தேனும் இனிப்பும் 16:
நானும் அவனும்
கடலும் நீலமும்…
திலகவதியின் வார்த்தையில் ஏகமாய் அதிர்ந்த ஜீவா ஜானுவை காண அவளது முகம் வேதனையில் கசங்கியது.
“அத்தை என்ன பேசுறீங்க நீங்க?” என்றவன் கோபமாய் வினவ, “என்ன திலகா பேச்சு இது” என்று பரமேஸ்வரியும் தனது பிடித்தமின்மையை காண்பித்தார்.
“ஏன் நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன். உண்மையதான சொன்னேன்” என்று திலகவதி அசராது பதிலளிக்க, “எது உண்மை திலகா. நீ பேசுறது நல்லாவா இருக்கு. சின்ன பசங்க மனசுல என்னத்தை விதைக்கிற நீ” என்று பரமேஸ்வரி சற்று உரக்க வினவினார்.
“நான் எதையும் விதைக்கலை ண்ணி. நாளை பின்ன வளர்ந்த பின்னாடி அவங்களுக்கு தெரியத்தான போகுது. அதை இப்போவே நான் சொல்றேன்” என்று திலகா அலட்டாது பதில் அளிக்க, “அத்தை போதும். எங்க பசங்களுக்கு எது எப்போ தெரியணும்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்” என்று முடித்துவிட்டான்.
“ஏன் ஏன் பேரப்பசங்ககிட்ட எனக்கு உரிமை இல்லையா?” என்று திலகா எகிற, “ஏன் இல்லை. நிறையவே இருக்கு. வந்து பாருங்க கொஞ்சுங்க அதோட நிறுத்திக்கணும். தேவை இல்லாதத பேச கூடாது. ஜானவி என்னோட மனைவி. அவ தான் என் பிள்ளைக்கு அம்மா” என்று ஜானுவின் தோளில் கையை போட்டு அழுத்தம் திருத்தமாக அவரை கண்டான்.
“பாத்தீங்களா ண்ணி நேத்து வந்த பொண்டாட்டிக்காக இவன் என்னையே எதிர்த்து பேசுறான்” என்று பரமேஸ்வரியிடம் புகார் வாசிக்க, “நீதான முதல்ல ஆரம்பிச்ச திலகா” என்று பரமேஸ்வரி மகனுக்கு ஆதரவாக பேசினார்.
“ஓ… நீங்களும் உங்க மகனுக்கு ஆதரவா? என் அண்ணன் வீட்ல எனக்கு எந்த உரிமையும் எங்களுக்கு இல்லையா? என் பேரப் பசங்களை பாக்க உங்ககிட்ட அனுமதி வாங்கணுமா?” என்று கண்ணை கசக்க, பரமேஸ்வரி மகனை கண்டார்.
“அத்தை உங்களுக்கு உரிமை இல்லைனு யார் சொன்னது?” என்று ஜீவா பொறுமையை இழுத்து பிடித்து கேட்க, “நீ தனியா வேற சொல்லணுமா? இதோ ஒருத்தி வந்ததும் குடும்பமே என் மகளை மறந்துட்டிங்க. உயிரோட இருந்த வரைக்கும் உங்களை எப்படி பாத்துக்கிட்டா” என்று முந்தாணையால் முகத்தை துடைத்தார்.
கூடத்தில் சத்தம் கேட்டு வெளியே வந்த மஹிமா தாயின் விவாதத்தை கண்டு, “ம்மா காலையிலே என்ன பஞ்சாயத்தை இழுத்திட்டு இருக்க?” என்று கடிய, “மஹி நீயே இந்த அநியாயத்தை கேளுடி. நேத்து வந்தவ இவளை என் பேரப்பிள்ளைகங்க அம்மான்னு கூப்பிடுதுங்க. இவ அவங்களுக்கு அம்மா வா? அப்போ லாவண்யா யாரு? சித்தினு கூப்பிட சொன்னேன் அதுக்கு எல்லாரும் என்னை பேசுறாங்க” என்று தனது தவறை உணராது பேசினார்.
