• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 7

Administrator
Staff member
Messages
672
Reaction score
1,013
Points
93
தவம் 7

நெடுங்காலமாய்

புழங்காமலே எனக்குள்ளே
நேசம் கிடக்கின்றதே
உனை பார்த்ததும்
உயிர் தூண்டவே உதடுகள்
தாண்டி தெறிக்கின்றதே…


“மாமா சாப்பிட வாங்க” என்று அழைத்து கொண்டே லாவண்யா வேகமாக வர,

“ஏய் மெதுவா வாடி. டாக்டர் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காங்கல்ல” என்று மனைவியை அதட்டினான் ஜீவா.

“ஆனாலும் ரொம்பத்தான் பண்றீங்க. நடந்து வர்றதுல என்ன ஸ்ட்ரெயின் பண்ணேன்னு நீங்க பாத்தீங்க?” என்று இடுப்பில் கை வைத்து முறைக்க,

“வேக வேகமாக நடக்காதடி. என் மகளுக்கு வலிக்க போகுது” என்று கூற,

“ஓஹோ மக வந்ததுல இருந்து என்னை கண்டுக்கிறதே இல்லை நீங்க. பாத்துக்கிறேன் உங்களை” என்றவள் முறைத்து விட்டு திரும்பினாள்.

அதில் ஜீவாவின் இதழ்களில் மென்னகை பிறக்க அவளை வம்பிழுக்கும் பொருட்டு, “ஆமா என் மகள் தான் முக்கியம். அவளை எப்போடா கையில வாங்குவேன்னு தவமிருக்கேன். அவ வந்த பின்னாடி நானும் என் மகளும் உன்னை டீல்ல விட்ருவோம்” என்று கூற,

“ஓஹோ எனக்கு என் புள்ளை இருக்கான். நானும் அவனும் சேர்ந்து உங்களை துரத்திவிட்ருவோம்” என்றவளது குரலில் லேசான பொறாமை உணர்வு எட்டி பார்த்தது.

சிரிப்புடன் மனைவியின் கையை பிடித்து இழுத்து இடையோடு அணைத்தவன்,

“ஹேய் பொண்டாட்டி அவ நம்ம பொண்ணுடி அவ மேல உனக்கு பொஸஸீவ்னெஸ்ஸா?” என்று செல்லமாக மூக்கை உரச,

“யாருக்கு பொஸசீவ் அதெல்லாம் ஒன்னுமில்லையே” என்று கையை தட்டி விட்டவள் விலக பார்க்க,

பின்னிருந்து அணைத்து அவளது தோளில் நாடியை பதித்தவன்,

“பொய் சொல்லாத டி. பாரு கண்ணாடில உன் முகத்தை. பொஸஸீவ்னெஸ் எப்படி பொங்குதுனு” என்று அவளது முகத்தை காண்பித்தான்.

“ஆமா அதுக்கு இப்பென்ன?” என்றவள் இன்னும் மலையிறங்காமல் இருக்க,

“லவி நமக்கு எத்தனை குழந்தை வந்தாலும் எப்பவுமே நீ தான் டி பர்ஸ்ட் லவ்” என்று அவளது கன்னத்தில் இதழ் உரசினான்.

“நம்பிட்டேன் நம்பிட்டேன்” என்றவள் இதழை சுழிக்க,

“நீ உண்மையா நம்புன மாதிரி தெரியலையே? உன்னை நம்ப வைக்க என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்” என்றவன் அவளை தன்புறம் திருப்பி இதழோடு இதழை உரசினான்.

சடுதியில் உடலில் மின்சாரம் பாய அவனை பிடித்து கொண்டவள் முத்தத்தை தொடர ஊடலை கூடலாக மாற்றிய முத்தம் நிமிடங்கள் நீடித்தது.

இருவரும் தங்களை மறந்து இதழணைவின் இன்பத்தை உணர்ந்து கொண்டிருக்கும் சமயம் வாசலில் யாரோ வரும் அரவம் கேட்க, இருவரும் பதறி விலகினர்.

