• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,259
Reaction score
3,689
Points
113
எண்ணம் – 11

மலர்விழியின் பேச்சில் நொடியில் தனா சிக்கியிருந்த மோனநிலை அறுந்துவிழ, அவளிடமிருந்து விலகி எழுந்து விளக்கை உயிர்ப்பித்தான்.

அவனை முறைத்துக்கொண்டே அவள் எழ, அருகே சென்றவன், “இப்போ என்ன டி சொன்ன?” என்றான் ரௌத்திரமாய்.

“நான் சொன்னது உண்மைதானே?” மலர்விழி கோபத்தில் சிலிர்க்க, அப்படியே கையை அவளது கன்னத்தை நோக்கி நீட்டியிருந்தான் தனா. அவனது கரத்திற்கும் அவளது கன்னத்திற்கும் நூலிழை அளவுதான் இடைவெளி இருந்தது. ஆனால், மலர்விழி ஒரெட்டு கூட நகர்வில்லை. அப்படியே நின்றிருந்தாள்.

“சை...” எனக் கோபத்தில் கையை இறக்கியவன், “என் மேல இருக்க கோபத்துல உன்னை நீயே கீழே இறக்கிட்டு இருக்க விழி‌. பேசுற வார்த்தை ஒவ்வனொன்னுத்துக்கும் உயிர் இருக்குன்றதை மறந்துடாதே! என்ன சொன்ன? சான்ஸ் கிடைச்சா உரசுறேன்னா.‌ அப்படியொரு எண்ணம் இருந்தா, இந்த ஒரு மாசத்துல எப்பவோ உரசி இருப்பேனே டி...” ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த தலையைக் கோதியவன், “என்னை அவ்ளோ சீஃப்பா நினைச்சுட்ட இல்லை. சீ... அவ்வளோதான் டி நீயும் உன் எண்ணமும்...” என அருகிலிருந்த சுவற்றில் கையை ஓங்கி குத்தினான். கோபத்தை அருகிலிருந்தவளிடம் காட்ட முடியாத ஆதங்கம். எத்தனைக் கோபம் வந்தாலும் பெண்களை கைநீட்டி அடிப்பது பெரிய குற்றம் என லீலாவதி என்றோ கூறிய வார்த்தைகள் செவியை மோதின.

மலர்விழி எந்தச் சலனமும் இல்லாது அவனைப் பார்த்தாள். கதவை பட்டென அடைத்துவிட்டு தனஞ்செயன் வெளியேற, இத்தனை நேரமிருந்த இறுமாப்பும் இறுக்கமும் அவளிடம் தளர்ந்துவிட்டது. விழிகளோடு சேர்த்து உள்ளமும் கலங்கி கதறித் துடித்தது. வேதனையும் கோபமுமாய் பேசிச் சென்ற தனஞ்செயன் முகம் அவளின் நிம்மதியை மொத்தமாய் பறித்திருந்தது. இதயத்தை யாரோ ஓங்கி அடித்த உணர்வு. அடிவயிற்றிலிருந்து உணர்வொன்று மேலெழும்பிப் புறத்தூண்டலை மறக்கச் செய்திருந்தது.

அப்படியே மெத்தையில் பட்டென அமர்ந்துவிட்டாள். விழிகளிலிருந்து மெல்லக் கண்ணீர் இறங்க, முட்டியில் முகம் புதைத்தவளுக்கு அழுகைத் தொண்டையை அடைத்தது. மெல்லிய விசும்பல் பெரிய அழுகையாய் மாறியது. தேம்பி அழுதாள், எவ்வளவு நேரம் அழுதாள் என கணக்கின்றி விழிகளிலிருந்து உவர் நீர் அவளது உடையை நனைத்திருந்தது. மலர் பேசிய பேச்சுக்கள் சத்தியமாய் மனதிலிருந்து வரவில்லை. அவனின் அருகாமையைப் பொறுத்துக் கொள்ள முடியாது வார்த்தைகளை வீசியிருந்தாள். இப்போது மனம் முழுவதும் வலியும் வேதனையும்தான்.