தாயின் கூற்றில் அதிர்ந்து போனவள் ஜானு மற்றும் ஜீவாவை கண்டாள். ஜானு கலங்கி போய் நிற்க ஜீவா இறுகிய முகத்தோடு நின்றான்.
“ம்மா உனக்கு வயசு தான் ஆச்சு அறிவு கொஞ்சம் கூட இல்லையா?” என்று கோபத்தை கட்டுப்படுத்தி தாயிடம் கேட்க, “ஹேய் நீயும் என்னடி என் மேல தான் தப்புனு பேசிட்டு இருக்க” என்று மகளை கடிந்தார்.
“நீ பேசுனது தப்புனு உனக்கு புரியவே இல்லையாம்மா?” என்று சலிப்புடன் கேட்க, “உனக்கு தான் டி புரியலை. புது மருமகள் வந்ததும் எல்லாரும் உன் அக்காவ மறந்துட்டாங்க. பிள்ளைங்களையும் மறக்க வச்சிடுவாங்க. இவங்க எல்லாரையும் எப்படி ஓடி ஓடி பாத்துக்கிட்டா”என்று புகார் கூறினார்.
“நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு பேசாதம்மா. அக்கா போனதும் மாமா கடைசி வரைக்கும் தனியாவே இருந்திருக்கணுமா. இல்லை எல்லாரும் டெய்லி அவளை நினைச்சே அழுதிட்டு இருக்கணுமா? நீயும் நானும் அழுதிட்டா இருக்கோம். அதுக்கு மேல என் வாழ்க்கையில இது போல நடந்து இருந்தா இதே மாதிரி தான் பேசுவீயா?” என்று சாட்டையடியாக கேட்க, “அதெப்படி முடியும்” என்று தடுமாறினார் திலகவதி.
“முடியாதுல அது போல தான் இதுவும். இப்போ அக்கா இல்லை அதை ஏத்துக்கோ. அக்காவையும் ஜானுக்காவையும் கம்பேர் பண்ணி அவங்க வாழ்க்கையில பிரச்சனைய ஏற்ப்படுத்தாத. அவங்களுக்கான வாழ்க்கைய நிம்மதியா வாழவிடு” என்று முடித்திட, “நான் என்ன அவங்க வாழ்க்கையில பண்ணேன். ஏதோ கெடுக்க நினைக்கிற மாதிரி பேசுற?” என்று மகளிடம் காய்ந்தார்.
“நீ பண்றதெல்லாம் அப்படிதான் இருக்கு” என்று முறைத்தவள், “நீ இங்க இருந்தா இவங்க யாரும் நிம்மதியா இருக்க முடியாது வா முதல்ல கிளம்புவோம்” என்று தாயின் கையை பிடித்தாள்.
அனிதாவும், “வாங்க போகலாம்” என்று மகனை கையில் தூக்கினாள்.
திலகா மருமகளை முறைத்து பார்க்க, “அவரு வீட்டுக்கு போக சொல்லி சொல்லிட்டு தான் போனாரு” என்றவள் அம்மா அண்ணா அண்ணி எல்லோரிடமும் கூறிவிட்டு கிளம்பினாள். இன்னும் சிறிது நேரம் இருந்தால் தனது மாமியார் நிச்சயமாக அண்ணன் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டு பண்ணி விடுவார் என்று தெரிந்து தான் இப்படி செய்தாள். மாமியாராக போய்விட்டதால் பேச முடியவில்லை.
எல்லாவற்றிக்கும் சேர்த்து நாத்தனார் பேசிவிட்டாளே என்று மகிழந்தவள் விறுவிறுவென வெளியேற, “வாம்மா அண்ணியோட கிளம்பிடுவோம்” என்று மஹி தாயை இழுத்தாள்.
