• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 10

Administrator
Staff member
Messages
373
Reaction score
520
Points
93
காதல் 10:

வெளியே வந்தவளுக்கு பயத்தில் அமர்ந்திருந்த இருவரையும் நினைத்து கவலையாக இருந்தது.

இவரிடம் தனியாகவிட்டு வந்திருக்கிறோமே என்ன ஆகுமோ என்ற கவலை.

குரு அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வாரோ? என்று ஒரு எண்ணம் வர அடுத்த நொடியே,

'சே சே இருக்காது அவர் ஒன்றும் அத்தனை மோசமானவர் அல்ல' என்று தோன்றியது.

மோசமானவர் இல்லை என்றால் ஏன் சிறிது நேரத்திற்கு முன்பு அத்தனை கோபமாக நடந்து கொண்டார். அதுவும் முகமெல்லாம் சிவந்து நினைக்கவே அவளுக்கு அந்த நொடி உள்ளுக்குள் பதறியது.

இல்லை அது ஏதோ கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். மற்றபடி அவர் நல்லவர் தான் நிச்சயமாக குழந்தைகளிடம் கடுமையாக நடக்க மாட்டார்.

அவர் கடுமையாக நடக்க முயலவில்லை என்றாலும் குழந்தைகள் அவரை கண்டு அஞ்சத்தானே செய்கின்றனர்.

தான் வருவதற்குள் பயந்து அழுதுவிட்டாள் என்ன செய்வது என்று எண்ணியவளுக்கு மனம் முழுவதும் கவலையாகி போக வாடிய முகத்துடன் கீழே வந்தாள்.

மகியின் முகத்தை கண்ட கோதை,

"என்ன மகிழ் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு என்னாச்சு?" என்று வினவிட,

அதில் ஒரு நொடி திகைத்து விழித்தவள் பின்னர் முகத்தை மாற்றி,

"ஒன்னுமில்லை அத்தை. அவர் காஃபி கேட்டாரு அதான் எடுத்துட்டு போக வந்தேன்" என்றாள்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி காஃபி போட்டேன் அதை குடுக்குறதுக்குள்ள எங்கேயே வேகமாக போய்ட்டான். இப்போ திரும்பவும் காஃபி கேட்குறானா போய் போட்டு கொடு" என்றார்.

"நான் அந்த காஃபிய சூடு பண்ணி கொடுக்கவா அத்தை" என்று விரைவாக சென்றுவிடும் எண்ணத்தில் கேட்க,

"வேண்டாம்மா அவன் குடிக்க மாட்டான். புதுசா போட்டு கொடு" என்று பதில் மொழிந்தார் கோதை.

"சரிங்கத்தை" என்றவள் சமையலறைக்குள் நுழைந்து பாலை எடுத்து குளம்பியை தயாரிக்க துவங்கினாள்.

இங்கே மகிழ் சென்று ஒரு நிமிடம் முழுதாக முடிந்தும் குரு அவர்களை தான் அமைதியாக பார்த்திருந்தான்.

இளையவர்கள் இருவர் முகத்திலும் அப்பட்டமான பயம்.‌ ஒருவரை ஒருவர் இறுக பிடித்தபடி அசையாது அமர்ந்திருந்தனர்.

அவர்களை அமைதியாக பார்த்தவனுக்கு என்ன செய்து அவர்களை சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.

அவனுக்கு குழந்தைகளிடம் எல்லாம் பெரிய பரிட்சயம் இல்லை. இதுவரை எந்த குழந்தைகளிடமும் பேசி பழகியதும் இல்லை.

என்ன செய்வது என்று சிந்தித்தவாறே அவர்கள் அருகில் செல்ல அவர்களது முகத்தில் இருந்த பயம் அதிகமானது.

'ப்ச்…' என்று நெற்றியை தேய்த்தவாறு அப்படியே நின்றுவிட்டான்.

அருகில் சென்றால் பேயை கண்டது போல அலறுகிறார்களே இன்னும் இரண்டு வருடங்களுக்கு என்னுடன் இந்த அறையில் தானே இருக்க வேண்டும்.

இப்போது எப்படி இவர்களை சமாளிப்பது.‌ என்ன செய்வது என்ன செய்வது என்று கழுத்தை வருடினான்.

அதுவும் மகிழ் திரும்பி வருவதற்குள் எதையாவது செய்து இவர்களை சமாதானம் செய்ய வேண்டும் ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை.

மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தினை கட்டி ஆளும் குரு பிரசாத் இந்த இளையவர்களிடம் ஏதும் செய்ய இயலாது விழி பிதுங்கி நின்றான் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள்.

