• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,215
Reaction score
3,608
Points
113
நெஞ்சம் – 60 💖

நான்கு நாட்கள் முடிந்ததும் ஜனனியும் குழந்தையும் அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். தேவாவும் அவர்களுடன் சென்றான். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா எனப் பார்த்து செய்தான். அவனுடைய இன்மையை எவரும் உணராதபடி அடிக்கடி தன் வீட்டிற்கும் வந்து சென்றான்.

ஆதிரைக்கு அவன் அங்கே செல்வது தெரியும். அவள் பெரிதாய் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. பொன்வாணியைத் தவிர அவளுக்கு யாரிடமும் முரண்பாடுகள் என்று எதுவும் இருந்ததில்லை. தேவா இரண்டு வீட்டையும் ஓரளவிற்கு சமாளிக்கப் பழகி இருந்தான். ஆதிரையை அவன் தன் வீட்டிற்கு அழைக்கவில்லை. அவளாகத் தோன்றினால் வரட்டும் என்றுவிட்டான். அவளுக்குமே அங்கு சென்று நிற்பதில் பெரிதாய் உடன்பாடில்லை.

தேவா, அபி, ஆதிரை என அவளது உலகம் சின்னதாய் அழகாய் இருந்தது. அவளுக்கு தேவா ஒருவனே போதும் என்ற மனநிலை. அவளுக்கு எல்லா விதத்திலும் அவன் பக்கபலமாய் நின்றான். இருவரும் ஒருவாறு தங்கள் இணைக்கு ஏற்ப ஒரு சில விஷயத்தில் இறங்கி வந்தனர். அதுவே சிறந்த இல்லறத்திற்கு வழி எனப் புரியவும் செய்தது.

ஜனனிக்கு குழந்தை பிறந்து ஒருமாதம் கழிந்த நிலையில் பெயர் சூட்டுவதற்காக இவர்கள் குடும்பமாய் சென்று வந்தனர். ஆதிரை முதலில் அங்கு செல்ல வேண்டுமா என பொன்வாணியை எண்ணி யோசிக்க, ஹரி அவளை விடவில்லை. அண்ணியும் அண்ணனும் வந்தால்தான் பெயர் வைப்பேன் என மிரட்டியே அவளை வர வைத்திருந்தான். அப்படியே அந்த வாரம் கழிந்திருக்க, இருவரையும் மெதுவாய் வேலை இழுத்துக் கொண்டது.

தேவா முக்கியமான சந்திப்பு என்று தாம்பரம் வரை சென்றுவிட்டு மதியத்திற்கு மேல்தான் உழவர் துணைக்குள் நுழைந்தான். ஆய்வகத்தைக் கடக்கும் போது எதேச்சையாக பார்வை மனைவியை ஆராய, அவள் மேஜையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

யோசனையுடன் உள்ளே சென்றவன், “தர்ஷினி, என்னாச்சு ஆதிரைக்கு?” எனக் கேட்க, “அவங்களுக்கு என்ன சார்?” புரியாது வினவியபடியே தர்ஷினி மற்றவளைப் பார்த்தாள். அவள் உறங்கியதை இப்போதுதான் மற்ற மூவரும் கவனித்தனர்.

“தெரியலை சார்... வொர்க் பண்ணிட்டுத்தான் இருந்தாங்க. எப்போ தூங்குனாங்கன்னு தெரியலை!” என்றாள் அவள் விழித்து.

‘மிஸஸ் ஆதிரையாழ்!’ என அதட்டச் சென்றவன், “அவங்களை எழுப்பி விடுங்க தர்ஷினி!” என்று இவளிடம் உரைத்தான்.

தலையை அசைத்தவள், “ஆதிக்கா... அக்கா!” என ஆதிரையின் தோளை பிடித்து உலுக்க,

அவள் உலுக்கலில் உறக்கம் கலைந்தவள், “தூங்கிட்டேனா தர்ஷூ?” என்றாள் மெல்லிய குரலில். கண்ணை சிமிட்டி மங்கலாய் இருந்த பார்வையை சரி செய்தாள். தனக்குப் பின்னே நின்றிருந்த தேவாவை அவள் கவனிக்கவில்லை.

