• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,205
Reaction score
3,520
Points
113
நெஞ்சம் – 49 💖

“இன்னொரு இட்லி சாப்பிடு தேவா!” பொன்வாணி மகன் தட்டை நிரப்ப, “ப்ம்ச்... ம்மா போதும்!” என்றவன் அவர் வைத்தையும் வயிற்றுக்குள் தள்ளினான். ஆதிரைதான் இட்லி சுட்டு வேர்கடலை சட்னி செய்தாள். ருசியாக இருந்தது.

அவள் சமைத்து வேலைக்கு ஆயத்தமாக வாணி மகனுக்குப் பரிமாறினார். பெண்மணி இப்போது வீட்டில் எந்த வேலையும் செய்வது இல்லை. மேற்பார்வையாளர் போன்று ஆதிரை என்ன வேலை செய்கிறாள் எனக் கவனித்து அதில் ஏதேனும் குறை கூறுவதுதான் அவரது பிரதான கடமை என நடந்து கொண்டார். தேவாவும் அதை கவனித்தான்தான். அவனுக்கும் எரிச்சல் வந்தாலும் தாயை ஒன்றும் சொல்ல முடியவில்லை. புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம். ஆனால் புரிந்து கொள்ள மாட்டேன் என்று வீம்பு பிடிப்பவர்களை என்ன செய்வது என அவனுக்குமே தெரியவில்லை. ஆதிரையின் பேச்சை கேட்காமல் சமையல் மற்றும் வீட்டு வேலைக்கு யாரையும் நியமிக்கலாமா என யோசித்தான்.

“வாணி, என் மாத்திரை டப்பாவை எங்க வச்ச?” அறைக்குள்ளிருந்து கோபால் குரல் கொடுக்க, “அந்த டேபிள்ல தான் வச்சேன்ங்க!” என்றவாறே இவர் அகல, ஜனனி குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிவிட்டு வந்தாள்.

தேவாவைப் பார்த்தவள், “ஏன் மாமா, இந்த வீக் நீங்களும் அக்காவும் அவுட்டிங் போவீங்கன்னு நினைச்சேன். பட், பிசி போல?” எனக் கேள்வி கேட்டாள். அவன் புரியாது பார்த்தான்.

“என்ன அவுட்டிங் ஜானு?” இவன் யோசனையுடன் கையைத் தட்டில் கழுவினான்.

“போச்சு... மறந்துட்டீங்களா? அக்கா ரொம்ப பாவம். சரியான வொர்க்கஹாலிக் நீங்க. சண்டோ அவுடிங் கூட்டீட்டு போவீங்கன்னு பார்த்தா, வீக்கெண்ட்லயும் வேலை வாங்கி இருக்கீங்களா?”
இவள் அவனைக் குறையாய்க் கூறி முறைத்தாள். ஹரி தேவாவின் செய்கைகளை மனைவியிடம் கூறியிருந்தான். இவர்கள் பிடித்துப் போய்தான் திருமணம் செய்தார்களா என அவளுக்கு சந்தேகம் ஒன்று திடீரென்று முளைத்தது.

“வொர்க் நிறைய பெண்டிங் ஜானு. அதான் நேத்து அவளை வேலைக்கு கூட்டீட்டுப் போனேன். அவ கூட இருந்தா பாதி வேலை எனக்கு குறைஞ்சுடும்!” இவன் பதிலளித்தவாறே, “என்ன அவுட்டிங்னு மறந்துட்டேன் மா!” அவள் பேச்சின் சாராம்சத்தை தெரிந்து கொள்ளும் நோக்கில் கேட்டான்.

“போங்க... பொண்டாட்டியோட ஃபர்ஸ்ட் பெர்த் டே. சோ, வெளிய கூட்டீட்டுப் போறேன்னு சொல்லீட்டு நீங்க மறந்துட்டீங்க. அதான் அக்கா முகம் ஒருமாதிரி இருக்கு போல. நானா இருந்தா உங்க தம்பியை ஒரு வழி பண்ணிருப்பேன். உங்க பொண்டாட்டி ரொம்ப சைலண்ட்!” அவள் குற்றம் சுமத்துவது போல தேவாவைப் பார்க்க, அவனுக்கு கொஞ்சம் எரிச்சல்தான். அவன் வெளியே அழைத்துச் செல்வதாய் கூறவில்லையே என சிந்தித்தான். பிறந்தநாள் என்றால் செய்ய வேண்டும் என்று சட்டமேதும் இருக்கிறதா எனக் கடுப்பானான்.

ஆதிரையிடம் முன்பிருந்த துள்ளல் புன்னகை எல்லாம் குறைந்திருந்ததை இவன் கவனித்தே இருந்தான். என்னவெனக் கேட்டதற்கும் அவள் சிரித்து மழுப்பிவிட்டாள். இப்போது ஜானுவின் கூற்றில் மனம் என்னவென அனைத்தையும் இணைத்துப் பார்த்தது. உண்மையில் அவன் எங்கேயும் அழைத்துச் செல்வேன் என கூறவே இல்லை. அப்படி இருக்கையில் ஏன் ஆதிரை இவர்களிடம் இப்படி உரைத்தாள் என அவன் அறிய வேண்டி இருந்தது. என்ன நினைத்துக்கொண்டு இந்தப் பெண் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என இவனுக்கு சற்றே எரிச்சல் படர்ந்தது.

