• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 25 & 26

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
அத்தியாயம் 25


அழைப்பை பேசி துண்டித்து வெளியில் வந்த அக்ஷி கண்டது என்னவோ உறைந்த புன்னகையுடன் மகனை வருடிக் கொண்டிருக்கும் ஜோஷை தான். அவனின் ஒரு கை மகனை வருட மற்றொரு கரமோ மார்போடு அணைத்து பிடித்திருக்க ஹர்ஷித்தோ தனக்கு தெரிந்த மழலை மொழியில் மிழற்றிக் கொண்டிருந்தான் தூரத்தில் தெரிந்த பொருட்களை கைக்காட்டி புன்னகை முகமாக.


அந்த வார்த்தைகளை அவன் அசைவுகளை உள்வாங்கி கிரகிக்க முயன்ற அந்த நிமிடம் ஜோவின் விழியில் தெரிந்த பூரிப்பும் புன்னகையும் அக்ஷியின் தொண்டையை உருண்டு வந்து அடைக்க செய்தது. ஆழமானதொரு வலி இதயம் முழுவதும் விரவத் துவங்க விழிகளை திரையிட நீர் முயன்றது. வெகு பிரயத்தனப்பட்டு உள்ளிழுத்து கொண்டவள் அந்த நிமிடங்களை நீட்டிப்பு செய்ய விரும்பி அப்படியே சிறிது நேரம் நின்று கொண்டாள் அறையின் கதவிலே சாய்ந்து நின்றபடி. ஜோஷின் பார்வை எதார்த்தமாக அவளின் மீது படிய புருவம், 'என்ன' என்று வினாவாய் ஏறி இறங்கியது.

'ஏதுமில்லை' என்பதாய் இருபுறமும் தலையசைத்து அவனருகில் வந்து அமர்ந்து கொண்டவள் தொண்டையை செருமி, "நாங்க கிளம்பணும் ஜோஷ், எனக்கு நாளைக்கு மீட்டிங் இருக்கு" என்றாள் வெளி வராத சின்ன குரலில். அந்த நிமிடம் அதன் கனம் இருவரையும் ஒரு சேர தாக்கி பூமியினுள் அமிழ்த்த முயன்றது.


அவளின் வார்த்தைகளை கேட்டதும் ஜோஷின் வதனம் சற்று முன்பு சூடியிருந்த பிரகாசத்தை நொடியில் பறிகொடுக்க அவளின் முன் தன்னை இயல்பாய் காட்ட வெகு பிரயத்தனப்பட்டவன் இறுதியில் சட்டென்று அவ்விடத்தை விட்டு அகன்று விட்டான். நிறுத்தி வைத்திருந்த அக்ஷியின் கண்ணீர் மீண்டும் பிரவாகமாக முயல அவனின் பின்பே பார்வையை அலைய விட்டவள் வெறித்தபடியே அமர்ந்திருந்தாள்.

அருகிலிருந்த டேபிளில் உள்ள பொருட்களை எட்டி எடுத்த ஹர்ஷித் தூக்கி எறிந்து அவளின் கவனத்தை கலைத்தான். மகனை கைகளில் அள்ளிக் கொண்டவள் எழுந்து நின்று தன்னை நிதானம் செய்து ஜோஷை தேடிச் சென்றாள்.


பால்கனியில் நின்றிருந்தவன் விழிகளோ வீதியில் பறந்து கொண்டிருந்த வாகனங்களின் மீது இலக்கில்லாமல் அலை பாய்ந்து கொண்டிருக்க மனதோ நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. அக்ஷியை பார்க்காதவரை எதுவும் தெரியவில்லை ஆடவனுக்கு. அன்றொரு முறை விமான நிலையத்தில் நவீனோடு பாவையை கண்டு வந்த பிறகு அதன் பிரதிபலனாய் பலநாள் தூக்கத்தை பறிகொடுத்திருந்தான். சிறிது காலமென்றாலும் எல்லாவுமாய் இட்டு நிரப்பியவள் இன்று யாரோவாய் மாறி தூர தள்ளி நிற்பது அப்படியொரு அழுத்தத்தை கொடுத்தது ஆடவனுக்கு. அவளை கடந்து வெளி வர எவ்வளவோ முயற்சித்தும் ஏதோ ஒரு கணங்களிலாவது அவனின் நினைவை ஆக்கிரமிக்காமல் இருந்ததில்லை.



