச்சிருந்தா பார்த்திருப்பான்'

'இப்போ இந்த ஐடியா ப்ளாப் ஆகிட்டு. இனி அடுத்து வேற ஐடியா யோசிக்கணும். என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம்' என்று தனக்கு தானே புலம்பியபடி காஃபி போடாமல் நின்றிருந்தாள்.


பொறுத்து பொறுத்து பார்த்த ஹரி கிச்சனுக்கு சென்று,

" ஒரு காஃபி போட இவ்ளோ நேரமா உனக்கு‌‌..?" என வினவினான்.


அவனை அங்கு கண்டதும் தன்னுடைய புலம்பலை கேட்டிருப்பானோ…? என்று ஐயம் கொண்டவள் பதில் கூறாது மலங்க மலங்க விழித்தாள்.


"உன்னை தான் கேட்கிறேன்‌. காஃபி போட இவ்ளோ நேரமா…?" என வினவ,


அவன் எதையும் கேட்கவில்லை என்று தெரிந்ததும் ஆசுவாசம் அடைந்தவளுக்கு அப்போது தான் தான் புலம்பியபடி காஃபி போட மறந்திட்டது நினைவு வந்தது.


'அச்சச்சோ காஃபி போட மறந்திட்டேனே' என்று மனதிற்குள் அலறியவள்,


"ஹரி அது… அது வந்து…" என்று விட்டு என்ன பதில் கூறுவது என தெரியாமல் விழித்தாள்.


வந்ததிலிருந்தே அவளது செய்கையில் தடுமாற்றத்தை உணர்ந்தவன் ஆராய்ச்சியாக பார்த்து கொண்டே,


"என்ன ஆச்சு உனக்கு. ஏதும் ஹெல்த் இஸ்ஸூஸ்ஸா…?" என்றபடி நெற்றியில் கைவைத்து பார்த்தான்.


'இதுதான் சந்தர்ப்பம் வேகமாக சொல்லிவிடு சொல்லிவிடு' என்று மனது உந்தி தள்ள,


அவளுக்கு வாயில் வார்த்தைகள் வர மறுத்தது.


"ஒன்னுமில்லை ஏதோ யேசனையில மறந்துட்டேன். இதோ இப்போ காஃபி போட்றேன்" என்று பதில் மொழிந்தாள்‌.


சரியென தலையசைத்தவாறு அவளை ஆராய்ந்தவனின் விழிகள் அப்போது தான் அவளது தோற்றத்தை கவனித்தது.


"என்ன இன்னைக்கு மேடம் ரொம்ப அழகா இருக்கிங்க" என்றவாறு அவளை மேலும் நெருங்கியவன் கன்னத்தில் வாசனை பிடித்தான்.


'ஆஹா ட்ராக் வேற ரூட்ல போகுதே. இப்படியே போனா உன்னால இன்னைக்கு சொல்ல முடியாது' என்று மூளை கூற, மனமே அதற்கு மாறாக அவனது அருகாமையில் மயங்கி கொண்டு இருந்தது.


கன்னத்தில் இருந்தவனின் இதழ்கள் மெதுவாக கழுத்திற்கு இடம் பெயர அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்தவன் இடையோடு சேர்த்து அவளை அணைத்திருந்தான்.


அவனது கரங்கள் அவளில் ஊற தொடங்கிய நொடி மூளைக்குள் மின்னல் வெட்டியது‌.


இது போன்ற நேரங்களில் ஏதும் செய்ய கூடாது என யாரோ கூறியது நினைவில் வர சட்டென்று அவனை தன்னிடமிருந்து விலக்கியிருத்தாள்‌.


ஒரு மோன நிலையில் இருந்து வெளிவந்தவன் என்னவென்பதாக அவளை நோக்க,


"எனக்கு பசிக்கிது. சாப்பிட்டு…" என்று வாய்க்கு வந்ததை உளறினாள்.


"குக் பண்ணிட்டியா…?"


"ம்ஹூம் இல்லை"


"ஓகே நான் குக் பண்றேன். நீ வெயிட் பண்ணு" என்று கூற,


தலையசைத்துவிட்டு வெளியே வந்ததவளுக்கு போன உயிர் திரும்ப வந்த உணர்வு.


'நல்ல வேளை தடுத்துவிட்டேன். இல்லையென்றால் என்ன ஆவது' என நிம்மதி அடைந்தவள்,


'இனி இந்த ஐடியாவெல்லாம் சரிவராது தானே கூறிவிடலாம்' என்று முடிவெடுத்தாள்.


