• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,036
Reaction score
2,940
Points
113
பொழுது – 2 💖

மீனாட்சி வணிகவளாகம் வசந்தநகர் பேருந்து நிலையத்திலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்தது. மதிய நேரம் ஆட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்பட்டனர். பெரிதாய் சலசலப்புகளற்று காணப்பட்டாலும், ஊழியர்கள் தங்களது பணியில் மூழ்கியிருந்தனர். இரண்டு தளங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த வணிகவளாகத்தில் மொத்தம் நாற்பது பேர் பணி புரிய, வசந்தநகரின் பெரும்பகுதியை அடைத்திருந்தது அந்த வணிகவளாகம்.

முதல் தளத்திற்கு பின்புற பகுதியிலிருந்து படிக்கட்டு அமைத்து தரைதளத்திற்கு செல்லும் வழியிருந்தது. அங்குதான் கொள்முதல் செய்த பொருட்களை, தனியே பிரித்தெடுப்பது, உதிரிப் பொருட்களை நெகிழிப்பையில் அடைப்பது போன்ற வேலைகள் நடைபெறும். தரைதளத்தில் பத்து பேர், சிலர் அமர்ந்தவாறும் பலர் நின்றவாறும் தங்களது வேலையைக் கண்ணும் கருத்துமாகச் செய்து கொண்டிருந்தனர்.

முதல் தளத்தில் பதினைந்து ஊழியர்கள், இரண்டாம் தளத்தில் பதினைந்து ஊழியர்கள் என இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது வாடிக்கையாளர் எந்த தளத்தில் அதிகம் வருகை தருகிறார்கள் என்பதை பொறுத்து இருதளத்தில் ஊழியர்களின் சமநிலை மாறுபடும்.

தொன்றுதொட்டு ஐம்பது வருடங்களாக அந்த அங்காடி வசந்தநகரில் இருப்பதால் வழக்கமான வாடிக்கையாளர் அதிகம். அப்பகுதியில் சற்றே பிரசித்திப் பெற்றது மீனாட்சி வளாகம். கொஞ்சம் மேல்தட்டு மக்கள் வெகுவாய்ப் புழங்குவர். அதனாலே எப்போதும் வேலை இருந்து கொண்டேயிருக்கும். ஓய்வெடுக்க நேரமின்றி ஊழியர்கள் தங்களது அலுவலில் மூழ்கியிருந்தனர். நேரம் வாய்த்தாலும் கூட ஓய்வெடுக்க அனுமதி கிடையாது என்பது எழுத்தப்படாத விதி.

மணி இரண்டைத் தொட காத்திருந்தது. சுதிரமாலா வெயிலின் தாக்கத்தில் வியர்த்து விறுவிறுத்துப் போய் விரைவாய் நடந்தாள். சில நொடிகள் கால்கள் தயங்கிப் பின் அந்த வணிவளாகத்திற்குள் நுழைந்தன.

நவீன வருகைப் பதிவேட்டில் கைரேகையும் முகத்தையும் பதிந்துவிட்டு, அருகிலிருந்த நோட்டில் அவள் கையெழுத்திட முனைய, அவளிடமிருந்த நோட்டு சட்டென பறிக்கப்பட, ஒரு நொடி அதிர்ந்து நிமிர்ந்தாள் பெண்.

நாற்பதைக் கடந்த தோற்றத்தில் நாகரீகமாய் இருந்த மனிதரின் முகம் கடுகடுவென்றிருந்தது. இவளைப் பார்த்ததும் அவர் பற்களை நறநறப்பது தெரிய, சுதி எதுவும் பேசாது மௌனமாய் நின்றாள்.

“எங்க வந்த? அப்படியே வீட்ல இருந்துக்க வேண்டியது தானே? உன் இஷ்டத்துக்கு வர்றதுக்கு இதென்ன சத்திரமா? இல்லை உன்னோட சொந்த காம்ப்ளெக்ஸா?” என அவர் வார்த்தைகள் தடித்து வர, அவரது குரலில் அந்த தளமே அமைதியைத் தத்தெடுக்க, அனைவரும் இவளைத்தான் பார்த்தனர். சுதி பதிலளிக்கவில்லை. தலையைக் குனிந்து கொண்டாள். அந்த வார்த்தையை செவியில் வாங்கினாலும் மூளையில் ஏற்றாது பார்த்துக் கொண்டாள்.

“உன்கிட்ட தான் கேட்குறேன் சுதிரமாலா... இந்த காம்ப்ளக்ஸ் உங்க அப்பா கட்டுனதா? உன் இஷ்டத்துக்கு லேட்டா வர்றதுக்கு? ஹம்ம்? அறிவில்ல உனக்கு?” அவர் கேட்டதும் இத்தனை நேரம் சலனமற்றிருந்த சுதியின் முகம் மெல்ல மாறத் தொடங்கியது. அனைவரின் பார்வையும் அவளிடம் பாவமாய் குவிய, அவமானக் குன்றலில் முகம் சிவந்தது.