தன் மீதே அதிகக் கோபம் வந்தது. ‘எப்படி அவனைப் பார்த்து அப்படியொரு வார்த்தையைக் கேட்க எனக்கு மனம் வந்தது? என்னுடைய தனா அப்படிப்பட்டவன் இல்லையே! கண்ணியமான ஆடவனாகிற்றே!’ மனதும் மூளையும் சண்டையிட்டன. அழுதழுது
சோர்ந்து போனாள். முகம் முழுவதும் கண்ணீர் தடயங்கள் தான். யாரிடமும் இதுவரை பகிராதத் தன் காதலை நினைத்து அழுதாள். வேதனை முழுவதையும் கண்ணீரில் கரைத்திட நினைத்து அழுதாள்.
இது போல சண்டைகள் நிறைய வர வாய்ப்பு அதிகம் என எண்ணித்தானே இந்த தான தனக்கு வேண்டாம் என மனதைக் கடினப்பட்டு அவனிடமிருந்து திசைதிருப்பி இருந்தாள். ஆனால், விதி 'மாறன்' என்ற பெயரில் அவளை தனாவுடன் சேர்த்து வைத்திருந்தது‌.

இரவு முழுவதும் மலர்விழிக்குத் தூக்கமே வரவில்லை. அப்படியே அமர்ந்து இருந்தாள். அழுததில் முகமும் விழியும் சிவந்து போயிருந்தன. அதைவிட நெஞ்சம் முழுவதும் பாரம்.

தனஞ்செயனும் கிட்டதட்ட அப்படித்தான் இருந்தான்‌. தான் இந்தளவு அவளிடம் இறங்கிப் போய் பொறுமையாய் பேசுவதால், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்துவிட்டாள் போல என மனம் கசந்தது. இனிமேல் அவளிடம் ஒரு வார்த்தைக் கூட பேசக் கூடாது. எப்படியொரு நல்ல எண்ணம் என் மீது வைத்திருக்கிறாள் என மனம் வலித்தது. ‘ச்சு... போடி...’ என மலரின் நினைவுகளை விரட்ட முயன்று தோற்றவனுக்கும் நித்திரை விழிகளைத் தழுவவே இல்லை.

மறுநாள் காலையில் எழுந்த தனா, மலர்விழியின் அறையின் பக்கம் கூட கண்களை சுழலவிடவில்லை. அவள் அறையைவிட்டு வெளியே வரும் முன்னே உண்டுவிட்டு அலுவலகம் கிளம்பிவிட்டான்.

இரவு முழுவதும் தூங்காதது தலை வலியை உண்டுப் பண்ணியிருந்தது. குளித்து முடித்து அறையைவிட்டு மலர் வெளியே வந்தாள். விழிகள் அவளது அனுமதியின்றி தனாவின் அறையைத் தொட்டு மீண்டன.

கதவு அடைத்திருந்தது. இன்னும் அவன் வெளியே வரவில்லை போல என மலர் தேநீரை தயாரித்து குடித்துவிட்டு கல்லூரி கிளம்பி வெளியே வந்தாள். அப்போதும் தனஞ்செயன் அறை மூடப்பட்டிருக்க, ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தாள். அவனது மகிழுந்து இல்லாதிருக்க, அவன் கிளம்பிவிட்டான் எனப் புரிந்தது. அன்றிரவும் அப்படித்தான் நடந்துகொண்டான். அவளைக் கண்டு கொள்ளாது அறைக்குள் சென்று முடங்கினான்.

ஒரு வாரம் முடிந்திருந்தது மலர் தனஞ்செயனைப் பார்த்து. கண்ணில் பட்டால் கூட, நொடியில் அறைக்குள் அடைந்து கொண்டான். முன்பு பேசாவிட்டாலும், என்ன செய்கிறாள் எனப் பார்வை அவ்வப்போது மனைவியைச் சுற்றிவரும். மலரும் அதை உணர்ந்திருக்கிறாள். ஆனால், இப்போது இமைகள் கூட அவள் புறம் திரும்பவில்லை.