ஆடவனின் இலக்கற்ற பார்வையும் அதில் தெரிந்த பரிதவிப்பும் அக்ஷியை சுணங்க செய்தது. அந்த நிமிடங்களையும் தங்களின் இயலாமையையும் அறவே வெறுத்தது மனது. ஜோஷிற்கு அவள் வரும் அரவம் கேட்கிறது ஆனால் நிமிர்ந்து பார்க்கும் எண்ணமின்றி பெருமூச்சுக்களை எடுத்து தன்னை நிலை நிறுத்த முயன்றான்.



"ஜோஷ்" என்று அழைத்த அக்ஷி தொண்டையின் நீரெல்லாம் வற்றி தான் போயிருந்தது. தலையை மட்டும் திருப்பி அவளுக்கு தரிசனமளிக்க முயன்ற அந்த விழிகளில் தெரிந்த அந்த நிராதரவான உணர்வு, வெற்று பார்வை பாவையின் உயிரை ஒரு நிமிடம் அசைத்து தான் பார்த்தது.



அத்தனை உரிமையாய் அவனை தேடி வந்த மனதால் என்னை ஏற்றுக் கொள் என்று அவ்வளவு சுலபத்தில் யாசிக்க இயலவில்லை. ஆம், இன்று யாஷ் வந்து நவீன் விலகி விட்டான். ஆனால் அவன் தன்னுடைய வாழ்விலே எஞ்சியிருந்தால் நினைக்கவே உடம்பு நடுங்கியது. யாரின் மேல் என்று தெரியாது அப்படியொரு கோபமும் கண்ணீரும் ஆற்றாமையோடு பொங்கி பிரவாகமாக, முயன்று தன்னை நிலை நிறுத்த முயன்றாள். ஏதோ சரியில்லை என்று ஜோஷாலும் உணர முடிகிறது ஆனால் சட்டென்று வாய் திறக்க இயலாதவாறு ஒரு தயக்கம் சூழ்ந்து கொண்டது இருவரையும்.


அக்ஷியின் மனது நடந்து விட்டவற்றையும் நடந்து கொண்டிருப்பவற்றையும் அசைப்போட்டு கிரகிக்க முயல சிவக்குமார் மீது அப்படியொரு கோபம் பிரவாகமாக பொங்கியது. 'ச்சீ...என்ன மனிதர் இவர், என்னை என்னுடைய வாழ்க்கையை கூட கருத்தில் கொள்ளாது எப்படி ஜோஷை துன்புறுத்த முடிந்தது. அதிலும் செய்வதை செய்து விட்டு தன்னை வசை பாடியதென்ன அடிக்க பாய்ந்தது என்ன?' என்றெல்லாம் எண்ணியவளுக்கு ஒரு வித அசூசையான உணர்வு. உடம்பே கூசியது அவரை குறித்த எண்ணங்களால். ஜோஷை காணும் பொழுது பொங்கி பெருகும் குற்றவுணர்வை அடக்க இயலவில்லை. அவளாக எதுவுமே செய்யவில்லை ஆனால் நடந்தேறிய கொடூரம் என்னவோ அவளின் பொருட்டு தானே! நெஞ்சம் விம்மியது, எதையுமே தன்னிடம் காட்டாது இத்தனை இயல்பாய் கையாளும் ஜோஷை காணும் பொழுது. அப்பா என்று மீதம் ஒட்டியிருந்த சில துளி பாசத்தை கூட தூக்கி எறிய மனது விழைந்தது. மேலெழும்பும் குற்றவுணர்வை குறைக்க வழியறியாது தவித்த மனது அந்த கணத்தையும் அச்சூழலையும் விட்டு எங்காவது ஓடி ஒளிந்து கொள்ளும்படி உந்தியது.


"கிளம்புறேன் ஜோஷ்" என்ற வார்த்தையை கூறி முடிப்பதற்குள் வெகுவாகவே தடுமாறி திணறினாள். இருவராலும் சூழலின் கனத்தையும் தகிப்பையும் தாங்க இயலவில்லை. எந்த வித பிரதிபலிப்புமின்றி அவன் நின்றிருக்க அக்ஷியின் கால்கள் ஒரு நிமிடம் தயங்கினாலும் மனது உந்தி தள்ளியது அவ்விடத்தை விட்டு அகன்று விடும் படி.