“ஆமாக்கா.‌. சார் கூப்பிட்றாங்க!” என தர்ஷினி கண்ணைக் காண்பிக்க, தேவா அவளை முறைத்துப் பார்த்தான். அப்போதுதான் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் முகத்தில் என்னவோ ஒரு சோர்வு அப்பிக் கிடந்ததை தேவா கவனித்தான்.

“ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு என் ரூமுக்கு வாங்க ஆதிரையாழ்!” என கடுகடுத்துவிட்டு அகன்றான்.

‘சொந்த பொண்டாட்டி தானேய்யா? பத்து நிமிஷம் அசந்து மறந்து தூங்குனதுக்கு முகத்தை தூக்கிட்டுப் போறாரு பாரேன்!’ என தர்ஷினி தேவாவை முறைத்தாள்.

ஆதிரை முகத்தை கழுவிவிட்டு அவன் அறைக்குச் செல்ல, “வொர்க்கிங் டைம்ல இப்படித்தான் தூங்குவீயா டீ? உன்னைப் பார்த்து மத்தவங்களும் இதையே பண்ணா என்ன பண்றது? அறிவில்லையா ஆதி?” அவன் படபடவென பொரிய, அவன் முன்னே கை நீட்டி பேச வேண்டாம் என்பது போல தடுத்தவள்,

“என் புருஷன் நேத்து நைட்டு என்னைத் தூங்கவிடலை சார். அதான் இப்போ அசந்து தூங்கிட்டேன்!” என்றாள் எள்ளலாய். அவள் பேச்சில் தேவாவிற்கு சட்டென முகம் மாறிப்போனது. கோபம் காற்றில் கரைந்து போக, அடுத்த என்னப் பேசுவது எனத் தெரியாது திகைத்துப் போனான். உண்மையில் நேற்று இருவரும் தூங்க நேரமாகிவிட்டதுதான். சும்மாயிருந்தவனை அவள்தான் உசுப்பிவிட்டாள். தவறு இருவர் மேலும் சரிபங்குதான் இருந்தது.

இப்போது அதை சொல்லிக் காண்பிக்க மனமில்லாதவன், “ஃபைன்... இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு!” என்றான்.

“இல்ல... இல்ல, டூ ஹவர்ஸ்தானே. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்!” ஆதிரை மறுக்க,

“நோ நீட். நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு!” தேவா அழுத்திக் கூற,

“ஷ்யூரா... அப்புறம் டூ ஹவர்ஸ் வேலை பார்க்கலைன்னு அட்வாண்டேஜ் எடுக்குற, உன்னைப் பார்த்து மத்தவங்க கெட்டுப் போவாங்கன்னு லெக்சரர் எடுத்தீங்க... செம்ம டென்ஷனாகிடுவேன்!” என அவள் கணவனை அதட்டினாள்.

“கிளம்பு டீ முதல்ல!” அவன் வாயிலைக் கை காண்பித்ததும் அலட்டிக்காது வீட்டிற்கு கிளம்பி விட்டாள். இவன் தலையை உலுக்கியவன் இனிமேல் அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்தான்‌. நினைக்க மட்டும்தான் அவனால் முடிந்தது. என்னவோ ஆதிரையின் உடல் சூட்டில் இவனது அனைத்தும் தணிந்து போவது போலொரு பிரம்மை. அவளை அணைக்காது, முத்தமிடாது இப்போதெல்லாம் உறக்கம் அண்ட மறுக்கிறது.