நடந்த நிகழ்வில் தவறு தன்மீதுதான் என குற்ற உணர்வில் இருந்தவள், தனாவின் பாரா முகத்தால் சீண்டப்பட்டாள்.
‘நீ என்ன என்னை ஒதுக்குவது? நீ எந்த வகையிலும் என்னைப் பாதிக்கவில்லை. உன் இன்மை என்னை எதுவும் செய்திடவில்லை!’ என்பது போல மீண்டும் கோபத்தை இழுத்துப் பிடிக்க முயன்றாள். ஆனால், அவளால் அப்படியிருக்க முடியவில்லை. பாதித்தான் இந்த தனஞ்செயன். பெண்ணை அதிகமாய்ப் பாதித்தான்.
அவனது பார்வையும் பேச்சும் வேண்டுமென ஆசை கொண்ட மனது மலரை நிம்மதியாயிருக்க விடவில்லை.

கணவனின் பாரா முகம் தன்னைப் பாதிக்கவில்லை என நம்ப வைக்க முயன்று தோற்றாள். எப்போதும் புன்னகையுடன் வலம் வருபவன் இப்போது இவளைக் கண்டால் இறுகிப் போய்விடுவதை உணர்ந்து மனது தவித்துப் போனது. தானாய் அவனிடம் போய் பேச தன்முனைப்பு தடுத்துவிட்டது.

ஒரே வாரத்தில் மொத்தமாய் சோர்ந்து போனாள். இன்னும் நான்கு நாட்களில் பரிட்சை இருக்கிறது என மூளை உணர்ந்தாலும், மனதும் உடலும் படிப்பதற்கு ஒத்துழைக்கவில்லை. படிப்பில் கவனம் சிதறியது. தனாவின் மீது கோபமாய் வந்தது

இப்படித்தானே பல வருடங்களுக்கு முன்பு அவளது கவனத்தைச் சிதறச் செய்திருந்தான். அப்போதும் தனாவின் மீது கோபம் கட்டுக் கடங்காது பொங்கியது. இவன் என்னை மனதளவில் அதிகமாய் பாதிக்கிறான், என்னுடைய உறுதியைக் குலைத்துவிடுகிறானே,
கட்டுப்படுத்துகிறானே, என்ற எரிச்சல் படர்ந்தது.

'தேர்வுகளை நன்றாய் எழுத வேண்டும். இந்த வருடப் படிப்பை நன்றாக முடித்தால்தான் கல்விக்கடனை தன்னால் சரியாக செலுத்த முடியும். அப்படியில்லை என்றால் அதுவும் தன் பெற்றவர்களின் மீதுதான் விழும்' என்ற எண்ணம் மன உளைச்சலை உண்டு பண்ணியது. ஒரே வாரத்தில் இந்த தனஞ்செயன் ஒரு வார்த்தைகள் கூட உதிர்க்காது மலரை ஒரு வழியாக்கியிருந்தான். இந்த ஒரு மாதம் தானும் அவனிடம் இப்படித்தான் நடந்து கொண்டோம் என்பதை வசதியாய் மலர்விழியின் மனது மறந்து போனது.

கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் விழி.
ஏற்கனவே மனம் முழுவதும் எரிச்சலில்தான் இருந்தாள். இதில் போக்குவரத்து நெரிசல் வேறு. இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்தவளின் வலது கையில் பட்டென ஒரு துளி நீர் பட, நிமிர்ந்து பார்த்தாள். சடசடவென மழை அடித்து ஊற்றத் தொடங்கியது‌‌.