இன்றைக்கு விரைவிலே ஒரு சந்திப்பிற்காக தாம்பரம் செல்ல வேண்டி இருந்தது. என்ன செய்ய என நெற்றியை ஒற்றை விரலால் தேய்த்தவன், அலைபேசியை எடுத்து அந்த சந்திப்பிற்கு வர முடியாத சூழல் எனக் கூறிவிட்டு அறைக்குள்ளே சென்றான்.

ஆதிரை குளித்துவிட்டு தலையில் துண்டோடு புடவைக் கொசுவத்தை சொருகிக் கொண்டிருந்தாள். இவன் வந்ததை அவள் கவனிக்கவில்லை. தேவா கதவை மெதுவாய் சாற்றிவிட்டு கட்டிலில் அமர்ந்தவன் கையிலிருந்த கடிகாரத்தை அகற்றி பக்கத்தில் வைத்துவிட்டு, அணிந்திருந்த சட்டையை தளர்த்தி சாய்ந்தமர்ந்து அவளைப் பார்த்தான்.

தலையிலிருந்த துண்டை எடுத்துவிட்டு முடியை உதறிக் கொண்டிருந்தாள். அவள் சிந்தனை எங்கோ இருந்தது. கணவன் வந்தது, தன்னைக் கவனித்தது என எதையுமே அவள் உணரவில்லை.

“ஆதி...” தேவாவின் குரலில் திடுக்கென நிகழ்விற்கு வந்தவள் ஒரு நொடி அதிர்ந்து கண்ணாடி வழியே தெரியும் பிம்பத்தின் நிஜத்தைக் காண அவன்புறம் திரும்பினாள்.

“என்னாச்சு, மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே? டைம் ஆகலையா?” அவன் முகம் பார்த்தாள் பெண்.

“மீட்டிங் போகலை நான்!” ஒற்றை வரி பதில் இவனிடம்.

“ஏன்? தேர்ட் பிராஞ்ச் ஓபன் பண்ண அந்த மீட்டிங் அட்டெண்ட் பண்றது முக்கியம்னு சொன்னீங்க?” ஆதிரை என்னவென்பதாய் யோசனையுடன் அவனிடம் கேட்டாள்.

“போகணும்னு தோணலை!” எனப் பெருமூச்சு விட்டவன், “வீகெண்ட் அவுட்டிங் போகலாம்னு ப்ளான் வச்சிருந்தீயா என்ன?” எனக் கேட்டான். ஞாயிறு என்றும் பார்க்காமல் நேற்று அவளை வேலைக்குத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான்.

ஆதிரை நேற்று இரவு படுக்கையில் வீழ்ந்ததும் ஞாயிறு ஒருநாள் நன்றாய் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு விழிகளை மூட, “ஆதி, பெண்டிங் வொர்க் நிறைய இருக்கு. நாளைக்கு நீயும் வந்தா ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். சோ, நீயும் வா!” என்றுவிட்டான் தேவா. இவள் மறுத்திருக்கலாம். ஆனாலும் அவன் ஒற்றை ஆளாக அத்தனையும் செய்தால் இன்னும் சோர்ந்து விடுவானே என அவனுக்காய் மனம் கரிசனத்தை உதிர்க்க, சரியென்று விட்டாள்.

அவன் கேள்வியில் ஆதிரை முகத்தில் யோசனை படர்ந்தது. “இல்லையே! சண்டே எங்கேயும் போகம வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம்னுதான் ப்ளான். வேற எதுவும் பெருசா இல்லையே!” என்றாள்.

“பொய் சொல்றது எனக்குப் பிடிக்காது ஆதி. ஜானுகிட்டே நீதான் நான் வெளிய கூட்டீட்டுப் போறேன்னு சொல்லி இருக்க? ரைட்?” என அழுத்தமாய்க் கேட்டான்.

ஆதிரை அவனை ஒரு பார்வை பார்த்தவள் தூரமாய் இருந்த நாற்காலியை இழுத்து வந்து கண்ணாடி முன்னே போட்டு அதில் அமர்ந்தாள். சமையல் வீட்டு வேலை என அனைத்தையும் ஒரே ஆளாய் பார்த்ததில் கால் வலித்தது. தலையை உலர்த்தியவள் சிக்கெடுத்துப் பின்னத் தொடங்க, “நான் உன்கிட்ட கேட்டா பதில் சொல்லணும் ஆதி. வேலை மெனக்கெட்டு மீட்டிங்கை கேன்சல் பண்ணீட்டு வந்து உக்கார்ந்து இருக்கேன்! என் டைம் வேஸ்ட் பண்ணாத நீ!” அவன் குரலில் மெல்லிய எரிச்சல் எட்டிப் பார்த்தது.

