- Messages
- 1,036
- Reaction score
- 2,940
- Points
- 113
பொழுது – 3
மெதுவாய் ஆதவன் எட்டிப் பார்க்க, பொழுது புலர்ந்தது. ஆங்காங்கு வெளிச்சம் தென்ப்பட்டாலும் இன்னுமே முழுதாய் விடியவில்லை. நேரம் ஆறைத் தொட்டும் இருள் சூழ்ந்திருக்க, தளர்ந்திருந்த போர்வையைக் கைகளால் துழாவி எடுத்து கழுத்துவரைப் போர்த்திய சுதிரமாலாவிற்கு லேசாய் விழிப்பு தட்டியது என்னவோ உண்மை. ஆனாலும் சிறிது நேரம் தூங்கு என அசத்திய உடலின் வார்த்தைக்கு செவிமடுத்தவள், அரைகுறை உறக்கத்திலிருந்தாள்.
சந்திரா பாத்திரங்களை மெதுவாய் துலக்கினாலும் இவளது செவிக் கூர்மைக்கு அந்த சப்தம் எட்டிவிட்டது போல. முயன்று தூக்கத்தை விரட்டிவிட்டு எழுந்து முடியைக் கொண்டையிட்டவாறே மெதுவாய் மங்கியிருந்த விழிகளை சிமிட்டி பார்வையை உயர்த்தினாள்.
மணி ஆறைக் கடந்திருக்க எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்தவள் சந்திரா போட்டு வைத்திருந்த தேநீரில் தனக்கொரு குவளையும் சௌம்யாவிற்கு ஒன்றும் எடுத்துக் கொண்டாள். இவள் அறைக்குள்ளே சப்தம் செய்யாது நுழைய, அறையின் ஒருபுற மூலையில் இருந்த மேஜையில் அமர்ந்திருந்த சௌம்யா புத்தகத்தில் புதைந்திருந்தாள். இவளைப் பார்த்ததும் அவள் சோபையாய்ப் புன்னகைத்தாள்.
“டீ அண்ணி...” என அவளுக்கொரு குவளையைக் கொடுத்த சுதிரமாலா தானும் அங்கேயே அமர்ந்து தேநீரை அருந்தினாள். சௌம்யா ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாள். இப்போது அரசுத் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள். அதனாலே தினமும் விரைவில் எழுந்து படிப்பதை வழக்கமாய் வைத்திருந்தாள்.
“எப்போ எழுந்தீங்க அண்ணி. படுக்கவே மணி பனிரெண்டு ஆச்சே. டையர்டா இல்லையா?” இவள் அக்கறையாய்க் கேட்க, “ஹம்ம்... இல்ல சுதி. ஐஞ்சு மணிக்குத்தான் எழுந்தேன். இன்னும் நாலு மாசம்தானே இருக்கு எக்ஸாம்க்கு. கவர் பண்ண நெறைய டாபிக்ஸ் இருக்கு. இது முடிச்சிட்டு தமிழ் அண்ட் மேக்ஸ் பார்க்கணும். ஜென்ரல் நாலேட்ஜ் கொஸ்டீன்ஸ் போடணும். நினைச்சாலே மலைப்பா இருக்கு...” சௌம்யா ஆயாசமான குரலில் உரைத்தாள்.
“அண்ணி... ரொம்ப மெனக்கெடாதீங்க. உங்களால எவ்வளோ முடியுமோ அவ்வளோ படிங்க. பார்த்துக்கலாம்!” சுதி ஆறுதலாகப் பேச, அவளும் தளர்ந்து இருக்கையில் சாய்ந்தாள்.
“இல்ல டா... இந்த எக்ஸாமை ரொம்ப நம்பியிருக்கேன் நான். கிடைக்கணும்னு மனசு முழுக்க தவிப்பா தான் இருக்கு. பார்க்கலாம். கடவுள் நமக்கொரு நல்ல வழி காட்டுவாரு. நாங்க உன்னையும் ரொம்பக் கஷ்டப்படுத்துறோம். இந்தப் பிறந்தநாள் வந்தா உனக்கு இருப்பத்தி ஐஞ்சு வயசாகிடும். எத்தனை நாளைக்கு எங்களுக்குன்னு நீ பார்க்க முடியும். உனக்கொரு வாழ்க்கை வேணாமா?” கொஞ்சம் குரலில் குற்றவுணர்வு மேலிடப் பேசினாள் பெரியவள்.