“நான் ஏன் கிளம்பணும் இது என் அண்ணன் வீடு” என்று மஹியின் கையை தட்டிவிட்டார்.
“இது உங்க அண்ணன் வீடு. நீங்க எவ்ளோ நாள் வேணா இருந்துக்கோங்க. ஆனால் என் பொண்டாட்டிய ஒரு வார்த்தை கூட பேச கூடாது. அதுக்கு மேலயும் பேசுனா நான் நானா இருக்க மாட்டேன்” என்றவன்,
“வாங்க நாம போகலாம்” என்று மனையாளையும் பிள்ளைகளையும் அழைத்து கொண்டு வெளியேறிவிட்டான்.
திலகா போபவனையே அதிர்ந்து பார்க்க, “ம்மா இப்போ நீ வரலை. நான் வீட்டுக்கு வராம எங்கேயாவது போய்டுவேன்” என்று மிரட்ட, அவள் கூறுவதை செய்வாள் என்பதால் உர்ரென்ற முகத்துடன் அங்கிருந்து கிளம்பினார்.
சிறிது தூரம் வந்த பிறகு வாகனத்தை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு மனைவியின் முகம் கண்டான் ஜீவா. அது கலங்கி தான் இருந்தது.
காலையில் எழும்போது எவ்வளவு அழகாய் மலர்ந்திருந்த முகம் இப்போது வாடிவிட்டதே என்று வருந்தியவன், “ஜானு இங்க பாரு” என்க, நிமிர்ந்து பார்த்தாள்.
“அவங்க பேசுனது எதையும் நீ மனசுல போட்டு குழப்பிக்காத. அவங்க நான் மஹிமாவை கல்யாணம் பண்ணலைன்னு கோபத்துல இப்படி பேசிட்டு இருக்காங்க. இனிமே அவங்க உன்னை எதுவும் பேச மாட்டாங்க” என்று எடுத்துக் கூற, “நான் அர்னவ்வுக்கும் அதிக்கும் அம்மா இல்லையா? அவங்களுக்கு ஒரு நல்ல அம்மாவா இருக்க முடியாதா?” என்று வருந்தி கேட்டாள்.
“அதெல்லாம் எதுவும் கிடையாது. நீ தான் இவங்களோட அம்மா. யார் வந்து சொன்னாலும் அது மாறாது” என்று அழுத்தி கூறியவன் பின்புறம் இளையவர்களிடம் திரும்பி, “அதி அர்னவ்” என்று அழைத்தான்.
மூவரும் அலைபேசியில் பொம்மை படம் பார்த்து கொண்டிருந்தனர். ஜீவி முதலில் நிமிர்ந்து பார்க்க, மற்ற இருவரும் ஜீவாவை கண்டனர்.
ஜீவா, “ஜானுவை என்னன்னு கூப்பிடுவீங்க?” என்று கேட்க, இருவரும் சற்றும் சிந்திக்காமல், “அம்மா” என்றிட, சடுதியில் ஜானுவிற்கு விழிகள் கலங்கி விட்டது.
இளையவர்களுக்கு தெரியாமல் துடைத்து கொண்டவள் புன்னைக்க, “பாத்தியா? யாரு என்ன சொன்னா என்ன? அவங்க உன்னை அம்மாவாதான் பாக்குறாங்க” என்று கூற, சிரிப்புடன் தலையசைத்தாள்.
ஜீவிக்கு நடப்பது ஓரளவிற்கு புரிந்தது. அங்கு ஏதும் கேட்க முடியவில்லை. இளையவர்கள் உடன் இருப்பதால் அவர்களுக்கு பொம்மை படம் போட்டுவிட்டு அதில் ஒன்றிவிட்டவள் இப்போது நினைவு வந்து தாயை கண்டாள்.