“இப்போ கூட நீங்க கிளம்புனா கரெக்ட் டைம்க்கு மீட்டிங்கு போகலாம். என் கூடப் பேசி உங்களோட டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!” அவன் பேச்சு இவளுக்கு எரிச்சலாய் இருந்தாலும் தன்னுணர்வுகளை காண்பிக்காது அமைதியாய் பேசினாள். தேவாவிற்கு கோபமாய் வந்தது.

“ரைட்... எனக்குத் தெரியும் நான் என்ன பண்ணணும்னு. முதல்ல என் கொஸ்டீன்க்கு ஆன்சர் பண்ணு மிஸஸ் ஆதிரையாழ்!” அழுத்திக் கேட்டான்.

“ஆமா... சொன்னேன்!” பதிலளித்தபடியே நெற்றியில் பொட்டை ஒட்டினாள் ஆதிரை.

“உனக்கு வெளிய போகணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட கேட்கணும் ஆதி. அவங்ககிட்ட சொல்லி ஜானு என்கிட்ட கேட்குறா. நான் ஏதோ தப்பு பண்ண மாதிரி. திஸ் இஸ் நாட் ஃபேர்!” ஜனனி கேட்டதும் கேலி செய்ததும் இவனுக்கு என்னவோ போலானது. இதை இப்போதே மனைவியிடம் பேசி தீர்த்து விடலாம் என்றுதான் சந்திப்பிற்கு செல்லவில்லை.

“எனக்கு அவுடிங் போகணும்னு தோணுச்சுன்னா நானே போய்ப்பேன். உங்ககிட்ட கேட்கணும்னு என்ன அவசியம்? எனக்கு வேணும்னா நானே செஞ்சுப்பேன்! ஐ கேன் டூ வாட் எவர் ஐ வாண்ட் டூ டூ” மெலிதாய் குரலை உயர்த்திக் கூறியவள்,

“நான் அவங்ககிட்ட அப்படி சொன்னதுக்கு ரீசன் உங்களை தப்பா நினைக்க கூடாதுன்னுதான். ஜானவும் பிரதுவும் என் பெர்த்டேக்கு என்ன ப்ளான், எங்கேயும் போகலையானு கேட்டுட்டே இருந்தாங்க. நான்தான் ரொம்ப மெச்சூர்டான ஆளாச்சே. பெர்த் டே விஷ் கூட எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டேன். அது உங்களுக்குத் தெரியும். அவங்களுக்குத் தெரியாது இல்ல. சோ, அப்போதைக்கு சும்மா ஒரு பொய் சொன்னேன். நத்திங் மோர் தன் தட். என்னால உங்க வேலை கெடுது பாருங்க. சோ, நீங்க கிளம்பலாம்!” என்றாள் வாயிலைக் கை காண்பித்து கோபத்தை அடக்கிய குரலில்.

தேவா சில நொடிகள் அமைதியாய் இருந்தவன், “நீ ரொம்ப சீன் கிரியேட் பண்ற ஆதிரை. பெர்த் டே விஷ் பண்ணாதது எல்லாம் பெரிய இஷ்ஷூவா? நான்லாம் பெர்த்டேவை மறந்தே போற ஆள். யாருக்கும் ஞாபகம் வச்சு விஷ் பண்ற பழக்கமெல்லாம் என்கிட்ட இல்லை. சர்ப்ரைஸ் அது இதுன்னு எல்லாம் நான் செய்ய மாட்டேன். இதான் நான், இந்த தேவாதான் நிஜம். பொய்யா கூட எனக்கு எதுவும் செய்ய வராது. அது உனக்கே தெரியும். அப்புறம் ஏன் நீ இவ்வளோ ரியாக்ட் பண்ற? ஒன் வீக்கா முகத்தை தூக்கி வச்சிருக்க. என்கிட்ட தேர்ட் பெர்சன் மாதிரி நடந்துக்குற? உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா ஆதிரை? பீ அ மெச்சூர்ட் கேர்ள்!” அவன் எரிச்சலாய் பேசினான். ஆதிரை அவன் பேசிய அனைத்திற்கும் கோபப்படாமல் அமைதியாய் பதிலளித்தது என்னவோ அலட்சியமாய்ப்பட்டது. இவன் கத்திக் கொண்டிருக்க, அவளிடம் எதிர்வினை எதுவும் இல்லையென கடுப்பானான்.

இவளுக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. ஆனாலும் இமையை இரண்டு முறை சிமிட்டு நீரை வெளியிடவில்லை. திடமாய் நின்றாள். அவன் சொல்வதின் அர்த்தம் இவளுக்கு நன்றாய் புரிந்தது. ஒரு பிறந்தாள் வாழ்த்து கூறாததற்கு எதற்கு நீ இத்தனை பலவீனமாய் உணர்கிறாய் என அவளை அவளே எத்தனையோ முறை கேட்டுவிட்டாள்.