ஒரேயொரு முத்தம் என மனைவி ஆரம்பிக்க, இவன் அதை முடிக்க மனமற்றுத் தொடர்கிறான். இருவருக்கும் மற்றவர் அருகாமை தேவையாய் இருந்தது. உண்மையில் உடல் தேவையைத் தாண்டி அதுவொரு உரிமை உணர்வு. என் மனைவி எப்போதும் என்னை மறுக்க மாட்டாள் என இவனுக்குள் சின்னதாய் ஒரு கர்வம் முளைத்திருக்க, அது கொடுத்த உந்துதல்தான் அவனது கட்டுப்பாட்டை இழக்கச் செய்கிறது. கண்டிப்பாய் இனிமேல் உணர்வுகளைக் கட்டுக்குள்கொண்டு வர வேண்டும் என்று அழுத்தமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான்.

ஆதிரை யோசனையுடன் வீட்டிற்குச் சென்றாள். என்னவோ இந்த இரண்டு நாட்களாக உடல் சரியாய் அவளுக்கு ஒத்துழைக்க மறுத்து சதி செய்தது. எல்லா நேரமும் படுக்கையிலே படுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல சோம்பேறித்தனம் அவளைப் பாடாய்படுத்திற்று.

ஒருவேளை உடல்நிலை சரியில்லாமல் இருக்குமோ? ரத்த சோகையாய் இருக்குமோ? என்னவாக இருக்கும் என்று சுய அலசல் செய்தவள் பார்வையில் வழியில் கடந்த மருந்தகம் தென்பட்டது. சட்டென்று இருசக்கர வாகனத்தை நிறுத்தியவளுக்கு என்னத் தோன்றியதோ, அங்கே சென்றாள்‌.

“பிரக்னன்சி டெஸ்ட் பண்ற கிட் கொடுங்க!” எனக் கேட்டு வாங்கி அதைக் கைப்பையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றாள். கண்டிப்பாக அப்படித்தான் இருக்கும் என மனம் ஆருடம் கூறிற்று.

ஏனென்றால் அவளுக்கு மாதவிடாய் தவறி இருபது நாட்கள் கடந்திருந்தன. அபியை அவள் வயிற்றில் இருக்கும் சமயமும் இப்படித்தான் எந்நேரமும் ஓய்வெடுக்க சொல்லி உடல் உந்தும். ஆனால் அப்போது அவளுக்கு குழந்தைப் பற்றிய எண்ணமே இல்லை. அப்புவை பிரிந்ததினால் அப்படி இருக்கிறோம் என அதற்கு அவளே மனவழுத்தம் எனப் பெயர் வைத்துவிட்டாள்.

உள்ளே நுழைந்தவளுக்கு சோர்வாய் இருந்தது. சூடாய் ஒரு குளம்பி குடித்தால் நன்றாய் இருக்கும் என வறண்டு போயிருந்த நாக்கு ஏங்கிற்று. சிறிது நேரம் சோபாவிலே சுருண்டு படுத்துவிட்டாள். கண்ணை மூடியவள் மெதுவாய் விரல்கொண்டு வயிற்றைத் தடவினாள். உறுதி செய்யவில்லை எனினும் என்னவோ உள்ளுணர்வு கண்டிப்பாய் இது குழந்தைதான் எனக் கூறியது.

அபி வயிற்றிலிருக்கும் போது யாருமே இல்லாத அநாதை போல அவளை அவளே பார்த்துக் கொண்ட நாட்கள் எல்லாம் கண்முன்னே வந்து போயின‌. இப்போது தேவா இருக்கிறான். ஒன்றல்ல, இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றால் கூட அவன் பார்த்துக் கொள்ளுவான் என மனம் அவனை முழுமையாய் நம்பிற்று.

அவனை அதிகம் சார்ந்திருக்காதே என அவளுக்கு அவளே சில சமயம் எச்சரிக்கை விடுப்பாள். அதெல்லாம் திருமணமான ஆரம்ப காலம். ஆனால் இப்போதெல்லாம் அவனை முழுமையாக நம்பினாள். உளப்பூர்வமாக நேசித்தாள். அதனாலே உதட்டில் முறுவல் அரும்பிற்று. தேவா ஒரே ஒருநாள்தான் அடுத்துக் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினான்.

