இதோ இந்த ஆப்போசிட் ரோடை கிராஸ் பண்ணா பஸ் ஸ்டாண்டுக்கு பேக் சைடுல இருக்குமா” என்றவன் தனது மகிழுந்தை இயக்கி சாலையைக் கடந்து மீன் சந்தையின் வாயிலை அடைந்தான்.
வாயிலின் அருகே வாகனங்களை நிறுத்த டோக்கன் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. இருசக்கர வாகனத்திற்கு ஐந்து ரூபாயும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பத்து ரூபாயும் வசூலிக்கப்படும்.
இவர்களது மகிழுந்து நின்றவுடன் ஒரு நடுத்தர வயதுக்காரன் அருகில் வந்து, “சார் பார்க்கிங்க்கு டோக்கன் வாங்கணும்” என்று கூற, உள்ளிருந்தவன், “எவ்ளோ?” என்று வினா தொடுத்தான்.
“பத்து ரூபா சார்” என்று பதில் வர தனது பஸ்ஸில் தேடினான். அதில் ஐநூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களே இருந்தது. திரும்பி தாயைக் கண்டவன், “உன்கிட்ட சேஞ்ச் இருக்காம்மா?” என்று வினவினான்.
“இருக்கும்னு நினைக்கிறேன்” என்ற ராதா தனது பஸ்ஸில் துழாவி பத்து ரூபாய் தாள் ஒன்றை எடுத்து தீட்டினார். அதனை வாங்கிக் கொண்டு எதிரில் இருந்தவன் டோக்கனை கொடுத்தான்.
டோக்கனை பெற்றுக் கொண்டு வாகன நிறுத்துமிடத்தில் மகிழுந்தை நிறுத்தியவன் வெளியே வர, “கண்ணா நீ இங்கே இரு நான் போய் வாங்கிட்டு வரேன் உனக்கு தான் மீன் ஸ்மெல் பிடிக்காதுல” என்ற என்ற ராதா இறங்கி வேடிக்கை பார்த்தவாறு நடக்கத் துவங்கினார்.
ஒவ்வொரு கடையையும் அவரது கண்கள் ஆராய்ந்து கொண்டிருந்தது. எந்த கடையில் வாங்கலாம் என்று அவர் யோசனையுடன் வேடிக்கை பார்த்தபடி வர, “அம்மா வாங்க அக்கா வாங்க இங்க வாங்க அம்மா” என்ற பெண் குரல் அவரது கவனத்தை ஈர்த்தது. காரணம் அங்கே முக்கால்வாசி ஆண்கள் தான் கூவி கூவி அழைத்துக் கொண்டிருந்தனர்.
குரல் வந்த திசையில் திரும்பி பார்க்க, “இங்க வாங்கம்மா உங்களுக்கு என்ன மீனு வேணும் எல்லா மீனுமே நம்மகிட்ட இருக்கு எல்லாமே பிரஸ்ஸா காலைல தான் இறக்குனோம் வாங்கம்மா வாங்க” என்று அழைத்தது மலரே தான்.
ராதா அவளது கடைக்கு செல்லலாமா வேண்டாமா என்று யோசனையுடன் பார்க்க, “எல்லாமே பிரெஷ் மீனுமா எல்லாரையும் விட குறைச்ச விலையில் தர்றோம் வந்து வாங்குங்க அம்மா வாங்க” இன்று மலர் மீண்டும் குரல் உயர்த்தி அழைத்தாள்.
இவ்வளவு தூரம் அழைப்பதால் ராதா அவளது கடைக்கு செல்ல, “சொல்லுங்கம்மா உங்களுக்கு என்ன மீனு வேணும்?” என்று வழக்கம் போல கடையில் உள்ள அனைத்து மீன்களையும் பட்டியலிட்டாள்.
பார்க்க சிறு பெண்ணாக இருப்பவளை ஒரு முறை ஆராய்ச்சியாக கண்டவரது விழிகள் அவரது கடையை கூர்ந்து கவனித்தது.
ராதாவின் பார்வையை உணர்ந்தவள், “கடையெல்லாம் நல்ல சுத்தமா டெய்லியும் கிளீன் பண்ணிடுவோம்மா எல்லாமே சுத்தபத்தமா தான் இருக்கும்” என்று விளக்கம் அளித்தாள்.
“ஹ்ம்ம்…” என்று தலை அசைத்தவர், “நண்டு இறால் இரண்டும் வேணும்” என்று கூற, “எவ்வளவு வேணுமா?” என்று கூடையில் இறாலை அள்ளிப் போட்டாள்.
“இறால் ஃப்ரஷா தானே இருக்கு? என்று ராதா மீண்டும் வினா எழுப்ப, “அம்மா இங்க பாருங்க கண்ணு கருப்பா இருக்கு உடம்பு நல்லா சிவப்பு கலர்ல இருக்கு பிரெஷா இருக்குற இறால் மட்டும்தான் இந்த கலர்ல இருக்கும் பழைய இறால் சாம்பல் கலர்ல மங்கிடுமா நீங்களே பாருங்க” என்று ஒரு இறாலை எடுத்து தலையை நன்றாக விரித்து காண்பித்தாள்.
அதைக் கண்டு திருப்தியான ராதா, “சரி ஒரு கிலோ போடுமா” என்று கூற, “சரிங்கமா” என்றவள் எடை இயந்திரத்தில் ஒரு கிலோவிற்கு நூறு கிராம் அதிகமாக வரும் அளவே எடை போட்டவள் ஒரு கவரில் எடுத்து வைத்துவிட்டு, “நண்டு எவ்வளவு வேணும்மா?” என்று வினவினாள்.