இதே சென்ற வருடப் பிறந்தநாளில் அபியைத் தவிர ஒருவரும் அவளுக்கு வாழ்த்தவில்லை. அதைப் பற்றி இம்மியளவும் பொருட்படுத்தாமல் மகனோடு ஊரைச் சுற்றி அந்த நாளை இனிமையாகக் கழித்தாள். ஆனால், தேவா விஷயத்தில் வெறும் வாழ்த்தாக அதைப் பார்க்கவில்லை. அவன் தனக்கு கொடுக்கும் முக்கியத்துவமாக எண்ணினாள். அதனாலே மனம்‌ சட்டென அவன் விஷயத்தில் சோர்ந்து சுணங்கியது. ஒருவேளை தாலி கட்டிவிட்டான்‌ என்ற காரணத்திற்காக அவனிடம் எதிர்பார்க்கிறோமா என எண்ணுகையில் சிரிப்பும் வந்தது.

அலசி ஆராய்ந்து இந்த ஒரு வாரத்தில் மனம் கடைசியாய் ஒப்புக் கொண்டுவிட்டது. அவனிடம் உணர்வு ரீதியாக இவள் நெருங்கிவிட்டது புரிந்தது. அதனால்தான் இத்தனை வருத்தமோ? அவன் வாழ்த்தை கூறாததற்கு வருந்தி சின்னதாய் ஒரு அணைப்பு இல்லை ஒரு புன்னகையை சிந்தி இருந்தால் கூட மனம் சமாதானமாகி இருக்குமோ என்னவோ? ஆனால் அவன் நீ முதிர்ச்சி அடைந்தவள், வாழ்த்து கூற மாட்டேன். எதையும் எதிர்பார்க்காதே, அது இதுவென பேசவும் இவளுக்கு கோபமாய் வந்து தொலைத்தது. அவனிடம் காண்பிக்க முடியாத ஆதங்கத்தில் கண்ணீர் பெருகிற்று. இப்போதும் அப்படித்தான் அவள் தன்னைப் பலகீனமாக உணர்ந்தாள். ஒரு திருமணம் என்னுடைய தன்நம்பிக்கையை உறுதியை குலைத்துவிடுமா என்ன என எண்ணி இறுகிப் போய் நின்றாள்.

அவனை நிதானமாகப் பார்த்தாள். “பைன்... நீங்க சொல்றது சரிதான் மிஸ்டர் தேவநந்தன். நான் இம்மெச்சூர்ட்தான். இனிமே பக்குவமா நடக்க ட்ரை பண்றேன். இப்போ எனக்கு டைமாச்சு, நான் போகணும். உழவர் துணையே என்னை நம்பித்தான் இருக்கு. நீங்க வரலைன்னா நான்தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்னு ஆர்டர் வேற போட்டுருக்கீங்க. என்னதான் ஹஸ்பண்ட் அண்ட் வொய்பா இருந்தாலும் வேலை வேற, ரிலேஷன்ஷிப் வேற. சோ, ஐ ஹேவ் டூ கோ!” என்றவள் அழுகையை அடக்கியதால் சிவந்த நாசியையும் முகத்தையும் அவனிடம்‌ காண்பிக்காமல் விறுவிறுவென வெளியே நடந்தாள். என்ன முயன்றும் குரல் கடைசியில் உடைந்து அழப் போவதை காண்பித்துக் கொடுத்தது. தேவாவிற்கு அவளது பேச்சில் என்னவோ போலானது.

“அக்கா, சாப்பிடலையா நீங்க?” உண்டு கொண்டிருந்த ஜனனி கேட்கவும் ஆதிரை சற்று நிதானித்தாலும் திரும்பவில்லை.

“இல்ல ஜானு, எனக்குப் பசிக்கலை!” என்றவள் வீம்புக்கென்றே உண்ணாமல் கிளம்பிவிட்டாள். வயிறு பசியில் கபகபவென எரிந்தது. கிளம்பி வந்து உண்ணலாம் என நினைத்திருந்தாள். தேவாவின் பேச்சுக் கொடுத்த கோபத்தை உணவின் மீது காண்பித்தாள். மதிய உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. அவளுக்கு பழைய தன்னுடைய முதலாளி தேவநந்தன் மீண்டும் வந்துவிட்டதாய் ஓர் எண்ணம்.

இடைப்பட்ட நாட்களில் அவளுக்காக என முகம் பார்த்து மனதறிந்து நடந்து கொண்ட தேவாவை மனம் தேடிற்று அப்போது இவள் அவனை உதாசீனம் செய்திருந்தாள். அதற்குத்தான் இந்த தண்டனை போல எண்ணி விரக்தியாக சிரித்தாள். ஒவ்வொரு முறையும் நான் இப்படித்தான் என அவன் கூறும் போது, ‘ஏன் திருமணத்திற்கு சம்மதம் வாங்க என் பின்னால் வந்தாய்? என்னிடம் ஏன் அன்பைக் காட்டினாய்? அக்கறையாய் நடந்து கொண்டாய்? அதெல்லாம் வெறும் வாய் வார்த்தைக்குத்தானா?’ எனக் கேட்க நாக்கு பரபரத்தது.