எத்தனை பேர் என் முன்னே அஞ்சி நடுங்கி நின்றிருப்பார்கள் ஆனால் நான் இன்று இந்த சிறுவர்கள் முன் எதுவும் செய்ய முடியாதவனாக நிற்கிறேன் எல்லாம் என் நேரம் என்று எண்ணி கொண்டவன் வேறுவழியில்லை பேசித்தான் ஆக வேண்டும் என்று அவர்கள் முன்னே நீள்விருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தான்.

இளையவர்களது அச்சம் அதிமாக சற்று பின்னோக்கி நகர்ந்து அமர்ந்தனர்.

'ப்ச் நான் என்ன செய்துவிட போகிறேன் இவர்களை கடித்தா திண்றுவிட போகிறேன் இப்படி அஞ்சுகிறார்கள்' என்று சலிப்பு வந்தது.

அதை ஒதுக்கி தள்ளிவிட்டு,

"உன் நேம் என்ன?" என்று வினவினான். என்ன முயன்றும் குரல் அழுத்தமாக தான் வெளி வந்தது.

கவின் பயத்தில் வாய் திறக்காது இருக்க எழில்,

"எழிலரசன்" என்றான்.

"எழிலரசன்" என்று உச்சரித்தவன்,

"ஹ்ம்ம் நைஸ் நேம்" என்றுவிட்டு கவினிடம்,

"உன் நேம் என்ன?" என்றான்.

"கவிந் மொதியன்"என்று மழலை மொழியில் தெளிவில்லாத கூற,

"வாட் கவிந்தா?" என்று புரியாது வினவினான்.

"அவன் நேம் கவின் மொழியன்" என்று எழில் தான் பதிலளித்தான்.

"ஓ… கவின் மொழியனா? டிஃப்பரெண்ட் நேம்" என்று புன்னகைத்தவன்,

'மகிழினி, அகிலன், எழிலரசன், கவின் மொழியன் எல்லாம் நல்ல தமிழ் நேம்' என்று நினைத்து கொண்டான்.

அடுத்து என்ன பேசுவது என்று யோசித்து,

"என்ன ஸ்டாண்டர்ட் படிக்கிறிங்க?" என்று வினா தொடுக்க,

"நான் போர்த் ஸ்டாண்டர்ட்" என்று எழில் மொழிய,

குருவின் பார்வை கவினிடம் திரும்பியது.

கவினோ பயந்த விழிகளுடன், "நா அம்மாத்த போகதும்" என்றான்.

அப்போது தான் அவனுடைய அம்மா என்ற அழைப்பை கவனித்தவன்,

"அம்மாட்ட தான போகலாம். பர்ஸ்ட் நீ என்ன ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்னு சொல்லு" என்றான்.

"ஸ்தாந்தர் சொந்தா அம்மாத்த விதுதிங்களா?" என்று மழலையில் மிழற்ற,

அவனுக்கு அது பாதி தான் புரிந்தது எனினும் மழலை மொழி அத்தனை அழகாய் தெரிந்தது. குழந்தைகளின் பேச்சை எல்லாம் அத்தனை உன்னிப்பாக கவனித்தது இல்லை.

இப்போது கவனித்தான் அவர்களது பாவனையில் இருந்து பேச்சு வரை.

'இவனுக்கு இன்னும் சரியாக பேச்சு வரவில்லையா?' என்று நினைத்துவிட்டு,

"இவன் என்ன சொல்றான். எனக்கு புரியலை?" என்று எழிலிடம் வினா எழுப்ப,

"அவன் ஸ்டாண்டர்ட் சொன்ன நீங்க அம்மாட்ட விடுறிங்களான்னு கேக்குறான்" என்று எழில் மொழிய,

"ஓ…" என்றவன்,

கவினிடம், "சரி விட்றேன் சொல்லு?" என்றான்.

கவின், "நான் யூ.கே.தி பதிக்கிதேன்" என்று பதில் அளிக்க,

'யூ கே ஜி யா அப்போ ஏன் இன்னும் பேச்சு சரியாக வரவில்லை' என்று நினைத்தவன் எழிலிடம் திரும்பி,

"உன் தம்பிக்கு எவ்ளோ ஏஜ்?" என்று வினா தொடுக்க,

"பைஃவ்" என்றான்.

"ஓ…" என்று இழுத்தவனுக்கு அடுத்து என்ன பேசுவதென தெரியவில்லை.

இன்னும் சிறிது நேரத்தில் மகிழினி வந்துவிடுவாளே என்று எண்ணியவளுக்கு திடீரென ஒரு சிந்தனை வர,

"உங்களுக்கு சாக்லேட் பிடிக்குமா?" என்று வினவ,

"ஹ்ம்ம் பிடிக்கும்" என்று வேகமாக பதில் அளித்தான் எழில்.