“ஹம்ம்... அப்போ நீங்க எல்லாரும் ஒரு குடும்பம். நான் வேற ஆளுன்னு பிரிச்சுப் பார்க்குறீங்களா அண்ணி? நான் இது என்னோட குடும்பம்னு நினைச்சுத்தான் எல்லாம் பண்றேன். ஆனால் உங்களுக்கு அப்படியொரு எண்ணமில்லை போல!” போலியான குரலில் இவள் சலிக்க, சௌம்யா மென்மையாய் முறைத்தாள்.
“இப்படியெல்லாம் நீ பேசுனா, நான் சொன்னது தப்புதான், ஒத்துப்பேன்னு நினைக்குறீயா சுதி. உங்கண்ணன் இருக்குற வரைக்கும் உன்னை படிக்க வச்சு வேலைக்கு அனுப்பி நல்ல பையனா பார்த்து பிடிச்சுக் கொடுக்கணும்னு சொல்லிட்டே இருப்பாரு. அவரோட ஆசையை நிறைவேத்த வேணாமா? அப்புறம் அவர் கோச்சுப்பாரு. பரவாயில்லையா?” சௌம்யா சுதியை வாஞ்சையாகப் பார்க்க, அவளுக்கு மெலிதாய் விழிகள் கலங்கின.
“உங்களுக்காக செய்ற எதையும் நான் சுமையா நினைக்க மாட்டேன் அண்ணி. நீங்கலாம் இல்லைன்னா, நான் இல்ல. அண்ணனுக்கு நம்மளோட வாழ கொடுத்து வைக்கலை. பட் எங்க இருந்தாலும் நம்பளை பார்த்துட்டே இருக்கும்!” என்றாள் வருத்தம் நிரம்பிய குரலில். அவளது வார்த்தையில் சௌம்யாவிடம் பேரமைதி. ஏனோ இத்தனை விரைவாய்த் தன் கணவனை கடவுள் அழைத்திருக்க வேண்டாமென ஒவ்வொரு முறையும் மனம் அழுது கரையும். கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் சரத் இல்லாமல் வாழ்ந்துவிட்டாள். அவன் சாகும்போது ருத்ரா கைக்குழந்தை. கணவன் இறந்த துக்கத்திலிருந்து அவள் மீண்டு வரவே எத்தனை வருடங்களானது என துன்ப பெருமூச்சுடன் சுதியைப் பார்த்தாள். இந்தப் பெண்ணின் ஓட்டம் தங்களுக்காவென்பதில் அவளுக்கு சற்றே குற்றவுணர்வு மேலிடும். தங்கள் சுயநலத்திற்காக இவளைக் கஷ்டப்படுத்துகிறோம் என எண்ணி வருந்தியிருக்கிறாள்.
இந்த முறை அரசு வேலை கிடைத்துவிட்டால் ஓரளவிற்கு எல்லாம் சரியாகிவிடும். சுதிக்கும் நல்ல இடத்தில் மணம் முடித்து வைத்துவிடலாம் எனக் கற்பனை கோட்டை மளமளவென உயர்ந்தது.
“டைமாச்சு அண்ணி... நான் போய் கொஞ்சம் அப்பளம் தேய்ச்சு வச்சிட்டு கிளம்புறேன்!” என்றவள் அரைமணி நேரம் மீதமிருந்த மாவை வட்ட வட்டமாய் தேய்த்தெடுத்தாள். பின்னர் இரண்டு இரண்டு தட்டுகளாக தேய்த்த அப்பளத்தை மாடிக்கு எடுத்துச் சென்று வெயில்படுமாறு காய வைத்தாள்.
சந்திரா துணிகளைத் துவைத்து முடிக்க, இவள் அதை எடுத்துச் சென்று மாடியில் உலர்த்தினாள். பெரியவரால் வயோதிகம் காரணமாக மாடியேற முடிவதில்லை. இவளோ அல்லது சௌம்யாவோ தான் மாடிக்குச் செல்வர்.