“சாரி சார்!” என்றாள் மெல்லிய குரலில். அழுகை வரப் பார்த்தாலும் அதை அடக்கிவிட்டாள். இன்னும் என்ன பேசி நோகடிப்பாரோ என மனம் பயந்து போனது. தனியாய் வைத்து திட்டினால் கூட அது அவளோடு முடிந்துவிடும். ஆனால், மேற்பார்வையாளர் வேண்டுமென்றே பொதுவில் வைத்து வார்த்தைகளைத் தேள் போலக் கொட்டுவார். அவரது சுடு சொற்களுக்கு மட்டுமல்ல முகச் சுளிப்பிற்கும், இது போன்ற செய்கைகளுக்கும் பயந்தே ஒருவரும் தாமதமாய் வரமாட்டார்கள். வணிக வளாகத்தின் உரிமையாளர் இவருடைய சொந்த மாப்பிள்ளை. இது போல இன்னும் இரண்டு கிளைகள் அவரிடம் உண்டு. அவற்றை அவர் பார்த்துக் கொள்ள, இவர் இந்தக் கிளையைப் பராமரிப்பார். அதனாலே பேச்சில் எப்போதும் முதலாளித்துவமும் ஏளனமும் வெளிப்படும். ஊழியர்களுக்கு ஒருநாளும் மரியாதை அளிக்க மாட்டார். இது போன்ற அவரது செய்கையினால்தான் காலையில் விவேகா தோழியை வேண்டாம் என அத்தனை முறை வற்புறுத்தியிருக்க, சுதிக்கு அந்நொடி இந்த அவமானத்தைவிட அந்த வாலிபனின் உயிர் முக்கியமாகப் பட்டதோ என்னவோ. இப்போதும் அந்த வாலிபன பிழைத்துவிட்டான், தன்னால் ஒரு உயிர் காப்பற்றப்பட்டது என மனதை சமாதானம் செய்துகொண்டு நின்றாள்.

“என்ன சாரி... உன் இஷ்டத்துக்கு வர்றதுக்கு நீ இனிமே இங்க வேலைக்கு வர வேணாம்மா. உனக்கு பிடிச்ச இடத்துக்கு வேலைக்குப் போய்க்கோ. நாளைக்கு வா, கணக்கை முடிச்சுவிட்றோம்!” கடினக் குரலில் கூறியவர், “மொதல்ல வெளியப் போம்மா... உன்னைப் பார்க்கவே வெறுப்பா இருக்கு? ஒழுங்கா வேலைக்கு வர முடியாதவங்களை வச்சிட்டு, மாசத்துக்கு தண்டச் செலவு செய்ய விருப்பமில்ல!” என்றவரின் வார்த்தைகளில் என்ன முயன்றும் சுதியின் விழிகளில் நீர் திரண்டு நின்றது.

அவர் வார்த்தைகளோடு சேர்த்து அனைவரது அனுதாபப் பார்வையிலும் கழிவிரக்கம் தோன்றிற்று. வேண்டாம் என உதறிவிட்டு செல்ல ரோஷம் கொண்ட மனம் உந்தினாலும் ஒரு நொடி குடும்பத்தை நினைத்து கோபத்தை அடக்கினாள். அவர் அகன்று விட, இவள் அதே இடத்திலே நின்றாள். இரண்டு மணிநேரம் ஒரே இடத்தில் நின்றதில் கால் கடுக்க ஆரம்பித்தது. காலையிலும் மதியத்திலும் உணவு ஈயாத வயிறு கத்திக் கூப்பாடு போட, அவமானமாய் உணர்ந்தாலும் வேறு வழியின்றி பல்லைக் கடித்தபடி நின்றாள். வருவோர் போவோர் எல்லாம் அவளைப் பார்த்துக் கொண்டே நகர, வலித்தாலும் முகம் மாறாதிருக்க பிரயத்தனப்பட்டாள்.