“அண்ணா அம்மா சாப்பிட வர சொன்னாங்க” என்றபடி கதவை தட்டினாள் ஷியாமளா.

புடவை முந்தானையில் இதழை துடைத்து கொண்ட லாவண்யா,

“இதோ பைவ் மினிட்ஸ் ரெடியாகிட்டு இருக்காரு” என்றவாறு வர,

“ம்மா பாட்டி கூப்பிட்றாங்க” என்றபடி கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தான் அதிரன்.

“பாட்டி சாப்பிட கூப்டாங்களா?” என்றபடி ஜீவா மகனை ஏந்தி கொள்ள,

“ஆமாப்பா” என்று தலையை நான்கு புறமும் அசைத்தான்.

“பட்டுகுட்டி நீங்க சாப்டிங்களா?” என்று வினவ,

“ஹ்ம்ம் சாப்பிட்டேன் பா” என்று தலையை உருட்டினான்.

“என்ன சாப்படீங்க?” என்க,

“பூரி சாப்டேன் பா” என்றவன் பிறகு தாயை திரும்பி பார்க்க,

அவள் களைந்திருந்த படுக்கையை சரி செய்து கொண்டிருந்தாள்.

மகனது கள்ளப்பார்வையை உணர்ந்தவன்,

“சைட்டிஷ் என்ன?” என்று வினவியவாறே பால்கனி பக்கம் சென்றவன் மெல்லிய குரலில்,

“என்ன சொல்லணும் செல்லத்துக்கு?” என்று சிரிப்புடன் கேட்க,

“ஷியாமாத்தை எனக்கு பெரிய சாக்லேட் வாங்கி கொடுத்து இருக்கா?” என்று முகம் முழுவதும் புன்னகையுடன் கூற,

“அப்படியா?” என்று வியப்படைவது போல கேட்டான்‌.

“ஆமாப்பா. நான் அதை ஃப்ரிட்ஜில அம்மாக்கு தெரியாம வச்சு இருக்கேன். நைட் அம்மா தூங்குன பின்னாடி சாப்பிடலாம்” என்க,

‘அவ தூங்குறதுக்கு முன்னாடி நீ தூங்கிடுவ’ என்று சிரிப்புடன் நினைத்தவன்,

“சரி” என்று தலையசைக்க,

“சீக்ரெட்டா நமக்குள்ளேயே இருக்கட்டும்” என்று மொழிய,

“ஹ்ம்ம் நான் சொல்ல மாட்டேன்” என்று கூற,

“என்ன சொல்ல மாட்டேன்னு சொல்றீங்க?” என்றபடி வந்தாள் லாவண்யா‌.

இவளை எதிர்ப்பார்க்காத அதிரன் திருதிருவென விழிக்க,

மகனது பாவனையில் இருவருக்கும் சிரிப்பு எழுந்தது.

ஜீவா அடக்கப்பட்ட சிரிப்புடன், “அது எனக்கும் என் மகனுக்கும் உள்ள சீக்ரெட் யாருக்கிட்டயும் சொல்ல மாட்டோம்” என்று முகத்தை திருப்ப,

“ஆமா ஆமா சொல்ல மாட்டோம்” என்று மகனும் தந்தையை பின்பற்றினான்.

“ஆஹான் ரகசியமா?” என்றவள்,

“அதி தாத்தா பாட்டி வர்றாங்கல்ல அவங்ககிட்ட உனக்கு ரிமோட் கார் வாங்கிட்டு வர சொல்லி இருந்தேன். நீ சீக்ரெட் சொல்லாததால் அதை திருப்பி கொடுத்திட்றேன்” என்று கூறிய நொடி,

“நோம்மா சொல்லாத” என்றபடி தாயிடம் தாவி இருந்தான் அதி.

லவி, ‘எப்படி?’ என்று மதிப்பாக பார்க்க,

“அடப்பாவி மகனே ரிமோட் காருக்காக இப்படி கட்சி மாறிட்டியேடா?” என்று ஜீவா கேட்க,

மகன் மீண்டும் பதில் இல்லாது திருதிருவென விழித்தான்‌.