ஆனால் கவினோ, "நா அம்மாத்த போகதும"என்று கவின் உதடு பிதுக்கி அழ தயாரானான்.

"டேய் அழக்கூடாது அங்கிள் உனக்கு பெரிய சாக்லேட் தர்றேன்" என்றிட,

"ம்ஹூம் அம்மாதா வேதும்" என்றான்.

'ஊஃப்' என்று மூச்சை வெளியிட்டவன்,

'குழந்தைகளை கவனிப்பது கடினம் தான் போலும்' என்று நினைத்துவிட்டு குளிர்சாதன பெட்டியில் இருந்து இரண்டு பெரிய இனிப்புகளை கொண்டு வந்து எழிலிடம் ஒன்றை நீட்டி,

"வாங்கிக்கோ உனக்கு தான்" என்க,

"ம்ஹூம் அம்மா சொல்லாம நான் வாங்க மாட்டேன். அம்மா அவ சொல்லாம யார்டயும் எது வாங்க கூடாதுனு சொல்லியிருக்கா" என்றிட,

"டேய் உங்க அம்மாக்கிட்ட நான் சொல்லிக்கிறேன். என்கிட்ட வாங்குனா உங்கம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க" என்றவன் மீண்டும் கொடுக்க,

எழில் தயக்கத்துடன் வாங்கி கொண்டான்.

"இனிமேல் அங்கிள பாத்து பயப்படக்கூடாது ஓகே. அங்கிள் ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன். இனிமேல் அப்படி நடக்க மாட்டேன் ஓகே" என்று மொழிய,

"நானும் சாரி அங்கிள்‌. அம்மா சொன்னா அடுத்தவங்க திங்க்ஸ எடுக்குறது பேட் ஹாப்பிட்னு. இனி உங்க திங்க்ஸ தொட மாட்டோம்" என்று எழில் பெரிய மனிதனை போல கூற,

குருவுக்கு ஆச்சரியம் தாளவில்லை. இந்த சிறு வயதிலே இப்படி பேசுகிறானே என்று‌.

குழந்தை மனம் மாறாத அவன் முகத்தினை கண்டவனுக்கு சிறிதான மென்னகை பிறக்க அவனது தலையை கலைத்துவிட்டான்.

பின்னர் கவினிடம் திரும்பி,

"இந்தா இது உனக்கு தான்" என்று கூற,

"ம்ஹூம் வேந்தா அம்மா அம்மா" என்று கூற,

குருவுக்கு சத்தியமாக அந்த சிறுவனை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.

இனிப்பும் கொடுத்து பார்த்தாயிற்று இபபடி கல்லூளி மங்கனாக அம்மா அம்மா என்கிறானே நான் என்ன பதில் மொழிவேன் என்று மனதிற்குள் மட்டும் தான் புலம்ப முடிந்தது.

சரி வேறு எதாவது முயல்வோம் என்று நினைத்தவன் எழிலிடம்,

"நீ இந்த கார்டூன்ஸ் எல்லாம் பார்ப்பியா?" என்று வினா எழுப்ப,

இனிப்பை பார்த்துவிட்ட ஆனந்தத்தில்,

"ஹ்ம்ம் நான் நிறைய பார்ப்பேன். ஹட்டோரி எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்றான் புன்னகையுடன்,

"ஓ… ஹட்டோரி பிடிக்குமா. அப்போ ஹட்டோரிய நேர்ல பாக்க போலாமா?" என்று வினவ,

"ஐ நிஜமாவா? ஹட்டோரிய நேர்ல பாக்கலாமா அங்கிள்?" என்று வினா தொடுக்க,

"ஹ்ம்ம் பார்க்கலாம். நான் உன்னை அங்க அழைச்சிட்டு போறேன். ஆனால் உன்னை மட்டும் தான்‌. உன் தம்பி மாதிரி அழுமூஞ்சி பாய்ஸ இல்லை" என்றான்.

அதில் கவின் கவனம் இவர்களது புறம் திரும்ப,

"நா அதுமூஞ்சி இல்லை" என்று ரோஷமாக கூற,

அந்த மழலை கோபத்தில் இவனுக்கு புன்னகை ஜனித்தது. அதுவும் அவனது உச்சரிப்பில் தான் புன்னகை இமை நீண்டது.
அதனை அடக்கி கொண்டு,

"இல்லை நீ அழுமூஞ்சி தான்" என்றான்.

"நோ நா‌ அதுமூஞ்சி இல்லை அத மாத்தேன்" என்றவன் பிறகு,

"நானும் காத்தூ பாக்க வதவா? எக்கும் ஹத்தோதி பிதிக்கும்" என்றான்.