திருமணத்திற்கு முன்பு வெளியே அழைத்துச் சென்றவன் அவளது விருப்பம் என அனைத்தையும் அவளுக்காக செய்து தொலைத்ததில் மனம் இப்போதும் அதையே எதிர்பார்த்து ஏமாந்துவிட்டது போல.

‘எதுக்கு இந்த எக்ஸ்பெக்டஷன் ஏமாற்றம் எல்லாம்? கல்யாணமாகிட்டா எல்லாம் மாறிடுமா? உன் புள்ளைக்கு நீ வேணும். அவனுக்கு நீ, உனக்கு அவன்னு வாழப் பழகு. இவனுக்காக இங்கேயும் உழைச்சுக் கொட்டி, வீட்லயும் ஆக்கிப் போடணும்னு என்ன அவசியம்? குடுக்குற சம்பளத்துக்கு வேலை பார்த்தா போதும். காலைல வேலை மெனக்கெட்டு தூக்கத்தை கெடுத்து சீக்கிரமா எழுந்து சமைக்க கூடாது. வேற யாராவது சமைப்பாங்க. இல்லைன்னா அபிக்கும் எனக்கும் வெளிய வாங்கிக்குறேன். இவன்கிட்ட நல்ல பேர் வாங்கி எனக்கு என்ன கிடைக்கப் போகுது. போகும்போது வரும்போதெல்லாம் இவங்கம்மா என்னைக் குத்திக் குத்திப் பேசுது. என்னமோ நான்தான் இவனை வளைச்சுப் போட்ட மாதிரி அசிங்கமா பார்க்குறாங்க. அனாதைன்னு திட்ட வேற செய்றாங்க. எல்லாத்தையும் எதுக்கு பொறுத்துப் போகணும். பழைய ஆதிரையா இரு நீ!’ மனம் கடகடவென ஆதங்கத்தைக் கொட்ட, கண்களில் கண்ணீரும் கொட்டியது. அவன் மீதிருக்கும் கோபத்தை எல்லாம் சாலையில் காண்பித்து வேகமாகச்‌ சென்றாள்.

‘ஆதி... டோன்ட்‌ பீ அ எமோஷனல் இடியட். இது உன் லைஃப், உன் இஷ்டப்படி வாழு. இவன் நேத்து வந்தவன். உன் லைஃப்ல டிஸிஷன் எடுக்குற உரிமை இவனுக்கு இல்ல. இவ்வளோ நாள் சந்தோஷமா இல்லைனாலும், அட்லீஸ்ட் நிம்மதியாவாது இருந்தேன். இப்போ, அதுவும் போச்சு!’ என நினைக்கையில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து கண்கள் தளும்பியது. எதுக்காக இத்தனை பலவீனப்பட்டுவிட்டோம் என அவளுக்குப் புரியவே இல்லை.
அவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள்? அனுசரணையும் அன்பும்தானே?

'வாழ்க்கையின் இறுதிவரை உடனிருப்பேன் என்று வாக்களித்தவன் இவன்தான். உடன் வாழும் மனைவியிடம் அன்பாய் நான்கு வார்த்தைகள் பேசத் தெரியாத இவனுக்கு எதற்கு திருமணம்? கடைசி வரை தனியாகவே வாழ்ந்திருக்கலாமே! ஏன் என்னைத் திருமணம் செய்து இப்படி கஷ்டப்படுத்துறய்யா!'

‘இட்ஸ் நாட் அப்வுட் மெச்சூரிட்டி. இட்ஸ் அபுவுட் ப்ரியாரிட்டி!’ எனக் கத்த வேண்டும் என்றிருந்தது. திருமணத்திற்கு முன்பு இப்படி உர்ரென அவன் இருந்திருந்தால் இவள் ஏன் எதையும் எதிர்பார்த்து ஏமாந்திருக்க போகிறாள். எல்லாம் வேஷம், கடைசியில் இவனும் இப்படித்தானா என மனம் கனத்துப் போனது. இன்றைக்கு தேவாவின் பேச்சு ஆதிரையை நிறைய நிறையக் காயப்படுத்தி இருந்தது.

அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இவனுக்காகவென அவள் அனைத்தையும் அனுசரித்துப் பார்த்து நடந்து கொள்ள, முகத்தில் அடித்தாற் போல பேசுகிறான். என்னுடன் பேசியதால் மீட்டிங் கெட்டு விட்டதாம். இதே வாய்தான் நீதான் முக்கியம் என ரோஷம் வெட்கம் கெட்டு வந்தேன் என வீட்டில் வாயில் வரை வந்து நின்று கூறிற்று என மனம் புழுங்கியது.

உழவர் துணைக்கு வந்ததும் ஆதிரை சற்றே நிதானித்தாள். கைப்பையை தன்னிடத்தில் வைத்தவள் யாரையும் நிமிர்ந்து பார்க்காது கழிவறைக்குள் நுழைந்துவிட்டாள். முகத்தைக் கழுவிவிட்டு பொய்யான புன்னகை அரிதாரத்தைப் பூசிக் கொண்டாள்.

