• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 26

Administrator
Staff member
Messages
499
Reaction score
706
Points
93
[அத்தியாயம் - 26


"சாஹி, லூசு மாதிரி பேசாத" என்றான் அருள்.

"ஆமா, நான் லூசு தான். உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன்ல்ல."


"நான் பேசுனது தப்பு தான். ஏதோ கோபத்துல பேசிட்டேன். என்னை மன்னிச்சிடு சாஹி."


"ஐயோ! நீங்க உங்கம்மா எல்லாரும் கடவுள் மாதிரி. எதுவுமே தப்பு பண்ணாதவங்க. நான் எல்லாம் கொலைகாரி, கேடு கெட்டவ. நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேட்குறீங்க?"

"சாஹி" என்றான் உடைந்த குரலில்.


"என்ன சாஹி, முடியலை ரொம்ப வலிக்குது. உன்னை காதலிச்சதை தவிர நான் என்ன தப்பு பண்னேன்.

உனக்காக மட்டும் தான் என்னோட சுயமரியாதைய விட்டு உங்க வீட்டில இருந்தேன்.

இதே வேற யாராவது இருந்தா எப்பவோ உங்க அக்காவும் அம்மாவும் பேசுறதுக்கு போடானு போயிருப்பாங்க.

இத்தனை நாள் ஏன் அமைதியா இருந்தேன். எனக்கு பேச தெரியாதுனு நினைக்கிறீங்களா?

அவங்களை விட அதிகமா பேசுனவ தான் நான். என்ன பண்ண? கல்யாணம் பண்ணியாச்சு, நம்ம அத்தை நம்ம அண்ணி அவங்க நமக்கு வேணும்னு நினைச்சேன். ஆனா நீங்க யாருமே அப்படி நினைக்கலை.
அதுக்காக நீங்க எவ்வளவு பேசுனாலும் அமைதியா இருக்கனுமா? எனக்குனு உணர்வுகள் இருக்கு. நானும் மனுசி தான் எனக்காக யாராவது உங்க வீட்டில யோசிச்சாங்களா?


ஆமா, தப்பு தான். உங்க அக்காவ தனியா விட்டு வந்தது தப்பு தான். அது நான் வேணும்னே செய்யலை. சத்தியமா எங்கப்பாவுக்கு என்னாச்சுன்ற பயம் பதட்டத்துல தான் அப்படி பண்னேன். இப்ப வரை அந்த குழந்தை இல்லாம போனதுக்கு நான் தான் காரணம்னு மனசுக்குள்ள எவ்வளவு புழுங்கிட்டு இருக்கேன் தெரியுமா?


நானும் ஒரு குழந்தைய சுமந்திட்டு தான் இருக்கேன். நானே எப்படி இந்த மாதிரி நினைப்பேன்னு ஒரு நிமிஷம் நீ யோசிச்சியா? உங்க அக்கா மேல இருக்க கோபத்தில விட்டு போய்டேன்னு சொல்ற...? அப்ப நீ என்னை எந்த அளவுக்கு கேவலமா நினைச்சிருக்க.

இதுவரைக்கும் உங்க அக்கா எவ்வளவு பேசியும் அவங்கள நான் உன் கிட்ட குறை சொல்லி இருக்கேனா?


நம்ம புருஷன் தூரமா இருக்கார். நம்ம ஓயாம சண்டை போட்டு அவரை கஷ்டப்படுத்த கூடாதுன்னு நான் எவ்வளவோ பொறுமையா போனேன்.


நான் தான் நீங்க எல்லாரும் கஷ்டப்படக் கூடாதுனு நினைச்சேன். ஆனா நீங்க யாரும் அப்படி நினைக்கலை.

எங்க அப்பா, என்னை எப்படி வளர்த்தவர் தெரியுமா? என்ன கேட்டார் என்கிட்ட.