மகளது மனம் உணர்ந்தவள், “ஜீவி நீ இது எதையும் ஏத்திக்காத. அப்பா எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரு” என்று கூற, ஜீவியின் பார்வை தந்தையிடத்தில் பதிந்தது.
ஜீவா, “அப்பா எல்லாத்தையும் சரி பண்ணிட்றேன்” என்று மகளிடம் கூறவே அதுவே போதும் என்பது போல தலையசைத்தவள் மீண்டும் அலைபேசியில் கவனத்தை பதித்தாள்.
ஜானுவின் கரத்தை பற்றியவன், “உன்னை விட நல்லா யாராலாயும் நம்ம பசங்களை பாத்துக்க முடியாது. ஸோ யாராவது எதுவும் பேசுனா வாயை திறந்து பதில் பேசிடு. என் பிள்ளைங்களை பாக்க எனக்கு தெரியும்னு” என்று கூற, “சரி” என்று அவள் தலையசைக்க ஜானுவின் அலைபேசி இசைத்தது.
மஹிமா தான் அழைத்தாள். ஜீவா, “அத்தை பேசுனதுக்கு மன்னிப்பு கேக்க தான் கால் பண்ணுவா” என்று கூற, ஜானு அழைப்பை ஏற்காது அவன் முகம் பார்த்தாள்.
“நீ எடுக்கலைன்னா எனக்கு கூப்பிடுவா” என்று ஜீவா மொழிய, அழைப்பு உயிர்விடும் இறுதி நொடியில் ஏற்றவள் காதில் அலைபேசியை வைத்தாள்.
மறுமுனையில், “அக்கா” என்று மஹி அழைக்க, “சொல்லு மஹி” என்று சாதாரண குரலில் வினவினாள்.
“அக்கா அம்மா பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் கா. நீங்க அதை பெருசா எடுத்துக்காதீங்க” என்று கூற, கணவனை புன்னகையுடன் கண்டவள், “அவங்க பேசுனதுக்கு நீ எதுக்கு மன்னிப்பு கேக்குற மஹி. நான் அதை பெருசா எடுத்துக்கலை. நான் யாருன்னு என் பசங்களுக்கு தெரியும் மஹி. அவங்க என்னை அம்மாவா தான் பாக்குறாங்க. அவங்களை என்னைவிட யாராலும் நல்லா பாத்துக்க முடியாது” என்றிட, ஜீவா புருவம் உயர்த்தி பார்த்தான்.
மஹி மறுமுனையில், “அக்கா இது நீங்களா நம்பவே முடியல” என்று சிரிப்புடன் கேட்க, “அவங்க பேசுனதும் நான் பர்ஸ்ட் அப்செட் ஆகிட்டேன் தான். ஆனால் ஜீவா பேசுனதும் தான் எனக்கு புரிஞ்சது” என்று ஜானு மென்னகையுடன் கூறினாள்.
“ஆஹான் எல்லாம் மாம்ஸ் ட்ரைனிங்கா” என்று சிரித்தவள், “ஒரே லவ்ஸா நான் தான் மன்னிப்பு கேக்குறேன்னு டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்க, “அதெல்லாம் இல்லை” என்று ஜானு மறுத்தாள்.
“ஓகே ஓகே கேரி ஆன் நான் டிஸ்டர்ப் பண்ணலை” என்றவள் குறும்பு சிரிப்புடன் அழைப்பை துண்டிக்க, இவளது முகத்தில் லேசான வெட்க புன்னகை.
“என்னவாம்?” என்றவனது புருவம் ரசனையுடன் ஏறி இறங்க, அதில் லேசாக தடுமாறியவள், “அவ அம்மா பேசுனதுக்கு சாரி கேட்டா” என்று கூறிவிட்டாள்.