“அப்படியே உன்னை மாதிரியே இருக்கான்டி” என்று ஜீவா சிரிக்க,

“ஆமா என் மகன் என்னை மாதிரி தான் இருப்பான். அப்படிதானடா” என்று மகனது கன்னத்தில் முத்தமிட,

“என் பொண்ணு என்னை மாதிரி வருவா. அப்போ எனக்கும் கம்பெனி இருக்கும்” என்று பதிலுக்கு கூற,

கீழே காரின் ஹாரன் சத்தம் கேட்டது. கீழே எட்டி பார்த்த லாவண்யாவின் முகம் சடுதியில் மலர்ந்து போனது‌.

“மாமா அப்பா அம்மா வந்துட்டாங்க போல” என்க,

“ஆமா வா கீழ போகலாம்” என்று மனைவியை அழைத்து கொண்டு கீழே சென்றான்.

லாவண்யா கருவுற்று இருப்பது உறுதியாகி வாரங்கள் கடந்திருந்தது.

லாவண்யாவின் தந்தை தொழில் தொடர்பாக வெளிநாடு சென்றிருந்ததால் அவர் வந்ததும் மகளை காண குடும்பத்துடன் சீர் எடுத்து கொண்டு வந்துவிட்டார்கள்.

ஜீவா லாவண்யாவுடன் கீழே வந்து,

“வாங்கத்தை வாங்க மாமா” என்று அனைவரையும் வரவேற்க,

லாவண்யாவின் தாய் திலகவதி,

“லாவண்யா” என்று மகளை மகிழ்வுடன் அணைத்து கொண்டார்.

மஹிமா, “கங்கிராட்ஸ் மாம்ஸ்” என்று சிரிப்புடன் கூற,

ஜீவாவின் முகத்தில் மென்னகை.

அதி எல்லோரையும் பார்த்ததும் குஷி ஆகிவிட்டான்.

“சித்தி” என்று மஹியிடம் தாவியன் அவளுடன் ஒன்றி கொண்டான்.

பணி செய்பவர் சீர் பொருட்களை எடுத்து வந்து வைக்க, அதனை கண்ட ஜீவா,

“மாமா எதுக்கு இதெல்லாம்” என்று மறுப்பாக கூற,

“மாப்ளை இது முறை. அனிதாக்கு நீங்க செஞ்சீங்களே அது மாதிரி தான் இது” என்று கண்ணாயிரம் கூற,

“அது முதல் குழந்தைக்கு மாமா” என்று ஜீவா இயம்ப,

“எத்தனை பிள்ளையா இருந்தாலும் எங்க பேரப்பிள்ளைகளுக்கு நாங்க செய்வோம்” என்றவரிடத்தில் அவனுக்கு பதிலில்லை‌‌.

சிவலிங்கம் வேறு, “தம்பி இதெல்லாம் முறை பா மறுக்க கூடாது” என்று விட, இவன் அமைதியாகிவிட்டான்.

திலகவதி எடுத்து வந்த நகைகளை காண்பித்து, “லாவி உனக்காக பாத்து பாத்து வாங்குனோம் நல்லா இருக்கா?” என்று வினவ,

அவளும், “ஹ்ம்ம் எல்லாமே நல்லா இருக்கு மா” என்று ஒவ்வொன்றாக பார்த்து கொண்டிருந்தாள்.

பரமேஸ்வரி பணியாட்கள் மூலம் பழச்சாறு எடுத்து வர மகிழ்ச்சியாக பொழுது கழிந்தது.

அனிதாவிற்கு இப்போது நான்கு மாதம் என்பதால் அவளால் வர இயலவில்லை. அலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தாள்.

ஜீவா வீட்டு நிறைய இருந்த சொந்தங்களை புன்னகையுடன் காண, அவனது அலைபேசி அழைத்தது‌.

எடுத்து பார்க்க வாயில் காவலாளி அழைத்து அலுவலகத்தில் இருந்து பணியாள் வந்து இருப்பதாக கூற, உள்ளே அனுப்பச் சொன்னான்.