வாயில் வரை வந்து விட்டு திரும்பி ஆடவனை பார்த்தவளின் விழிகள் அப்பட்டமாய் தன்னுடைய ஏமாற்றத்தை பிரதிபலித்தது. ஆம், ஜோஷின் விழிகளை படிக்க முயன்று தோற்றவள் நிமிடத்தில் தன்னை தேற்றிக் கொண்டு தலையசைத்து வெளியே நோக்கி நடந்து விட்டாள். அங்கிருப்பதே அப்படியொரு அழுத்தத்தை கொடுத்தது.



வழியும் கண்ணீரை பொருட்படுத்தாது மகனுடன் கீழிறங்கி விட்டவள் பதிவு செய்த மகிழுந்திற்காக வீதியில் காத்திருக்க துவங்க வீட்டை பூட்டிய ஜோஷ் மகிழுந்துடன் அவளின் முன் வந்து நின்றான் கதவை அவளுக்காக திறந்து விட்டப்படி.


'ஏறு' என்று கூறவில்லை ஆனால் அவனுடைய செயல் யோசிக்காது பாவையை மகிழுந்தில் ஏற செய்திட்டது. "எங்க போகணும்" என்றவன் அவளின் பதிலில் வாகனத்தை விமான நிலையத்தை நோக்கி செலுத்தினான். ஹர்ஷித் தான் மகிழுந்தில் ஏறிய குதூகலத்தில் மகிழுந்து கண்ணாடியை தட்டி, "ஆஆ..ஊஊ" என ஒலி எழுப்பியபடி வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் இருக்கையிலிருந்து எழுந்து நின்றபடி.



ஜோஷின் விழிகள் சாலையை தவிர்த்து அக்ஷி புறம் சிறிதளவேணும் கூட திரும்பவில்லை. ஒரு வித இறுக்கமான மனநிலையில் அமர்ந்திருந்தான். அவனின் மனதை, 'நானும் என் பையனும் அனாதை. எங்களை யார் தேட போறா?' என்று பாவை கூறிய வார்த்தைகளே நிரப்பி இருந்தது. அவளிடம் நிறைய பேச கேட்க மனது பிரியபட்டாலும் இதழும் மூளையும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஏதோ தான் கையறுநிலையில் நிற்பது போலொரு பிரம்மை மனதை வியாபிக்க குளிர்சாதனபெட்டியின் குளிரை மீறி ஆடவனுக்கு வியர்த்து வழிந்தது. அவ்வப்பொழுது கைக்குட்டையால் முகத்தை துடைத்தபடி மகிழுந்தை சீராக இயக்கிக் கொண்டிருந்தவனை அக்ஷியின் விழிகள் இமைக்க மறந்து பார்த்திருந்தது. அவனை பாவையின் பார்வை வீரியம் தாக்கினாலும் எதிர்வினையாற்றாது அமர்ந்திருந்தான்.


சிறிது நேரத்திற்கு மேல் பொறுக்க இயலாதவளாக அக்ஷி தான், "ஜோஷ் ஆர் யூ ஓகே?" என்றாள் தயங்கிய குரலில். "யா, ஐயம் ஓகே ஓகே" என்று பதிலளித்தவன் பார்வை மட்டும் அவளின் புறம் திரும்பவே இல்லை.


அவனையே பார்த்திருந்தவளுக்கு ஆடவன் செயல்கள் ஒரு வித ஆற்றாமையை கொடுத்தது. "என்னை நீங்க பார்க்க முடியாதளவுக்கு தப்பு பண்ணிட்டேனா ஜோஷ்?" என்றவளுக்கு கண்ணீர் பொங்கி பெருக அதற்கு மேல் வார்த்தைகள் வெளி வராது தொண்டை அடைத்தது.