“அவ்ளோதானா?” என்று குறும்பு சிரிப்புடன் கேட்டவனுக்கு மஹி பேசியது கேட்டுவிட்டது என்று புரிய, போலி முறைப்புடன் பிள்ளைகளை கண்களால் காண்பித்தவள், “அவ்ளோதான் எடுங்க வண்டிய” என்றிட சிரிப்புடன் வாகனத்தை இயக்கினான்.
பத்து நிமிடத்தில் அருகில் உள்ள அம்மன் கோவிலை அடைந்துனர். ஜானு அர்னவ்வை தூக்கி கொள்ள ஜீவா ஜீவி மற்றும் அதியை பிடித்து கொண்டான். அன்று வழக்கமான நாள் ஆதலால் பெரிதான கூட்டம் இல்லை.
அம்மனை தரிசித்துவிட்டு பிராகாரத்தை சுற்றியவர்கள் ஓரத்தில் அமர்ந்தனர்.
கோவிலை விழிகளால் அளந்த ஜானு, “நல்லா இருக்கு ஜீவா இந்த கோவில்” என்க, “ஹ்ம்ம் அப்போ அடிக்கடி அழைச்சிட்டு வர்றேன்” என்று சிரிப்புடன் கூறினான்.
ஜீவி அலைபேசியை எடுக்க, “கோவில்ல வந்து எதுக்கு உங்களுக்கு போன்” என்று அதட்டியவள் அதனை பிடுங்கினாள்.
உடனே மற்ற இருவரும், “அப்பா” என்று ஜீவாவிடம் புகார் வாசிக்க, ஜீவியும், “அப்பா அம்மாட்ட இருந்து மொபைல வாங்கி கொடுங்க” என்றுவிட, அவனது புன்னகை பெரிதானது.
மனையாளை பார்த்தவன் கொடுக்கும் படி கேட்க விழைய, “ம்ஹூம் நோ” என்று அவனை விழிகளால் மிரட்டினாள்.
அதில் பின்வாங்கியவன், “போன் வேண்டாம்டா செல்லங்களா. ரொம்ப நேரம் மொபைல் பாத்தா கண் கெட்டு போய்டும்” என்று அறிவுறுத்த, மூவரும் முகத்தை சுருக்கினர்.
“ஓகே போகும் போது ஐஸ்க்ரீம் வாங்கி தர்றேன்” என்று கூற, மூவரும், “ஹேய்” என்று ஆர்ப்பரித்தனர்.
ஜானு, “நோ…” என்று அவனை முறைக்க, “ஒரு டைம் தான விடுடி” என்று அவளை சமாளித்தான்.
பின்னர் சில நிமிடங்கள் கோவிலில் அமர்ந்துவிட்டு வீட்டை நோக்கி பயணமாக ஜீவா கூறியது போலவே ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் வாகனத்தை நிறுத்தினான்.
இளையவர்கள் மகிழ்வுடன் உள்ளே நுழைய ஜானவி முறைத்தபடி தான் வந்தாள்.
அவ்விடத்தை சுற்றி பார்த்த ஜீவி, “ம்மா ஐஸ்க்ரீம்க்கு மட்டும் இவ்வளோ பெரிய ஷாப்பா?” என்று வியப்புடன் வினவினாள். காரணம் ஜானவி இதுபோல விலை அதிகமாக விற்கும் இடத்திற்கு எல்லாம் அழைத்து சென்றதில்லை.
சடுதியில் ஜீவாவின் பார்வை ஜானுவின் மீது படிந்து மீண்டது. “நான் இந்த மாதிரி பார்லருக்கு கூட்டிட்டு வந்தது இல்லை ஜீவா” என்றவள் மகளிடம், “ஹ்ம்ம் இருக்கும் டா தங்கம். இதைவிட பெரிய பார்லர் கூட இருக்கும்” என்றாள்.
கூடவே கணவனின் முகம் மாற்றத்தை கண்டுவிட்டு, “அப்பா இதை விட பெரிய பார்லருக்கு அழைச்சிட்டு போவாரு” என்று கூற, “அப்படியாப்பா” என்று மகள் விழிகளை விரித்தாள்.