எத்தனை விரைவாய் வாகனத்தைச் செலுத்தியும் மலர்விழி வீட்டிற்குச் செல்வதற்குள் முழுதாய் தொப்பென நனைந்திருந்தாள். குளிர் தாங்க முடியாது வெடவெடத்துப் போனவள், விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தாள். தனஞ்செயனும் அப்போதுதான் வந்தான். அவளைக் கவனிக்காதது போல அறைக்குள் நுழைந்து கொண்டான்.

‘போடா... போ’ என மனதில் நினைத்தவள், அறைக்குச் சென்று உடையை மாற்றினாள். தலையை காய வைத்தாள். இருந்தும் உடலில் லேசாய் சூடு பரவுவதை அவளால் உணர முடிந்தது.

உணவை உண்டு முடித்து ஒரு மாத்திரையைப் போட்டு படுத்துவிட்டாள். தேர்வு சமயம் உடல்நிலை சரியில்லாமல் போனால், எதுவும் செய்ய முடியாதே என முன்னெச்சரிக்கையாய் மாத்திரையை விழுங்கி இருந்தாள். இருந்தும் காலையில் கண்விழிக்கவே முடியாத அளவு காய்ச்சல்.

கண்ணெல்லாம் எரிந்தது. தலைவலி வேறு மண்டையைப் பிளந்தது. சிறிது நேரம் படுத்தே இருந்தாள். தனஞ்சயென் வெளியேறும் சத்தம் கேட்டது.

சமைத்து முடித்து பாத்திரங்களை கழுவி என எல்லா வேலையும் முடித்த தனம் இவளது அறைக் கதவை தட்டினார்.

“நான் வீட்டுக்குப் போய்ட்டு வரேன் மா...” என அவர் கூற, தலையை அசைத்தாள் மலர்.

“என்னாச்சு மா, காலேஜ் போகலையா நீங்க?” அவள் படுத்திருக்கும் விதத்தை வைத்து தனம் வினவினார்.

“எக்ஸாம் வருது கா. அதான் படிக்க லீவ் போட்டிருக்கேன்...” எனக் கூறி அவரை அனுப்பி வைத்தவள், சிறிது நேரத்தில் தட்டு தடுமாறி எழுந்து குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாய் அடித்துக் கழுவினாள். பல்லைத் துலக்கிவிட்டு, உள்ளே இறங்க மாட்டேன் என சதி செய்த இரண்டு இட்லியை எப்படியோ உண்டு மாத்திரையை விழுங்கினாள். வேறு எதையும் செய்ய தெம்பில்லை.

அப்படியே சென்று படுத்துவிட்டாள். மதியம் காய்ச்சல் சரியாகிவிடும் என நினைத்து மலர்விழி யாரையும் அழைக்கவில்லை. லோகநாயகியிடம் கூறினால், அவருடன் சேர்ந்து தந்தையும் மாறனும் வந்து விடுவார்கள். தன்னால் அவர்களது வேலை கெட வேண்டாமே என்ற எண்ணத்தில் தனியாய் சமாளித்துக் கொள்ளலாம் என சிறிது நேரம் உறங்கினாள். ஆனால், மதியம் எழவே முடியவில்லை.

கண்டிப்பாக துணைக்கு யாரேனும் இருந்தால் மட்டுமே எழுந்து நிற்க முடியும் என்று தோன்ற, உடல் வலியில் அழுகை வந்துவிட்டது. தலையணையில் முகத்தைப் புதைத்து படுத்து விழிநீரால் அதை நனைத்தாள். எப்போதும் இப்படி படுத்தே கிடக்கும் வகையில்லை மலர்விழி. உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட, ஓடியாடி அதை தானே சரிசெய்து கொள்வாள். ஆனால், இப்போது உடலோடு சேர்த்து மனதும் பலத்தை இழந்திருந்ததால், யாருடைய அண்மைக்கேனும் உடல் ஏங்கியது. வலிக்கிறது எனக் கூறி மாறனின் தோள் சாய, தந்தையிடம் செல்லம் கொஞ்ச, தாயை அணைத்துப் படுக்க மனம் விரும்பியது அந்தக் கணத்தில்.