அவளின் வார்த்தையில் சட்டென்று மகிழுந்தை ஓரம் கட்டியவன் அமைதியாய் அமர்ந்து விட்டான். சில நிமிடங்கள் மூச்செடுத்து தன்னை நிதானம் செய்து கொண்டு தண்ணீர் பொத்தலை எடுத்து அவளின் புறம் நீட்டிட மறுக்காது வாங்கி பருகினாள். நன்றாக அவளின் புறம் திரும்பி அமர்ந்தவன், "நீ என்ன பண்ற அக்ஷி? ஐ மீன் எங்க இருக்க? யார் கூட?" என்று சற்று தயங்கி, "நான் கேட்க வரது உனக்கு புரியுது தானா?" என்றான் தவிப்போடு. உன் திருமண வாழ்க்கையும் கணவனும் என்னவாகிற்று என்று கேட்க தோன்றினாலும் மனதும் இதழும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அவளின் கணவன் என்ற நிலையில் யாரையும் நிறுத்தி அல்ல குறிப்பிடுவது கூட ஆடவன் மனதிற்கு உவப்பானதாக தோன்றவில்லை. ஆம், அவள் நகர்ந்து வெகுதூரம் சென்று விட்டாள் ஆனால் அவனோ அந்த காயங்களின் எச்சங்களில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறான். வெளிப்புறத்திற்கு அவன் மாற்றமடைந்து ஓடுவது போல் காட்டிக் கொண்டாலும் மனதளவில் அவன் அக்ஷி என்ற பேதையிலிருந்து வெளி வந்திடவில்லை. ஆனால் அவளை தேடி செல்லவும் விருப்பப்படவில்லை.


ஆடவனின் வார்த்தையை கிரகித்தவள் அமைதியாய் அவனை பார்த்தப்படி அமர்ந்திருக்க, "சொல்ல விருப்பமில்லைன்னா வேணாம் அக்ஷி" என்றான், 'எங்கே தவறாக புரிந்து கொள்வாளோ' என்ற பரிதவிப்போடு.


பெருமூச்செடுத்தவள் எந்தவித அலட்டலுமின்றி தேங்கிய புன்னகையோடு ஜோஷ் தன்னை விட்டு சென்றதிலிருந்து தற்பொழுது யாஷ் திரும்பியது வரை பகிர்ந்து கொண்டாள்.



கூறியவளின் இதழில் கரைய விருப்பாத புன்னகை நீந்திக் கொண்டிருந்தாலும் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அத்தனை உவப்பதானாக இருக்கவில்லை. ஒரு வித அதிருப்தியுடன் தான் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தான், அக்ஷியின் மீது அவளின் சூழலின் மீதும் பரிதாபம் கொண்டு. ஆனால் பெண்ணை பிடித்தது அதிலும் அவளின் தைரியத்தை அதிகமாகவே பிடித்தது. முன்பை போல அதிகமாக வளவளக்க வில்லை அதற்காக பேசாமலும் இல்லை. தேவைக்கு பஞ்சமில்லாது அவளவாய் பேசினாள். புன்னகை மட்டும் இதழோடு நின்று கொண்டது கண்களை எட்டவேயில்லை.



அமைதியாய் கேட்டுக் கொண்டவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அக்ஷியும் அதை எதிர்பார்க்கவில்லை. ஹர்ஷித் வேறு கண்களை தேய்த்து தூக்கத்திற்காக சிணுங்க துவங்க தட்டிக் கொடுத்து உறங்க வைக்க முனைந்தாள். விமானநிலையத்தின் வாயிலில் மகிழுந்தை நிறுத்தியவன் அக்ஷியையே பார்க்க அந்த விழிகள் கொடுக்கும் பாவனையை பிடிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் பெண். ஆம், என்ன நினைக்கிறான் என்னை விட்டு செல்லாதே என்றா? இல்லை பரிதாபம் கொள்கிறானா? காதலா? ப்ச்...பிடிக்க முடியவில்லை மனதால். அலைப்புற்றது விழிகளோடு இணைந்து மனதும்..


தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கீழிறங்கியவள் கால்கள் நகர மறுத்து நின்றது. ஆம், ஏதோவொன்று பாவையை பிடித்து பிணைத்துக் கொள்ள முயல ஜோஷூம் விழியசைக்காது அவளையும் அவளது தோளில் சுகமான நித்திரையில் ஆழ்ந்திருந்த ஹர்ஷித்தையும் பார்த்திருந்தான். எல்லாம் நொடி நேரம் தான், பின்னால் நின்றிருந்த மகிழுந்தின் ஹாரன் ஒலி இருவரையும் கலைக்க தலையசைத்த அக்ஷி விமான நிலையத்தின் உள்ளே நோக்கி நகர்ந்து விட்டாள். அதற்கு மேல் அவனது பார்வை வீரியத்தை பெண்ணால் எதிர்கொள்ள இயலவில்லை. ஏனோ நெஞ்சடைப்பது போலொரு உணர்வு. இருவருக்குமே மனது முழுவதும் நிரம்பியிருந்த வெறுமையுணர்வை எவ்வாறு நீர்த்து போக செய்வது என்று புரியவில்லை.