ஒரே ஒரு தடவை என்னை பார்க்கனும் பேசனும்னு. அதை கூட செய்ய வக்கில்லாம போய்டுச்சு எனக்கு.
இனிமே அவரை என்னால உயிரோட பார்க்க முடியுமா?

உங்கம்மா கிட்ட அப்பவே கேட்டேன். ஒரு தடவை பார்த்துட்டு வந்திடுறேன்னு. ஆனா அவங்க பொண்ணை பார்த்துக்கனும் பேர பிள்ளைய பார்த்துக்கனும்னு போக கூடாதுனு சொல்லீட்டாங்க. என்ன ஒரு சுயநலம்?


சரி முடியாதவங்கனு நானும் பொறுமையா இருந்தேன்.

ஆனா கடைசில உங்கம்மா என் வயித்துல இருக்க குழந்தை அழிஞ்சுரும்னு சாபம் கொடுக்கிறாங்க.

நான் தான தப்பு பண்னேன். அந்த குழந்தை என் வயித்துல உருவானதை தவிர வேற என்ன தப்பு பண்ணுச்சு.

அது உன் குழந்தை தான? அதை கூட அவங்க நினைக்கலை.

சரி விடு அவங்க எப்பயுமே அப்படி தான். அதை நான் பெருசா எடுக்கலை.

ஆனா நீ? சத்தியமா முடியலை. கொலைகாரினு பட்டம் கொடுக்கிற.

இத்தனை நாள் உன் கூட வாழ்ந்தும் என்னை நீ புரிஞ்சுக்கலை.

இவ்வளவு நாள் நான் பண்ண எதுவுமே உங்களுக்கு தெரியலை. என்னோட வாழ்க்கையே அர்த்தமில்லாத மாதிரி தோணுது" என்றவள் வாய் விட்டு கதறி அருளுக்கும் வலிக்க தான் செய்தது.

அவனும் ஏதோ ஒரு கோபத்தில் பேசி விட்டான். ஆனால் அதற்காக தன்னையே நொந்து கொண்டிருக்க அவளுடைய பேச்சு அவனையும் உயிருடன் வதைக்க தான் செய்தது.


"சாஹி, என்னை மன்னிச்சிடு. நான் பேசுனது தப்பு தான். என் மனசில இருந்து பேசலை டி சத்தியமா. கோபத்தில பேசிட்டேன். உன்னை பத்தி எனக்கு தெரியாதா?"


"கோபம் வந்தா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? எதிர்ல இருக்கவங்க என்ன மாதிரி சூழ்நிலையில இருக்காங்கனு யோசிக்க மாட்டீங்க? கோபம் வந்தா உங்க அம்மாவை என்னைக்காவது அடிச்சிருக்கீங்களா? இல்லை மரியாதை குறைவா பேசி இருப்பீங்களா?

அப்ப மட்டும் அவங்க நம்ம அம்மானு நியாபகம் இருக்கும்.

ஆனா பொண்டாட்டி, நீங்க என்ன பேசினாலும் ஈசியா மன்னிச்சிடுனு சொன்னா மறந்துட்டு உங்ககிட்ட திரும்பி வந்திடனும் அப்படி தான?" என்றாள் குரலில் வலியுடன்.


அருளுக்கு இதற்கு மேல் அவளை எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.

தான் பேசியது அவளை எந்தளவிற்கு காயப்படுத்தி இருந்தால் இவ்வளவு பேசி இருப்பாள் என நினைத்தவனது மனதும் ரணமாய் துடிக்கத் தான் செய்தது.


இந்த உலகத்தில் கோபத்திலும் நிதானத்தை கடைபிடிப்பவனே ஆகச் சிறந்த அறிவாளி. கோபத்தில் பேசுபவர் மறந்து விடலாம் ஆனால் கேட்பவர் நிலை...?