உடல் சூடு ஏற ஏற வேதனையும் வலியும் அதிகமாக கண்களில் கண்ணீர் பொங்கியது. ஏற்கனவே தனாவின் செயலில் சோர்ந்து இருந்தவளை காய்ச்சல் மேலும் சோர்வடையச் செய்துவிட்டது.

இருந்தாலும் யாரையும் அழைக்காது வீம்புக்கென்றே அப்படியே இருந்தாள். தனாவின் மீது கோபம் வந்தது. நேற்று தான் மழையில் நனைந்து வந்ததைப் பார்த்துக்கொண்டு
தானே இருந்தான். காலையில் நன்றாக இருக்கிறேனா? என தனது அறையை எட்டிப் பார்க்கவில்லை எனக் கோபம் வந்தமர்ந்துகொண்டது. அது தந்த எரிச்சலில் வலியையும் பல்லைக் கடித்துப் பொறுத்துக்
கொண்டாள்.

வேலை முடிந்து வந்த தனா, மலர்விழி அறையைப் புருவம் சுருக்கிப் பார்த்தான். பாதிக் கதவின் வழியே அவள் படுத்திருந்தது, இவன் கண்களில் விழுந்தது.

‘இந்த நேரத்தில் இவள் படுக்க மாட்டாளே!’ என நினைத்தவன் உடை மாற்றிவிட்டு தன் வேலையைப் பார்த்தான். சில நிமிடங்களுக்கு மேல் அறையில் அமர முடியவில்லை. மனம் அவளுக்கு என்னவென பார்க்குமாறு நச்சரித்துத் தொலைத்தது. அது எரிச்சலைத் தருவித்தாலும், வேறு வழியின்றி செய்திருந்த வேலையை அப்படியே பாதியில் விட்டுவிட்டு,
விறுவிறுவென மலர்விழி இருந்த அறைக்குள் நுழைந்தான்.

அவள் படுத்திருப்பதை வைத்தே உடல்நிலை சரியில்லையோ? என மனம் கணிக்க, அருகில் சென்றான். தனா வருகையைக் கூட மலர்விழியால் உணர முடியவில்லை.

அவளின் நெற்றியில் கையை வைக்கச் சென்றவன், ஒரு நொடி தயங்கினான். பின்னர் மனைவியின் உடல் சூட்டை சரிபார்க்க, அது கொதித்தது. தனாவின் கரத்தை உணர்ந்தவளுக்கு, இத்தனை நேரம் ஆளில்லாது தவித்து இப்போது இவனது ஸ்பரிசம் உணரவும் விழிநீர் பொங்கியது.

‘ஒரு வாரமா பார்க்காம, பேசாம இருப்பான். இப்போ என்ன அக்கறை...’ என உடலின் சக்தியைத் திரட்டி அவனது கையைத் தட்டிவிட்டாள்.

அதில் எரிச்சலான தனா, “இந்த திமிர் அடங்கவே அடங்காதா டி?” என்றான் லேசான அதட்டலுடன்.
விழிகளைத் திறந்து அவனை முறைத்தாள் மலர்.

“எவ்வளோ நேரமா டி இப்படி படுத்திருக்க? ஏன் யாருக்கும் போன் பண்ணி கூப்பிட்டா, உன் கிரீடம் இறங்கிடுமா?” எவ்வளவு நேரம் இந்தப் பெண் இப்படியே காய்ச்சலுடன் படுத்திருந்தாளோ என்பதை எண்ணி தனாவுக்கு கோபம் அத்தனை வந்தது.

“யாரோட உதவியும் எனக்குத் தேவையில்லை. என்னால என்னைப் பார்த்துக்க முடியும்...” வலியோடு சேர்த்துப் பல்லைக் கடித்தாள் மலர்.

