• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

சுவாசம் - 3 ❤️

Administrator
Staff member
Messages
633
Reaction score
2,117
Points
93
அத்தியாயம் 3
மலர் தன் தகப்பன் எடுத்து வைத்திருந்த டிபன் பாக்ஸ், ஃபேக் என அத்தனையும் எடுத்துக்கொண்டு வேலைக்குப் புறப்படுகையில் வீட்டின் காலிங் பெல் அடித்தது. வெளியே அவளின் அத்தை பரிமளா நின்றிருந்தாள்.
“வாங்க அத்தை, வாங்க மாமா.”
“அண்ணா இல்லையா? ஃபோன் பண்ணேன், இன்னைக்கு லீவு வீட்டுக்கு வானு சொல்லுச்சு” பரிமளா அவளின் பார்வையில் கூட மலரிடம் எந்தவித அக்கறையும் இல்லாதவள் போல் பேசினாள்.
சந்திரனின் உடன்பிறந்த தங்கை பரிமளா. அவளுக்கு மலரின் தாய் பிரபாவின் மேல் பொறாமை கலந்த வெறுப்பு அதிகமிருந்தது. இதில் சந்திரன் வாழ்வில் தனிமரமாக நிற்பதற்கு காரணம் பிரபாவும், பிரபாவை அப்படியே உருவில் பெற்றிருக்கும் மலர் என்ற எண்ணமும் ஊன்றி நிற்க, பிரபாவின் மேல் இருந்த கோபம் அனைத்தையும் தன் அண்ணன் மகளின் மேல் கொட்டித் தீர்ப்பாள்.
“அப்பா கோவிலுக்கு போயிருக்கார், வர்ற டைம் தான்” மலர் கடிகாரத்தைப் பார்த்து உதட்டைக் கடித்தாள்.
‘நிச்சயம் லேட்டாயிரும், என்ன செய்யறது?’ ஒரு நிமிடம் எரிமலையாய் வெடிக்கும் ரெஜினா முகம் மனதில் வர, தன் நிலையை தானே நொந்துகொண்டு சமையலறையில் காபி போடத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் காபி போட்டு எடுத்து வந்தாள்.
“வினி எப்படி அத்தை இருக்கா ? எப்படி மாமா போகுது வேலை எல்லாம்?”
“பரவாயில்லை மலர், வினிக்கு தான் கல்யாணம் பேசியிருக்கு‌‌. பொண்ணு வீடு பார்க்க வர்றாங்க. அதான் மச்சான் கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்” பரிமளாவின் கணவர் நடராஜன் புன்முறுவலுடனே பதிலளித்தார்.
பரிமளா எதுவும் பேசாது தன் அண்ணனின் வரவை எதிர்நோக்குவது போல் அமர்ந்திருந்தாள். மலருக்கு தன் அத்தையின் மீது வெறுப்பு வராததுக்கு ஒரே காரணம், தனக்கு அடுத்தப்படி தன் தந்தையை உளமார நேசிக்கும் ஒரே ஜீவன் அவள் மட்டுமே.
மலர் இல்லாவிட்டால் தன் அண்ணனுக்கு இன்னொரு திருமணம் செய்வித்து நல்ல நிலையில் வைத்திருக்கலாம் என்ற ஆற்றாமையும், தன் தாயை நினைவுபடுத்தும் தன் முகமும் தான் பரிமளாவின் வெறுப்பிற்கு காரணம் என்பதை அறிந்தே இருந்தாள் மலர்.
சுற்றத்தார் எவ்வளவோ குறை சொல்லித் திரிந்தாலும் தன் அண்ணனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை அவள். என் அண்ணன் வெள்ளந்தி என்று கூறிக் கொள்வதில் பெருமை கொள்ளும் தன் அத்தையும் ஒரு விதத்தில் தன் பிம்பமே என்று மலர் பல முறை எண்ணியதுண்டு.
தன்னிடம் கோபத்தைக் கக்கினாலும், வெளியில் யாரும் தன்னை தப்பாக பேசிவிட்டால் உண்டு இல்லை என்று பண்ணி விடும் அவளின் பலாப்பழ பாசம் மலருக்கு பிடிக்கும் தான்.
“அண்ணன் வந்ததும் நாங்க பேசிக்கறோம். நீ வேணா கிளம்பு லேட்டாகுதில்ல.”