மாலை ஐந்து மணிக்கு மீண்டும் வாயிலருகே வந்த மேற்பார்வையாளர், “ஏம்மா... உன்னைத்தான் போக சொன்னேனே... இங்கேயே நின்னு ஏன் என் உசுரை வாங்குற? உனக்கு இனிமே வேலை இல்ல. கிளம்பு மா!” என்று அவர் முகத்தில் அடித்தது போல கூற, பொங்கி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்தியவள், “சாரி சார், இந்த ஒரு டைம் மன்னிச்சுக்கோங்க சார். இனிமே பெர்மிஷன் இல்லாம லேட்டா வர மாட்டேன். லீவும் போட மாட்டேன்!” என்றாள் அடைத்த தொண்டையை சரி செய்து. என்னவோ இப்படியெல்லாம் அவமானங்களை பொறுத்துக் கொண்டு இந்த வாழ்க்கையை வாழ வேண்டுமா எனத் தோன்றி மனம் வதைத்தாலும் உணர்வுகளை வெளிப்படுத்தாது இறுகிப் போய் நின்றாள்.

விவேகா மேலிருந்து தோழியை அவ்வப்போது எட்டிப் பார்த்த வண்ணமிருந்தாள். அவளுக்கும் கோபம் வந்தது. அதையெல்லாம் காண்பிக்க முடியாத இயலாமையில் அவர்களை வெறித்தாள். இப்படியெல்லாம் நாய் பிழைப்பு பிழைக்க வேண்டுமா? என மனம் கேட்டாலும், மூன்று வேளையும் வயிற்றுக்கு உணவு ஈய வேண்டுமே என வெறுப்பாய் வந்தது.

சுதியின் அருகே ஒரு இருக்கையில் அமர்ந்தவர், “உங்களுக்கு என்னைக்காவது சம்பளப் பணம் வர லேட்டாக்கி இருக்கோமா?” என மிதப்பாய்க் கேட்க, சுதி இல்லையென தலையை அசைத்தாள்.

“ஹம்ம்... எக்ஸ்ட்ரா டைம் வேலை வாங்கி இருக்கோமா?” எனக் கேட்க, மீண்டும் தலையை அசைத்தாள்.

“எங்க வேலைல நாங்க சரியா இருக்கோம். ஆனால், உங்க வேலையை நீங்க கரெக்டா பார்க்குறது இல்ல? ஹாஃப் டே லீவ் வேணும்னா, ரெண்டு நாள் முன்னாடி பெர்மிஷன் போடணுமா இல்லையா?” அவர் கேட்க, “சாரி சார்... ஒரு எமர்ஜென்சி!” என்றாள் உள்ளடங்கிய குரலில்.

“ஏம்மா.. எமர்ஜென்ஸின்னு ஒவ்வொருத்தரும் டெய்லி இப்படி அரைநாள் லீவ் போட்டா எங்க பொழைப்பு என்னாகுறது?” அவர் முகத்தைச் சுளித்தார். அதிலே அவளுக்கு மனம் அடிவாங்கியது. ஒருநாளும் அவர் தங்களிடம் தன்மையாய் பேச மாட்டார் என்றாலும் சுதி அவரிடம் வசவுகளைப் பெறக் கூடாதென தினமும் கடவுளிடம் வேண்டிக் கொள்வாள். வார்த்தைகளை விட அவரது முகத்திலிருக்கும் அசூயையான பாவனையிலே மனம் அதிகமாய் காயம்படும்‌.

“இப்பவே மணி ஐஞ்சறையாகப் போகுது. அப்புறம் டூ ஹவர்ஸ் வேலை பார்த்துட்டு போவ. உனக்கு அரைநாள் சம்பளம் தரணுமா நாங்க? இதெல்லாம் நியாயமா?” அவர் சுதியைக் குற்றம் சாற்ற, அவளிடம் கனத்த அமைதி.

“இந்த வார சண்டே உனக்கு லீவ் கிடையாது. வேலைக்கு வரணும். இப்போ கிளம்பு... இதுதான் லாஸ்ட் வார்னிங். இனிமே இந்த மாதிரி லேட்டா வந்தா, உனக்கு வேலை இல்ல. அதை ஞாபகம் வச்சுக்கோ!” என அவர் போனால் போகிறதென்று எச்சரிக்க, இவள் தலையை மட்டும் அசைத்தாள்.

“இப்போ கிளம்பு...” என அவர் கூறத் தன் கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு மெதுவாய் பார்வையை மேலே உயர்த்தினாள். மேற்பார்வையாளர் கண்ணில் படாதவாறு விவேகாவிடம் தலையை அசைத்துவிட்டு விறுவிறுவென வெளியேறியவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பிறர் கவனத்தைக் கவராது அதை துடைத்தவள், அப்படியே நடந்து சென்று பேருந்து நிலையத்தில் அமர்ந்துவிட்டாள். ஒரே இடத்திலே நின்றிருந்ததில் கால்கள் மரத்துப் போயிருந்தன.