இம்முறை அவனது பேச்சை உற்று கவனித்தவனுக்கு லேசாக புரிபட முகம் முழுவதும் புன்னகை தான்.

'ப்பா ஒரு வழியா இவனையும் சமாளிச்சாச்சு' என்று எண்ணியவன்,

"ஹ்ம்ம் கண்டிப்பா உன்னையும் அழச்சிட்டு போறேன். நீங்க ஹட்டோரியோட பேசலாம் டான்ஸ் ஆடலாம். ஆனால் ஒரு கண்டிஷன் என்னை பார்த்து பயப்படக்கூடாது" என்றான்.

"நீந்த எதக்கு அம்மா தித்துதிங்க ம்மா பாவம்" என்று கவின் கூற,

சடுதியில் குருவிற்கு மகிழினியின் பயந்து சிவந்த முகம் மனக்கண்ணில் வந்து போக,

"அது கோபத்தில திட்டிட்டேன்டா. இனிமேல் உங்கம்மாவ நான் திட்டவே மாட்டேன். இந்தா சாக்லேட் வாங்கிக்கோ" என்றான்.

"பிதிச்சு கொதுந்த அம்மா அப்பதி தான் ததுவா?" என்றான்.

இம்முறை குருவுக்கு அவன் மொழி விளங்காது போக எழிலிடம் திரும்பி,

"என்ன சொன்னான் எனக்கு புரியலை" என்க,

"அதை ஓபன் பண்ணி கொடுப்பிங்களாம் அங்கிள். அம்மா ஓபன் பண்ணி தான் கொடுப்பா" என்றவன்,

"எனக்கும் ஓபன் பண்ணி கொடுங்க" என்று தன்னுடையதையும் நீட்டினான்.

'ஹ்ம்ம் இதுல மட்டும் நல்ல விவரமா இருக்கான்' என்று எண்ணிவிட்டு இருவருக்கும் பிரித்து கொடுத்தான்.

எழில் அதனை உண்டபடியே,

"அங்கிள் இந்த பிக் ஹவுஸ் உங்களோடதா?" என்று வினவ,

"ஹ்ம்ம் ஆமா" என்று பதில் மொழிந்தான் குரு.

"இனி நாங்க இங்க தான் இருக்க போறோமா அங்கிள்?" என்று எழில் மீண்டும் வினா கொடுக்க,

"ஆமா இனி இங்கதான் நீங்க தங்க போறீங்க" என்று குரு கூறியதும் எழிலது முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

"நிஜமாவா அங்கிள்?" என்று நம்பாது வினா எழுப்ப,

அவனது மகிழ்ச்சிக்கு அர்த்தம் அறியாதவன்,

"நிஜம்மா" என்க,

"ஐ ஜாலி ஜாலி நாங்க பிக் ஹவுஸ்ல இருக்க போறோம்" என்று குதூகலித்தவன்,

"நான் என் ஃப்ரெண்ட்ஸ்க்கிட்ட எல்லாம் சொல்லுவேன் நாங்களும் பிக் ஹவுஸ்ல இருக்கோம்னு" என்றான்.

குரு, "ஏன் எதுக்கு ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லணும்?" என்று வினவ,

"எல்லார்கிட்டயும் இல்ல அங்கிள் இந்த தீபக்கிட்ட தான் பர்ஸ்ட் சொல்லணும்.‌ அவன்தான் அவன்கிட்ட பிக் ஹவுஸ் இருக்கு. எங்ககிட்ட ரொம்ப ஸ்மால் ஹவுஸ் தான் இருக்குனு ஓயாமா சொல்லுவான்.‌ அப்போ எனக்கும் பிக் ஹவுஸ்ல இருக்கணும்னு ஆசை. அம்மாட்ட சொன்னேன். அம்மா சீக்கிரமா உன்னை பிக் ஹவுஸ் கட்டி அழைச்சிட்டு போறேன்னு சொன்னா. இப்போ கூட்டிட்டு வந்துட்டா" என்று குதூகலத்துடன் கூற,

புன்னகை மாறாது அதனை கேட்டவன் மனதிற்குள் குழந்தைகளது மகிழ்ச்சி கூட இந்த பணத்தில் தான் அடங்கியுள்ளது என்று தான் நினைத்து கொண்டான்.

இங்கு கவினோ எதை பத்தியும் கவலை கொள்ளாது அந்த முழு இனிப்பையும் அப்போதே உண்டுவிடும் எண்ணத்தில் உடையெல்லாம் சிந்தியபடி உண்ண,

"கவின் மெதுவா. ட்ரெஸ் எல்லாம் ஆகுது பாரு" என்றவுடன் தன் உடையை குனிந்து கண்டவன்,

"த்தெஸ் எல்லா ஆச்சு ம்மா தித்துவா?" என்று பயந்த விழிகளுடன் கூற,

அந்த அப்பாவிதனத்தை கண்டு அவனை தூக்கி கொஞ்ச தோன்றியது.