சில நிமிட அமைதிக்கு பிறகு தன் மூச்சை இழுத்து சமன் செய்தவன்,

"நீயும் குழந்தையும் எனக்கு வேணும். சத்தியமா நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது சாஹி. ப்ளீஸ் ட்ரை டூ அன்டர் ஸ்டாண்ட் மீ" என்று கூற,


"இல்லை எனக்கு நீங்க வேண்டாம். எனக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழ பிடிக்கலை. நான் இனி மேலாவது எனக்காக வாழனும்னு நினைக்கிறேன். அப்பாக்கு தான் என்னால எதுவுமே செய்ய முடியலை. அட்லீஸ்ட் அம்மாவையாவது இனிமே நல்லா பார்த்துக்கனும். அவங்க அப்பா மாதிரி இல்லை. உலகம் தெரியாத அப்பாவி.

திரும்பி நான் உங்களோட வாழ்க்கைக்குள்ள வந்தா கண்டிப்பா எங்கம்மாவை இழக்க வேண்டி வரும்.

என்னையவே இந்த பாடு படுத்துன உங்க அக்காவும் அம்மாவும் எங்கம்மாவ கூட்டி வந்தா கண்டிப்பா கொஞ்சம் இல்லை ரொம்பவே பேசுவாங்க.

அதை தாங்குற அளவுக்கு எனக்கு சத்தியமா தெம்பு இல்லை. விலகி இருக்கிறது தான் ரெண்டு பேர்க்கும் நல்லது.


எனக்கு என் குழந்தை இருக்கு. அது போதும், நீங்க எனக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சா திரும்பி என் வாழ்க்கையில வர முயற்சி செய்யாதீங்க.

இது அவசரப்பட்டு எடுத்து முடிவு இல்லை. நான் ரொம்ப தெளிவா யோசிச்சு எடுத்தது தான் சொல்றேன்.

உலகத்திலே ரொம்ப கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? நம்ம ஒருத்தவங்களுக்காக எல்லாமே செய்து இறங்கி போய் நிற்கும் போது அவங்களே நம்மளை கேவலப்படுத்துறது தான்.

நீங்க என்னோட உணர்ச்சிய என்னை மொத்தமா கொன்னுட்டீங்க. குட் பாய்" என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.
அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்ய அருளுக்கும் விருப்பமில்லை. தலையை தாங்கிக் கொண்டு அமர்ந்து விட்டான். எங்கே தவறினான் என்று அவனுக்கே புரியவில்லை.


அருள் திருமணத்திற்கு முன்பிருந்தே சாஹியை கையில் வைத்து தாங்கினான் என்று தான் கூற வேண்டும். வீட்டில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் ஜெயாவையோ திவ்யாவையோ திட்டுவானே தவிர சாஹியை ஒரு வார்த்தை கேட்க மாட்டான்.

அவனுக்கு எல்லோரையும் பற்றி நன்றாக தெரியும். முக்கியமாக சாஹியை பற்றி. இப்போழுது நடந்த நிகழ்வு அவனை மீறியதே.


ஏற்கனவே அழுத்தத்தில் இருக்க திவ்யா வலி கண்ணீர் புத்தியை தடுமாற தான் செய்தது.


அவன் சாஹியை பேசிய வார்த்தைகள் ஒரு பொழுதும் மனதளவில் இருந்து கிடையாது. ஏதோ ஒரு ஆத்திரம் கோபம். தன் முன் இரண்டு உயிர் துடித்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.என்ன செய்கிறோம் யார் மீது கோபத்தை காட்டுகிறோம் என்று தெரியாத தடுமாறிய நிலையில் அவளிடம் பேசி விட்டான்.

ஆயிரம் காரணங்களை கூறினாலும் அதை நியாய படுத்தி விட இயலாது தான்.

சாஹியின் பிடிவாதம் அறிந்தவனால் அதற்கு மேல் அவளை தொல்லை செய்திட இயலவில்லை.

வீரபாண்டி இழப்பில் இருந்து மீள்வதற்கு சாஹிக்கு அதிக காலம் தேவைப்பட்டது.