அதற்கடுத்து அவன் அதைப் பற்றி பேசவேயில்லை. ஆனால் இவளுக்கு ஆசை இருந்தது. தேவா, அவள், அபி மற்றும் ஒரு பெண் குழந்தை என ஆழகாய் அவர்கள் குடும்பத்தை வடிவமைக்க வேண்டும் என மனம் நிரம்ப ஆசை தளும்பிற்று.

சின்ன புன்னகையுடன் எழுந்தவள் மெதுவாய் பாலைக் காய்ச்சி குளம்பியைத் தயாரித்துக் குடித்தாள். பின்னர் அவசரமில்லாது பொறுமையாய் கர்பத்தைப் பரிசோதிக்கும் கருவியை எடுத்துப் பிரித்து சோதித்தாள். அதில் இரண்டு சிவப்பு கோடுகள் விழவும், இவளது உதட்டில் புன்னகை ஏறியது. ஐந்து கைகளையும் மடக்கி விரித்து என இருமுறை அதையே பார்த்தவள், பின்னர் அலமாரியில் அக்கருவியைப் பத்திரப்படுத்தினாள். பின் மெத்தையில் படுத்து போர்வையை கழுத்துவரைப் போர்த்தி உறங்கிப் போனாள்.

கணவனிடம் பகிர வேண்டும், அபியிடம் கூற வேண்டும் என மனம் முழுவதும் சின்ன அவா பிறந்தது. அந்த உணர்வுடனே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள். சிறிது நேரத்திலே அபி வந்துவிட்டான். தாயின் வாகனம் வெளியே நிற்பதைப் பார்த்தவன், குடுகுடுவென மாடியேறினான்.

அவன் கதவை தட்டியதும், ஆதிரைக்கு தூக்கம் கலைந்தது. எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அவன் உடை மாற்றி வருவதற்குள் ஒரு குவளையில் குளம்பியையும் சின்ன கிண்ணத்தில் ரொட்டியையும் எடுத்து வந்து மேஜை மீது வைத்தாள்.

“அம்மா... நித்தி இருக்கா இல்ல, அவ எனக்கு சாக்லேட் வாங்கி கொடுத்தாம்மா. அந்த சாக்லேட் சூப்பரா இருந்துச்சு. கோகனட் எல்லாம் மிக்ஸாகி இருந்தது. எனக்கும் அதை வாங்கித்தாம்மா!” என்றவன் தான் உண்ட இன்னட்டின் உறையைப் பத்திரப்படுத்தி எடுத்து வந்து தாயிடம் காண்பித்தான். அவளுக்கு சிரிப்பு வந்தது.

“சரி வாங்கலாம், நீ காஃபியைக் குடி!” என்றவள் குட்டியாய் நீள்விருக்கையில் இருந்த தலையணையை எடுத்து மடியில் வைத்து ஒற்றைக் காலை மடக்கி, மற்றொன்றைத் தொங்கவிட்டபடியே அவனுக்கு அருகே அமர்ந்தாள்.

அபியும் தலையை அசைத்து சூடாய் இருந்த குளம்பியில் ரொட்டியை நனைத்து உண்ணத் தொடங்கினான். இவள் அவனைத்தான் பார்த்திருந்தாள். குளம்பி சூடாய் இருக்கவும், ஊதியபடியே குடித்தான்‌. தன் வயிற்றிலிருக்கும் குழந்தைப் பிறக்கும்போது அபி பத்து வயதை எட்டியிருப்பான். இருவருக்கும் பத்து வருட இடைவெளி இருக்குமே என புதியாய் ஒரு கவலை துளிர்த்தது.

பின்னர் அதை பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் எனக் கிடப்பிலிட்டவள், அபி குளம்பியைக் குடித்து முடிக்கும்வரை பொறுமையாய் இருந்தாள். அவன் உண்டு முடித்து குவளையையும் கிண்ணத்தையும் கழுவுமிடத்தில் வைத்துவிட்டு வந்தான்‌. இதெல்லாம் தேவாவின் பழக்கம். அவன்தான் இவனுடைய சின்ன சின்ன வேலைகளை நீயே பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, பழக்கப்படுத்தி இருந்தான். ஆதிரையும் அவனைத் தடுக்கவில்லை.