அடுத்த கணம் இது தான் தானா என்று கூட குருவிற்கு ஆச்சரியம் பிறக்க முகம் முழுவதும் புன்னகையுடன்,

"அம்மா திட்ட மாட்டா நான் சொல்லிக்கிறேன்" என்று கூறுகையில் சரியாக குளம்பி குவளையுடன் உள்ளே நுழைந்த மகிழ் வியப்புடன் அப்படியே நின்றுவிட்டாள்.

குருவின் வதனத்தில் கண்ட இமை நீண்ட புன்னகை அத்தனை அழகனாய் அவனை காண்பித்தது. இவன் நிச்சயமாக அழகன் தான் என்று அந்த நொடி மனது கூறியது.

இளையவர்கள் இந்நேரம் அழுது கொண்டிருப்பார்களோ என்று அச்சத்துடன் ஓடி வந்தவள் நிச்சயமாக இதனை எதிர்பார்க்கவில்லை.

முகம் முழுவதும் சிரிப்புடன் குரு அவர்கள் அருகில் அமர்ந்து பேச இளையவர்களும் பதில் அளித்து கொண்டிருந்தனர்.

'எப்படி இது சாத்தியம் இவரை கண்டதும் அஞ்சி நடுங்கியவர்கள் இப்படி பேசுகிறார்களே நான் சென்று வருவதற்குள் என்ன நடந்திருக்கும். இவர் என்ன மாயக்காரரா?' ‌என்று அசையாது நின்றிருத்தாள்.

குரு அவள் அரவம் உணர்ந்து திரும்பி, 'என்ன?' என்பதாய் புருவம் உயர்த்தி கேட்க,

"ம்ஹூம்" என்று வேகமாக தலையசைத்தவள்,

"காஃபி" என்று அவன் அருகில் சென்று கொடுக்க,

அதனை வாங்கி பருகியவன் மீண்டும் அவர்களிடம் பேச துவங்க,

கவின், "ம்மா அந்திள் எக்கு பெதிய சாக்தேட் கொதுத்தாது" என்று சிரிப்புடன் கூற,

"பெரிய சாக்லேட்டா.‌ நிறைய சாக்லேட் சாப்பிட்டா கேவிட்டி வந்திடும். போதும் சாக்லேட் மீதிய அப்புறமா சாப்பிடலாம்" என்று கூற,

"ம்ஹூம் ததமாத்தே" என்று கவின் மொழிய,

இவள் முறைத்து பதில் கூறும் முன்,

"மகிழினி" என்ற குருவின் அழைப்பு அவளை தடை செய்தது.

திரும்பி, "சார்" என்றிட,

"ஏன் இவனுக்கு இன்னும் க்ளியரா ஸ்பீச் வரலை. ஏஜ் ஃபைவ் ஆகிடுச்சே. எதாவது டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணியா?" என்று வினவ,

"இல்லை இவன் ஒரு ப்ரீமெச்சூர் பேபி. இவனுக்கு எல்லாமே லேட்டாதான் நடக்கும். க்ளியரா பேச்சு வர இன்னும் கொஞ்ச நாள் ஆகும்னு டாக்டர் சொன்னாங்க" என்று மொழிந்திட,

"ஓ…" என்றவனது முகத்தில் சிந்தனை ரேகைகள்.

அதற்குள் எழில், "அங்கிள் ஹட்டோரி பாக்க கூட்டிட்டு போறேன்னு சொன்னிங்களே போவோமா?" என்று ஆசையாக வினவ,

குருவிற்கு மறுப்பு சொல்ல மனம் வராது போக,

"ஹ்ம்ம் போகலாமே. வாங்க கிளம்பலாம்" என்க,

கவினும் பாதி இனிப்பை வைத்துவிட்டு,

"நா நா" என்று குதிக்க,

மகிழ், 'இவர் எங்கே அழைத்து செல்ல போகிறார்?' என்று கேள்வியுடன் நோக்கினாள்.

"இன்னும் டென் மினிட்ஸ்ல கிளம்பணும். பசங்களுக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிவிட்டுட்டு நீயும் நல்ல ட்ரெஸ்ஸா சேஞ்ச் பண்ணிட்டு வா" என்று ஆணை போல தான் கூறினான்.

இதில் வருகிறாயா உனக்கு விருப்பமா என்று எதுவும் இல்லை நீ வர வேண்டும் என்ற ஆணை மட்டும் தான் இருந்தது.