தன் அத்தையை ஒரு நொடி கட்டிப்பிடித்து, ‘தேங்க்ஸ் அத்தை’ என்று சொல்லிவிட்டு வெளியே ஓடி விடலாம் என்றிருந்தது அவளுக்கு. தனக்கும் தன் அத்தைக்கும் இடையிலான இரும்பு கதவுகளை யார், எப்போது உடைப்பது? அவள் பெருமூச்சு விட்டு கிளம்ப எத்தனிக்கையில், சந்திரன் வீட்டினுள் நுழைந்தார்.
தன் தந்தையிடம் கண்களாலே சைகை செய்துவிட்டு, “போய்ட்டு வரேன் அத்தை, வரேன் மாமா” என்று சொல்லிவிட்டு மாநகர பேருந்தை பிடித்துவிட ஓடினாள் மலர்.
“வா பரிமளா, வாங்க மாப்பிள்ளை. என்ன பரிம்மா, மாப்ள வீட்ட விசாரிச்சிட்டியா?”
“ஏன் ண்ணா, நீ இன்னைக்கு எதுக்கு கோவிலுக்கு போன? திருந்தவே மாட்டியா?”
தன் அண்ணன் நாள் கிழமைகளில் மட்டுமே கோவிலுக்குச் செல்வார் என்பதை அறிந்தே இருந்ததால், இன்று என்ன சிறப்பு என்று யோசிக்கையில் அவளுக்கு நினைவு வந்திருந்தது, இன்று பிரபாவின் பிறந்தநாள்.
“சரி அதை விடு பரிமளா, நிச்சயம் முடிவு பண்ணிட்டீயா?”
“வர்ற வாரம் பொண்ணு வீடு பார்க்க வர்றாங்க, நீ இல்லாம எப்படி ண்ணா பேசுவேன்?” தன் தங்கையின் அன்பில் பூரித்தவராக மேலும் பேசத் தொடங்கினார்.
அதே நேரம் தன் வழக்கமான பேருந்தைத் தவறவிட்டு, அடுத்த பேருந்தில் ஏறி அரை மணி நேரம் தாமதமாக ஹோட்டலை அடைந்தாள் மலர்.
“நானே பத்து நிமிஷம் தான் லேட்டு, நீ ஏன்டி இவ்வளோ லேட்டு? வேம்புலி காலையிலேயே எனக்கு அரை மணி நேரம் வேப்பிலை அடிச்சு விட்ருக்கு… போ புலி கைல நீ இன்னிக்கு கைமா தான்” சுபா அவள் காதில் ஓதிவிட்டு ரிசப்ஷன் நோக்கி நகர்ந்தாள்.
மலர் தன் உதட்டைக் கடித்தபடி என்ன பதில் சொல்வது என மனதிற்குள் நூறு முறை ஒத்திகை பார்த்தபடியே சென்றவள், ஆறடி உயர ஒரு ஆணின் மீது மோதி நின்று நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் கண்கள் எவரையும் மயக்கக் கூடிய அழகு, அதற்கு மேல் அவன் அழகை யாரும் ரசிக்காதவாறு முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தான்.
இதுவரை, ‘உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு’ என்ற வாசகம் தன்னிடம் மட்டுமே சொல்லப்பட்டிருக்க, அதை முதன் முதலில் அவனிடம் சொல்ல நினைத்தாள் மலர்.
‘அவன் கண்களை எங்கோ பார்த்திருக்கிறேனே?’ அவள் நினைவு குட்டையில் அவன் முகத்தை துழாவிக் கொண்டு இருந்தாள்.
அந்த இளைஞனோ அவளை நோக்கி, “இங்க பார்ட்டி ஹால் எங்க இருக்கு?”
அவள் அந்த காரிடரை நோக்கி கை நீட்ட, அவன் அந்த பாதையை நோக்கி நடக்கத் துவங்கினான். என்ன நினைத்தானோ மீண்டும் அவளை நோக்கி திரும்பி, “தேங்க்ஸ், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. முக்கியமா உங்க கண்கள்” அவன் அழகு என்பது போல் விரல்களில் சைகை செய்துவிட்டு, அவள் கண்களை விட்டு மறைந்தான்.
மலருக்கு ஒரு நொடி குறும் புன்னகை அரும்பி மறைந்தது. பலமுறை இம்மாதிரியான வார்த்தைகளைக் கேட்டு இருக்கிறாள் தான். ஆனால் பெண்கள் விரும்பும் வகையில் சட்டென்று முகத்திற்கு நேராக ரசனையை விரசமில்லாமல் வெளிப்படுத்திச் செல்லும் ஆண்கள் வெகு சிலரே.