“நண்டும் ஒரு கிலோ போதும்” என்று ராதா பதில் அளிக்க, ஒரு நண்டை கையில் எடுத்தவள், “இந்த நண்ட பாருங்கம்மா வயிறு எப்படி ஒட்டி இருக்கு காலும் முழுசா இருக்கு பாருங்க பிரெஷா இருக்கறது மட்டும்தான் இப்படி இருக்கும். பிரஷா இருக்குறது மட்டும் தான்மா விப்பேன் வித்தது போக மிஞ்சிருச்சுன்னா அதை ஏதாவது கடைக்கு கொடுத்துவேன்ம்மா” என்று மீண்டும் நான் விற்பவை எல்லாம் புதிதாக வாங்கியவை என்று உறுதி செய்தவள் நண்டை எடைபோட்டு கவரில் எடுத்து வைத்தாள்.
“ஹ்ம்ம் மொத்தம் எவ்வளவு ஆச்சு?” என்று ராதா கேட்க “ரெண்டும் சேர்த்து தொள்ளாயிரம்மா” என்று பதில் அளித்தாள்.
ராதா தனது கையில் இருந்த பர்சை தேட அப்போதுதான் பர்சை காரிலே மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவு வந்தது. கையில் இருந்த அலைபேசியில் மகனுக்கு அழைத்தார்.
அழைப்பை ஏற்றவன், “சொல்லுங்கம்மா வாங்கிட்டீங்களா?” என்று வினவ, “கண்ணா பர்ஸ கார்லயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன் எடுத்துட்டு வந்து தர்றியா? எனறவர் பிறகு, “இல்ல நானே வந்து எடுத்துக்கிறேன்” என்று கூறினார்.
“அங்கே இருங்க மாம் நான் எடுத்துட்டு வந்து தரேன்” என்று ராதாவை தடுத்தவன் ஒரு முக கவசத்தை எடுத்து அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கி சந்தைக்குள் நுழைந்தான்.
ராதா மகன் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்து விட்டவர் கையை அசைத்து காண்பிக்க அவரைக் கண்டு கொண்டவன் மலரின் மீன் கடையை நோக்கி சென்றான்.
இதற்குள் மற்றொரு வாடிக்கையாளருக்கு மீனை விற்று முடித்திருந்தவள் நினைவு வந்தவளாக, “அம்மா இறாலையும் நண்டயும் அந்த சைடு கிளீன் பண்ணி தருவாங்க அம்மா ஒரு கிலோவுக்கு இருபத்தி அஞ்சு ரூவா வாங்குவாங்க” என்று மொழிந்தாள்.
அவளது கூற்றில் திரும்பி மீனை சுத்தம் செய்து தரும் கடையை பார்க்க அங்கே ஒவ்வொரு கடையிலும் குறைந்தது ஐந்து பேர் வரிசையில் நின்றிருந்தனர் அதனை கண்டவர், “என்னமா இத்தனை பேர் நிக்கிறாங்க கிளீன் பண்ணி வாங்க ரொம்ப நேரம் ஆகுமா?” என்று மலரிடம் வினா தொடுத்தார்.
“ஆமாம்மா எல்லாரும் நின்னு தான் கிளீன் பண்ணி வாங்கிட்டு போவாங்க” என்ற மலர் இயம்ப, ராதா யோசனையுடன் அவ்விடத்தை நோக்கினார்.
அவரது வெளித்தோற்றத்திலே ராதா சற்று பணக்கார வர்க்கத்தை சேர்ந்தவர் என்பதை ஊகித்திருந்தாள். அதுவும் விலையைக் கேட்காது பொருளை வாங்கிவிட்டதில் தன்னுடைய கணிப்பு சரிதான் என்று நினைத்திருந்தாள்.
இவர் நிச்சயமாக இந்த கூட்டத்தில் காத்திருந்து சுத்தம் செய்து வாங்கி செல்ல யோசிப்பார் என்று நினைத்தவள், “குடுங்கம்மா நானே கிளீன் பண்ணி தரேன்” என்று கூற, ராதா பதில் கூறும் முன் மணி, “அக்கா கடைய யார் பாக்குறது” என்று கேட்டான்
“கொஞ்ச நேரத்துக்கு நீ பாருடா நான் இவங்களுக்கு கிளீன் பண்ணி குடுத்துட்டு வந்துடறேன்” என்றவள் கடையின் ஓரத்தில் அமர்ந்து இறாலை சுத்தம் செய்ய துவங்கினாள்.
புதிதாக செய்பவருக்கு தான் சற்று நேரம் எடுக்கும் இவள் ஏற்கனவே நன்றாக சுத்தம் செய்து பழகி இருந்ததால் மடமடவென சுத்தம் செய்ய துவங்கினாள்.
பணத்தைக் கொடுக்க வந்தவனும் வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்து ராதாவை நெருங்கி இருந்தான்.
“பர்ஸ எடுத்துட்டு வரணும்னு தான் நினைச்சேன் ஆனால் மறந்துட்டு வந்துட்டேன் கண்ணா” என்று மகனிடம் கூற, “மாஸ்க் போட்டிருக்கதால ஸ்மெல் ஒன்னும் பெருசா தெரியலம்மா” என்றவன், “எவ்வளவு பே பண்ணனும்மா?” என்று வினவினான்.