சம்மதமாக தலையசைத்தவள் இளையவர்களுக்கு விரைவாக உடை மாற்றிவிட்டு தானும் கோதை வாங்கி கொடுத்ததில் ஒரு நல்ல சேலையை உடுத்தி கொண்டு கூந்தலை பின்னலிட்டு தயாராகி வந்தாள்.

மருமகளின் முகம் கண்ட கோதை என்ன பிரச்சனையோ என்று கவலையாக அமர்ந்திருந்தவர் இருவரும் தம்பதி சகிதமாக குழந்தைகளுடன் வருவதை கண்டு ஆச்சர்யமாகி மகிழ்ந்து தான் போனார்.

தாயின் முகத்தை வைத்து அவரது அகம் உணர்ந்தவன்,

"ம்மா நாங்க வெளியே போய்ட்டு வர்றோம்" என்றிட,

"சரிப்பா பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க" என்று அனுப்பி வைக்க,

மகிழும் அவரிடம் கூறிவிட்டு கிளம்பினாள்.

குரு தனது மகிழுந்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து விட்டு சிறியவர்களை அருகில் அமர வைத்தான்.

மகிழினி தான் தான் எங்கு அமர்வது முன்னாடி அமரவா இல்லை பின்னால் அமர்வா? பின்னால் அமர்ந்தால் நான் என்ன உனக்கு ஓட்டுநரா என்று இவர் திட்டிவிட்டால் என்ன செய்வது என்று யோசனையுடன் நிற்க,

"மகிழினி என்ன திங்கிங் ஏறு சீக்கிரம்?" என்று துரிதப்படுத்தியவன் பின்னால் இருக்கையை காண்பிக்க சடுதியில் ஏறி அமர்ந்தாள்.

கவினுக்கும் எழிலுக்கும் தான் மகிழுந்தை கண்டு ஏக குஷி.
அவர்களுக்கு இது தான் முதல் மகிழுந்து பயணம்.

"அங்கிள் இது உங்க காரா? ரொம்ப சூப்பரா இருக்கு" என்று எழில் வினவ,

புன்னகையுடன் ஆமாம் என்று தலையசைத்தான் குரு.

"பெரிசா இருக்கு. தீபக் அப்பாவோட காரை விட பெரிசா இருக்கு. நீங்க என்னை தினமும் இதுல கூட்டிட்டு போவீங்களா?" என்று ஆசையும் ஏக்கமுமாக கேட்க,

"கண்டிப்பா" என்று குரு பதில் மொழிய,

இங்கு எழிலின் முகத்தை கண்ட மகிழுக்கு தான் முதன் முதலில் அச்சம் வர துவங்கியது.

இவர்கள் இந்த ஆடம்பரத்திற்கு பழகிவிட்டு மீண்டும் எப்படி பழைய வாழ்வை ஏற்பார்கள்.

அகிலனது எதிர்காலத்தை பற்றி சிந்தித்துவிட்டு இவர்களை கவனிக்க தவறிவிட்டேனோ? என்று வருந்தி கொண்டிருக்க,

சிறியவர்களோ அத்தனை மகிழ்ச்சியில் குருவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

குருவும் சளைக்காமல் பதில் அளித்து கொண்டிருந்தார்.

மகிழினிக்கும் இந்த மகிழுந்து பயணம் புதிது தான். அதுவும் இது போன்ற விலை உயர்ந்த மகிழுந்தில் எல்லாம் அவள் கனவில் தான் பயணம் செய்ய இயலும். இருந்தும் இப்பயணம் உவப்பாக இல்லை‌.

சில நிமிடங்களில் அவர்களது மகிழுந்து ஒரு பெரிய வணிக வளாகத்தின் முன் நின்றது. இவர்கள் வந்ததும் ஓடி வந்த காவலாளியிடம் சாவியை கொடுத்துவிட்டு அவர்களுடன் உள்ளே நுழைந்தான்.

பணமிருந்தால் மகிழுந்தை நிறுத்துவதற்கு கூட ஆட்கள் வருவார்கள் போல என்று எண்ணியபடி அவனுடன் நடக்க குளிர்காற்று முகத்தில் மோதியது.

பொம்மை படங்களில் வரும் கதாபாத்திரங்களை போல உடையணிந்து கடந்து செல்லும் குழந்தைகளை மகிழ்வித்து கொண்டிருந்தவர்கள் அருகில் தான் இளையவர்களை குரு அழைத்து போனான்.

கவினுக்கும் எழிலுக்கும் அவர்கள் தெலைக்காட்சியில் கண்ட கதாபாத்திரங்களை நேரில் கண்டதில் மகிழ்ச்சி தாளவில்லை.