“அபிம்மா, உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா?” எனத் தன்னருகே அமர்ந்த மகனின் நெற்றி முடியைக் கோதினாள். தாயைப் புரியாது பார்த்தான் சின்னவன். அவன் தம்பி, தங்கையைப் பற்றி எதுவுமே சிந்தித்திருக்கவில்லையே.

“ஹம்மா... ரெண்டு பாப்பா வேணும்மா!” அவன் யோசிக்காது கூறியதில் இவளுக்கு சட்டென்று முறுவல் பிறந்தது.

“ரொம்ப ஆசைப்படாதடா மகனே! எதாவது ஒன்னுதான் கிடைக்கும்!” என்றாள் உதட்டோரம் தாராளமாக அரும்பிய புன்னகையுடன்.

“ப்ம்ச்... அப்படியா?” என உச்சுக் கொட்டியவன், “அப்போ தம்பி பாப்பாவே ஓகேம்மா” என்றான்.

“ஏன் டா... தங்கச்சி வேணாமா உனக்கு?” இவள் கேட்க,

“இல்லம்மா... அஷ்வின்க்கு தம்பி இருக்கான் இல்ல. அவனும் அவன் தம்பியும் கிரிக்கெட் விளையாடுவாங்களாம். எனக்கு தம்பிதான் வேணும்‌. அவன்தானே என்கூட கிரிக்கெட் விளையாட வருவான்‌. நானும் தம்பியும் ஸ்விம்மிங் கிளாஸ் கூடப் போவோம்!” என அவன் பாவனையாய் கூறியதில் இவளுக்கு முகம் கனிந்தது.

“அது சரி...” என்றவள் அவனைத் தோளோடு அணைத்தாள். கண்கள் அவ்வப்போது வாயிலைப் பார்த்தன. இவ்வளவு விரைவாக கணவன் வர மாட்டான் என அவளுக்குத் தெரியுமே. இருந்தும் அவன் அருகாமைக்கு மனம் ஏங்கியது. அபி வேறு பேச்சிற்கு தாவினான். இருவரும் இரவு உணவை சமைத்தனர்.

“ஆதி... இந்தா டி, மருதாணி அரைச்சேன். நீயும் அவனும் வச்சுக்கோங்க!” என ருக்கு அவளிடம் ஒரு கிண்ணத்தை நீட்டினார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் மருதாணி வாசம் நாசியை நிரட, ஆதிரை ஆசையாய் வாங்கினாள்.

“ஏன் டீ... முகம் வெளுத்துப் போய்ருக்கு. டையர்டா தெரியுற? மசக்கையா என்ன?” அவர் சரியாய் கேட்டதும், இவள் சங்கடத்துடன் ஆமாமென தலையை அசைத்தாள்.

“ரொம்ப சந்தோஷம் ஆதி. பத்திரமா இரு. உடம்பைப் பார்த்துக்கோ. எதாவது வேணும்னா என்னைக் கேளு!” என அவர் முகம் முழுக்க சிரிப்புடன் அகன்றார்.

தேவா வரத் தாமதமாகும் என இவளுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தான். அதைப் பார்த்ததும் மூச்சை வெளிவிட்டவள், அபியோடு அமர்ந்து உண்டாள்‌. அவன் சாப்பிட்டு முடித்ததும் மருதாணியைக் கையில் வைக்க கூறினான்.

“பெட் ஸ்ப்ரெட்டை மாத்தணும் டா. இல்லைன்னா லாஸ்ட் டைம் மாதிரி நீ பெட்டை நாசம் பண்ணிடுவ” என மகனைக் கண்டித்தவள், படுக்கை விரிப்பை மாற்றியப் பின்னே அவனுக்கு இரண்டு கையிலும் மருதாணி வைத்துவிட்டாள்.

