அன்பு – 1.1

அன்பு – 1

நவம்பர் மாதத்தின் முதல் வாரம். மெலிதான குளிரும் கொஞ்சமே கொஞ்சம் வெயிலும்
எட்டிப்பார்த்து வார நாட்களை வரவேற்றுக்
கொண்டிருந்தன. மழை காலத்திற்கே உரிய மந்தமும் மங்கலுமாய் காட்சியளித்தது பெங்களூரின் பிரதான சாலை. நேற்று பெய்த மழையின் எச்சங்களாய் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று வருவோர் போவோரை முகத்தைச் சுளிக்க செய்து கொண்டிருந்தது.

சாலையோரம் நடப்பவர்கள் மகிழுந்தில் செல்பவர்களை மனதில் அர்ச்சித்தவாறு சென்று கொண்டிருந்தனர்.

“கார்ல தானே போறாங்க. ஃப்ளைட்ல போறதா நினைப்பு. கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்துப் போறதில்லை. தண்ணீயை நம்ப மேல தெறிக்க வைக்கிறது!” என்ற முணுமுணுப்போடு அந்த வயதான பெண்மணி சாலையைக் கடந்தார்.

இவை அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தவாறே அமைதியாய் ஜன்னலில் தலை சாய்த்திருந்தாள் சந்தனா. அவளது கையைப் பிடித்து விரல்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன்.

“ம்மா… அது என்ன, ம்மா இது என்ன!” என வளவளத்தவனின் கேள்விகளுக்குப் பொறுமையாய் பதிலளித்த வண்ணமிருந்தாள் அவள்.

இந்திரா நகரின் வலதுபுறமிருந்த சாலையையொட்டி அவர்கள் பயணித்த அவுரி நிற மகிழுந்து தன் வேகத்தை மெதுவாய்க் குறைத்துக்கொண்டு வந்து நின்றது.

“ம்மா… பாய், பாய்!” என தன் அம்மாவின் கையைப் பிடித்துச் செல்லம் கொஞ்சி முத்தமிட்ட சிறுவனைக் கண்டவளின் முகம் கனிந்து போயிருந்தது.

அவனது கன்னத்தை தடவியவள், “சேட்டை பண்ணாம சமத்தா இருக்கணும் மனோ!” என அன்பும் கட்டளையுமாய் அவனிடம் உரைத்தவாறே மகிழுந்தைவிட்டு இறங்கினாள். வதனம் முப்பதை தொடவில்லை என பறைசாற்றிக் கூறினாலும், அவள் அதைத் தொட்டு சில வருடங்கள் கடந்திருந்தன.

“அண்ணா, பத்திரமா அவனை இறக்கிவிட்டுட்டு வாங்க!” என ஓட்டுநர் இருக்கையிலிருந்த மனிதரிடம் இவள் கூற, “சரிங்க மா…” என அவர் தலையை அசைத்து விடை பெற்றார்.

சாலையைக் கடந்து சி‌.எஸ்.ஐ கிறிஸ்டின் மருத்துவமனை மற்றும் கல்லூரி எனப் பெரிதாய் முகப்பிலிருந்த பலகையைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தாள் சந்தனா.

பருத்திப் புடவையொன்று அவளது மெலிதான உடலைப் பாந்தமாய்த் தழுவியிருக்க, விழிகளை மூக்கு கண்ணாடி மறைந்திருந்தது. பெயருக்கு ஏற்றாற் போல சாந்தமான முகம் முழுவதிலும் மெல்லிய புன்னகை விரவியிருக்க, “குட்மார்னிங் டாக்டர்!” என்ற செவிலியரின் வணக்கத்தை ஏற்றவளின் உதடுகளும், “குட்மார்னிங் சிஸ்டர்!” என்ற வார்த்தையை உதிர்த்தன.

இரண்டாம் தளத்தை அடைந்து தனதறைக்குள் அவள் நுழைய, அவளுக்குப் பின்னே செவிலியரும் நுழைந்தார். சந்தனா எம்.பி.பி.எஸ், எம்.டி மனநல மருத்துவர் என்ற பலகையைக் கடந்து பின்னிருந்த நாற்காலியை சற்றே நகர்த்தி வசதியாய் அமர்ந்தாள்.

“டாக்டர், தேவா அவங்க பேரண்ட்ஸோட வந்திருக்காங்க. வர சொல்லவா?” எனக் கேட்ட செவிலிப் பெண்ணிற்கு தலையை அசைத்தவளின் விழிகள் வாயிலை நோக்க, முகம் முழுவதும் புன்னகையுடன் ஒரு பெண் நுழைய, அவளையடுத்து பெற்றவர்களும் உள்ளே நுழைந்தனர்.

“வாங்க தேவா… உட்காருங்க, எப்படி இருக்கீங்க?” என சந்தனா சின்ன சிரிப்புடன் வினவினாள்.

“ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன் டாக்டர். நல்லா சாப்ட்றேன், நல்லா தூங்கி எழுறேன். லாஸ்ட் வீக் அம்மா, அப்பாவோட லக்கி பாஸ்கர் மூவி பார்த்தோம். அப்புறம் நைட் டின்னர் வெளிய முடிச்சிட்டுத்தான் வீட்டுக்கே போனோம். என்னோட கசின் மேரேஜ் நெக்ஸ்ட் வீக் இருக்கு. இன்னும் டூ டேய்ஸ்ல மதுரை போறோம். ரொம்ப நாள் கழிச்சு எல்லாரையும் மீட் பண்ண போறதை நினைச்சு ரொம்ப எக்ஸைட்டடா இருக்கேன்!” என மடை திறந்த வெள்ளம் போல பேசிய பெண்ணைக் காண்கையில் சந்தனாவுக்கு மனம் நிறைந்து போனது. தலையை மட்டும் அசைத்து முன்னிருந்த பெண்ணிற்குத் தனது செவியை ஈந்தாள்.

“இப்போலாம் யாரோட நினைப்பும் வர்றதில்லை டாக்டர். என் அப்பா அம்மாவுக்குப் பொண்ணா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சீக்கிரமே என் மனசு முழுசா மாறுனதும் அவங்க அமைச்சுக் கொடுக்குற வாழ்க்கையை சந்தோஷமா ஏத்துப்பேன்!” என மகள் பேசப் பேச அருகிலிருந்த பெற்றவருக்கு அழுகை வரப் பார்த்தது.

சந்தனாவை நோக்கி அவர் கையெடுத்துக் கும்பிடவும், “ஐயோ சார்!” என இவள் சங்கடப்பட்டாள்.

அந்தப் பெண்ணின் தாய், தந்தையைப் போல கண்ணீரைக் கட்டுப்படுத்தவில்லை‌. பொலபொலவென உவர் நீர் அவரது முகத்தை நனைக்க, மகள் கையை அழுத்திப் பிடித்தார்.

“சார், உங்கப் பொண்ணு ரொம்ப நல்லா இருக்கா. இனிமேலும் நல்லா இருப்பா, நீங்க அழாதீங்க. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்குறது உங்களோட பொறுப்பு!” என சந்தனா கூறவும், “நிச்சயமா டாக்டர், என் பொண்ணை இனிமே அழவிட மாட்டோம்!” என அந்த மனிதர் மனமுவந்து கூறினார்.

“டாக்டர், ஐ ஹேவ் அ சம்திங் ஃபார் யூ” துள்ளலான குரலுடன் தன் முன்னே நீண்ட விரல்களையும் அதிலிருந்தப் பரிசையும் வாங்கத் தயங்கினாள் இவள்.

“ப்ளீஸ் டாக்டர், ப்ளீஸ் டோன்ட் சே நோ. இது உங்களுக்காக நானே செஞ்சேன்!” என இறைஞ்சும் விழிகளுக்கு மனம் முந்தி சம்மதம் தெரிவித்துவிட, பரிசோடு உபரியாக வந்த இன்னட்டுகளையும் இவளது விரல்கள் இறுகப்பற்றின.

“டாக்டர், நான் உங்களை ஒரு டைம் ஹக் பண்ணிக்கலாமா?” என தேவா கேட்டதும் இவள் எழுந்து நிற்கவும் ஓடிச்சென்று அணைத்துக் கொண்டாள் அந்தப் பெண்.

“ஃபர்ஸ்ட் லைஃப் என் அம்மா, அப்பா கொடுத்தது. இந்த லைஃப் நீங்க கொடுத்திருக்கீங்க. நான் வாழ்க்கைல எவ்வளோ முட்டாளா இருந்திருக்கேன்னு நினைக்கும்போது சிரிப்பு வருது டாக்டர். தேங்க்ஸ் டூ யூ, என் அப்பா, அம்மா முகத்துல இருக்க சிரிப்பு நீங்க கொடுத்தது. அதை என்னைக்கும் நான் வாடாம பார்த்துப்பேன். வாழ்க்கைல எது வந்தாலும் அதை ஃபேஸ் பண்ற தைரியம் என்கிட்ட இப்போ இருக்கு” எனக் கூறியபடி அவளை இறுக்கியணைத்தக் கரத்தின் தன்னம்பிக்கையிலும் வார்த்தையின் வலிமையிலும் இவளுக்கு அப்படியொரு ஆசுவாசம் பரவிற்று.

இன்னும் சில பல நிமிடங்கள் பேசி நன்றி நவில்ந்துவிட்டு அவர்கள் சென்றும் கூட சந்தனா முகத்திலிருந்த புன்னகை வாடவே இல்லை. முதல்முறையாக இந்தப் பெண் தேவா மருத்துவமனை வரும்போது அழுது முகம் சோர்ந்து தற்கொலை முயற்சிக்கு சாட்சியாகக் கையில் கட்டோடுதான் வந்திருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top