சோர்வாய் இருக்க பையிலிருந்து தண்ணீர் பொத்தலை எடுத்து வாயில் சரித்தாள். இதற்கு முன்பும் ஒரு சில முறை
இதுபோல நிகழ்ந்துள்ளதுதான். வேலைக்கு சேர்ந்த புதிதில் தெரியாமல் சுதி கைத்தவறி விலை உயர்ந்த வாசனை திரவியத்தை உடைத்துவிட, அன்றைக்கும் இது போல வசவுகளைப் பெற்றிருக்கிறாள். அப்போது சுதிக்கு வயதும் அனுபவமும் குறைவு. அதனால் முதிர்ச்சியிராத பிராயத்தில் இப்படியெல்லாம் அவமானங்களை சந்தித்த பிஞ்சு மனம் வலியில் துடித்திருந்தது. இந்த வேலை வேண்டாம், விட்டுவிடலாம் என ரோசமாய் எண்ணி வேறு வேலைத் தேட முனைந்தப் போதுதான் அவளுக்கு நிதர்சனம் உறைத்தது. எங்கு வேலைக்கு சென்றாலும் இதுபோல பேச்சுகளைக் வாங்க நேரிடும் என்று புரிந்து கொண்டாள்.

முடிந்தளவு அவள் மீது தவறில்லாமல் பார்த்துக் கொள்வாள். தாமதமாக வருவதை அறவே குறைத்திருந்தாள். கண்ணாடி பொருட்களை, விலை உயர்ந்த வஸ்துக்களை கையாளும் போது கவனமாய் இருப்பாள். ஒவ்வொன்றிலும் அத்தனை சிரத்தையாய் இருப்பாள். இருந்தும் அவளையும் மீறி ஒருசில நேரம் தவறிழைத்து திட்டு வாங்கியிருக்கிறாள். முதலில் அழுகை வந்ததுதான். பின்னர் இதெல்லாம் பழகியாக வேண்டும் என்ற எண்ணமும் அழுத்தமும் வந்திருந்தது. உணர்வுகளை வெளிக்காட்டாதிருக்க பழகிக் கொண்டாள்.

வாடிக்கையாளர்கள் சிடுசிடுவென பேசினாலும், கோபம் கொண்டாலும் முகத்தை எப்போதும் சிரித்தபடியே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது தாரக மந்திரம். ஒரு சிலமுறை வாடிக்கையாளர்கள் முகம் சுளித்துக் கூட பேசுவார்கள். ஆனாலும் அவர்களிடம் தன்மையாய் பேச வேண்டும் என பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொள்வாள். வேறு வழியும் அவளுக்கு இல்லையென்பது
தான் முகத்தில் அறையும் உண்மை. முதலில் வேலைக்கு சேரும்போது பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு சேர்ந்திருந்தாள்.

அந்தப் பகுதியில் ஒரு சில வணிக வளாகங்கள் இருந்தன. அங்கே இது போல கெடுபிடிகள், சுடு சொற்கள் குறைவுதான். ஆனால், கம்பளம் எட்டாயிரத்தை தாண்டாது. மீனாட்சி வணிகவளாகம்தான் இருப்பதிலே கொஞ்சம் பெரிய வளாகம். ஏழு வருடங்கள் சுதி இங்கே தொடர்ந்து வேலை பார்த்ததன் பலன் அவளுடைய சம்பளம் இப்போது பதினைந்தாயிரத்தை தொட்டிருந்தது. இப்போதைக்கு இந்த சம்பளத்தை நம்பித்தான் அவர்களுடைய வாழ்வாதாரம் உள்ளது என்பது மறுக்க முடியாத மெய்.

இங்கே வேலையை விட்டுவிட்டு வேறு எங்கு சென்றாலும் மீண்டும் பத்தாயிரத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று அவளுக்கே தெரியும். அதனாலே இது போல அவமானங்களை
எல்லாம் சகித்துப் போக பழகியிருந்தாள். இப்போதெல்லாம் மனம் மரத்துக் கூடப் போய்விட்டதோ என எண்ணிய நாட்களும் உண்டு. இலக்கற்று வாகனத்தையே வெறித்தாள் சுதிரமாலா. சிறிது நேரம் எதை எதையோ நினைத்த மனம் சிறிது நேரம் ஸ்மரனையற்றிருந்தது.
மணி ஏழைத் தொட்டிருந்தது. நேரம் கடப்பதை உணர்ந்து பொருமூச்சோடு எழுந்து மெதுவாய் நடந்தாள். அரசமரத்துப் பிள்ளையார் கோவிலின் உள்ளே சென்றாள். வலதுபுறம் பிள்ளையார் இருக்க, உட்புறம் முருகர் வாத்சல்யமாக சிரித்துக் கொண்டிருந்தார்.