கீழே வந்ததும் நேரத்தைப் பார்த்த சுதி அவசரமாகக் குளித்து முடித்து வேலைக்குத் தயாராகினாள். நேற்றைக்கு வழக்கமாக உபயோகிக்கும் சீருடையை அந்த வாலிபன் தலையில் கிழித்துக் கட்டிவிட்டாள். ஒவ்வொரு வருடமும் வணிக வளாகத்தில் புதிதாய் சீருடைகள் வழங்குவார்கள். சுதி பழையது கிழியும் வரை புதியதை பத்திரப்படுத்தி வைத்திருப்பாள். இன்று புதிதாய் நிலைப்பேழையில் வைத்திருந்த சீருடையை எடுத்துக் கைப்பையில் திணித்தாள். நேற்றைக்கு உடுத்தியிருந்த உடையை பிறர் கவனத்தை கவராது துவைத்துக் காயப்போட்டாள். ஆழ் சிவப்பு நிறம் அவளது கை வண்ணத்தில் வெளுத்திருந்தாலும் இன்னுமே ஆங்காங்கே மெல்லிய சிவப்பு படர்ந்திருந்தது. இனிமேல் இந்த உடையை உபயோகிக்க முடியாது எனத் தெரிந்தாலும் அதை தன் அண்ணன் நினைவாகப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அறையை விட்டு வெளியே வந்தாள்.
சந்திரா காலைக்கு இட்லி சுட்டு சாம்பார் வைத்திருந்தார். அப்படியே சாதமும் உருளைக் கிழங்கு பொரியலும் அவர் செய்திருக்க, இரண்டு இட்லியை விழுங்கிய சுதி உணவை டப்பாவில் அடைத்துக் கிளம்ப, சிறுவர்கள் இருவரும் குளித்து முடித்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர். சௌம்யா அவர்களை அரட்டி உருட்டிப் பள்ளிக்கு கிளப்ப, சின்ன புன்னகையுடன் இவள் விடை பெற்றாள்.
“ரோட்ல போகும்போது ஓரமா போ சுதி. சேறும் சகதியும் இருந்தா பார்த்துப் போ!” சந்திரா அறிவுறுத்த மெல்லிய முறுவலுடன் சுதி நகர்ந்தாள். ஒன்பது மணிக்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே சென்று கை ரேகையும் முகத்தையும் பதிந்துவிட்டாள். மனதினோரம் ஆசுவாசம் பரவியது. நேற்றைய சுவடுகளை நேற்றே தூக்கியெறிந்துவிட்டு புத்துணர்வோடு மேல்தளத்திற்கு வந்தாள்.
ஒருசில ஊழியர்கள் வந்திருக்க, இவளைப் பார்த்ததும் அவர்கள் தயங்கிபடி நின்றனர். எதற்கென தெரிந்தாலும் சுதி மலர்ந்து புன்னகைத்தாள். நான் நன்றாய் இருக்கிறேன் என கண்களாலே தன் நலத்தை உரைத்தவள், வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
சில பல நிமிடங்கள் கடக்க, “சுதி... சீக்கிரம் வந்துட்டீயா?” என பக்கவாட்டில் குரல் கேட்க, விவேகாதான் என்றுணர்ந்தவள் அவளைப் பார்த்துப் புன்னகைத்து தலையை அசைத்தாள்.
அவள் வேறு ஏதோ கேட்க வேற, “ப்ரேக்ல பேசலாம் விவேகா. சூப்பர்வைசர் வந்துடுவாரு...” எனக் கீழே அமர்ந்து புதிதாய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புகையிலைப் பெட்டியை வரிசையாய் அடுக்கினாள். விவேகா சில நொடிகள் அவளருகே நின்று பின் பெருமூச்சுடன் நகர்ந்தாள். வேலை நேரத்தில் வாடிக்கையாளர் இருந்தாலும் இல்லாவிடினும் ஊழியர்கள் தாங்களுக்குள்ளே பேசக் கூடாது என்பது விதி.
அநாவசிய அங்கே பேச்சுகளுக்கு இடமில்லை. வேலை சம்பந்தப்பட்ட பேச்சாக இருந்தாலும் கூட ஓரிரண்டு நிமிடங்கள் அவர்கள் அதிகமாய் நின்று பேசிவிட்டால், கண்காணிப்பு கருவியில் பார்த்துவிட்டு உடனே அவ்விடத்தில் பிரவேசிப்பார் மேற்பார்வையாளர் வைகுண்டம். அதே போல ஊழியர்கள் எங்கேயும் உட்காரக் கூடாது. வேலை நேரத்தில் நின்று கொண்டுதான் இருக்க வேண்டும். அதனாலே அங்கு வேலை பார்க்கும் மக்களுக்கு கால் வலி வெகு பரிட்சயமானதாக மாறி விட்டிருந்தது.
பதினோரு மணிக்கு இடைவேளை விடுவர். ஐந்து ஐந்து நபர்களாக சென்று தேநீர் அருந்திவிட்டு வரலாம். பத்து நிமிடங்கள் மட்டுமே அனுமதி உண்டு. சுதியும் விவேகாவும் முதலில் சென்றனர்.
