காதல் 27.1

“பிரசாத் அந்த விளக்கை நீயே ஏத்துப்பா” என்ற கோதையின் குரலுக்கு மறுப்பேதும் கூறாதவன் அயைதியாக நிர்மலான முகத்துடன் தந்தை புகைப்படத்தின் முன்பிருந்த விளக்கை ஏற்றி வைத்து விழிகளை மூடினான்.

அவனை தொடர்ந்து அங்கே நின்றிருந்த கோதை, மகிழ், பிறைசூடன் மற்றும் வர்ஷினியும் விழிகளை மூடி பிராத்தினர்.

இளையவர்கள் கூட பெரியவர்களை போலவே தானும் செய்ய முயற்சித்து கொண்டிருந்தனர்.

படையல் வைத்து கடவுளை வணங்கிய பிறகு,

கோதை, “மகி பிள்ளைங்களை அழைச்சிட்டு வந்து சாப்பிட வைம்மா” என்றிட,

“சரிங்கத்தை” என்று தலையசைத்தவள் பின்னர்,

“நீங்களும் சாப்பிட வாங்கத்தை” என்று அழைக்க,

“இல்லைம்மா நானும் பிரசாத்தும் காலையில விரதம்”என்றிட,

“அத்தை அவர் ஓகே ஆனால் நீங்க எப்படி சாப்பிடாம இருப்பிங்க. டேப்லெட் போடணுமே…” என்றவள் இழுக்க,

“ஒரு நாள் டேப்லெட் போடலைன்னா ஒண்ணும் ஆகாது” என்றவர் முகத்தில் வருத்தத்தின் சாயல் இருந்தாலும் ஓரத்தில் நிம்மதி தெரிந்தது.

அதன் காரணம் குரு தான். வழக்கமாக இந்த நாளில் அறைக்குள்ளே முடங்கி கொள்பவன் இந்த வருடம் குளித்து வெளியே வந்துள்ளான்.‌ அதுவும் தாய் கூறியதை மறுக்காது கேட்டு விளக்கை ஏற்றி வணங்கியது என யாவிலும் அவருக்கு ஒரு வகையான நிம்மதி பிறந்தது.

எல்லாம் மருமகள் வந்த நேரம் தான். விரைவில் இறுக்கம் எல்லாம் குறைந்து பழையபடி மாறி விடுவான் மகன் என்று நம்பிக்கை பிறந்தது.

என்னவோ சிறு வயதில் தந்தையுடன் சிரித்து பேசி தன் பின்னோடு சுற்றி வந்த மகனை காண மனம் அத்தனை அவா கொண்டது.

கணவரது இழப்பு தன்னைவிட மகனை தான் வெகுவாக பாதித்துள்ளது என்று அவருக்கு புரிந்திருந்தது. ஆனாலும் இத்தனை வருடங்களில் தன்னால் செய்ய இயலாததை மருமகள் செய்துவிட்டாள் என்பதில் உள்ளே மகிழ்ச்சி பொங்கியது.

மகிழ்,. “அத்தை டேப்லெட் சாப்பிடாம இருந்தா பிரஷர் அதிகமாகிடும்” என்று கவலைபட,

“ஒன்றும் ஆகாதும்மா நீ போய் குழந்தைங்களுக்கு சாப்பாடு கொடு” என்றிட,

“கோதைம்மா எப்படி சாப்பிடாம இருப்ப. கொஞ்சமா சாப்டுக்கோ” என்று பிறைசூடனும் மொழிந்தார்.

“விரதம் இருக்கும் போது கொஞ்சமா சாப்டாலும் விரல் கலைஞ்சிடும். வேணாம்பா” என்று மறுத்துவிட்டார்.

இவையனைத்தையும் கேட்டபடி மாடியேற சென்ற குரு திரும்பி,

“ம்மா நீங்க சாப்பிடுங்க அதான் நான் பாஸ்ட்டிங் இருக்கேன்ல அதுவே போதும்” என்று தாயிடம் இயம்ப,

“இல்லைப்பா…” என்று கோதை பேசுகையில் இடை நுழைந்தவன்,

“சாப்பிடாம இருந்தா ஹெல்த் ஸ்பாயில் ஆகிடும். டாட் அதை எப்பவுமே விரும்ப மாட்டார். போய் சாப்பிடுங்க” என்றவன் அறையை நோக்கி சென்றான்.

கோதையும் மகனின் வார்த்தைக்கிணங்கி சாப்பிட வந்தார்.

மகிழ் தான் மனதிற்குள் எத்தனை கஷ்டங்களை வைத்திருந்தாலும் மற்றவர்கள் அதாவது குடும்பத்தினர் மீது அவன் காட்டும் அக்கறை ஒரு நொடி அவனை திரும்பி பார்க்க வைத்தது.

அதுவும் நொடி நேரம் தான் பின்னர் வந்தவள் இளையவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உணவை பரிமாறினாள்.

அவளுக்கு என்னவோ உண்ண பிடிக்கவில்லை. காரணம் அவனா என்று கேட்டால் அவளிடம் பதில் இல்லை.