“என்னக்கா... வந்ததும் மேக்கப்பை கலைச்சிட்டு நிஜ முகத்தோட எங்களைப் பயப்பட வைக்குறீங்க?” என தர்ஷினி கேலியாய் கேட்க, ஆதிரை அவளை முறைத்தாள்.

“என்னாச்சு, முகமெல்லாம் சிவந்திருக்கு?” என நொடியில் கேட்டுவிட்டாள். ஆதிரையிடம் கணநேர தடுமாற்றம்.

“பரண் மேல கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் இருந்துச்சு தர்ஷூ. அபியோட கிராஃப்ட் புக் அதுல இருக்கான்னு பார்க்கத் தூசி தட்டுனேன். அதுலதான் அலர்ஜியாகிடுச்சு. தும்மலா வருது, டேப்லெட் போட்டிருக்கேன். சரியாகிடும்!” என்றாள் சமாளிப்புடன்.

“ஏன்... உங்க வீட்டுக்காரர் ஹல்க் மாதிரி இருக்காரே ஹைட்டா. வீட்ல கூட உங்களுக்கு ஹெல்ப் பண்ண மாட்டாரா என்ன? அவரை வேலை வாங்குறதை விட்டுட்டு அலர்ஜியாகிடுச்சுன்னு சொல்றீங்க?” எனக் கேலி செய்தவளை ஆதிரை முறைத்தாள். அடுத்தடுத்த ஆட்கள் வர வேலை நடந்தது.

தேவா தன்னறையில் அமர்ந்திருந்தான். அவனுக்குத் தான் அப்படி பேசியது தவறு எனப் புரிகிறது. ஆனால் ஒரு பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என்ற சின்ன விஷயத்திற்காக ஆதிரை என்னவோ இவன் பெரிய தவறிழைத்தது போல நடந்து கொள்வதில் கடுப்பானான். திருமணத்திற்கு முன்பே தான் இப்படித்தான் என கூறிவிட்டானே. பிறகெதற்கு ஒன்றுமில்லாத விஷயத்திற்கு இவள் இப்படி எதிர்வினையாற்றுகிறாள்‌ என ஆயசமாகப் போயிற்று.

பெண்கள் எல்லாம் இத்தனை நுண்ணிய உணர்வுகள் கொண்டவர்களா என மண்டைக் காய்ந்தது. காலையில் மனைவி சாப்பிடவில்லை எனத் தெரிந்திதிலிருந்து வேலையே ஓடவில்லை. தன்னுடைய வாதம் நியாயம்தான். ஆனால் அதை அவளிடம் கூறிய முறை தவறென மூளைக் கூறியது.

மூச்சை இழுத்துவிட்டவன் அலுவலக அலைபேசியில் ஆதிரையை வரப் பணித்தான். தர்ஷினிதான் அழைப்பை ஏற்றுப் பேசினாள்.

“நீ போ தர்ஷினி, எனக்கு வொர்க் இருக்கு!” என ஆதிரை இவளை அனுப்பி வைத்தாள்.

“உங்க பேர் ஆதிரைன்னு மாத்திட்டீங்களா தர்ஷினி?” தேவா அவள் மீதிருந்த கோபத்தை இவளிடம் காண்பிக்க, “நான் ஆதிக்காவை வர சொல்றேன் சார்!” என்ற தர்ஷினி இங்கே வந்து இவளிடம் காய்ந்தாள்.

“புருஷன் பொண்டாட்டி சண்டைன்னா நீங்களே பஞ்சாயத்து பண்ணிக்கோங்ககா. என்னை மாதிரி சிங்கிளை இடையில அல்லோல் பட வைக்காதீங்க. நீங்களாச்சு, உங்க புருஷனாச்சு!” என்றுவிட்டாள். தேவா இரண்டு முறை அழைத்தும் ஆதிரை அவனது அறைக்குச் செல்லவில்லை.

“ரொம்ப பண்றா இவ. எப்படியும் லாக் புக் சப்மிட் பண்ண வரணும் இல்ல. அப்போ பார்த்துக்கிறேன்!” என அவன் எரிச்சலாய் முணுமுணுத்தான்.

ஆதிரை லாக் புத்தகத்தை முடித்தவள், “பிரகாஷ், இந்த புக்கை மட்டும் சார் ரூம்ல வச்சிடுங்க. ஐ யம் நாட் ஃபீலிங் வெல். டஸ்ட் அலர்ஜியாகிடுச்சு. சோ ப்ளீஸ்!” என்றாள்.

“ப்ம்ச்... அதுக்கு எதுக்கு ப்ளீஸ் எல்லாம் ஆதி. நான் வச்சுட்டு வரேன்!” என்றவன் புத்தகத்தோடு கிளம்ப, இவ்வளவு நேரம் அவனை போக வேண்டாம் என சைகை செய்து காப்பாற்ற முயன்றாள் தர்ஷினி. அவன் அதை கவனித்ததாய் தெரியவில்லை.