‘அதிலும் இவன் மிகுந்த பாராட்டுக்குரியவனே, தன்னையே இரசிக்க வைத்து விட்டானே! யார் இவன், காலை ஒன்பது மணிக்கு பார்ட்டி ஹால் துழாவுகிறான்?’ அவள் சந்தேகமும் குறுகுறுப்புமாக நின்றிருக்க, சுபா அவளை உலுக்கிய பின்தான் சுயநினைவு வந்தாள்.
“ஏ மலர் என்னாச்சு, இப்படி எங்கேயோ வெறிச்சு பார்த்து நின்னுட்டு இருக்க? வேம்புலி கூப்பிட்டு இருக்கு போ. இதோட நாலு தடவை உன்னை கூப்பிட்டு விட்ருக்கு” சுபா சொன்னதும் அவசர அவசரமாக ரெஜினாவின் அறை நோக்கி ஓடினாள் மலர். எரிமலையை எப்படி தணிப்பது என்று எண்ணியவாறே உள்நுழைந்தாள்.
“வா மலர், இவா, திஸ் இஸ் மலர், யுவர் ஈவென்ட் மேனேஜர்.”
‘ஈவென்ட் மேனேஜரா!’ மலர் ரெஜினா தந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதிருக்க, இவா என்ற அந்த பெண் அவளை நோக்கி கை நீட்டினாள்.
“ஹாய், ஐ அம் இவா, இவாஞ்சலின்.”
“ஐ அம் மலர். ப்ளீஸ்ட் டூ மீட் யூ” மலர் அதிர்ச்சியிலிருந்து மீளாமலே பதிலளித்தாள்.
ரெஜினா தொடர்ந்தாள்.
“மலர், இவங்க மேரேஜ் நம்ப செயின் ஆஃப் ஹோட்டல்ல ப்ளான் பண்ணிருக்காங்க. த்ரீ டேஸ் செலிபரேசன். நீங்க அஞ்சு பேரும் ஈவன்ட் ஆர்கனைஸ் பண்ணிருங்க” என்றவள் தொடர்ந்து இவாஞ்சலினைப் பார்த்துப் பேசத் தொடங்கினாள்.
“இவங்க ப்ரெஷர்ஸ் தான், பட் ட்ரெஸ்ட் மீ தே ஆர் வெரி டெலன்டட்.”
ரெஜினா பேசிய வேறு எந்த வார்த்தைகளும் அவள் காதில் விழுந்ததாகவே தோன்றவில்லை மலருக்கு. சிறிது நேரத்தில் இவாஞ்சலினிடம் டீடெயில்ஸ் கேட்டுக்கொள்ளப் பணித்துவிட்டு ரெஜினா தன் வேலையில் மூழ்கிப்போனாள்.
இவாஞ்சலினிடம் திருமண நிகழ்ச்சிகள் பற்றிய அவளின் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்கத் தொடங்கினாள் மலர். சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு இருந்த மலர், இவாஞ்சலினின் ஃபோன் சிணுங்கவும் அமைதியானாள். இவாஞ்சலின் ஒரு சின்ன தலையசைப்பில் ஃபோனை அட்டன்ட் செய்தாள்.
“டேய் அண்ணா...” என்று இவா செல்ல கோபத்தில் பேசுவதை தன்னையும் மீறிய ரசனையில் பார்த்துக் கொண்டு நின்ற மலர், பின்னர் நாகரீகம் கருதி அறையை விட்டு வெளியேறினாள். சிறிது நேரத்தில் வெளியே வந்த இவாஞ்சலின் மலரிடம் பேசினாள்.
“மலர் ஒரு அர்ஜன்ட் வொர்க், நான் நெக்ஸ்ட் வீக் உங்களுக்கு கால் பண்றேன். அப்பறம் ஐ ஹோப் உங்களைப் போலவே உங்க வொர்க்கும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கும்னு, எஸ்பெஷலி யுவர் ஐஸ் ஸ்டென்னிங்லி ப்யூட்டிபுல்” என்று சொல்லி சற்று முன் தன் கண்களை வர்ணித்த அதே இளைஞன் போல் சைகை செய்து வெளியேறினாள் இவாஞ்சலின்.