அவளையே பார்த்திருந்த ஜோஷிற்கும் இயலாமை வந்து தொண்டையை அடைக்க வார்த்தைகள் வெளி வர மறுத்தது. அந்த சூழலும் சற்று முன் பெண்ணவள் கூறிய வார்த்தைகளும் ஆடவனின் மூளையை ஏனோ மரத்து போக செய்திருந்தது. சூழல் ஏதோ தங்களை மீறி ஆட்டுவிப்பது போலொரு பிம்பம் இருவருக்குமே!


பின்னிருந்து மீண்டும் ஹாரன் ஒலி ஜோஷை கலைக்க சட்டென்று வாகனத்தை திருப்பி அதிவேகத்தில் விமானநிலையைத்தை விட்டு வெளியேறி விட்டான். ஆம், உடைய முயலும் மனதை இழுத்து பிடிக்குமளவிற்கு உண்மையிலே அவனிடம் திராணி இல்லையென்று தான் கூற வேண்டும். அவளையும் மகனையும் தன்னுடனே இருத்திக் கொள்ள வேண்டும் என மனது பேரவா கொண்டாலும் சட்டென்று அதை செயல்படுத்த முடியாதளவு இடைவெளியொன்று இருவரின் முன்னும் வந்து நின்று கொண்டு வார்த்தைகளுக்கு தடை போட்டு விடுகிறது.


நின்று சீறிச் செல்லும் அவனின் மகிழுந்தை பார்த்திருந்த அக்ஷின் விழிகள் நீரை விழுங்கி கொள்ள நிமிடத்தில் சுதாரித்து பெண்ணவளும் உள்ளே நகர்ந்து சென்று மறைந்து விட்டாள்.


தொடரும்....














 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
அத்தியாயம் 26



டேபிளில் தலை சாய்த்திருந்த அக்ஷியின் கவனம் ஏனோ அங்கிருந்திருக்கவில்லை. மனம் முழுவதும் ஜோஷ்வாவை சுற்றியே அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஆகி விட்டது ஆடவனை கண்டு வந்து ஒரு வாரத்திற்கு மேல். மீட்டிங் சென்று வீடு திரும்பியவள் இரண்டு நாட்களாக அலுவலகம் செல்லாமல் விடுப்பில் தான் இருக்கிறாள். மனது அத்தனை ஆயாசமாக உணர்ந்தது. ஆடவனை காணாத வரை அவ்வளவு தைரியமாக இருந்தவளுக்கு தற்பொழுது பலமனைத்தையும் இழந்தது போலொரு பிரம்மை. 'அவன் வேண்டுமென்பதிலே' முரண்டு பிடித்து மனது சுழன்றது. ஆனால் மூளையோ அது நியாயமில்லை என்று வாதாட மூளைக்கும் மனதிற்கும் நடக்கும் போராட்டத்தில் பெண் தான் தவித்து துடித்து போனாள். மீண்டும் அவனை தொடர்பு கொள்ளுமளவிற்கு பாவையிடம் துளியும் சக்தியில்லை. ஆனால் ஆடவனின் முகமும் அவன் விழிகளில் தெரிந்த தவிப்பும் பாவையின் மொத்த உறக்கத்தையும் களவாடியிருந்தது என்னவோ உண்மை.


சிவக்குமாரின் இத்தனை செய்கைக்கு பின்பும் ஜோஷ் தன்னிடம் திரும்பி வருவான் என்று ஒட்டியிருந்த துளி நம்பிக்கையும் முழுவதுமாக கடந்த ஒரு வாரத்தில் இழந்தே போனாள் பேதை. ஆக ஏதோவொன்று உருண்டு வந்து அழுத்தியது. சூழலை உணர்ந்தாலும் மனதால் ஏற்க முடியவில்லை. கண்களை மூடியிருந்தவளை அழைப்புமணி கலைத்தது. அப்பொழுது தான் ஹர்ஷித் நினைவே அவளுக்கு வந்தது.


'இந்த பையனை எங்க காணோம், கவனிக்காம விட்டுடேனே!' என்று தலையை தட்டிக் கொண்டவள், "ஹர்ஷித்" என்று குரல் கொடுத்து பார்வையை பால்கனி, அடுப்பறை, அறை என சுழல விட்டப்படி வாயிற்கதவை நோக்கி சென்றாள். ஆம், மீண்டுமொரு முறை அழைப்புமணி ஒலித்திருந்தது.