“சுதி... நீ ஓகேவா டி?” கவலையாய்த் தன் முகம் பார்த்த தோழியைப் பார்த்து ஆதுரமாய் சிரித்த சுதிரமாலா, “ஐ யம் ஓகே விவே. நீ கவலைப்படாதே. இதெல்லாம் புதுசா என்ன? எப்பவும் கொஞ்சமா திட்டுவாரு. நேத்து நிறைய திட்டிட்டாரு. அவ்வளோ தானே. விடுடி...” என்றாள் எதுவும் நடக்காதது போல தோளைக் குலுக்கி.
“ஹம்ம்... இந்த ஆளைக் கடவுள் பார்த்துட்டே இருப்பாரு டி சுதி. என்னைக்காவது பெருசா ஆப்பு வைப்பாரு. அப்போ நம்மளோட நிலைமை இவருக்குப் புரியும்!” விவேகா ஆற்றாமையில் புலம்பினாள்.
“டைமாச்சு... நீங்க போய்ட்டு அடுத்தவங்களை வர விடுங்கப்பா!” தேநீரை விநியோகிக்கும் ஊழியர் கூற, ஐந்து பேரும் மீண்டும் வேலையில் ஆழ்ந்தனர்.
“என்ன தேடுறீங்க மேடம்?” சுதி கேட்க, “வீ நீட் சாக்கோ சிப்ஸ். பட் காண்ட் பைன்ட் ஹியர்!” வாடிக்கையாளர் ஒருவர் ஆங்கிலத்தில் கூற, “ஒன் மினிட் மேடம். ஐ வில் ப்ரிங் இட்!” என்றவள் விறுவிறுவென தரைதளத்திற்கு சென்று அவர் கேட்டதை எடுத்து வந்து கொடுத்தாள்.
“தேங்க் யூ...” என அவர் பணம் செலுத்துமிடம் விரைந்தார்.
“அதை ட்ரை பண்ணிப் பாருடி!” இளம் ஜோடி ஒன்று இவளருகே நின்று தங்களுக்குள்ளே சிரித்துப் பேச, சுதி அவர்களைக் கண்டுவிட்டு, “எந்த பெர்ஃப்யூம் ட்ரை பண்ணறீங்க சார்?” என வினவினாள்.
“ப்ளூ லேடி குடுங்க!” அப்பெண் கூற, அது மேலடுக்கில் இருந்தது. ஒரு ஓரமாய் இருந்த பெரிய நாற்காலியை இழுத்து வந்து அதில் ஏறி அவர்கள் கேட்ட வாசனை திரவியத்தை எடுத்துக் கொடுத்தாள் சுதி. மதிய நேரம் வந்துவிட உண்டுவிட்டு வந்தனர்.
எப்போதும் போல மதியம் கொஞ்சம் மந்தமாய் இருந்தது வளாகம். பெரும்பாலும் காலையிலும் பின் மாலை பொழுதுகளிலும்தான் வணிக வளாகத்தில் கூட்டமிருக்கும். மதியத்தில் வெறிச்சோடித்தான் கிடக்கும். இன்றும் ஆட்கள் நடமாட்டம் வெகு குறைவு.
சுதி கீழே அமர்ந்து கடைசி வருசையில் இருந்த பொருட்களை எடுத்து தூசியைத் துடைத்து அதன் தேதியை ஒருமுறை சரிபார்த்துவிட்டு அடுக்கினாள். ஆட்கள் இல்லாத போது இந்த வேலைகளை கவனிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இருக்கும்போது அவர்கள் அருகிலே நின்று என்ன வேண்டும் என்று கேட்டு எடுத்துக் கொடுக்க வேண்டும். ஒரே வாடிக்கையாளரிடம் நீண்ட நேரம் செலவழிக்க கூடாது என்பதெல்லாம் ஆதியிலிருந்து அவளுக்குப் போதிக்கப்பட்ட அறிவுரைகள். அவளே வேண்டாம் என்றாலும் கூட மூளையில் ஆழப்பதிந்து போயின.
எட்டு மணியானதும் கைரேகையைப் பதிந்துவிட்டு கிளம்பினாள். பெண்களுக்கு எட்டு மணிக்கு வேலை முடிந்துவிடும். ஆண்கள் பத்து மணி வரை வேலை பார்க்க வேண்டும். அதே போல அவர்களுக்கு ஊதியமும் பெண்களைவிட அதிகம்.