அவன் பள்ளியில் நடந்ததை விவரித்தபடியே, “ம்மா... இது ரவுண்டாவே இல்லம்மா. இது ட்ரையாங்கில்மா!” என அவளைக் குறைக் கூறினான்.

“ம்ப்ச்... இதான் டா வட்டம். இப்படித்தான் இருக்கும்!” என அவனை அதட்டி வைத்துவிட்டவளுக்கு சிரிப்பும் வந்தது. மகன் அவளை முறைத்து சிணுங்கினான். பின்னர் தொலைக்காட்சியில் ஏதோ பார்த்தான்‌.

அவனுக்கு உறக்கத்தில் கண்கள் சொருக, “ரூம்க்கு வந்து தூங்கு அபி!” என அவனை அறையில் படுக்க வைத்தாள்.

தேவா தாமதமாய் வந்தான். அவன் முகத்தில் சோர்வு அப்பிக் கிடந்தது. இவள் அவனுக்கு உணவை எடுத்து வைத்தாள். தன்னை சுத்தம் செய்துகொண்டு உண்டான். ஆதிரை அவன் சாப்பிட்டு முடியட்டும் எனப் பார்த்திருந்தாள். மனைவியின் முகத்தை அவன் கவனிக்கவேயில்லை. இவள் அவன் உண்டதும் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு அறைக்குள் வந்தாள்.

தேவா சுவரையொட்டி பாயை விரித்து சாய்ந்து அமர்ந்திருந்தான். இப்போதுதான் மனைவியை கவனித்தான். அவள் சின்ன புன்னகையுடன் மருதாணியை எடுத்துக்கொண்டு சென்று அவனருகே அமர்ந்தாள்.

“என்ன திடீர்னு மருதாணியெல்லாம்?” கணவன் கேள்வியாகப் பார்த்தான்.

“ருக்கும்மா கொடுத்தாங்க தேவா. சரி ரொம்ப நாளாச்சேன்னு அபிக்கு வச்சுட்டு, எனக்கும் வைக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்!” என்றவள் வலதுகையில் குட்டி குட்டி வட்டமாய் வைத்தாள். அவள் முகத்தையே தேவா பார்த்திருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து தொண்டையைச் செருமியவன், “இப்போ நீ ஓகேவா ஆதி?” எனத் தயங்கியபடியே கேட்டான். இவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகையுடன் தலையை அசைத்தாள்.

“உங்களுக்கும் மருதாணி வச்சுவிடவாங்க? நல்லா வாசமா இருக்கும்!” என்றவள் அவன் முகம் பார்த்தாள்‌.

“நோ...” என மறுத்தவன்,
“கைல மருதாணி வச்சிட்டு போய் எப்படி டீ வேலை பார்க்க முடியும்?” என அவளை முறைக்கவும் செய்தான்.

“ம்ப்ச்... கைல இல்லைங்க. உள்ளங்கால்ல வைக்கலாம். யாருக்கும் தெரியாது. உங்க காலைத் தூக்கி யாரு பார்க்க போறா?” அவள் கேட்க, இவன் வேண்டாம் என்று தலையை அசைத்தான்.

“வேணாம்னா போங்க!” உதட்டை சுழித்தவள் வெடுக்கென திரும்பினாள்.

“ப்ம்ச்... வேணாம் டீ. எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல!” எனத் தன்மையாய் அவளது கையைப் பிடித்தான்.

“கால்லாதானே தேவா? கொஞ்சமா வைக்கிறேன். நல்லா இல்லைன்னா அழிச்சுடலாம்பா!” ஆசையாய் தன் முகத்தைப் பார்த்த மனைவியிடம் இதற்கு மேலும் அவனால் மறுக்க முடியவில்லை. சரியென தலையை அசைத்தான்.