"ம்மா ஹட்டோரி ம்மா சின்சான்" என்று துள்ளி குதித்தார்கள்.

அவர்களுடன் குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பித்து மகிழ்ச்சிபடுத்தினர்.

மகிழ் இதையெல்லாம் மௌனமாக வேடிக்கை பார்த்தாள். அவள் மனதிற்குள் பயப்பந்து உருண்டு கொண்டிருந்தது.

இளையவர்கள் களைத்து முடிக்கும் வரை விளையாடவிட்டவன் பின்னர் அந்த கதாபாத்திரங்களாக நடித்தவர்களிடம் தனது பர்ஸில் இருந்து நான்கு தாள்களை எடுத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

பின்னர் உணவு கூடத்திற்கு அழைத்து வந்தவன்,

"ஐஸ்கிரீம் வேணுமா?" என்று இளையவர்களிடம் வினவ,

"ஹ்ம்ம் வேணும் வேதும்" என்று வேகமாக பதில் வந்தது.

பனிக்கூழ் விற்பனையகத்தின் அருகில் செல்லும் நேரம் குருவிற்கு அலைபேசி அழைப்பு வந்திட,

குரு, "நீ ஐஸ்கிரீம் வாங்கி கொடு நான் ஃபைவ் மினிட்ஸ்ல வந்திட்றேன்" என்று ஓரம் நகர்ந்தான்.

அங்கு சென்று பனிக்கூழின் விலையை கண்ட மகிழுக்கு ஏகமாக அதிர்ச்சி தான்.

ஒரே ஒரு பனிக்கூழே ஆயிரம் ரூபாய் போட்டிருந்தது.

"ம்மா எனக்கு இது வேணும்" என்று எழில் ஒன்றை காண்பிக்க,

அதன் விலையை பார்த்தால் இரண்டாயிரத்து முந்நூறு போட்டிருந்தது.

மகிழினி தனது பையில் பார்க்க இரண்டாயிரம் தான் இருந்தது.

'இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு ஐஸ்க்ரீமா?' ஒவ்வொரு ரூபாவையும் பார்த்து செய்யும் மகிக்கு மனது வலித்தது.

இருந்தும் சிறியவர்களின் விருப்பத்திற்காக,

"எழில் அது வேண்டாம் இது வாங்கி தரவா?" என்று ஆயிரம் ரூபாய் பனிக்கூழை காண்பித்தாள்.

எழில், "ம்ஹூம் எனக்கு இதை தான் வேணும்" என்று அடம்பிடிக்க,

"எழில் எங்க இருந்து வந்தது இந்த பழக்கம் உனக்கு.‌ ஒழுங்கா வாங்கி தர்றதை சாப்பிடு" என்று அதட்ட,

அவன் அழுக தயாராகும் நேரம் குரு வர,

"அங்கிள் அம்மா எனக்கு அந்த ஐஸ்கிரீம் வாங்கி தர மாட்றா?" என்று உதடு பிதுக்கி கூற,

"ஏன் இவன் கேக்குறதை வாங்கி தர வேண்டியது தானே?" என்று குரு வினவ,

இதில் பதில் கூற தயங்கி நின்றாள்.

"என்ன ஆன்சர் பண்ணு உன்கிட்ட தானே கேக்குறேன்" என்று மீண்டும் வினவ,

"அது இவன் கேட்ட ஐஸ்க்ரீம் இரண்டாயிரத்து முந்நூறு ரூபா ஆனால் என்கிட்ட இரண்டாயிரம் தான் இருக்கு" என்று தயங்கியபடியே கூற,

"நான் உன்னை பே பண்ண சொன்னேனா?" என்று அழுத்தமாக பதில் வந்தது குருவிடமிருந்து.

"அவங்க என்னோட" என்று மகி பேசுகையிலே இடை நுழைந்தவன்,

"உன்னோட சேர்த்து அவங்களும் டூ இயர்ஸ்க்கு என் ரெஸ்பான்ஸிபிலிட்டி. அக்ரிமெண்ட் ஞாபகம் இருக்கு தான?" என்றவனது பேச்சில் தெறித்த அனலில் அவளது வாய் பூட்டு போட்டு கொண்டது.

அதன் பின்னர் அமைதியாக தான் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தாள்.

எழிலும் கவினும் அது வேண்டும் இது வேண்டும் என்று பார்ப்பதை எல்லாம் காட்டி வாங்கினர்.

ஆனால் உண்ணத்தான் இல்லை. மகிழுக்கு தான் அவர்களை பற்றி தெரியுமே?