இவன் தான் ஜானவியிடம் இன்று அலுவலகம் வர இயலாததால் வீட்டிற்கு வந்து கையெழுத்துக்களை வாங்கி கொள்ளுமாறு கூறி இருந்தான்.

தனது இரு சக்கர வானத்தை ஓரத்தில் நிறுத்திய ஜானவி உள்ளே செல்லாமல் ஜீவாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

இதற்கு முன் சில முறை வந்த போதும் இப்படித்தான் அலைபேசியில் அழைத்து அவன் வர கூறியதும் உள்ளே சென்று கையெழுத்து வாங்குவாள்.

அவளது அழைப்பை கண்ட ஜீவா எடுத்து, “உள்ளே வாங்க ஜானவி” என்று கூற,

இவள், “சரிங்க சார்” என்றுவிட்டு வாசலை நோக்கி சென்றாள்‌.

ஜானவியின் இந்த குணம் ஜீவாவிற்கு எப்போதும் வியப்பு தான். வந்த நாளில் இருந்து இப்போது வரை ஒரு கோட்டை வரைந்து தனது எல்லைக்குள் சிறிதும் பிசிறில்லாது வாழ்கிறாளே என்று.

உள்ளே சென்ற ஜானவி அங்கிருந்த கூட்டத்தை கண்டு ஒரு நொடி திகைத்து நின்றுவிட்டாள்.

எப்போதும் அவள் வரும் சமயம் இங்கே ஓரிரண்டு ஆட்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.

ஆனால் இன்று இவ்வளவு ஆட்களை கண்டதும் சிறிது திகைப்பு தான்.

ஜானவியின் வருகையை கண்ட அனைவரும் ஒரு கணம் திரும்பி பார்க்க, இவளுக்கு சடுதியில் அசௌகரியம் தோன்றியது.

“இங்க வாங்க ஜானவி” என்ற ஜீவாவின் குரலில் மற்றவர்களுக்கு தேவையான பதில் கிடைத்திட,

தங்களது பேச்சுகளை தொடர்ந்தனர்.

ஜானவி ஜீவாவின் அருகில் சென்று தான்கொண்டு வந்த கோப்புகளை கொடுக்க,

அதனை வாங்கியவன் புரட்டி பார்க்க துவங்க,

திலகவதி மகளிடம், “லாவி இந்த பொண்ணு அந்த நரேனோட தங்கச்சி தான? வினய் கல்யாணத்துக்கு கூட வந்திருந்துச்சே” என்று கேட்க,

“ஆமம்மா” என்று தலை அசைத்தாள்.

“இந்த பொண்ணுக்கு புருஷன் இல்லையாடி?”

“ஆமா சிங்கிள் பேரண்ட் தான். ஒரு பொண்ணு ஸ்கூல் படிக்கிறா”

“ஓ… ஏன்டி இத்தனை வருஷம் தனியாவா இருக்குது?”

“ஆமம்மா. எனக்கும் ஆச்சரியம் தான்”

“கொஞ்சம் வயசாதான் தெரியுது இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்ல”

“நானும் நினைச்சேன். நரேன் அண்ணா கூட ஒரு அலையன்ஸ் கொண்டு வந்தாங்க இவங்க ஒத்துக்கலை”

“ஓ… நம்ம ராகேஷ் இருக்கானே அவனும் புள்ளையோட தனியாதான இருக்கான். பேசாம அவனுக்கு கேட்டு பார்ப்போமா?”

“வேணாம்மா அவங்க ஒத்துக்கமாட்டாங்க”

“அதெப்படி ஒத்துக்காம போவா? கடைசிவரைக்கும் ஒண்டி கட்டையா இருந்திட முடியுமா? நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன்” என்றுவிட,

லாவண்யா மறுத்தும் கேட்கவில்லை.

திலகவதி, “அந்த பொண்ணை இங்க கூப்டுடி பேசுவோம்” என்று கூற,

நினைத்ததை செய்யாமல் இருக்க மாட்டார் தாய் என்பதை உணர்ந்தவள்,

“ஜானவி ஏன் நிக்கிறிங்க இங்க வந்து உட்காருங்க” என்று அழைக்க,

“இல்லை இருக்கட்டும்ங்க” என்று மறுத்தாள்.