கோதை வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டவள் மதியம் குரு விரதத்தை முடிக்க வேண்டியிருப்பதால் உணவை தயாரிக்க கோதையுடன் சமையலறை சென்றுவிட்டாள்.

இங்கு அறைக்குள்ளே வந்த குரு சுவற்றை வெறிக்க நினைவு நேற்றைய இரவிற்கு சென்றது.

என்ன முயன்றும் நினைவுகளில் நேற்றைய நிகழ்வு நழுவுவதை தவிர்க்க இயலவில்லை. இதோ இதை தடுப்பதற்காக தான் அறையில் தனியாக இருப்பதை தவிர்த்து வெளியே வந்திருந்தான்.

இப்போது மீண்டும் தான் மறுக்க மறக்க நினைவலைகள் மகிழினியிடம் சென்று நின்றது.

ஒரு கணம் அவன் அணைப்பில் அதிர்ந்தவள் விலக பார்க்க,

“மகி ப்ளீஸ்‌…” என்றவனது குரலில் இருந்த ஏதோ ஒன்றில் உறைந்துவிட்டாள்.

அதுவும் அந்த “மகி” என்ற அழைப்பு தந்தையை நினைவுபடுத்தியது.

நொடிகள் நிமிடங்களாக கடக்க அப்படியே அவளை அசைவின்றி இறுக அணைத்து இருந்தான் குரு பிரசாத்.

இவள் தான் சிலை போல நின்றிருந்தாள் என்னவோ அசைய முடியவில்லை. அவனிடமிருந்து விலக மனமும் இல்லை.

நிமிடங்கள் கடக்க ஒரு மணி நேரம் அசையாது நின்று இருந்தவளுக்கு கால் கடுக்க துவங்க லேசாக அசைந்தாள்.

அதனை உணர்ந்தவன் சட்டென்று அவளைவிட்டு விலகி,

“நீ போ ரூம்க்கு” என்க,

அமைதியாக அவன் முகம் கண்டாள். அந்த இருளில் சிவந்திருந்த கண்கள் அவளை அச்சமூட்டியது. இருந்தும் இமைக்காது அவனை தான் கண்டாள்.

அந்த பார்வை இவனுக்குள் ஏதோ செய்ய,

“உன்னை போக சொன்னேன்” என்று மீண்டும் அழுத்தி கூற,

“இல்லை உங்களை நீங்க…” என்றவளுக்கு என்ன கூறி அவனை உறங்க அழைப்பது என்று சிறிதான தடுமாற்றம்.

ஆதரவற்ற குழந்தை போலிருந்தவனை விட்டு செல்ல மனம் வரவில்லை மகிழுக்கு‌.

“ஸ்டே யுவர் லிமிட்ஸ்…” என்றவனது அழுத்தமான குரலில் சடுதியில் இவளுக்கு என்னவோ போலாகிவிட்டது.

உள்ளே ஒன்று மெல்லிய இழையால் இறுகுவதை உணர்ந்தவள் வெளியேற துவங்கிய கணம்,

லேசான சத்தத்துடன் இரும துவங்கினான் குரு பிரசாத்.

அதில் ஒரு கணம் நடை தடைபட மீண்டும் நடந்தவளை அவனது அதீத இருமல் சத்தம் பின்தொடர தன்னை மீறி ஒன்று உள்ளுக்குள் இளகிட திரும்பி நீர எங்காவது இருக்கிறதா என்று பார்த்தாள்.

‘ம்ஹும்’ எங்கும் தென்படவில்லை‌. சமையலறைக்கு தன்னை மறந்து ஓடியவள் நீரை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

அவனும் கண நேரம் தயக்கத்திற்கு பிறகு வாங்கி பருக இவளது கை இயல்பாக அவனது தலையில் லேசாக தட்டியது‌.

நீரை முழுதாக பருகி முடித்த பிறகு தான் அவனது இருமல் நின்றது. இரவு நேரத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து இவனும் பனிக்கூழை உண்டிருக்கிறான் போலும் என்று எண்ணியவளுக்கு அவன் கூறிய ‘எல்லையில் நின்று கொள்’ என்ற வார்த்தை நினைவு வர திரும்பி செல்ல போனாள்.

ஆனால் போக முடியவில்லை. காரணம் அவளது கரம் குருவிடம் சிக்கி இருந்தது.

திரும்பியவள் கேள்வியாக பார்க்க,

“இங்க கொஞ்சம் நேரம் இருந்துட்டு போ…” என்றவனுக்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியாது பேதை விழித்தாள்.

நிமிடங்கள் கடக்க அவளிடம் பதிலில்லாது போக பட்டென்று அவளது கையை விட்டவன் மீண்டும் சாரளத்தை வெறிக்க துவங்கிவிட்டான்.

இவள் தான் கண நேரம் அவனது பார்வையில் வந்து போன ஏக்கத்தை ஒதுக்க இயலாது அவன் முன்னர் கூறிய வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு அவனருகே இருந்த இடத்தில் அமர்ந்துவிட்டாள்‌.

மூளை நீ இங்கிருப்பது சரியல்ல என்று கூறினாலும் குருவின் மீதிருந்த அதீத நம்பிக்கையால் அமர்ந்திருந்தாள்‌.

error: Content is protected !!
Scroll to Top