முக்கால்வாசி அவர்கள் வாங்கியதில் மீதமிருக்க குரு கிளம்ப தயாராகி எழுந்து கொண்டான்.

ஆனால் மகியின் பார்வையோ அந்த மீதமிருந்த உணவில் தான் இருந்தது. அதன் விலை பல ஆயிரங்கள் இருக்கும் என்று அவளுக்கு தெரிந்தது. மகிழுக்கு வருத்தமாக இருந்தது.

பணம் நிறைய கொட்டி கிடப்பவர்களுக்கு உணவின் அருமை தெரியவில்லை. ஒரு வேளை உணவிற்கு கூட துன்பப்பட்ட தனக்கு தானே அது தெரியும் என்று எண்ணியபடி அவனுடன் சென்றாள்.

குரு அடுத்ததாக அலைபேசியை விற்கும் கடைக்கு சென்றான். யாருக்காவது அலைபேசி வாங்க வந்திருப்பான் நினைத்திருக்க,

குரு, "மகிழினி உனக்கு என்ன மாடல் மொபைல் வேணுமோ சொல்லு" என்றிட,

அதில் அதிர்ந்தவள், "மொபைல் எனக்கா? என்கிட்ட ஏற்கனவே போன் இருக்கே" என்றாள்.

"எது உன்கிட்ட இருக்குது மொபைலா. அது இப்போவோ அப்போவோன்னு இருக்கு. ஒரு மொபைல செலக்ட் பண்ணு" என்றவனது வார்த்தையில் அவளுக்கு கோபம் வர,

"எனக்கு அதுவே போதும். எனக்கு வேணும்னா நானே வாங்கிப்பேன்" என்க,

"லுக் நீ இப்போ மகிழினி சுவாமிநாதன் இல்லை மகிழினி குரு பிரசாத்.‌ நான் சொல்றதை தான் நீ கேட்கணும். என்னோட வொய்ப் ப்ளேஸ்ல இருக்க யாரும் அந்த மாதிரி ஒரு மொபைல வச்சிருக்க நான் விரும்ப மாட்டேன்" என்று குரலில் ஏறிய கடுமையுடன் கூறிவிட,

மகிழினி கண்கள் கலங்கிட அமைதியாகிவிட்டாள். குருவும் அதன் பிறகு அவளை காணாது பல ஆயிரங்களில் ஒரு அலைபேசியை அவளுக்காக வாங்கி அதில் அவளது சிம்மை போட வைத்து கொடுத்தான்.

அமைதியாக வாங்கி கொண்டவளுக்கு அழுகையில் தொண்டை அடைத்தது. அவர் கூறுவது சரிதானே நீ அவரிடம் பணி செய்கிறாய் அவர் கூறுவதை செய்து தான் ஆக வேண்டும் என்று தனக்குத்தானே கூறி கொண்டாள்

அதன் பிறகு அவர்கள் வீட்டை அடைய இவர்களுக்காகவே காத்திருந்த கோதை இளையவர்கள் கையில் இருந்த பொம்மைகளை கண்டு,

"என்னடா குட்டி பசங்களா பாதி கடையை வாங்கிட்டு வந்துட்டிங்களா?" என்று சிரிப்புடன் வினவ,

"ஆமா பாட்டி அங்கிள் எனக்கு நிறைய டாய்ஸ் வாங்கி கொடுத்தாங்க" என்று எழில் புன்னகையுடன் கூற,

"அப்படியா?" என்று வினவியவர்,

"அதான் கல்யாணம் முடிஞ்சதே இன்னும் என்ன அங்கிள். மகிழ் உங்களுக்கு அம்மான்னா குரு அப்பா. இனிமேல் வாய் நிறைய அப்பான்னு கூப்பிடுங்க" என்று கோதை கூற,

மகிழினி முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி…


 
Active member
Messages
131
Reaction score
28
Points
28
கவின் அண்ட் எழில் குட்டி... 🥰🥰

குரு மாட்டிட்டு முழிச்சது 🤭🤭

மகி நெனைப்பும் சரிதான்... 🤧

நைஸ் எபி dr❤
 
Active member
Messages
232
Reaction score
143
Points
43
Magi oda bayam niyam than ah ippo ezhil akil ipadi oru lifestyle ku pazhagitu pinnadi varutha padutha koodathu nenaikirathu
 
Well-known member
Messages
428
Reaction score
255
Points
63
Guru பரவாயில்ல பசகளா சமாதானம் பண்ணுடா😁😁 மகிழ் நீ யோசிக்கிற சரி தான்😞 குட்டீஸ் ரொம்ப அழகு 💞💞கோதை அம்மா சூப்பர் குரு அப்பா வா மகி ஷாக்😲
 
Top