அவர் முகத்தைப் பார்த்ததும் மனம் அமைதியடைவதை உணர்ந்தவள் உடல் தளர, உதடுகள் மலர்ந்து புன்னகைத்து அங்கேயே அமர்ந்துவிட்டாள். நேரம் எட்டைத் தொடவும், அசிரத்தையாய் எழுந்தாள். இப்போது சென்றால் நேரம் சரியாய் இருக்கும். விரைவிலே வீட்டிற்குச் சென்றால் ஏன்? எதற்கு எனக் கேள்வி எழும். உண்மையைக் கூறினால், தேவையில்லாத வேலை இது என அவள் மீண்டும் வசவுகள் வாங்க நேரிடலாம். அதனாலே சிறிது நேரம் முருகனில் லயித்துவிட்டுப் புறப்பட்டாள்.

மிகக் கவனமாய் நினைவில் வைத்து தனக்கென எடுத்து வந்த உணவை கோவில் வாயிலில் அமர்ந்திருந்த முதிய பெண்மணியிடம் கொடுத்துவிட்டாள். அவர் நன்றியுரைக்க, மென்னகையுடன் பெற்றுக் கொண்டாள்‌.

அவர் அவதி அவதியாய் உண்ண, சில நொடிகள் அவரைப் பார்த்திருந்தவளுக்கு மனம் கனத்துப் போனது. அருகில் ஒரு முதியவரும் அமர்ந்திருந்தார். அந்தப் பாட்டியின் கணவராக இருக்கக் கூடுமென அவளால் உணர முடிந்தது. அந்தப் பெண்மணி அவருக்கும் உணவைக் கொடுக்க, அவர் மறுத்துவிட்டு மனைவி வயிற்றை நிரப்பினார். அந்தக் காட்சியைக் கண்களில் நிறைத்துக்கொண்டு மெதுவாய் எட்டு வைத்துப் பேருந்து நிறுத்தம் சென்றாள்.

இரண்டு பேருந்துகளில் ஏறாமல் விட்டுவிட்டாள் சுதி. வாகனத்தின் வாயில் விளிம்பு வரை ஆண்கள் அடைத்திருக்க, அவளால் உள்ளே சென்று நிற்க முடியும் என்று தோன்றவில்லை. மூன்றாவதாக வந்தப் பேருந்து பரவாயில்லை என்ற ரகம். ஆனாலும் உட்கார இடமில்லை. நிற்ப்பதற்குப் போதிய இடமிருக்கவும், ஆசுவாசப் பெருமூச்சுடன் நின்றாள். இருபது நிமிடத்தில் திருநகர் இரண்டாவது நிறுத்தம் வரவும் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.

தெரு முனையிலிருந்த ரொட்டி கடாயைக் (பேக்கிரி) கடக்கும் போது காலையில் இலவசப் பேருந்தில் சென்று மிச்சம் பிடித்த முப்பது ரூபாய் தன்னிச்சையாக நினைவிற்கு வந்தது‌.

கைகள் தன் போல் பையைத் துழாவிக் காசை வெளியே எடுக்க, “அண்ணா, ரெண்டு பீஸ் கேக் கொடுங்க!” என உடன் இருபது ரூபாயை சேர்த்து இரண்டு துண்டு அணிச்சலை வாங்கிக் கொண்டாள். வீடு நுழைந்ததும் அத்தையென்று நேசம் ததும்பி அழைத்து மேலே விழும் ருத்ராவின் செய்கையை நினைத்து மனம் கனிந்து போனது. தற்காலிகமாக மேற்பார்வையாளரின் சுடு சொற்கள் பின்னகர்ந்திருக்க, சில பல நிமிடங்களில் வீட்டை அடைந்தாள்.

“எங்க நம்ம போறோம்... பேக் பேக் பேக்!” தொலைக்காட்சியைப் பார்த்து கூறிய ருத்ரா சுதியைக் கண்டுவிட்டு அவளது கையைப் பார்த்தாள்.

அதில் நெகிழிப்பைத் தொங்கவும், “ஐ... அத்தை, என்ன வாங்கிட்டு வந்த?” என ஏழு வயது குட்டி அவள் மீது தாவினாள். அவளை சுதி தூக்க, “பையைக் குடுத்தை...” என தவமணி பெரிய மனுஷனாய் அவளது கைப்பையை வாங்கி வைத்தான்.

“கேக் வாங்கிட்டு வந்திருக்கேன். ரெண்டு பேரும் சாப்பிடுங்க!” என அவள் கூற, சின்னவள் அந்தப் பையை ஆசையாய் பிரித்தாள்.

சுதி அவளை வாஞ்சையாகப் பாரக்க, “என்ன சுதி... ட்ரெஸ் வேற போட்டிருக்க? காலைல போகும்போதும் பச்சைக் கலர்தானே போட்டிருந்த?” சந்திரா குனிந்து அப்பளத்தைத் தேய்த்துக் கொண்டிருந்தவர், இவளைப் பார்த்ததும் வினவினார்.