“வாங்க வந்து உட்காருங்க எவ்ளோ நேரம் நிப்பிங்க” என்று மீண்டும் அழுத்தி கூற,

மறுக்க இயலாதவள் வந்து அமர,

லாவண்யா, “இந்த ஜுவல்ஸ் எனக்கு செட் ஆகுதா ஜானவி?” என்று வினவிட,

“ஹ்ம்ம் நல்லா இருக்குங்க” என்று பதில் மொழிந்தாள்.

லாவண்யா மேலும் ஏதோ கேட்க பதில் கூறியபடி அந்த குடும்பத்தினரை கண்டவளுக்கு புன்னகை முகிழ்ந்தது‌.

ஜானவிக்கு கூட்டு குடும்பம் என்றால் கொள்ளை பிரியம். கூட்டு குடும்பமாக வாழ வேண்டும் என்று சிறு வயதில் ஆசை இருந்தது.

அவளது முகத்தை வைத்தே அகத்தை உணர்ந்தவள்,

“உங்களுக்கு ஜாயின்ட் பேமிலினா பிடிக்குமா ஜானவி?” என்று வினவ,

“ஆமா” என்று தலையசைத்தாள்.

சரியாக அதே சமயம் ஜீவா காசோலை எடுக்க அறைக்கு செல்ல, திலகவதி துவங்கினார்.

“ஏன் மா நீ நரேனுக்கு தூரத்து சொந்தமா?” என்று வினவ,

“ஆமா” என்று தலையாட்ட,

“ஓ… உன் அம்மா அப்பாலாம் எங்க இருக்காங்க?” என்று கேட்டிட,

இதனை எதிர்பாராதவள் திகைத்து,

“அவங்க இல்லை” என்று பதில் அளிக்க,

“ஓ அப்போ தனியாதான் இருக்கியா?”

“இல்லை என் பொண்ணு கூட இருக்கேன்”

“உன் வீட்டுக்காரருக்கு என்னாச்ச?”

“பிரிஞ்சிட்டோம்” என்று ஒருவித அசௌகரியத்துடன் பதில் அளித்தவள் ஜீவா எப்போதடா வருவான் இங்கிருந்து கிளம்புவோம் என்று சிந்திக்க துவங்கியிருந்தாள்.

“ஓ… எவ்ளோ நாளாச்சு இங்க வரும் போதே தனியா தான் வந்தியா?”

“ஹ்ம்ம்”

“நீ வந்து ஒரு ஏழெட்டு வருஷம் இருக்கும்ல. அப்போயிருந்து தனியா தான் இருக்கியா?”

ஜானவியின் தலை மெதுவாக அசைந்தது.

அவளது நிலையை உணர்ந்த லாவண்யா, “ம்மா” என்றழைத்து நிறுத்துமாறு கையசைக்க,

அதனை புறந்தள்ளியவர்,

“ஏன்மா பாக்க கொஞ்ச வயசாதான் தெரியிது. ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலை?” என்று கேள்வி எழுப்ப,

“எனக்கு விருப்பம் இல்லைம்மா” என்று தன்னை கட்டுபடுத்தி கொண்டு கூறினாள் இவர் எதற்கு இதெல்லாம் கேட்கிறார் என்று சிறிது சினம் கூட எழுந்தது.

“காலம் முழுசும் தனியாவே இருப்பியா? காலம் கெட்டு கிடக்கும்மா. உனக்குனு ஒரு துணையை அமைச்சிக்கோ” என்று கூற,

மறுத்தாள் வேறு ஏதாவது பேசுவார் என்று எண்ணி மையமாக தலையசைத்து வைத்தாள்.