சுதி வீட்டை அடைந்தாள். எப்போதும் போல பொழுது கழிந்தது. வீடு வணிக வளாகம் என நேரம் சென்றது அவளுக்கு. அந்த வார ஞாயிற்றுக்கிழமை பறிபோகப் போகிறது என்ற ஏக வருத்தமிருந்தாலும் எழுந்து வேலைக்கு கிளம்பினாள். மாதத்தில் நான்கு நாட்கள் விடுமுறை உண்டு. ஞாயிற்றுக்கிழமை வணிக வளாகம் செயல்படும். ஆனாலும் பாதிக்கு பாதி ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்வார்கள். சுதி மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுப்பெடுத்துக் கொள்வாள். மற்றபடி மூன்று ஞாயிறும் வேலைக்கு வந்துவிடுவாள். காரணம் வழக்கமாகக் வழங்கும் சம்பளத்தை விட அன்றைக்கு இரண்டு மடங்காக வழங்குவார்கள். அதை இழக்க மனமின்றி வேலைக்குச் செல்வாள்.
ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் அந்த ஒரு நாளுக்காக இருபத்து ஒன்பது நாட்களை நெட்டித் தள்ளுவாள். என்றைக்காவது அரிதாக உடல்நிலை சரியில்லாமல் போனால் மட்டுமே மற்ற ஞாயிறுகளில் விடுப்பெடுப்பாள். மற்றபடி அவளது காலையும் மாலையும் ஏழு வருடமாக இங்குதான் தொடங்கி, முடிவடையும். சலிப்பு வராமல் இல்லை. அதெல்லாம் மூளை வரைக்கொண்டு செல்லாமல் இதயத்தோடு நிறுத்திக் கொள்வாள்.
சுதி வணிக வளாகத்திற்குள் நுழைய தென்பட்ட இடமெங்கும் மக்கள் நிரம்பி வழிந்தனர். பார்த்ததும் சற்றே மலைத்துப் போனாள். இங்கே வளாகத்தின் பின்புறம் நான்கைந்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்ப்பவர்கள்தான். ஞாயிறு வந்துவிட்டால் அங்கிருக்கும் ஆயிரத்தில் ஐநூறு பேராவது இங்கே குழுமிவிடுவார்கள்.
“சுதிரமாலா. பில் செக்ஷன் போங்க... அங்க ஆள் இல்ல!” இவள் கையெழுத்திட்டு நிமிர, வைகுண்டம் குரல் செவியில் விழுந்தது. “ஓகே சார்!” அவர் முகம் பார்க்காது தலையை அசைத்து பணம் செலுத்துமிடம் சென்று கணினி முன்பு நின்றாள். வரிசையில் அத்தனை பேர் நிற்க ஒவ்வொருத்தருடைய கூடையாக வாங்கி என்னென்ன வாங்கியிருக்கிறார்கள் எனத் தட்டச்சு செய்து மொத்தம் எவ்வளவு எனக் காகிதத்தில் அச்செடுத்து அதைக் கூடையிலிட்டு அவள் மறுபுறம் நகர்த்தினாள். அருகே இருந்த வாலிபன் பணத்தை வாங்கிக்கொண்டு அவனுக்கு அடுத்ததாக நகர்த்த, அங்கு நின்றிருந்த இரண்டு பேர் பொருட்களை மீனாட்சி காம்ப்ளக்ஸ் எனப் பெயர் பொறிக்கப்பட்ட நெகிழிப் பையில் நிரப்பிக் கொடுத்தனர்.
மூன்று மணிநேரம் மூச்சுவிட நேரமில்லாது நகர்ந்தது. மதிய உணவு இடைவேளை வர, பின்புறம் உணவு உண்ணும் பகுதிக்கு சென்று தன்னை ஆசுவாசம் செய்தாள். விவேகா ஞாயிறு எப்போதும் வர மாட்டாள். அவளது தொணதொணவென்ற பேச்சில்லாது சுதிக்கு நாள் சற்றே வெறுமையாகச் செல்லும்.
“சுதி... ஏன் தனியா இருக்க. இங்க வா!” என ஒரு அக்கா அவளை அழைத்து அருகே அமர்த்திக் கொண்டார். ஒருவாறாய் அன்றைய தினம் கழிந்து சுதி வீட்டிற்கு செல்லும்போதும் உடல் அலண்டு போயிருந்தது.