அவன் சமைத்து வருவதற்குள் எப்படி ஆரம்பித்து எவ்வாறு முடிப்பது என்று தனக்குள்ளே ஒத்திகை பார்த்து கொண்டாள்.


"இன்னும் பை மினிட்ஸ். குக்கிங் முடிஞ்சிடும்" என்று ஹரி கிச்சனிலிருந்து எட்டி பார்த்து கூற,


சம்மதமாக தலையசைத்தவளுக்கு பதட்டம் பாரபட்சம் இல்லாமல் உள்ளமெங்கும் பரவிவிட்டது‌.


"டின்னர் ரெடி" என்று சாப்பாட்டை எடுத்து வந்து வைத்தவன்,


"வா சாப்பிடலாம்" என்று அவளை அழைத்தான்.


பதட்டத்தில் சொல்ல நினைத்ததை கூறாமல் அவனருகில் சென்று அமர்ந்தாள்.


சாப்பாட்டை ப்ளேட்டில் வைத்து ஹரி அவளுக்கு ஊட்டிவிட அமைதியாக வாயை திறந்து வாங்கி கொண்டாள்.


ஹரியும் ஏதும் பேசாது தானும் உண்டபடி அவளுக்கும் ஊட்டிவிட்டான்.


"எப்போதும் எதாவது பேசியபடியே உண்பவள் இன்று இத்தனை அமைதியாக இருக்கிறாளே' என்று எண்ணியவன்,

"எப்பவுமே எதாவது பேசிக்கிட்டே இருப்ப. இன்னைக்கு ஏன் இவ்ளோ சைலண்ட். ஆர் யூ ஒகே" என்று வினா எழுப்பினான் கவலையுடன்‌.


அவனது வருந்திய முகத்தை கண்டவள், "ப்ச் ஒன்னுமே இல்ல. நீயாவது எதையா நினைச்சு பீல் பண்ணாதா.‌.. " என்று புன்னகைத்தவள்,

'இன்னும் சிறிது நேரத்தில் சாப்பிட்ட அனைத்தும் வெளியே வந்ததும் உனக்கே தெரிந்துவிடும்' என்று எண்ணும் போதே குமட்டல் வந்திட்டது‌.


எழுந்து வாஸ் பேசனை நோக்கி ஓடினாள்.


"என்னாச்சு ப்ரஷாந்தி…" என்று பதட்டமாக ஹரி அவள் பின்னே ஓடினான்.


சாப்பிட்ட உணவு முழுவதையும் வாந்தி எடுத்தவளால் நிற்க முடியவில்லை.


அவளை தாங்கி பிடித்தவன், "என்ன செய்யுதுடி. அப்போதுல இருந்து கேட்கிறேனே பதில் சொல்றியா…" என்று கடிந்து அவளை அமரவைத்து விட்டு தண்ணீரை எடுத்து வந்தான்.


முகத்தை கழுவிவிட்டு நீரை அருந்தியவளுக்கு சிறிது தெம்பு கிடைத்தது.


"நான் டாக்டருக்கு கால் பண்றேன்" என்று ஹரி தொலைபேசியை எடுக்க,


"ஹரி ஒன் மினிட் நான் சொல்றதை கேளு…" என்று உரக்க கூறியவளது குரல் அவனை தடை செய்தது‌.


ஹரி தொலைபேசியை அனைத்து விட்டு அவளை பார்க்க,


"டேபிள் மேல ஒரு கிஃப்ட் கவர் வச்சிருக்கேன் பாரு. அதை பிரிச்சு பாரு" என்றாள்.


"ப்ச் உனக்கு இங்க உடல்நிலை சரியில்
லை. நீ என்ன பேசிட்டு இருக்க…" என்று கோபத்துடன் இரைய,


"நான் சொல்றதை பர்ஸ்ட் செய். உன் கொஸ்டினுக்கு ஆன்சர் கிடைக்கும்" என்று இயம்பினாள்.


ஹரி அரை மனதுடன் வெளியே செல்ல இங்க அவனது எதிர்வினையை பார்ப்பதற்க்காக ப்ரஷாந்தி ஆவலுடன் பரபரப்பும் நாணமும் சேர்ந்து கொள்ள முகத்தை கைகளால் மூடியபடி அமர்ந்துவிட்டாள்…


தொடரும்…

இவள் மீரா க்ரிஷ் ♥️♥️

















 
Well-known member
Messages
1,081
Reaction score
770
Points
113
Super super super super
 
Top