காதல் 28.1

காதல் 28:

“இதுல சைன் பண்ணுங்க மா” என்று எதிரில் இருந்தவர் மொழிய,

சம்மதமாக தலையசைத்தவள் அவர் கொடுத்த எழுதுகோலை வாங்கி கையெப்பமிட்டவளது முகம் வெகு நிச்சலமாக இருந்தது.

கையெழுத்தை இட்டவள் நிமிர்ந்து எதிரில் இருந்தவரை அவ்வளவு தானா…? என்ற விதத்தில் பார்க்க,

“இன்னும் ஒரு சைன் இதோ இந்த பேஜ்ல போடணும்” என்று காகிதத்தை திருப்பி காண்பித்தார்.
அதிலும் தனது கையெழுத்தை இட்டாள்.

மகிழ் முடித்ததும், “சார் நீங்க வந்து போடுங்க…” என்று குரு அழைக்கப்பட குருவும் எழுந்து வந்து தனது கையெழுத்தை போட்டவன்,

“அவ்வளவு தானா…? வொர்க் ஓவரா சார்…?” என்று வினா எழுப்ப,

“இன்னும் கொஞ்சம் ப்ரொசிஜர் இருக்கு சார்” என்று பதில் வந்தது.

சம்மதமாக தலையசைத்தவன்,

“மகி நீ கார்ல வெயிட் பண்ணு. நான் வர்றேன்” என்று மகியிடம் மொழிந்தான்.

அமைதியாக தலையசைத்தவள் மெதுவாக நடந்து வெளியே வந்தாள்.

சுற்றி இருந்த சலசலப்பு அவளை கடந்து சென்ற மனிதர்கள் என எதுவும் அவளது கருத்தில் பதியவில்லை.

ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல நடந்தவள் மகிழுந்தின் அருகே வந்து கதவை திறந்து ஏறி அமர்ந்து கொண்டாள்.

விழிகள் தனக்கு நேர் எதிராக இருந்த கட்டிடத்தையும் அதில் பெரியதாக எழுதப்பட்டிருந்த குடும்ப நீதி மன்றம் என்ற பெயர்பலகையினை வெறித்தது.

இதோ இந்த கட்டிடமும் இதில் உள்ள மனிதர்களும் எனக்கும் இவனுக்குமான‌ உறவை சிறிய கையெழுத்தில் உடைத்துவிட்டது.

இதோ இந்த நொடி முதல் இவனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏன் நாளை முதல் முதலாளி தொழிலாளி என்ற உறவு கூட கிடையாது.

இந்த இரண்டு வருட வாழ்க்கை என் வாழ்வில் வெறும் கனவு போல தான். நிஜம் போல என்னை உணர வைத்த நிழலுறவு‌.

விழியோரம் கசிந்த நீரை சுண்டிவிட்டவள் அப்படியே சாய்ந்து கொள்ள மனது சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்தை பற்றிய பேச்சை துவங்கிய நிகழ்வு நினைவிற்கு வந்தது.

“ம்மா கார் ரேஸ் கதை சொல்லும்மா…” என்று எழில் மொழிய,

“அம்மாவுக்கு இன்னைக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு. நாளைக்கு சொல்றேன்.‌ ரெண்டு பேரும் நல்ல பிள்ளைங்களா தூங்குவிங்களாம்” என்று மகிழ் மொழிய,

இருவரும் அதிசயமாக, “சரிம்மா. நாளைக்கு கண்டிப்பா சொல்லணும் என்ன?” என்றுவிட,

இவளுக்கு ஆச்சரியம் தான். சொன்னதும் கேட்டுவிட்டார்களே என்று.

“ஹ்ம்ம் கண்டிப்பா சொல்றேன்” என்றிட,

“நாளைக்கு ரெண்டு ஸ்டோரி” என்று கவின் இரண்டு கைகளையும் உயர்த்தி காண்பிக்க, இவளுக்கு புன்னகை அரும்பியது.

“சொல்றேன்” என்று மொழிய,

“ப்ராமிஸ்ஸா?” என்றவனை சிரிப்புடன் முறைத்தவள்,

“ப்ராமிஸ்ஸா” என்று அவனது குட்டி கரத்தில் தன் கையை பதித்தாள்.

பின்னர் தான் இருவரும் உறங்க சென்றனர். படுத்ததும் சில நிமிடங்களிலே இருவரும் உறங்கிவிட மகிழ் குரு தனக்கு கொடுத்த வேலையை செய்வதற்காக மடிக்கணினியை எடுத்து கொண்டு அமர்ந்தாள்.

பால்கனியில் அலைபேசி பேசிவிட்டு உள்ளே வந்தவன்,

“மகிழ் வந்து இந்த பேப்பர்ஸ்ல சைன் பண்ணு” என்றிட,

“ஹான்…” என்றவள் கவனம் சிதறியதில் விழிக்க,

“என்ன பாக்குற வந்து இதுல சைன் போடு” என்றிட்டான்.

அவனருகே வந்தவள்,

“என்ன பேப்பர்ஸ்?” என்று வினவிட,

“டிவோர்ஸ் பேப்பர்ஸ்” என்றவனது பதிலில் ஒரு நொடி எதுவும் புரியவில்லை.

பேரிடியாய் வந்துவிழுந்த அதிர்ச்சியில் இவளுக்கு இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.

உள்ளுக்குள் மொத்தமாக ஒன்று உடைந்து நொருங்கிட,

“டிவோர்ஸ் பேப்பரா? ஆனால் பாண்ட் முடிய இன்னும் நாலு மாசம் இருக்கே…?” என்றவளது தொண்டையை ஏதோ அடைத்தது.

“ஆமா போர் மந்த்ஸ் இருக்கு‌. ஹனிக்கு காலேஜ் கம்ப்ளீட் ஆக போகுது. தென் இப்போவே அப்ளை பண்ணாதான் கரெக்டா கிடைக்கும்” என்றவனது வார்த்தைக்கு பதில் கூற இயலாதவள்,

“ஹ்ம்ம்‌…” என்று மட்டும் தலையசைத்துவிட்டு அந்த காகிதத்தை வாங்கி கையெழுத்திட முற்பட்டாள்.

கைகள் ஏனோ நடுங்கியது. முயன்று சமன் செய்தவள் கையெழுத்தை இட்டு அவனிடம் நீட்டினாள்.

அதை பெற்று கொண்டவன்,

“இந்த வீக் நாம லாயர பாக்க போகணும். நான் கூப்பிடும் போது ரெடியா இரு” என்று இயம்ப,

அதற்கும்,

“ஹ்ம்ம்…” என்ற தலையசைப்பை பதிலாக கொடுத்தவள் பின்னிய கால்களை சிரமப்பட்டு நகர்த்தி குளியலறைக்குள் நுழைந்தான்.

நுழைந்த கணம் குப்பென்று  குருவினுடைய நறுமணம் நாசியை நிறைக்க  விழிகளை நீர் நிறைத்தது.

error: Content is protected !!
Scroll to Top