ஹர்ஷித்தை விழிகளால் துழாவிய படி கதவை திறந்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றாள். ஜோஷ்வா நின்றிருந்தான் இதழில் லேசாக ஒட்டியிருந்த புன்னகையோடு. அன்று இருந்த தவிப்பெல்லாம் மொத்தமாக வடிந்திருந்தது ஆடவன் விழிகளில். ஆர்பரிப்போடு நின்றிருந்தவன் கைகள் பொம்மைகள், சாக்லேட்கள் நிரம்பிய பைகளை சுமந்திருக்க விழிகளோ அக்ஷியை தாண்டி பின்னால் ஹர்ஷித்தை தேடி அலைபாய்ந்து கொண்டிருந்தது.


"அக்ஷி" என்று அழைத்தப்படி அடுப்பறையில் இருந்து வெளியில் வந்த ஹர்ஷித் உடல் முழுவதும் மாவால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. சற்று முன் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த ஐஸ்கிரீமை எடுத்து தரும்படி அவளிடம் மல்லுக் கட்டியிருந்தான். "போதும் ஹர்ஷித் நிறைய சாப்பிடக் கூடாது. மீதிய நாளைக்கு சாப்பிட்டுக்கலாம் பீவர் வந்திடும்" என்று மிரண்டி குளிர்சாதனபெட்டியில் வைத்து விட்டு வந்து அமர்ந்தவள் அசந்த நேரத்தில் அடுப்பறை புகுந்து அவனுடைய திருவிளையாடலை நிகழ்த்தி இருந்தான்.


அவனின் கோலத்தை கண்ட நொடி ஜோஷ் முகத்தில் அப்படியொரு விரிந்த புன்னகை எழ அக்ஷியோ வெறி கொண்டு ஹர்ஷித்தை முறைத்தாள். ஆனால் ஹர்ஷித்தோ அவளின் முறைப்பை பொருட்படுத்தாது அவளை தாண்டி நின்ற ஜோஷ் பின்னால் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டான். ஆம் பிறகு யார் தர்ம அடிகளை பெற்றுக் கொள்வது.


"ஹர்ஷித் இங்க வா" என்றவள் மிரட்டும் தொனியில் அழைக்க தலையை மட்டும் எட்டி பார்த்தவன் கரங்களோ ஜோஷ்வாவின் கால்களை நன்றாக இறுக்கி பிடித்திருந்தது. அவனது செய்கை பெண்ணிற்கும் புன்னகையை வர வைத்தாலும் முகம் மாறாது கடுமையோடு அதட்டிக் கொண்டிருந்தாள். ஆம், அவள் சற்று இளகினாலும் மீண்டும் அச்செயலை செய்ய துணிவான் என்பதால்.


ஜோஷ் புன்னகையோடு தன் கையிலிருந்த பையை அக்ஷி புறம் நீட்டிட தயங்கினாலும் மறுக்காது பெற்றுக் கொள்ள ஜோஷ் யோசிக்காது ஹர்ஷித்தை கைகளில் அள்ளிக் கொண்டான்.


"வாஷ்ரூம் எங்க இருக்கு" என்றவன் அவள் கைக்காட்டிய திசையை நோக்கி நகர கதவை தாழிட்டவள் கையிலிருந்த பொருட்களை டேபிளில் வைத்து அப்படியே அமர்ந்து கொண்டாள் சில நிமிடம் ஹர்ஷித்தின் செயலில் உண்டான புன்னகையோடு.

ஜோஷ் மகனின் உடையை களைந்து சுத்தம் செய்து வெளியில் வர அக்ஷியோ ஹர்ஷித்திற்கான உடையை எடுத்து வைத்து விட்டு அடுப்பறை நுழைந்து கீழே கொட்டியிருந்த மாவை துடைத்து சுத்தம் செய்து ஜோஷிற்கு தேநீர் தயாரிக்க துவங்கினாள்.