“ம்மா... அது காலைல போகும்போதும் கார்ல போன ஒரு பொண்ணு சகதியடிச்சுட்டா. அப்புறம் சாரி கேட்டு, வேற ட்ரெஸ் எடுத்துக் கொடுத்தா மா!” என்றாள், சரளமாகப் பெய்யுரைத்தாள்.

“சரி... சரி” என அவர் தலையை அசைத்துவிட்டு வேலையில் கவனமானார்.

“வெளிய எதுவும் வாங்கித் தராதன்னு சொல்லியிருக்கேன்ல சுதி. உனக்கு குடுக்குற பஸ் காசை மிச்சம் பண்ணி இப்போ இவங்களுக்கு வாங்கித் தரணுமா? அப்புறம் டெய்லி எதிர்பார்ப்பாங்க!” சௌம்யா கையில் கரண்டியோடு சுதியை முறைத்தாள்.

அதை ஒரு நூதனப் புன்னகையில் கையாண்ட சுதி, “இன்னைக்கு ஃப்ரீ பஸ்ல போனேன் அண்ணி. அதான் காசு மிச்சமாச்சுன்னு வாங்குறேன். டெய்லியா வாங்கித் தரேன். விடுங்க!” என அறைக்குள் சென்று உடைமாற்ற விரைந்தாள். இன்னுமே அந்த வாலிபனின் இரத்தம் தன் உடலில் இருப்பது போலத் தோன்ற, அரைமணி நேரம் தேய்த்துக் குளித்து வந்தாள்.

“இந்த நைட் டைம்ல ஏன் குளிக்கிற சுதி? அதுவும் தலைக்கு வேற?” சௌம்யா மென்மையாய் கண்டிக்க, “ச்சு... அண்ணி, அந்த சகதியும் சேறும் பட்டதுல கசகசன்னு இருந்துச்சு. அதான் குளிச்சேன்!” பதிலளித்தவாறே மேஜை
விசிறியை உயிர்ப்பித்து அதனருகே நாற்காலியை இட்டு தலையைக் காய வைத்தாள்.

“தோசை போதுமா தவா?” என்ற தாயின் குரலுக்கு, “போதும்மா...” என்றான் சின்னவன்.

“ம்மா... எனக்கொரு தோசை வேணும்!” ருத்ரா குரல் கொடுக்க, “உதை வாங்குவ நீ. ஒழுங்கா விளையாடாம தட்டுல இருக்க தோசையை சாப்பிட்டு முடிக்கிற...” மகளை அதட்டிய சௌம்யா சுதிக்கு இரண்டு தோசைகளைத் தட்டிலிட்டுக் கொடுத்தாள்.

“தேங்க்ஸ் அண்ணி...” என்று சின்ன புன்னகையுடன் பெற்றுக் கொண்ட சுதி கடகடவென சாப்பிட, மீண்டும் அவளது தட்டில் ஒரு தோசை நிரப்பப்பட்டது.

“அண்ணி... போதும்!” இவள் கூற, “பேசாம சாப்பிடு சுதி...” என அன்பாய் அதட்டினாள் அவள். சுதி சாப்பிட்டு முடித்து சௌம்யாவிற்கும் சந்திராவிற்கும் தோசை ஊற்றிக் கொடுக்க, மூவரும் உண்டு முடித்தனர்.

“தவா, ருத்ரா... டீவி பார்த்தது போதும். போங்க... போய் படுங்க!” தாய் அதட்டல் வேலை செய்ய, சிறியவர்கள் அறைக்குள் சென்று முடங்கினர்.

சந்திராவிற்கு அருகே குத்துக்காலிட்டு அமர்ந்த சுதி, மாவை எடுத்து வட்டமாக உருட்ட, மற்ற இருவரும் தேய்த்து எடுத்தனர். பின்னர் சுதி சௌம்யாவிடம் வாங்கி அப்பளத்தை தேய்த்தாள். நேரம் பதினொன்றைக் கடந்து முப்பது நிமிடங்களாகிவிட, “போதும்... மிச்ச மாவை நாளைக்கு காலைல தேய்ச்சுக்காலம் சுதி. சௌமி போய் படு...” என்ற பெரியவர் மரத்திருந்த காலைக் கடினப்பட்டு நகர்த்தி எழுந்து நின்றார். சௌம்யா அறைக்குள் சென்று பிள்ளைகளோடு படுத்துக் கொண்டாள்.