‘திமிர்... உடம்பு முழுசும் கொழுப்பு. இவளை...’ என கன்னம் கன்னமாய் அறைய வேண்டும் எனத் தோன்றாமல் இல்லை. பொறுமையை இழுத்துப் பிடித்தவன், அவளுக்கு வலதுபுறமாய் சென்று அமர்ந்தான்.

அவளது இருகன்னத்தையும் தனது ஒரு கையில் தாங்கியவன், “விழி, ஹாஸ்பிடல் போகலாம். எழுந்துரு...” என்றான். அவனது கையைத் தட்டிவிட முயன்றாள் பெண்.

அதை தடுத்தவன் அவளை எழுப்ப , சமநிலையின்றி விழச் சென்றவளை அப்படியே தன் மார்பின் மீது சாய்த்தான். அவளது உடல் சூட்டை தனஞ்செயனால் உணர முடிந்தது.

அவன் ஸ்பரிசம் உணர்ந்த கன்னங்களை மீண்டும் விழிநீர் நனைத்தன. அவளது போர்வையை விலக்கியவன், தளர்ந்திருந்த ஆடையை சரிசெய்து அப்படியே இடையில் கைக்கொடுத்து தூக்கி நிற்க வைத்தான். நிற்க முடியாது தள்ளாடியவளை தன் மீது சாய்த்தவன் இரண்டு எட்டு வைக்க, “நான் எங்கேயும் வரலை...” என விழி முரண்டுப் பிடித்தாள்.

“உடம்பு சரியில்லைன்னு கூடப் பார்க்க மாட்டேன் டி‌. அடிச்சுடுவேன்...” மெலிதாய்க் கூறினாலும் அழுத்தமாய் உரைத்தவன், அவளை இழுத்துக்கொண்டு கதவை பூட்டிவிட்டு மின்தூக்கியின் உதவியில் கீழே இறங்கிச் சென்றான்.

மகிழுந்து மறுபுறம் சென்று அவளை அமர வைத்தவன், மற்றொரு புறம் அமர்ந்து அதை இயக்கினான்‌. அந்த இரவு நேரத்தில் சாலைகள் பரபரப்பாய் இருந்தன. கிடைத்த குட்டி குட்டி சந்துகளில் புகுந்து ஒரு நடுத்தர அளவிலிருந்த மருத்துவமனையைக் கண்டறிந்து மலர்விழியை அழைத்துச் சென்றான்.

அவளை பரிசோதித்த மருத்துவர், “நார்மல் ஃபீவர் தான். இன்ஜெக்சன் போட்றேன். ரொம்ப வீக்கா இருக்கதால ட்ரிப்ஸ் போடலாம்...” என மருந்து மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார். அவர் கூறியது போல ஊசிப் போட்டு, குளுக்கோஸ் ஏற்றிவிட்டு வீடு வந்து சேர இரவு தாமதாகிவிட்டிருந்தது.

தனத்திற்கு அழைத்து சமைக்க வரவேண்டாம் என சொல்லியவன், வீட்டிற்கு போகும் வழியில் இருவருக்கும் உணவை வாங்கிச் சென்றான்.

மகிழுந்தை நிறுத்திவிட்டு தனா இறங்குவதற்குள் மலர்விழி வெளியே இறங்கிவிட்டாள். அவளை முறைத்தவாறே கைப்பிடித்து மின்தூக்கியின் உதவியுடன் வீட்டை அடைந்தான் தனஞ்செயன்‌. அவனது கைவளையிலே நின்றிருந்த மலர்விழி தன்னையறியாமலே தன் பாரம் முழுவதையும் அவன் மீது சுமத்தியிருந்தாள்.

“சாப்ட்டு, டேப்லெட் போட்டு படுக்கலாம் வழி, உன்னால சேர்ல உட்கார முடியுமா?” தனா வினவ, அவளிடம் பதில் இல்லை. பாதி உறக்கத்திலும் மயக்கத்திலும் இருந்தாள்.