உடை மாற்றி வெளியில் வந்த ஹர்ஷித்தோ ஜோஷ் வாங்கி வந்த இனிப்புகளை உண்டு பொம்மைகளை ஆராய துவங்கி விட ஜோஷ் மகனருகிலே தரையில் அமர்ந்து கொண்டான் கரைய விரும்பாத புன்னகையுடன். ஹர்ஷித் அவ்வப்பொழுது கையில் வைத்திருந்த சாக்லேட்டை 'வேண்டுமா' என ஜோஷை நோக்கி நீட்டி அவனுக்கு சிறிது ஊட்டி தரையெல்லாம் சிந்தி உண்டு கொண்டிருந்தான். தேநீர் குவளையோடு வெளியில் வந்த அக்ஷி மகனை முறைத்தப்படி குவளையை ஜோஷ் புறம் நீட்ட அவளின் பாவனையில் ஜோஷ் தான் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான்.
ஆம், அப்படியொரு விரிந்த புன்னகை ஆடவன் வதனத்தில். இமைக்க மறந்து பார்த்திருந்த அக்ஷிக்கு ஏனோ மனம் வாடி தான் போனது. எத்தனை நாட்கள் ஆகி போனது ஆடவனின் புன்னகையை கண்டு.


"உனக்கு" என்று கேட்ட ஜோஷ் குவளையை கைப்பற்றி பருகத் துவங்க, 'வேண்டாம்' என தலையசைத்த அக்ஷி அவர்களையே பார்த்தப்படி சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள் நாற்காலியில்.


ஜோஷ் தேநீர் அருந்தியபடி ஹர்ஷித்திடம் பேச்சுக் கொடுக்க அவனும் ஏதேதோ தனக்கு தெரிந்த மொழியில் பதிலளித்துக் கொண்டிருக்க பார்த்துக் கொண்டிருந்த அக்ஷிக்கு தான் அக்காட்சியை காண திகட்டவில்லை. ஏதோ எல்லாமே நொடி நேரத்தில் நிறைந்தது போல் மனது உணர்ந்தது. விழிகளை அப்படியே மூடிக் கொண்டாள். ஆம் அந்த காட்சிகள் மகன் கணவனின் பிம்பம் விழிகளை விட்டு அகலவே கூடாதென்று எண்ணி!....


ஹர்ஷித்தை அவ்விடத்தை சுற்றி ஓடிக் கொண்டிருத்தான் தனது கொலுசு சத்தம் ஒலிக்க. "பார்த்து, விழுந்திடாத, மெதுவா போ" என்று குரல் கொடுத்தப்படி ஜோஷூம் அவனின் பின்பே அலை பாய்ந்து கொண்டிருக்க எல்லாவற்றையும் விழிகளை மூடியபடி கிரகித்து உள்வாங்க முயன்று கொண்டிருந்தாள் பெண் நீங்காத புன்னகையை அதரத்தில் நிரப்பியபடி. மகனின் பின் சென்றாலும் ஜோஷின் விழிகள் அவ்வப்பொழுது மனைவியை தழுவி மீள மறக்கவில்லை. இருவரின் குரலும் தேய்ந்து ஒலித்து முற்றிலுமாக இல்லாமல் போய் விட அக்ஷி விழிகளை மலர்த்தி பார்த்தாள். ஓடி களைத்த ஹர்ஷித் அப்படியே ஜோஷ் மடியில் சாய்ந்து உறங்கியிருக்க அவனும் மகனை தாங்கியபடி கால்களை அசைக்காமல் அமர்ந்திருந்தான்.


அவன் புறம் எழுந்து சென்றவள் ஹர்ஷித்தை தூக்கி அறைக்குள் படுக்கையில் படுக்க வைத்து வெளியில் வர ஜோஷ் கைகளை கட்டிக் கொண்டு பால்கனி சுவற்றில் சாய்ந்து இவளை தான் விழியசைக்காது பார்த்து நின்றான்.


அருகில் செல்லவா வேண்டாமா என்று யோசித்தப்படி நின்றவளுக்கு அவனின் பார்வை அப்படியொரு அவஸ்தையை கொடுத்தது. அதாவது என்னவென்று பிடிக்க முடியாத பாவம் வதனத்தில். ஒரு காலத்தில் அவனின் விழியசைவையும் முக மாற்றத்தை வைத்தே கணித்தவள் தான் ஆனால் இப்பொழுதோ ஏதோவொரு தடுமாற்றம். இனம் புரியாத தயக்கம் வியாபிக்க நெற்றியை அழுத்தி தேய்த்தப்படி நின்றிருந்தவளை நோக்கி கைகளை விரித்து நின்றான். 'வா வந்து சரணடைந்து விடு' என்ற பாவனை கொடுத்து. அவனின் செய்கையில் சட்டென்று விழிகள் குளமாக கால்கள் உண்மையிலுமே நகர மறுத்தது தளர்ந்து போய்.