அந்த பாவனை அப்படியே ஜானுவை பிரதிபலிக்க, “ஹ்ம்ம் கண்டிப்பா செல்லம். இதைவிட பெரிய பார்லருக்கு ஒரு நாள் அழைச்சிட்டு போய் உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி தர்றேன்” என்று முகம் தெளிந்தவனாக கூற, “நானும் நானும்” என்று மற்ற இருவரும் துள்ளினர்.
“உங்களையும் தான்டா. அக்காவ மட்டும் எப்படி தனியா கூட்டிட்டு போவேன்” என்று சிரிப்புடன் கூறியவன் மூவருக்கும் என்ன வேண்டுமென கேட்டு ஆர்டர் செய்தவன் தனக்கும் மனைவிக்கும் பழச்சாறு வாங்கினான்.
ஐஸ்கிரீம் வந்ததும் மூவரும் அதை உண்பதில் ஆர்வம் காண்பிக்க மனைவியை பார்த்தபடி பழச்சாறை அருந்தினான்.
“அங்க பாத்து குடிங்க” என்று அதட்டிவிட்டு அவளும் பழச்சாறு அருந்த துவங்கினாள்.
ஜீவா, “போதுமா வேற எதுவும் வேணுமா உங்களுக்கு?” என்று வினவிட, ஜீவி, “எனக்கு ஒரு ப்ரௌனிப்பா” என்று தயக்கத்துடன் கேட்டிருந்தாள்.
“அதை ஏன் இப்படி தயங்கி கேக்குற? உரிமையா கேளு ஜீவி” என்று ஜானு கூற, மகள் தன்னிடம் கேட்டதிலே மனம் குளிர்ந்து போனவன், “ஒரு கேக் போதுமா. வா வாங்கிட்டு வரலாம்” என்று கைப்பிடித்து அழைத்து சென்றான்.
இளையவர்கள் இருவரும் இன்னும் அந்த ஒரு ஐஸ்க்ரீமை தான் சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஜானவி புன்னகையுடன் இளையவர்களை கண்டாள்.
பிறகு திரும்பி சென்றவர்களை காண ஜீவி கையில் இரண்டு டப்பா நிறைய கேக்குகளை எடுத்து வர ஜீவா இமை நீண்ட சிரிப்புடன் மகளின் கைப்பிடித்து நடந்து வந்தான்.
ஜானவியின் இதழ்களில் ரசனை புன்னகை பூத்தது. தலைசரித்து சிரிப்புடன் அவர்களை காண, “என்ன?” என்று ஒற்றை புருவம் உயர்த்தினான்.
“போதுமா? அப்பாக்கும் மகளுக்கும்?” என்று சிரிப்பும் முறைப்புமாக கேட்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரிப்புடன், “போதும்” என்றனர்.
“பொண்ணு கேட்டதும் தலைகால் புரியாம டசன் கணக்குல வாங்கி கொடுத்திருக்கீங்களா?” என்று குறும்பு சிரிப்புடன் ஜானு வினவ, “ஆமா என் பொண்ணு கேட்டா இந்த பார்லரையே வாங்கி கொடுப்பேன்” என்று அவனும் பதிலுக்கு பதில் பேச, “முத்திடுச்சு” என்றவள் மகன்களிடம் கவனம் வைத்தாள்.
ஜீவி வாங்கி வந்ததில் ஒன்றை தாயிடம் நீட்டி, “ம்மா இதை நாளைக்கு சாப்பிட்டுகலாம்னு அப்பா சொன்னாங்க. நீ வச்சிடு” என்றவ
ள் மற்றதை பிரித்து தம்பிகளுடன் பங்கிட்டாள்.
மூவரும் பகிர்ந்து உண்ண பெற்றவர்கள் இருவரும் சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்…