ஆசையாய் அவனது இரண்டு உள்ளங்காலிலும் மருதாணியை வைத்துவிட்டாள் ஆதிரை. தேவா அவள் முகத்தையே பார்க்க நிமிர்ந்து அவனைப் பார்த்து முறுவலித்தவள், “மேரேஜ்க்குப் பிறகு ஒரு தடவைக் கூட நீங்க அப்புவைப் பத்தி தெரிஞ்சுக்க ஆர்வமே காட்டலையே தேவா?” எனக் கேட்டாள்.

திடீரென அவள் கேள்வியில் நெற்றியை சுருக்கியவன், “இப்போ அவனைப் பத்தி ஏன் பேசணும்?” என்றான் முசுட்டு முகத்துடன். அதில் இவளுக்கு சிரிப்பு வந்தது.

“ப்ம்ச்... சும்மா கேட்டேன் தேவா. நீங்க முன்னாடி என்னாச்சுன்னு ரெண்டு மூனு டைம் கேட்டிருக்கீங்க. இப்போ அதைப் பத்திப் பேசுறதே இல்லையே!”

“அதெல்லாம் உன்னை மேரேஜ்க்கு ஓகே பண்ண வைக்கிறதுக்கு கேட்டது டீ. இப்போதான் கல்யாணமாகிடுச்சே. அவனைப் பத்தி தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன்?” என மனதில் உள்ளதை அப்படியே கூறியவனை இவள் முறைத்துப் பார்த்தாள்.

அதில் தொண்டையைக் கனைத்தவன், “ஐ மீன்... நமக்கான டைம்ல அவனைப் பத்தி என்ன டீ பேச்சு?” எனக் கேட்டு கால்களை நீட்டியவன், மனைவியைத் தன் மீது சாய்த்துக் கொண்டான்.

“சும்மா உங்ககிட்டே நடந்ததை ஷேர் பண்ணணும்னு தோணுச்சு தேவா. என் பாஸ்ட்ல நடந்ததைக் கேட்டு நீங்க என்ன ரியாக்ட் பண்ணுவீங்கன்னு பார்க்கணும். மோர் ஓவர் இதுவரைக்கும் நான் அதை யார்கிட்டேயும் ஷேர் பண்ணதில்லைங்க!” மென்குரலில் மனைவி கூறவும், அவள் முகத்தை நிமிர்த்தினான் தேவா.

“பாஸ்டைப் பத்தி கவலைப்பட்ற ஆள் நான் இல்ல, நீயும் அப்படித்தான். அதே மாதிரி அதுல என்ன நடந்திருந்தாலும் நமக்குள்ள இருக்க எதுவுமே மாறாது. சோ, உனக்கு ஷேர் பண்ண தோணுச்சுன்னா பண்ணு. இல்லைன்னா வேண்டாம்!” தேவா அவள் தலையை மெதுவாய் வருடியபடி கூறவும், இவளுக்கு உதட்டோரம் சின்ன புன்னகை ஒட்டிக் கொண்டது.

“ஹம்ம்... ஒரே ஒரு டைம் உங்ககிட்டே சொல்லிட்றேன் தேவா. இனி நோ மோர் டாக்ஸ் அபவுட் அப்பு. ஷார்டா சொல்லிடுறேன். அப்புறம் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கூட இருக்கு!” என்றாள் அவன்மீது வாகாய் சாய்ந்து உற்சாகக் குரலில்.

“அது சரி... சொல்லித் தொலையும்!” சுகமா
ய் அலுத்தவனை முறைத்தவள், அப்புவை அவள் சந்தித்த தினத்திலிருந்து என்ன நடந்தது என மெல்லிய குரலில் விளக்கிக் கூறத் தொடங்கினாள்.

தொடரும்...

 
Well-known member
Messages
471
Reaction score
342
Points
63
Deva unga family la innoru member add aaga poraga da naan kooda indha janu ma unna nalla vachi seiyuthu thuku unnaku kalyanam kuzhandhai ellam dream la than nadakkum nu nenachen paravala da unnaku pondati pillai ippo innoru kuzhandhai nu vara poraga enjoy deva enjoy
 
Top