பெருமூச்சை வெளிவிட்டவன், அவளைத் தன்னறைக்கு அழைத்துக்கொண்டு போய் கட்டிலில் சாய்ந்தவாறு உட்கார வைத்துவிட்டு, வாங்கி வந்த உணவை எடுத்து வந்தான்.

“ரெண்டு இட்லி மட்டும் சாப்பிடு விழி...” என இவன் ஊட்டச் செல்ல, கண்கள் லேசாய் கலங்கியது இவளுக்கு. இவன் மாறவே இல்லை, அன்றைக்கும் இப்படித்தானே செய்தான் என எண்ணியதும் ஒரு சொட்டு நீர் கீழே இறங்கியது. அருகிலிருந்தவன் கருத்தைக் கவராது விழிகளைத் துடைத்தவள், “நானே சாப்பிட்றேன்‌...” என வாங்கி மெதுவாக உண்டாள். உண்டு முடித்து தண்ணீரைப் பருகவும் உண்ட அனைத்தும் அருகிலிருந்தவன் மீது வாந்தியாய் எடுத்திருந்தாள்.

‘கடவுளே...’ என இவள் கையை நீட்ட, அதை அப்படியே பிடித்தவன், “ஒன்னும் இல்லை விழி. நான் க்ளீன் பண்ணிக்கிறேன்...” என்றவன் முகத்தில் இப்போது கூட ஒரு சுளிப்போ, அருவருப்பான பாவனையோ இல்லை. இவளுக்கு மீண்டும் கண்கள் கலங்க, தொண்டை அடைத்தது .

அதை மறைத்தவள், “நீங்க போங்க...” என்றாள். கோபமாய்க் கூற முயன்றும் குரல். வெளிவரவில்லை. மனம் நினைவுகளை அசைபோட்டு இவளை உடையச் செய்தது.

எதுவும் கூறாது எழுந்து சென்று தன்னை சுத்தம் செய்து உடை மாற்றி வந்த தனா, அவளது முகத்தையும் உடையும் தண்ணீர் கொண்டு துடைத்துவிட்டான். அவன் செய்கைகளையே விழியகற்றாது பார்த்திருந்தாள் மனைவி. இந்த தனஞ்செயன், அவளது ஜெய், அவன்தான், எப்போதுமே மாறாத குணமும் தன் மீது அன்பும் நிறைந்தவன் என நினைத்ததும் விழிகள் நீரால் நிறைந்தன.

மலர்விழி உண்டதை எடுத்து வைத்துவிட்டு, மாத்திரையை எடுத்து வந்தான்.
“இந்த டேப்லெட்டை போடு விழி...” என் தன் முன்னே நின்றவனைப் பார்க்கையில் ஏனோ அழுகை வரப் பார்த்தது இவளுக்கு.

‘போடா... இப்படியெல்லாம் நடந்து கொள்ளாதே! என்னிடம் சண்டை போடு...’ மனது கத்த, அழுகையுடன் அவனை முறைத்துவைத்தாள்‌.

“எதுக்காக புதுசா இந்த அக்கறை?” உதட்டை சுழித்தாள் விழி‌.

அவளை முறைத்தவன், “சண்டையை ஆரம்பிக்காத விழி‌. நான் ரொம்ப டயர்ட்...” என அவளது இரண்டு கன்னத்தையும் அழுத்திப் பிடித்து வாயில் மாத்திரையை வைத்து தண்ணீரை ஊற்றினான்‌.

அவனை முறைத்த மலர் மாத்திரையை விழுங்கிவிட்டு, “என்னைப் பார்த்தா எப்போ பாரு சண்டை போட்றவ மாதிரி தெரியுதா?” என சூடாகக் கேட்க, அவள் அடுத்த சண்டைக்கு தயாராகிவிட்டாள் என்பதை உணர்ந்த தனா, எழுந்து சென்று விளக்கை அணைத்தான்.