அடுத்த விடுமுறைக்கு இன்னும் மூன்று வாரங்களைக் கடக்க வேண்டும் என்ற சிந்தனையில் மெதுவாய் நடந்தாள். வேகமாய் நடந்தால் ஒரு காலோடு முதுகும் சேர்ந்து வலித்தது. என்னவென்று மருத்துவரைப் பார்க்கலாம் என்ற எண்ணி பிறகு அதைக் கிடப்பிலிட்டாள். அங்கே அவரிடம் சென்று வேறு ஏதேனும் பெரிய பிரச்சனையாக இருந்தால், வேலையும் செய்ய முடியாமல் மனநிம்மதியும் கெட்டுவிடுமென எண்ணி அதைப் புறந்தள்ளிவிட்டாள்.
என்றைக்காவது தூங்கவே முடியாத அளவிற்கு வலிக்கும் போது மட்டும் மருந்தகத்தில் வாங்கி வைத்திருக்கும் வலி நிவாரணி மாத்திரையை உட்கொள்வாள். அதுவும் அதிகமாய் சாப்பிட மாட்டாள். அதனால் எதுவும் பக்கவிளைவுகள் வந்துவிடுமோ என்ற எண்ணம் வேறு ஒருபுறம் துளிர்த்தது.
அடுத்த ஞாயிறு விடுமுறையில் சுகமாய் துயில வேண்டும். காலை ஆறுமணிக்கு எழ வேண்டிய அவசியம் இல்லை என்ற நினைப்பே தித்தித்தது. பத்து பன்னிரெண்டு மணி வரை உறங்க ஆசை மனம் முழுக்க உண்டு. ஆனாலும் எட்டு மணிக்கே எழுந்துவிடுவாள்.
சந்திராவிற்கு விடுமுறை நாட்கள், வார நாட்கள் என்ற எவ்வித கணக்கும் கிடையாது. எப்போதும் ஆறுமணிக்கு முன்பே எழுந்து வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவார். சௌம்யாவும் எழுந்து படிக்க அமர, இவளுக்கு குற்றவுணர்வாக இருக்கும். அதனாலே எட்டு மணிக்கு மேல் உறங்காமல் எழுந்துவிடுவாள்.
சந்திராவுடன் சமையலில் உதவாது அப்பள மாவை எடுத்துக்கொண்டு தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்துவிடுவாள். ஏதாவது பாட்டு, படம் என மனதை இலகுவாக்கியபடியே சுவரில் சாய்ந்தமர்ந்து அப்பளத்தை தேய்த்தெடுப்பாள். பின்னர் பத்து மணி போல உண்டுவிட்டு வேலையைத் தொடர்வாள். சந்திராவும் சௌம்யாவும் இணைந்து கொள்வார்கள். சிலசமயம் சுதி சிறுவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு சரிக்கு சரியாய் கதையளப்பாள்.
மதியம் சந்திரா சுடசுட அசைவம் சமைத்துக் கொடுக்க, அதை உண்டுவிட்டு சிறிது நேரம் தூங்கியெழுவாள். பின்னர் சன் தொலைக்காட்சியில் என்னப் படம் ஒலிபரப்பினாலும் அதை புதிதாய் பார்ப்பது போல ருத்ராவும் தவாவும் அமர்ந்து காண, இவளும் இணைந்து கொள்வாள். மதியம் மீந்து போன கறிக்குழம்பை சூடாய் தோசையில் நனைத்து தொண்டைக் குழியில் இறக்கும் போதே அன்றைய நாளின் பிறவிப் பலனை அடைந்துவிட்டதாய் மனம் சிலாகிக்கும்.
சுதிக்கு அன்றைக்கு விடுமுறை என்பதைவிட குடும்பத்தோடு நேரம் செலவழிக்கிறோம் என்பதில் அத்தனை மகிழ்ச்சி பொங்கும். காலையில் அரக்க பறக்க எழுந்து அவர்களின் முகம் கூடக் காணாது சென்று இரவு வீட்டிற்கு சோர்வை அப்பி வரும்போது அவர்களிடம் உட்கார்ந்து பேசும் எண்ணமெல்லாம் அறவே அற்றுப் போகும். எப்போதடா ஓய்வு கிடைக்கும் என அனத்திய உடலின் அசதியில் எதுவும் பெரிதாய் தெரியாது. படுக்கையில் வீழ்ந்து போவாள். இப்படியிருக்கையில் அவர்களிடம் அமர்ந்து பேசவெல்லாம் நேரம் வாய்க்கவே வாய்க்காது. அதனாலே அந்த ஒரு ஞாயிறு அவளுக்குப் பொக்கிஷம்தான்.