‘இன்னைக்கு உங்க தலையெழுத்தை யாராலும் மாத்த முடியலை சுபாஷ்ண்ணா!’ என அவள் மனதிற்குள் கூறி வருத்தப்பட்டாள். அவன் நினைத்தது போலவே சுபாஷிற்கு மண்டகப்படி கிடைத்தது.

“சுபாஷ், நீங்கதான் லேப் இன்சார்ஜா? ஹம்ம், லாக் புக்கெல்லாம் மெயிண்டெய்ன் பண்றீங்க போல? வாங்குற சம்பளத்தைவிட அதிகமா வேலை பார்க்குறீங்க போல?” என அவனையும் காய்ச்சி அனுப்பினான்.

அவன் முகம் தொங்கி வரவும், “வொய் ப்ளட், சேம் ப்ளட். நான் சைகைல சொன்னேனே... கேட்டீங்களா?” என தர்ஷினி அவனைக் கேலி செய்ய, ஆதிரைக்கு சட்டென ஒருமாதிரியானது.

“சாரி சுபாஷ், சாரி தர்ஷினி!” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“இந்த ஒரு தடவை சாரி அக்செப்டட் கா. பட் இன்னொரு டைம் இந்த மாதிரி பண்ணாதீங்க. நிஜமா அவர் திட்டும் போது தப்பே பண்ணாம ஏன்டா இவர்கிட்டே பேச்சு வாங்குறோம்னு கடுப்பாகுது!” என்றாள் மனதை மறையாது. ஆதிரையின் முகம்‌ மாறியது. மீண்டுமொருமுறை அவர்களிடம் மன்னிப்பைக் கேட்டவள், கோபத்தோடு தேவாவிற்கு செய்தி ஒன்றைத் தட்டிவிட்டாள்.

‘என்மேல இருக்க கோபத்தை ஏன் மத்தவங்ககிட்டே காட்றீங்க? திஸ் இஸ் வொர்கிங் ப்ளேஸ், நாட் அவர்‌ ஹோம். டோன்ட் கிரியேட் எனி சீன்ஸ். பிஹேவ் யுவர் செல்ஃப்!” என அனுப்பினாள்.

அதைப் பார்த்தவன், “ஐ க்நோ வாட் ஐ யம் டூயிங் மிஸஸ் ஆதிரையாழ். யம்‌ யுவர் பாஸ். சோ, ஒபே மை வேர்ட்ஸ். சம்பளம் கொடுக்குற என் பேச்சை நீ கேட்குறது இல்ல. நீ முதல்ல ஒழுங்கா பிஹேவ் பண்ண கத்துக்கோ!’ என அனுப்பினான். இமை சிமிட்டாமல் இரண்டு முறை அதை வாசித்தவளின் உதட்டில் கேலியா விரக்தியா என அறிய முடியாத புன்னகை உதிர்ந்தது. அலைபேசியை அணைத்துப் போட்டாள்.

வேலை முடிந்ததும் தர்ஷினியுடன் சென்று கையெழுத்திட்டு அவனுடன் தனியாய் பேசும் சந்தர்ப்பங்களை தவிர்த்து வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். உள்ளே வந்ததும் அபியும் ராகினியும் அவளது நேரத்தைக் களவாடினர். அதனாலே நடந்த நிகழ்வு பின்னே சென்றது.

சிறுவர்கள் எதாவது சுவையாய் வேண்டுமென கேட்டனர். ஆதிரை என்ன செய்வது என யோசித்தாள். சத்தமாவு புட்டு செய்யலாம் என சர்க்கரை தேங்காய் எல்லாம் கலந்து அவள் குழந்தைகளுக்கு புட்டு கொடுக்க, அவர்கள் விளையாடிபடியே உண்டனர். அவளுமே மீதமாயிருந்த கொஞ்சம் புட்டை உண்டவள் நீரைக் குடித்து வயிற்றை நிரப்பிவிட்டாள்.

இரவிற்கு சமைக்கும் எண்ணம் கிஞ்சிற்றும் அவளுக்கு இல்லை. இந்த வீட்டில் நானென்ன வேலைக்காரியா? வெளியே வேலைக்கும் சென்று வீட்டிலும் என்னால் சமைக்க முடியாது. நான் வருவதற்கு முன்னே இவர்கள் எல்லாம் பட்டினி கிடந்தார்களா என்ன? இல்லை தானே? அப்படியென்றால் இப்போதும் சமைத்து சாப்பிடட்டும் என அறைக்குள்ளே இருந்து கொண்டாள்.

வாணி அவள் சமைப்பாள் எனப் பொறுத்துப் பார்த்தவர், “ரெண்டு வாரம் சமைச்சதும் இவளுக்கு ஏறிக்கிடும். சமைக்காம ரூம்க்குள்ள என்ன பண்றா?” என முனங்கிக் கொண்டே அவர் சமையலை முடித்தார்.