அதில் உற்சாகமடைந்த திலகவதி,

“ரொம்ப நல்ல பொண்ணா இருக்கியேம்மா. சொன்னதும் கேட்ருக்குற.‌ என் ஒன்னுவிட்ட நாத்தானார் மகன் ஒருத்தன் இருக்கான் பேர் ராகேஷ். அவன் பொண்டாட்டி ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டா. இப்போ ஒத்த புள்ளையோட தனியா நிக்குறான். வயசொன்னும் பெருசா ஆகலை முப்பத்தேழு தான். பேங்க்ல வேலை பாக்குறான். அவனை உனக்கு பாக்கலாமா?” என்று ஆர்வமாக வினவ,

ஜானவி மொழியின்றி அதிர்ந்து விழித்தாள்.

“என்னம்மா யோசிக்கிற பையனுக்கு நான் கேரண்டி. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. கட்டிக்கிட்டா உன்னை தங்கமா வச்சு பாத்துப்பான்” என்று கூற,

இதனை கவனித்து கொண்டிருந்த பரமேஸ்வரியும்,

“அம்மா அப்பா இருந்திருந்தா இப்படி உன்னை தனியா விட்ருப்பாங்களா? யோசிச்சு பதில் சொல்லுமா” என்க,

லாவண்யா ஜானவியை அருகில் அழைத்து தவறு செய்துவிட்டோமோ? என்று அவளது முக பாவனையை வைத்து எண்ணி கொண்டிருக்க,

ஜானவியின் மௌனத்தை சம்மதாக எடுத்து கொண்ட திலகவதி,

“அவன் போட்டோ பாத்தா உனக்கு பிடிக்கும். பாத்தா முப்பத்தேழு மாதிரி தெரியாது” என்று அலைபேசியில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து காண்பிக்க,

ஜானவி தவிப்புடன் ஜீவா வரும் வழியை பார்த்தாள்.

சரியாக யாருடனோ அலைபேசி உரையாடலை முடித்து வந்த ஜீவாவின் பார்வை தவிப்பை சுமந்த ஜானவியிடத்தில் தான் நின்றது.

தாயும் மாமியாரையும் அவரது கையில் இருந்த அலைபேசியையும் கண்டவன் புரியாது,

“ம்மா” என்று அழைத்திட,

“வாடா கண்ணா. உங்கத்தை ஜானவிக்கு ஒரு வரன் பாத்து சொல்லியிருக்கா. தாய் தகப்பன் இல்லாத பொண்ணு தனியாளா போய்ட கூடாது இல்லையா? அதான் நானும் எடுத்து சொல்லிட்டு இருக்கேன்” என்று மொழிந்திட,

சடுதியில் அவனது பார்வை ஜானவியிடத்தில் பதிந்தது‌.

‘என்னை காப்பாற்றேன்’ என்று இறைஞ்சியது.

திலகவதி, “மாப்ள உங்களுக்கு ராகேஷை தெரியும் தான? இந்த பொண்ணுக்கிட்ட சொல்லுங்க அவனை பத்தி” என்று ஜீவாவையும் துணைக்கு அழைக்க,

“அத்தை போதும் வேணாம் இதெல்லாம். அவங்களுக்கு பிடிக்கலை” என்றிட,

“மாப்ளை இந்த பொண்ணு தனியா கஷ்டப்படுது” என்கையிலே இடை நுழைந்தவன்,

“அத்தை வேணாம்” என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறிட,

திலகவதி அமைதியாகிவிட்டார். பரமேஸ்வரியும் மகனது பேச்சை மீற நினைக்கவில்லை.

ஜானவிக்குள் நிம்மதி ஊற்று பெருக்கெடுக்க ஜீவாவை நன்றியுடன் பார்த்தவள் எழுந்து கொள்ள,

அவன் கையெழுத்திட்ட கோப்பு மற்றும் காசோலையை நீட்டினான்.

அதனை பெற்று கொண்டவள் தலையசைத்து விடைபெற,

லாவண்யா, “ஜானவி வந்ததுல இருந்து எதுவுமே சாப்பிடலை‌‌. காஃபியாவது சாப்பிட்டு போங்க” என்று கூற,

“இல்லை இருக்கட்டும்” என்று மறுத்தவள் ஆளைவிட்டால் போதும் என்று வெளியே வந்துவிட்டாள்.