மிகவும் சிரம்பட்டே தன்னை மீட்டெடுத்தாள். சிவகாமியிடம் எதுவும் கூறாமல் "எனக்கு அவங்களை பிடிக்கலை நான் போக மாட்டேன்" என்று மட்டும் கூறினாள்.


அவர் எப்பொழுதுமே வீரபாண்டியின் நிழலிலே வாழ்ந்தவர். வாயில்லா பூச்சி, மகளின் வாழ்க்கையை நினைத்து கடவுளிடம் கண்ணீர் விடுவதை தவிர வேற எதுவும் செய்ய இயலாத நிலை.


யார் கேட்டாலும் அதே பதிலை கூற காமாட்சி, ரதி எல்லாரும் பேசி பார்த்தும் தன்னிலையில் இருந்து இறங்க வில்லை. அவளது பிடிவாதத்தினால் அதற்கு மேல் யாரும் எதுவும் செய்ய வில்லை.


எப்பொழுதும் எதையாவது வெறித்துக் கொண்டே அமர்ந்திருப்பாள். எல்லாவற்றிலும் ஒரு எரிச்சல்,கோபம்.

குழந்தைக்காக சிறிதளவு சாப்பிடுவாள். சிவகாமிக்கு கணவர் இழப்பிலிருந்தே மீள முடியாத நிலையில் மகளின் நிலை அதை விட வருத்தியது.


நாட்கள் வேகமாக கடக்க சாஹிக்கு பெண் குழந்தை பிறந்தது. அருள் அவனது உடல் மட்டுமே அங்கிருக்க உயிர் முழுவதும் சாஹியை சுற்றி தான் இருந்தது.

அவனும் அன்றைய நிகழ்விற்கு பிறகு மனதளவில் முழுவதுமாக மரித்து தான் வாழ்ந்தான். சாஹியை உடனே சமாதானம் செய்திட இயலாது. அவளது கோபம் தீர காயம் ஆற நாட்கள் தேவை என்பதை உணர்ந்து அவளை தொந்தரவு செய்யவில்லை.
எழில் மூலம் அவளுக்கு தெரியாமல் அவளை பார்த்துக் கொள்வான். குழந்தையை கூட பிறந்தவுடன் வீடியோ அழைப்பில் அவனுக்கு காட்ட அந்த பிஞ்சின் முகத்தை பார்த்த நொடி அவ்வளவு ஒரு பரவசம் அவனுக்கு. கை இப்பொழுதே தன்னுயிரை ஆட்கொள்ள பரபரத்தாலும் அது வெறும் காட்சி படம் மட்டுமே என்பதை மூளை உணர்த்த தவறவில்லை.


இந்த குழந்தையாவது தங்களை இணைத்து விடாதா? என்ற பேராவல்.


உயிர்ப்பில்லாத சாஹியையுமே மீண்டும் ஓட வைத்தது விஷாலி மட்டுமே. குழந்தைக்கு விஷாலி என்று பெயரிட்டாள்.

ஒரு வருடம் எவ்வாறு உருண்டோடியது என்று தெரியாத அளவிற்கு அவளது நேரத்தை ஆட்கொண்டாள் விஷாலி.

சிவகாமிக்கும் வீட்டிற்கு ஒரு புது வரவு சற்று ஆனந்தத்தை கொடுக்க இருவரும் அவளது குழந்தை தனத்திலே லயித்து விட்டனர்.


அதற்கு பிறகே சற்று வெளியுலகை நினைத்து சிந்தித்த சாஹி அந்த ஊரை விட்டு வெளியே வந்து தன்னுடைய உயர் கல்வியை தொடர்ந்தவளுக்கு கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்து விட்டது.