பத்து நிமிடங்கள் கடந்தும் பேருந்து வராமல் இருக்க, சுதியின் பார்வை மெல்ல சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது. எதிரே வானளவு உயர்ந்து நின்ற கட்டிடத்தில் பார்வை பதிந்து விலகியது. அங்கே வசிக்கும் மக்களைப் பார்த்து சுதிக்கு எப்போதும் ஒரு பிரம்மிப்பு உண்டு.
அவளறிந்தவரை வளாகத்திற்கு வரும் ஐடி துறையைச் சேர்ந்த மக்கள் ஒருநாளும் விலையைக் கேட்டதில்லை. உள்ளே நுழைந்ததும் கண்கள் பரபரவென தனக்கு வேண்டிய பொருட்களை ஆராய, கைகள் எடுத்துக் கூடையை நிரப்பும். அரைமணி நேரத்தில் கூடை நிரம்பி வழிந்ததும் எவ்வளவு பணம் என்றெல்லாம் கணக்கிடாது பண பரிவர்த்தன அட்டையை நீட்டுவார்கள். பதினைந்தாயிரம், இருபதாயிரம் என எளிதில் பணத்தைச் செலுத்திவிட்டு நகர்ந்துவிடுவார்கள். ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்கள் மட்டுமே அவை. மற்றபடி வாராவாரம் இப்படித்தான் நிகழும்.
அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வரும் பெரும்பாலான மக்களின் நடை, உடை, பாவனை, அவர்களது தோற்றம், வாசனை திரவியம் என அனைத்திலுமே பணம் கொட்டிக் கிடக்கும். அவர்கள் உபயோகிக்கும் வாசனை திரவியத்தின் விலையே சில ஆயிரங்களைத் தொடும். சுதி முதன்முதலில் கீழே தள்ளிவிட்டு உடைத்த வாசனை திரவியத்தின் விலையை இப்போது நினைத்தாலும் மனம் அஞ்சும்.
ஆறாயிரம் ரூபாய்க்கு வாசனை திரவியம் உண்டு என அப்போதுதான் அவளுக்குத் தெரிந்திருந்ததே. அதற்குப் பிறகு அதைவிட விலை உயர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியங்களைப் பார்த்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் வியப்பு மேலிடும். அவளுடைய மொத்த வருமானமே அப்போது பத்தாயிரம் ரூபாய்தான். ஆனால் ஒரு சில வாசனைத் திரவியத்தின் விலை அவளது சம்பளத்தைவிட இரண்டு மடங்கு அதிகம் என்பதை இன்னுமே அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அப்படி விலை உயர்ந்த பொருளைக் கூட, வந்ததும் கூடையில் அள்ளிப் போடும் மக்களையெல்லாம் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களைப் போல பார்த்து வைப்பாள். இப்போது அதெல்லாம் பழகியிருந்தாள். சில சமயம் தன்னுடைய முதிர்ச்சியற்ற செயலை எண்ணி சிரித்திருக்கிறாள்.
ரொம்ப அரிதாக மேல்தட்டு மக்களைப் பார்த்து பொறாமைக் கூட மேலெழும்பும். ஆனால் அதை மூளை வரை எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டாள். அவளுக்குமே படிக்க வேண்டும் என்ற ஆசை நெஞ்சு முட்டும் அளவிற்கு இருந்தது. சரத்தின் எதிர்பாராத இழப்பு அவர்கள் வாழ்க்கையையே மாற்றியிருந்தது. ஒருவேளை அவன் உடனிருந்திருந்தால் சுதியும் இதுபோல மென்பொருள் துறையில் இளங்கலை பட்டம் பெற்று தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி இருக்கக் கூடும். தான் ஆசைப்பட்ட படிப்பை படிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் இன்னுமே அவளுக்கு மனம் பிசையும். வேறு வழியில்லாது நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு வாழப் பழகியிருந்தாள். நினைவுளுடனே வீட்டை நோக்கி நகர்ந்தாள் சுதிர மாலா.
***
நிவினுக்கு காலையிலே அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்திருந்தது. அவன் இருபத்து நான்கு மணி நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும் என்றும் நாளைக்கு அறைக்கு மாறிவிடுவார்கள் என்றும் மருத்துவர் கூறி அகல, பாலுமகேந்திரா அவரிடம் தனது நன்றியை நவில்ந்திருந்தார்.
மகனுக்கு சிகிச்சை நன்றாக முடிந்ததிலே அவரது பாதி மனப்பாரம் குறைந்திருந்தது. காலையிலே பாலா மற்றும் நந்தனாவின் தாய், தந்தையர் வந்துவிட்டனர். சிகிச்சை முடியும் வரை உடனிருந்து அவர்கள்தான் இவரை தேற்றியது. மகேந்திராவின் ஒன்றுவிட்ட தங்கைதான் வாகீஸ்வரி. அவரது கணவன் முத்துவேல். மதுரையில்தான் அவர்கள் வசிக்கின்றனர்.