சுதி தேய்த்த அப்பளங்களை அடுக்களையில் வைத்துவிட்டு மாவுப் படிந்திருந்தக் கூடத்தை சுத்தம் செய்து பாயை விரித்தாள். அறையிலிருந்து இரண்டு தலையணைகள் மற்றும் போர்வையை எடுத்து வர, சந்திரா படுத்தார். சுதி விளக்கணைத்துவிட்டுப் படுக்கையில் வீழ்ந்தாள்.

நேராகப் படுக்க முடியவில்லை. எப்போதும் போல முதுகின் அடிப்பகுதியில் சுள்ளென வலிக்க, ஒருபுறமாய் திரும்பிப் படுத்தாள். இதில் அழையா விருந்தாளியாக கால் வலி வேறு.
தினமும் கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரங்கள் நின்று கொண்டே இருப்பதில் காலெல்லாம் வலி உயிர் போனது சுதிக்கு.

மெதுவாய் போர்வையை இழுத்துப் போர்த்தியவள், தன் காலை தானே மென்மையாய்ப் பிடித்துவிட்டாள். கொஞ்சம் சுகமாய் இருந்தது. மற்றொரு காலையும் பிடித்துவிட்டு, தலைக்கு மேலிருந்த தைலத்தை எடுத்து முதுகுக்குப் பின்னால் தானே தேய்த்துக் கொண்டாள். ஓரளவிற்கு வலி மட்டுப்பட்டது.
இமையோரம் ஈரம் துளிர்த்தது. ஏனோ இன்று மனவலியும் உடல் வலியும் அதிகமாகி விட்டதை போலொரு எண்ணம் பிறக்க, மெதுவாய் திரும்பிப் பார்த்தாள்.

சந்திரா ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருக்க, மெதுவாய் அவரது உறக்கத்தை தொந்தரவு செய்யாது எழுந்தவள், தன் கைப் பையிலிருந்த வலி நிவாரணி மாத்திரையை எடுத்து உட்கொண்டுவிட்டுப் படுக்க, சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.

***


“இத்தனை பேர் ரூம்ல இருக்க கூடாது சார். ரெண்டு ரெண்டு பேரா பாருங்க. டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது எங்களைத்தான் திட்டுவார் சார்!” என செவிலியர் கூற, பாலஜி, ஆரோன், நந்தனா மூவரும் வெளியேறினர்.

அக்ஷாவும் நிவினின் தந்தை பாலுமகேந்திரா மட்டுமே அந்த அறையை ஆக்கிரமித்திருந்தனர். நிவின் கையிலொரு கட்டும், முகம், கால்களில் ஆங்காங்கே சிராய்ப்புடன் உறங்கிக் கொண்டிருந்தான். மகனுக்கு விபத்து நிகழ்ந்ததை அறிந்து துடித்துப் போய் வந்திருந்தார் மனிதர். ஒற்றை மகனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென தன் மனம் பட்டப்பாட்டை அவர் மட்டுமே அறிவார்.

வருத்தமும் வேதனையுமாய் அவர் அமர்ந்திருக்க, அக்ஷா கண்ணீரைத் துடைத்துவிட்டு அவரருகே சென்றாள். “அங்கிள், நிவினுக்கு ஒன்னும் இல்ல. ஹீ இஸ் ஓகே. பயப்படாதீங்க!” என்றாள் தன்னையும் தேற்றிக்கொண்டு.

“ஒத்தைப் பையன்மா. உசுரே போய்டுச்சு எனக்கு. எப்பவும் கவனமாத்தான் வண்டி ஓட்டுவான். திடீர்னு இப்படியானதும் ஒன்னுமே புரியலை மா. டாக்டர் என்ன சொன்னாங்க?” பாலுமகேந்திரா குரலில் மகன் மீதான கவலைக் கொட்டிக் கிடந்தது.

அவர் கையை ஆதரவாகப் பிடித்தவள், “கைல ஆப்ரேஷன் பண்ணணும்னு சொல்லி இருக்காங்க அங்கிள். மத்தபடி பயப்பட்ற மாதிரி பெரிய காயம் இல்ல!” என்றாள் ஆறுதலாய்ப் புன்னகைத்து.

மருத்துவர் வந்து இரத்தப் பரிசோதனை, ஊடுகதிர் என எல்லாவற்றையும் பரிசோதித்தார். “கைல மட்டும் ஒரு ஆப்ரேஷன் பண்ணணும். மத்தபடி மேஜர் இன்ஜூரி எதுவும் இல்ல. எல்லாம் சீக்கிரம் குணமாகிடும். ஆப்ரேஷன் முடிஞ்சாலும் அவரால சிக்ஸ் மந்த்க்கு கையை யூஸ் பண்ண முடியாது. அதுவரைக்கும் ஹீ நீட்ஸ் ரெஸ்ட். பெயின் கில்லர் கொடுத்திருக்கோம். அதனால வலி தெரியாது. டூ டேய்ஸ் கழிச்சு ஆப்ரேஷன் வச்சுக்கலாம். மத்த டீடெயில்ஸ் எல்லாம் நர்ஸ் சொல்லுவாங்க சார்!” என அவர் விடை பெற, நந்தனா சென்று தனது மருத்துவ நண்பனைப் பார்த்து மேலும் தகவல்களைப் பெற்று வந்தாள்.