சிவகாமி குழந்தையை பார்த்துக் கொள்ள அவள் வேலையை தொடர்ந்தாள். அவளுக்கு பணம் என்றுமே பிரச்சனையாக இருந்தது கிடையாது. தேவைக்கு அதிகமாகவே வீரபாண்டி சேர்த்து வைத்திருந்தார்.

வேலை அவளது அழுத்தத்தை குறைத்து ஒரு வித அமைதியான நிலையை கொடுத்து.

அன்று இறுதியாக அருளிடம் பேசியதோடு சரி. அதற்கு பின் அவனை பற்றியோ பேச்சுக்களையே முற்றிலுமாக தவிர்த்தவள் அவனது குடும்பத்தையும் ஒதுக்கி விட்டாள்.


இப்பொழுது அவளுடைய உலகில் விஷாலி சிவகாமி அன்றி வேறொருவருமில்லை. எழில் அவ்வ பொழுது வந்து குழந்தையை பார்த்து செல்வான்.

அது அருளின் ஏற்பாடு என்று அவளுக்கு தெரிந்தும் தடுக்க வில்லை. தனக்கு எவ்வாறு விஷாலி மீது உரிமை இருக்கிறதோ அதே போல் தான் அருளுக்கும் என்றுணர்ந்தவள் ஒரு பொழுதும் அதை மறுக்க வில்லை.


விஷாலி பேச ஆரம்பித்தவுடன் எழில் வீடியோ அழைப்பில் அருளிடம் பேச செய்திருக்கிறான். அருளும் அவளிடம் பலமுறை பேசுவான். தூர இருந்தாலும் அவனுடைய இரத்தமாயிற்றே. எளிதில் அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.அவளிடமிருந்து முழுமையான அருளை விலக்கி வைத்த சாஹிக்கு விஷாலியிடமிருந்து விலக்க மனம் வரவில்லை.


அருள் அவளுக்கு வாங்கி அனுப்பும் பொருட்கள் எல்லாமே எழில் மூலம் வந்து சேரும். சிவகாமிக்கும் எப்படியாவது மகள் அருளுடன் சேர்ந்து வாழ்ந்து விட வேண்டும் என்ற எண்ணம்.

தனக்கு பின்னால் அவள் தனித்து விடக் கூடாது என்ற ஆதங்கம் இருக்க தான் செய்தது. அவளிடம் அருளை பற்றி பேசினாலே கோபம் அவ்வளவு வரும்.

அதனால் அதை கை விட்டு இப்பொழுது மருமகனிடம் பேச ஆரம்பித்தார். அவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. சாஹியே விட்டாலும் அருள் விட மாட்டான் என்று.

பாட்டி பேத்தி இருவரும் அவனுடன் நெருக்கமாகி விட சாஹிக்கு தான் மட்டும் தனித்து விடப் பட்டது போன்றதொரு உணர்வு. ஆனால் அதையெல்லாம் தன்னை தாக்கதளவு வேலையை அதிகரித்து அதனுடன் ஒன்றி முழ்கி விடுவாள்.

திவ்யா முதலில் குழந்தையை நினைத்து சாப்பிடாமல் அழுதாள். பின்பே கொஞ்ச கொஞ்சமாக தேறி வந்து விட்டாள். சாஹி இல்லாததால் அவர்களின் வீட்டை மொத்தமாக காலி செய்து விட்டு ஜெயாவுடனே குடியேறி விட்டாள். அவளுக்கு அடுத்ததாக மற்றொரு குழந்தையும் பிறந்து விட்டது. எழில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறான்.

சுற்றி சுற்றி கடன் வாங்கி வைத்து. ஆனால் எதுவுமே திவ்யா காமாட்சி காதுகளை எட்டாதா வரை பார்த்துக் கொண்டு. அடிக்கடி அருளின் உதவியை நாடுவான். அவனும் திவ்யாவிற்கு தெரிந்து சில சமயமும் தெரியாமல் சில சமயமும் என அவனுக்கு கைக் கொடுத்து கொண்டிருந்தான்.