‘இன்று என்ன இத்தனை ஆச்சர்யங்கள் அளப்பறைகள் கடவுளே!’ மலர் மனதிற்குள் மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் மாறி மாறி மழை பெய்வதாய் தோன்றியது.
மலர் பேசி முடித்து திரும்ப தருண் வந்தான்.
“மலர் ரெஜி மேம் ஈவென்ட் ப்ளானிங் சொல்றாங்க, நமக்கு மும்பை ட்ரெயினிங் இவாலுவேசன் இருக்கு.”
“அதான் தருண் எனக்கும் புரியல”
“அந்த பொண்ணோட ஆக்ஸஸரிஸ் பாத்தியா லூயி வுட்டான்! கண்டிப்பா மில்லியனர் தான். நம்ம இவ்வளோ பெரிய ஈவென்ட்டை செய்ய முடியுமா?”
“செய்யலாம் தருண், பட் நமக்கு இவ்வளோ ஈஸியா ஆபர்சுனிட்டி கிடைக்கிறது தான் டவுட்டா இருக்கு. ரெஜி மேம்ட்ட பேசிரலாமா?”
தருண் சரி என்பது போல் தலையசைக்க, இருவரும் நண்பர்களிடம் ஃபோனில் பேசி வரவழைத்துவிட்டு, மதிய உணவு இடைவேளையில் மேனேஜர் ரூமில் நுழைந்தனர்.
ரெஜினா நாளைய உணவு மெனுவை சரிபார்த்து அந்த டிபார்ட்மெண்ட்டிற்கு மெயில் அனுப்பிக்கொண்டு இருந்தாள். அவர்கள் வந்ததும் தலை நிமிர்ந்தவள், என்ன விஷயம் என்பது போல் பார்த்தாள்.
“மேம், மேரேஜ் ஈவென்ட் எங்களுக்கு அசைன் பண்ணிருக்கீங்க, எங்க ஜாப் மும்பை ட்ரிப்ல தான் கன்பார்ம் ஆகும்...” கார்த்திக் பேசிக் கொண்டே இருந்தவன், ரெஜினாவின் கோப பார்வையில் பேச்சை நிறுத்தினான்.
“சி, யாருக்கு என்ன வேலை அசைன் பண்ணணும்னு மேனேஜர் எனக்கு தெரியும். உங்க மும்பை ட்ரிப் ஒன் வீக் தான். டூ டேஸ்ல கிளம்பறீங்க. உங்க திறமை மேல எனக்கு இருக்கிற நம்பிக்கை உங்களுக்கு இல்ல பேத்தடிக். மேரேஜ்க்கு ரெண்டு மாசமிருக்கு. சோ யூ இடியட்ஸ் கெட் ஆன் வித் யுவர் ஃவொர்க் அண்ட் ஸ்டாப் வேஸ்டிங் மை டைம்” புலி உறுமுவது போல் அவள் கத்த, ஐவரும் புலியைக் கண்ட கிலியில் வெளி வந்தனர்.
சுபா ஆரம்பித்தாள். “நான் தான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்லடி. புலி பிராண்டி வைச்சுரும், சொன்ன வேலையை செஞ்சுருவோம்னு கேட்டீங்களா? டேய் கார்த்திக் உனக்கு எங்கிருந்துடா திடீர்னு இவ்வளோ தைரியம் வந்துச்சு?”
“எல்லாம் இந்த மலர் பிசாசுனால வந்தது, டவுட்டா இருக்கு மண்ணா இருக்குனு.”
மலர் பாவமாக பார்க்கவும் நால்வரும் சிரித்தனர்.
“சரி விடு அழுதுறாதே” தருண் சொல்லவும் மீண்டும் சிரிக்கத் தொடங்கியவர்கள், ரெஜினாவின் சத்தம் கேட்கவும் நாற்புறமும் தெறித்து ஓடத் துவங்கினர்.
அன்றைய நாள் வேலை முடிந்து மலர் வீடு செல்ல பேருந்தில் பயணம் செய்கையில், அந்த இளைஞனின் சைகையும் இவாஞ்சலினின் செய்கையும் நினைவு வர, ஒரு இதமான தென்றல் தழுவும் சுகம் தந்த புன்னகையிலேயே பயணித்தாள்.
அவள் வீடு வந்து சேர்ந்ததும் சந்திரன் சற்று வாடிய முகத்துடன் இருக்கக் கண்டு, பதட்டமாகி தன் தந்தையை நோக்கிக் கேட்டாள்.