மலர்விழியின் அருகே வந்து அவளை சரியாய் படுக்க வைத்து போர்வையைப் போர்த்தி விட்டான்.
“அமைதியா படு விழி‌‌...” என்றவன் குரல் சோர்வாய் வெளிவர, அவளால் எதுவும் பேச முடியவில்லை. மறுபுறம் திரும்பிப் படுத்தவளுக்கு விழிகளில் நீர் குபுகுபுவென வழிந்தது.

அவளருகே படுத்த தனஞ்செயன் தலையணையில் முகம் புதைத்தான். நினைவு வந்தவனாகத் தலையைத் தூக்கி, “நைட் எதுவும் வேணும்னா, என்னை எழுப்பு விழி. வீம்புக்குன்னே நீயா எதுவும் பண்ணாத...” என்று மீண்டும் தலையணைக்குள் புதைந்தான்.

இவள் போர்வையை நன்றாய் இறுக்கிப் பிடித்து விழிகளை இறுக மூடினாள். சற்று முன் அருவருப்பு ஏதுமின்றி தன்னிடம் அக்கறையாய் நடந்துகொண்ட தனஞ்செயன் தான் விழிகளை நிறைத்தான். இது போல சம்பவம் சிறு வயதில் நடந்தது நினைவுக்கு வர, அழுகையாய் வந்தது விழிக்கு. கத்தி அழ தெம்பில்லை. மெதுவாய் விசும்பினாள்.

தனஞ்செயன் செவிகள் அவளது அழுகையை உணர்ந்ததும், அலைபேசியில் விளக்கை ஒளிர விட்டவன், “விழி, என்ன பண்ணது? எங்கேயும் வலிக்குதா?” என அவளது போர்வையை விலக்கி நெற்றியிலும் கன்னத்திலும் கையை வைத்தான். அந்தக் குரலில், அந்த ஸ்பரிசத்தில் வாஞ்சையில் அக்கறையில் என அனைத்திலும் இவளுக்கு மீண்டும் கண்கள் பனித்தன. தொண்டையை ஏதோ அடைப்பது போலொரு உணர்வு. வார்த்தைகள் வரவில்லை. மாறாய் கண்ணீர் பெருகியது.

“ஒன்னும் இல்லை, நீங்க தூங்குங்க...” என்றாள் மலர்விழி முயன்று சரி செய்த குரலில். சில நொடிகள் அவளை ஆழ்ந்து பார்த்த தனா, விளக்கை அணைத்துவிட்டு அவளுக்கு வாககாக சற்றே இறங்கிப் படுத்து, மறுபுறமிருந்த மனைவியைத் தன்புறம் திருப்பி அணைத்துக் கொண்டான். மலர் இதை எதிர்பார்க்காது ஒரு நொடி திடுக்கிட்டாலும், அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவளது முகம் தனாவின் மார்பில் அழுத்தமாய்ப் புதைந்தது. மீண்டும் தேம்பினாள்.

“ஒன்னும் இல்லை விழி‌‌...” என்றவனுக்கு அவளுக்கு இப்போது ஆறுதலான அணைப்பு தேவை என மனம் கூற, எதையும் யோசிக்காது அணைத்து
விட்டான்.
அந்த நொடி மலர்விழி பேசிய பேச்சுக்கள் எல்லாம் தூரச் சென்றிருந்தன. மனைவி மட்டும் பிரதானமாகிப் போனாள். ஏனோ. இந்தப் பெண்ணிடம் தனாவால் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. எப்போதுமே கோபத்தை இழுத்துப் பிடிக்க முடிந்ததில்லை.

எந்தவித எதிர்ப்பும் இன்றி தனஞ்செயனை இறுக அணைத்தாள் விழி. அவனது ஸ்பரிசம் இவளுள் ஒரு ஆசவாசத்தைப் பரப்பியது. ஒரு அமைதியைக் கொடுத்தது.
பொங்கும் விழி நீரை துடைத்துக்கொண்டாள். தேம்பல் சிறிது நேரத்தில் நிற்க, உறங்கிப் போனாள். தனாவும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தான்.
 
Top