அன்பு – 1.3

சரி, சரி. சின்ன பிள்ளை, எதையும் உடைச்சிடுவா. அதனால பத்திரமா பார்த்துக்கோங்க!” என அவர் கூற,

“இல்ல மா, உள்ள கூட்டீட்டு வரலை. அவ இங்கனயே என் கண் பார்வையிலயே விளையாடட்டும்!” என்றுவிட்டார்.

“அப்போ சரி… வந்து வேலையைப் பாருங்க. மேல ரூம்ல என் பையன் இருக்கான். அந்த ரூம் மட்டும் நீங்க சுத்தம் பண்ண வேணாம். நான் பார்த்துக்குறேன்…” என்றவர் நீண்ட நேரம் நின்று பேசியதில் முதுகு வலித்ததற்கு அறிகுறியாக முகத்தைச் சுளித்தார்.

அவர் வீட்டுக்குள்ளே நடக்க, “குட்டி, அம்மா போய் வேலையைப் பார்க்குறேன். நீ இங்கேயே விளையாடணும். எங்கேயும் போகக் கூடாது!” என மகளிடம் அறிவுறுத்தினார்.

“போம்மா… நானும் உன்கூட உள்ள வர்றேன்” சின்னவள் சிணுங்கினாள்.

“உள்ள வரக்கூடாது டா தங்கம். நீ சமத்தா விளையாடீட்டு இருந்தா, அம்மா போகும்போது உனக்கு மிட்டாய் வாங்கித் தரேன்…” என மகளிடம் பேரம் பேசினார்.

“நிஜமா வாங்கித் தருவீயா மா?” எனக் கேட்டாள் சின்னவள்‌.

“அம்மா பொய் சொல்ல மாட்டேன் குட்டி!” என மகளை கண்ணுக்கு முன்னே விளையாட பணித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார் பூரணி.

அருகே கொட்டி வைத்திருக்கும் மணலருகே சென்ற சின்னவள், அதில் சரிந்து விளையாடத் துவங்கினாள். பின்னர் மணல்வீடு ஒன்றைக் கட்டி, அதற்கருகே குட்டியின் வீடு என தமிழில் எழுதினாள். அம்மாவிடம் காண்பிக்க வேண்டும் என்றொரு ஆர்வம் அவளுக்கு. மெதுவாய் வீட்டை எட்டிப் பார்க்க, பூரணி சமையலறையில் இருந்தார்.

இவள் சில நொடிகள் யோசித்துவிட்டு உள்ளே அடியெடுத்து வைக்க, மாடியில் ஏதோ சப்தம் கேட்டது‌. யாரோ கத்துவது போலிருக்க, தயங்கியபடியே மேலே பார்த்தாள். மீண்டும் அந்தக் கத்தல் தொடர்ந்தது. தாயைத் திரும்பி பார்க்க, அவர் வேலையில் மும்முரமாக இருந்தபடியால், அந்தச் சப்தம் அவரது செவியை எட்டவில்லை.

ஏதோ கீழே விழுந்து உடையும் சப்தம் கேட்க, தனது பிஞ்சுக் கால்களைக்கொண்டு வேகவேகமாக படியேறி அந்த அறை வாயிலில் நின்றாள். மூச்சு வாங்கியது, வெளியே தாழிட்டிருந்த அறையை மெதுவாய்க் கையை வைத்துத் தள்ள, திறந்துகொண்டது.

அந்த அறையே அலங்கோலமாக கிடக்க, இவள் பார்வை அங்கே கீழே அமர்ந்திருந்தவனிடம் சென்றது. அவளது வயதைவிட ஒன்றிரண்டு வயது மூத்தவன் போலிருந்தான். கால்களில் கட்டுப் போட்டிருக்க, அதை அசைக்க முடியாது அமர்ந்திருந்தவனின் நெற்றியிலும் பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. தூரத்திலிருந்த பொம்மை ஒன்றை அவன் எடுக்க முயற்சித்து முடியாது போனதால் கத்தியிருக்கிறான் என இவளால் உணர முடிந்தது.

“பொம்மை வேணுமா? நான் எடுத்து தரவா?” எனக் கேட்டவளுக்கு அவனைப் பார்த்து பாவமாய் இருந்தது.

விறுவிறுவென சென்று அந்தப் பொம்மையில் அவள் கையை வைக்க, “ஏய்… தட்ஸ் மை டாய்!” என கையில் கிடந்ததை அவள் மீது தூக்கியெறிந்திருந்தான் பெரியவன்.

“ஆ… அம்மா!” என்ற அலறலோடு கீழே விழுந்த சந்தனாவின் வலதுபுற நெற்றியில் லேசாய் ரத்தம் கசியத் துவங்க, இவள் அழுகை பெரிதானது.

தொடரும்..‌.

error: Content is protected !!
Scroll to Top