‘ஊஃப்’ என்று மூச்சை வெளியிட்டவள் தனது வாகனத்தை எடுக்க பின்னால் நிழலாடியது.

திரும்பி பார்க்க ஜீவா தான் நின்று இருந்தான்.

இவள் அவனை எதிர்பாராது சிறு திகைப்புடன் காண,

“ஜான்வி சாரி. அவங்க இந்த டாபிக் எடுப்பாங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை” என்று விளக்கம் கொடுக்க,

“இட்ஸ் ஓகே சார். நான் இது மாதிரி நிறைய பாத்திட்டு வந்துட்டேன்” என்று புன்னகைக்க முயல,

“அவங்க நல்லதுக்கு நினைச்சு தான் இதை பேசுனாங்க. தப்பான
இன்டென்ஷன் இல்லை” என்று ஜீவா கூற,

“எல்லாரும் என் நல்லதுக்காக தான் பேசுறாங்க. பட் என்னோட விருப்பத்தை யோசிக்க மாட்றாங்க. இதுக்கு மேல நான் தான் என்னோட அப்பியர்ன்ஸ வயசான மாதிரி மாத்திக்கணும் போல” என்று கூற,

ஜீவா அவளது இறுதி வரியில் திகைப்புடன் பார்க்க,

“பார்க்க யங்கா இருக்கதாலதான எல்லாரும் மேரேஜ் அப்ரோச் பண்றாங்க. நான் கொஞ்சம் கூட என் லுக்கை ஏஜ்ட் மாத்திட்டா யாரும் வர மாட்டாங்க. இன்னும் பைவ் டூ சிக்ஸ் இயர்ஸ் என் பொண்ணு காலேஜ் போய்டுவா‌. இன்னும் வந்து என் கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருக்காங்க” என்று சற்று சலிப்பான குரலில் கூற,

“எனக்கு உங்க எக்ஸ் ஹஸ்பண்ட்டை பாக்கணும்னு தோணுது” என்று கூற,

“என்ன?” என்றவளது முகத்தில் திகைப்பின் சாயல்.

“ரியலி நான் பாக்கணும் பாத்து ஒரே ஒரு கொஸ்டீன் கேக்கணும். உங்களை ஏன் விட்டு போனார்னு” என்றிட,

சடுதியில் இவள் இதழில் புன்னகை ஏறியது.

“ஆர் யூ சீரியஸ்?” என்று மின்னும் விழிகளுடன் கேட்க,

“யெஸ்” என்று அவனும் புன்னகையுடன் கூற,

“அவர் என்னைவிட்டு போகலை. நான் தான் அவரை விட்டுட்டு வந்துட்டேன். சோ உங்களுக்கு இந்த கொஸ்டீன் கேக்க சான்ஸ் கிடைக்காது” என்று ஜானவியும் இலகுவாக கூற,

“ஓ… ரியலி” என்று நம்ப முடியாதவனுக்கு ஏன் எதனால் என்று பல்வேறு கேள்விகள் உதித்தது.

ஆனால் அதெல்லாம் அவளது தனிப்பட்ட விடயம் கேட்க கூடாது என்று நினைத்தவன் மௌனமாக தலையசைக்க,

இருவரும் தங்கள் இயல்
பை மீறி பேசியது அப்போது தான் உறைத்தது. சடுதியில் தன்னுடைய எல்லைக்குள் சென்றுவிட்ட ஜானவி,

“ஓகே சார் நான் கிளம்புறேன்” என்றவள் வாகனத்தை எடுத்து கொண்டு புறப்பட,

“மாமா இங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க?” என்று லாவண்யா வர,

“ம்ஹூம் நத்திங்” என்று தலையசைத்தவனது மனக்கண்ணில் கடந்த வாரம் தம்பி வேண்டும் என்று கேட்ட ஜீவியை அதட்டி அமைதியாக்கிய ஜானவியின் முகம் வந்து போனது….









 
Well-known member
Messages
1,112
Reaction score
801
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Top