தேவா வேலை முடிந்து வந்தான். அவன் அறைக்குள் நுழைய, ராகினியும் அபியும் ஆதிரையின் அருகே அமர்ந்து வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தனர்.‌ தேவாவிற்கு கடுப்புதான் மனைவியின் செயலில். ஆனாலும் இப்போது குழந்தைகள் முன்பு எதுவும் பேச முடியாது என அவளை முறைத்துக் கொண்டே குளித்து வந்தான்.

“வாடா... வந்து சாப்பிடு!” என வாணி மகனை அழைத்தார். அவன் உண்டு முடித்து சிறிது நேரம் கழித்து அறைக்குள் வர, அபி கட்டிலில் உறங்கியிருக்க, ஆதிரை கீழே பாயை விரித்துப் படுத்திருந்தாள். தேவா இடுப்பில் கையை வைத்து அவளை முறைத்தவன், சின்னவன் எழும்பிவிடக் கூடாது என அவளருகே குனிந்து தோளைத் தொட முயல, படக்கென கண்விழித்தாள் ஆதிரை.

தொடாதே எனக் கையை நீட்டியவள், அவன் கரம் தன்மீது படாதவாறு நகர்ந்து, “என்ன வேணும்?” எனக் கேட்டாள்.

'ரொம்பத்தான் பண்றா' எனப் பொறுமியவன், “மேல இடம் இருக்கப்போ கீழ ஏன் படுக்குற? வந்து மேல படு. சீன் கிரியேட் பண்ணாத!” என்றான் கண்டிப்புடன். ஆதிரைக்கு அவன் வார்த்தைகளில் கோபம் பெருகிற்று.

“என்ன சீன் கிரியேட் பண்றேன்‌ நான்? ஹம்ம்... மேல இடம் இருந்தா அங்க வந்து படுக்கணும்னு என்ன அவசியம்? எனக்கு கீழே படுக்கத்தான் பிடிச்சிருக்கு. இது ஒன்னும் உங்க ஃபர்ம் இல்ல‌ சம்பளம் கொடுக்கற முதலாளின்னு உங்க பேச்சை கேட்க. அதனால உங்க இஷ்டத்துக்கு என்னால ஆட முடியாது!” என்றாள் அலட்சியமாய்.

தேவாவிற்கு கோபம் வரப் பார்த்தது. தலையைக் கோதியவன், “சாரி, நான் சொன்னது தப்புதான். மேல வந்து படு ஆதி. தரைல படுத்தா குளிரும்!” என்றான் பொறுமையாய். ஆதிரை அவனைக் கேலியாகப் பார்த்தாள்.

“ப்ம்ச்... என்னங்க... மிஸ்டர் தேவநந்தன், நீங்க போய் என்கிட்ட சாரி கேட்கலமா? நான்தான் இம்மெசூர்டா நடந்துக்கிறேன். சோ, நான்தானே தப்பு பண்ணேன். இனிமே நான் மெச்சூர்டா நடந்துக்க ட்ரை பண்றேன்!” என்றாள் எள்ளலாய். தேவா அசையாதிருந்தான்.

“ஏன் இப்படியே நிக்குறீங்க? அப்புறம் உங்க தூக்கம் என்னாலதான் கெட்டுச்சு, காலைல எழுந்துக்க முடியலை. வொர்க் சரியா நடக்கலைன்னு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவீங்க. சோ, போய் படுத்து தூங்குங்க மிஸ்டர் தேவநந்தன்!” அவள் கேலியாய் கூற, “சரிதான் போடி...” என அவன் சென்று படுத்துவிட்டான். ஆதிரை பெரிதாய் அலட்டிக்
கொள்ளவில்லை. போர்வையை எடுத்துப் போர்த்தி உறங்கத் தொடங்க, தேவா கடுப்பும் வெறுப்புமாய் உறக்கம் வராமல் உருண்டு கொண்டே கிடந்தான்.

தொடரும்....



 
Active member
Messages
209
Reaction score
163
Points
43
Deva unnoda character nee theliva sollitanaalum
Wife nu vara solla oru silla Vittu koduthal thappae illa 🙏🙏🙏🙏
 
Well-known member
Messages
461
Reaction score
333
Points
63
Janu sis deva kadasi varaikum single ah vae irukanum nu ovovaru vishyathayum panra nu nallavae theriyuthu.

Deva pesunathu vena thappu ah irukalam aana avan ipadi nenachathuku aathi um oru Karanam than avan ego ah vittu erangi vandhu ellam seiyuthum iva atha ignore than panna ah pathathuku iva unga love um unga presence um enna endha vagai la yum enna bathikavae illa nu sonnathu ava manasula aazham ah pathinchithu pola. Aathi ne ah Unnoda manasu ah thirandhu love panren nu sonna than indha tubelight eriya aarambikum
 
Well-known member
Messages
516
Reaction score
384
Points
63
எப்பப்பாரு எலியும் பூனையுமா சண்டை போட்டுட்டு இருங்க
 
Active member
Messages
210
Reaction score
165
Points
43
Aadhi pavan.. deva eppo purichugaporano..
 
Top