“அப்பா, என்னாச்சு பா உடம்பு முடியலையா? ஹாஸ்பிடல் போலாமா?” அவள் கேட்க கேட்கவே கண்களில் நீர் திரையிட்டது.
“குட்டிமா, அதெல்லாம் ஒண்ணுமில்ல. அத்தை வினு பாப்பாவுக்கு பொண்ணு வீடு பார்க்க வர்றதுக்கு கூப்பிட்டிருந்தா.”
“போய்ட்டு வாங்க பா, எனக்கு மும்பை போற வேலை இருக்கு” தன் தந்தையின் பதிலில் சற்று மனது லேசாக, புன்முறுவலுடனே பதிலளித்தாள்.
பெரும்பாலும் உறவினர்கள் விசேஷங்களில் மலர் பங்கேற்க மாட்டாள். தன்னை கைக்காட்டி தன் தாயை பேசும் பேச்சுக்களைக் கேட்க கூடாதென பதினைந்து வயதில் முடிவெடுத்தவள், பத்து வருடங்களாக அதே மனநிலையில் தான் இருக்கிறாள்.
“குட்டிமா, உனக்கு ஒரு கல்யாணம்?”
அவர் பேசி முடிக்கும் முன் தன் தகப்பன் அருகில் அமர்ந்து, ஒரு குழந்தையைக் கொஞ்சி சமாதானம் செய்வது போல் பேசத் தொடங்கினாள்.
“அப்பா, கல்யாணம் வேணாம்னு எல்லாம் சொல்லல. என்னைப் பத்தி நல்லா புரிஞ்சுட்டு, தெரிஞ்சுட்டு, என் அப்பா கூட கடைசி வரைக்கும் இருப்பேன் அதுக்கும் ஒத்துக்கற ஒரு ஆளைத் தேடறேன் நீங்களும் தேடுங்க. கிடைச்சா கல்யாணம் பண்ணித் தூக்கிட்டு வந்தரலாம்” அவள் ஆண்மகன் தோரணையில் பேசவும், சந்திரன் சிரிப்புடன் அவளை நோக்கினார்.
“தேடறேன் குட்டிமா, சீக்கிரம் தேடி கண்டுபிடிக்கறேன்.”
சந்திரன் மனதிற்குள் அவர் தங்கையின் குரல் கேட்டது.
“அண்ணா, மலருக்கு சீக்கிரம் கல்யாணம் பேசி முடிச்சுடு, தள்ளிப் போடாதே. வினுக்கு முடிச்சதும் பாத்திடலாம்… அவளுக்கு அவ அழகே எதிரி ண்ணா.”
தன் தங்கை சொல்ல வந்தது புரிய புரிய தங்கை மேல் கோபப்பட முடியாது, தன் மகளின் மேல் இந்த சமூகம் திணிக்கும் இந்த சேறை திருமணமாவது நிறுத்திவிடும் என்ற உறுதியான முடிவுக்கு வந்திருந்தார் சந்திரன்.
இருவரும் இரவு சாப்பாடு முடித்து உறங்கச் சென்றனர்.
‘எப்படியாவது இந்த மும்பை இவாலுவேசன், இவா மேரேஜ் ரெண்டையும் சிறப்பா செஞ்சு முடிச்சு, தன் கனவை சாதிப்பதற்கு வாய்ப்பு தேடிக்கணும்’ என்று அவள் ஒரு உறுதியுடன் உறங்கச் செல்ல,
அவள் தந்தையோ, இன்னும் இரு மாதங்களில் தன் மகளுக்கு திருமணம் பேசி முடித்து விட வேண்டும் என்ற உறுதியுடன் உறங்கச் சென்றார்.
இருவேறு முடிவுகளில் இறைவன் எதை விடுத்து எதை நிராகரிக்க என்ற குழப்பத்தில் வேறு ஒரு இறுதி முடிவுக்கு வந்திருந்தார். விதி எனும் சுவாரஸ்யப்புள்ளி சுருளத் தொடங்கியது.
எங்கே கூட்டிச் செல்கிறாய்
என் ரதியே
புரவியில் ஏறி உனைத்
தூக்கிச் செல்லவே வந்தேன்
உன் விழிக் கண்டதும்
வழி மறந்து உனைத் தொடர்கிறேன்
எங்கே கூட்டிச் செல்கிறாய்
என் ரதியே!
 
Top