விஷாலி பள்ளிக்கு சென்று கொண்டிக்கிறாள்.இதோ அருள் சென்று நான்கு வருடம் முடிந்து விட்டது. ப்ராஜெக்ட்டும் வெற்றிகரமாக முடிந்து விட கிளம்பி விட்டான் மகளையும் மனைவியையும் பார்க்கும் ஆர்வத்தில்.


அன்று இரவே வந்து விட்டவனுக்கு மனைவியே பாரக்கவும் குழந்தையை கைகளில் அள்ளி தூக்கவும் ஆர்வம் உந்த நேரத்தை பார்க்க மணி மூன்றை காட்டியது.


'இந்த நேரத்தில வேணாம் கொஞ்சம் விடியட்டும்' என மனதை கட்டுபடுத்தியவன் கண்களில் சாஹியே தோன்றினாள்.


'எவ்வளவு அழுத்தம். ஒரு வார்த்தை கூட பேச வில்லை. இத்தனை வருடங்களில் எவ்வளவோ கெஞ்சியும் விட்டான். முகம் பார்க்க கூட மறுத்து விட்டாளே!" என நினைத்தவனுக்கு அவளின் திமிரின் மீது கோபம் எழாமலும் இல்லை. ஆனால் அந்த திமர் கொண்ட பார்வைக்காக தானே அவள் பின்பு சுற்றினாய் என அவனையே மனது சாட மெல்லி புன்னகை அரும்பியது.

நேராக வீட்டிற்கு சென்று பொருட்களை எல்லாம் வைக்க, மகனை பார்த்த ஜெயாவிற்கு ஒரு நிமிடம் கண்ணீரே வந்து விட அணைத்துக் கொண்டார்.

"ம்மா..என்ன இது. காலையில பேசிக்கலாம்" என அவரை அதட்டி உறங்க அனுப்பி விட்டு எப்பொழுது விடியும் என தவித்து கொண்டிருந்தான்.

'அவள் என்னை பார்த்தவுடன் அடிப்பாளா? திட்டுவாளா? இத்தனை வருஷத்தில் என் மேல கோபம் கொஞ்சம் கூடவா குறையாம போயிருக்கும்' என அவளையே நினைத்து மருகியவன் ஐந்து மணி போல் கிளம்பி சென்று காரை அவளின் வீட்டு வாசலில் நிறுத்து அமரந்திருந்தான்.

நன்றாக விடிந்தவுடன் காரிலிருந்து இறங்கி உள்ளே நுழைய அவனது கால்கள் ஒரு நிமிடம் நடுங்க தான் செய்தது.


'எதுக்கு வந்தனு கேட்டு வெளிய அனுப்பிடுவாளோ? கத்தி கலாட்டா பண்ணுவாளோ?' என்று தன் மனதை அலை பாய விட்டவனுக்கு என்ன இருந்தாலும் அவள் என் மனைவி என்ற எண்ணமே ஓங்க காலிங் பெல்லை அழுத்தி விட்டான்.


காலையில் எழுந்த சாஹி ஷோபாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க விஷாலி அவள் மடியில் அமர்ந்து சிவகாமி கொடுத்த பாலை குடித்துக் கொண்டிருந்தாள். சிவகாமி அடுப்பறையில் நின்று கொண்டிருந்தார்.காலிங் பெல் ஒலிக்க, 'இந்த நேரத்தில் யாரா இருக்கும்' என்றெண்ணியவள் கதவை திறக்க போக விஷாலியும் அவள் சேலையை பிடித்துக் கொண்டு பின்னாலே சென்றாள்.

கதவை திறந்த சாஹி அருளை கண்ட நொடி உறைந்து நிற்க அவளின் முன்னால் வந்த விஷாலி அவனை அடையாளம் கண்டு வேகமாக, "அப்பா" என அவனது காலை கட்டிக் கொண்டாள்.

தொடரும்..
 
Top