அவர்களுடைய பிள்ளைகள்தான் பாலாவும் நந்தனாவும். அக்ஷாவும் ஆரோனும் இளையவர்களின் கல்லூரி நட்பு. இப்போது நிவினுக்கும் அவர்களின் உபயத்தால் இருவரும் நண்பர்களாகியிருந்தனர்.
மகேந்திந்திராவின் காலை விடியலே வாகீஸ்வரியின் குரலில்தான் விடிந்தது. “அண்ணா... இன்னும் தூக்கம் என்ன?” என வினவிக் கொண்டே கையிலிருந்த பையை மேஜை மீது வைத்தார்.
மகேந்திரா மெதுவாய் எழுந்தமர்ந்தார். தங்கையைப் பார்த்துப் புன்னகைத்தவர், “எதுக்குமா இவ்வளோ காலைல வரீங்க? சிரமப்பட வேணாம்னு நேத்தே சொன்னேன்ல?” அவர் மென்மையாய் கடிந்தார்.
“ஹம்ம்... நல்லா இருக்குண்ணா நீங்க பேசுறது. இதுல என்ன சிரமம் இருக்கு. அரைமணி நேரத் தூரம்தான். நான் என்னமோ ரொம்ப நேரம் ட்ராவல் பண்ணி வந்தது மாதிரி பேசாதீங்க!” என அதட்டலுடன் நாற்காலியில் அமர்ந்தார்.
தேநீர் வாங்க சென்ற முத்துவேல் சில நிமிடங்களில் உள்ளே நுழைந்தார். “மச்சான்... டீ குடிக்கலாம் வாங்க!” என அவர் குவளையில் ஊற்ற, மகேந்திரா பல் துலக்கி வந்தார். மூவரும் தேநீரைப் பருகினர்.
“நிவினை எப்போ ரூம்க்கு மாத்துவாங்கண்ணா? எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்களாம்? ஹாஸ்பிடல் வாசனையே அவனுக்குப் பிடிக்காது. புள்ளை பாவம்!” வாகீஸ்வரி வருத்தமாய் உரைத்தார்.
“ஆமா வாகீ... எனக்கும் எப்போடா வீட்டுக்குப் போவோம்னு இருக்கு. இன்னைக்கு ரூம்க்கு மாத்திடுவாங்க. எப்போ வீட்டுக்கு அனுப்புவாங்கன்னு தெரியலை!” மகேந்திரனும் அலுத்தார்.
“அண்ணா... பாலா வருவான். நீங்க அவனோட போய் வீட்ல குளிச்சிட்டு சாப்ட்டு ரெஸ்ட் எடுங்க. இங்க நிவினுக்குத் துணைக்கு நாங்க இருக்கோம். நத்துவும் வந்துடுவா. அந்தப் புள்ளைங்க ரெண்டு பேரும் கூட வருவாங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க!” வாகீஸ்வரி கூற, மகேந்திரா மறுத்தார். முத்துவேலும் வாகீயும் சேர்ந்து அவரை பாலாவுடன் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
நந்தனா பாலாவுடன்தான் வந்திறங்கினாள். மருத்துவரைச் சந்தித்து நிவினின் உடல்நிலையைப் பற்றி அறிந்து கொண்டுதான் அறைக்குள் நுழைந்தாள். அக்ஷாவும் வந்துவிட்டாள். பெண்கள் இருவரும் தனியாய் அமர்ந்துவிட்டனர். ஆரோன் அலுவல் காரணமாக வரவில்லை. அவர்களைக் காக்க வைத்து மதியம் போலத்தான் நிவினை அறைக்கு மாற்றினர். அவனை இன்னுமே மயக்க மருந்து முழுதாய் தெளிய விடவில்லை.
நிவின் கண்களை மூடிப் படுத்திருக்க, இவர்கள் அவனுடனே அமர்ந்து கொண்டனர். முத்துவேல் இடையில் வெளியே சென்று வந்தார். மாலையில் மகேந்திரா வந்துவிட்டார். இரவானதும் அனைவரும் விடைபெற, அவர் மகனைக் கவனித்துக்கொண்டு சரியாய் உறங்கியும் உறங்காமலும் நேரத்தைக் கடத்தினார்.
தொடரும்...