“யாராவது ஒரு ஆள் மட்டும் கூட இருந்தா போதும் சார். அதனால மத்தவங்க வீட்டுக்குப் போய்ட்டு காலைல வாங்க!” செவிலியர் இரண்டு முறை அறிவுறுத்திவிட்டு அகல, பாலுமகேந்திரா மட்டும் மகனுக்குத் துணையாயிருக்க,
மற்ற நால்வரும் விடை பெற்றனர்.

மகனருகே அவர் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். உடல் முழுவதும் நிவினைக் காயங்களுடன் கண்டதில் அவருக்கு உயிர்க்கண் வரை வலித்தது. அவனை இப்படியொரு கோணத்தில் பார்க்கவா பெற்று வளர்த்தோம் என மனிதர் வெம்பிப் போனார். மகனின் கைகளை இறுக்கமாய்ப் பிடித்தவர் கலங்கிய கண்களை சிமிட்டினார்.

அவரது தொடுதலில், ஸ்பரிசத்தில் மகன் என்ன உணர்ந்தானோ? மாலையிலிருந்து மருந்தின் உதவியால் துயில் கொண்டிருந்தவன், மெதுவாய் இமைகளைப் பிரித்தான். எதிரிலிருந்தவர் மங்கலாய்த் தெரிய, விழிகளை சிமிட்டி வெண்படலத்தை விரட்டியவன் அவரைப் பார்த்து முறுவலித்தான்.

“ப்பா...ஐ யம் ஓகே!” என அவன் உதடுகளை மெதுவாய் அசைக்க, மகேந்திரா கண் கலங்கினார்.

“பார்த்து வண்டி ஓட்டக் கூடாதாப்பா. இப்படி விழுந்து வச்சிருக்க. சின்ன காயத்தோட போச்சு. இதுவே பெருசா எதாவது ஆகியிருந்தா என்னாகுறது டா. அப்புறம் உங்கம்மா என்னை மன்னிக்க மாட்டா டா!” என்றார் ஆதங்கமும் கோபமுமாய். அவரது குரல் வெகுவாய் கலங்கித் துடித்துப் போயிருந்தது.

அவர் முகத்திலிருந்த கலக்கம் மகனைப் பாதித்தது போல. மெதுவாய் எழுந்தமர முயற்சி செய்தவனுக்கு தந்தை உதவினார். கையை அசைக்க கூட முடியாது வலி உயிர் போனது. “ப்பா... ஐ வில் பீ ஆல்ரைட். நீங்க கவலைப்படாதீங்க!” என்றான் மென்மையாய் புன்னகைத்து. வலியை முகத்தில் காட்டவில்லை அவன். கவனமாய் அவர் பார்வையிலிருந்து தவிர்த்துவிட்டான். அறிந்தால் தந்தை வருந்துவார் என மகனின் மனம் அவருக்காக யோசித்து செயல்பட்டது‌.

“பசிக்குதா நிவின்? சாப்பிடுறியா?” என அன்பாய் வினவியவர் உணவை ஊட்ட, மெதுவாய் உண்டான். ஒரு பக்க கன்னத்தில் லேசாய் சிராய்ப்பு ஏற்ப்பட்டிருந்தது. அதனால் சரியாய் உண்ண முடியாது அவதியுற்றான். அவன் மெதுவாய் உண்டு முடிக்க, மருத்துவர் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு சென்றார்‌. செவிலியர் வலி குறைவதற்காக ஊசியை செலுத்தினார். அவன் மீண்டும் உறக்கத்திற்கு செல்ல, மகேந்திராவும் அருகிலிருந்த கட்டிலில் படுத்து விழிகளை மூடினார்.

தொடரும்...
 
Messages
57
Reaction score
37
Points
18
கோவமாக ஏசும் முதலாளி
கால் வலிக்க நிற்கிறாள்...
கண்ணீர் விட்டு
கதறி அழுக முடியவில்லை
காயம் கொண்ட மனது....

காசுக்காக என்றாலும்
கடந்துதான் ஆகவேண்டும்
காத்திருக்கும் குடும்பத்திற்காக.....

வலி நிறைந்த வாழ்கையில்
வலி நிவாரிணியில்

விழிகள் மூடியது....
 
Top