ஜோஷ் யோசிக்காது அவளை எதிர்பார்க்காது தானே பாவையிடம் விரைந்திருந்தான். அவன் மார்பில் சாய்ந்து கொண்டவளுக்கு அப்படியொரு அழுகை. ஆனால் அதையெல்லாம் மீறி ஒரு வித ஆசுவாசமும் கூட. 'எல்லாம் சரியாகி விட்டது' என்பதை போல் பேதையின் தலையை வருடியவன் கரங்கள் நடுங்கியது. வாழ்க்கை எப்பொழுதுமே நம்மளை வஞ்சித்து மட்டுமே விடுவதில்லையே!.


"உங்களுக்கு என் மேல கோபமில்லையே ஜோஷ்" என்றவள் அதற்கு மேல் பேச இயலாதவாறு திணற, அணைப்பை இறுக்கி 'பேசாதே' என்று மறுத்து தலையசைத்தவன் இதழ்கள் பாவையின் நெற்றியில் அழுத்தமாக பதிய உடலெல்லாம் சிலிர்த்து நடுங்கியது பாவைக்கு.


அதை உணர்ந்தாலும் அணைப்பை தளர்த்தாது இறுக்கி பிடித்துக் கொண்டான். இனி உன்னை விட மாட்டேன் என்பதை அவளுக்கு உணர்த்தும் விதத்தில்! ஆடவனை கிரகிக்க முயன்றவளுக்கு தன்னையறியாது கண்ணீர் சுரந்தது. "ப்ச்..அக்ஷி அழாதடி" என்று அதட்டியவனின் மார்பில் முகத்தை வைத்து அழுத்தியவள் அப்படியே அந்த நொடியே அவனுள் கரைய முனைந்தாள்.


இரண்டு வருடங்களுக்கு பிறகு,


அந்த இளம்காலை பொழுதில் பால்கனியின் கைப்பிடியை ஒருக்கையால் இறுக பற்றி நின்றிருந்த அக்ஷிதாவின் மற்றொரு கரத்தில் தேநீர் குவளை ஆக்கிரமித்திருந்தது. மிடறு மிடறாக உள்ளிறக்கியப்படி தூரத்தில் புள்ளிகளாக தோன்றி மறையும் வாகனங்களை வேடிக்கை பார்த்தப்படி இருந்தவள் கவனம் முழுவதும் மங்கையின் பேச்சுக்களிலே அலை மோதிக் கொண்டிருந்தது. "ம்மா..." என்ற சிணுங்கலோடு ஹர்ஷித் அவளை தேட முனைய சட்டென்று விழியை படுக்கையில் இருந்த மகனை நோக்கி திருப்பிருந்தாள். அவள் நகர எத்தனிக்க அதற்குள் அவனருகில் படுக்கையில் இருந்த ஜோஷின் கரங்கள், 'ஒண்ணுமில்லை' என்ற ரீதியில் மகனை தட்டிக் கொடுக்க ஹர்ஷித்தும் தந்தையின் கரங்களின் கதகதப்பில் மீண்டும் உறக்கத்திற்கு சென்றான். பார்த்தே நின்றிருந்த அக்ஷிக்கு புன்னகை ததும்பியது. ஆம், அவனுடன் இணைந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இருவரும் தற்பொழுது அமெரிக்காவிற்கு தங்களின் இருப்பிடத்தை மாற்றி இருந்தனர். எல்லாவற்றிலிருந்தும் சற்று தூர தள்ளி நின்று புதிதாக துளிர் விட மனது விரும்பியது. ஆக இருவருமே தங்களின் பணிகளை மாற்றி மகனோடு அங்கு பறந்திருந்தனர். அக்ஷி தற்பொழுது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறாள்.

மகனிடமிருந்து மங்கையிடம் மூளை தாவ அவரின் வார்த்தைகளே மீண்டும் செவியில் ரீங்காரமிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் அழைத்து பேசியிருந்தார். அத்தனை ஆனந்தம் அப்பெண்மணிக்கு மகள் வாழ்க்கை மீண்டும் துளிர்த்து விட்டதில். அவ்வப்பொழுது தாயிற்கு மட்டும் அழைத்து பேசி கணவன் மகனின் புகைப்படங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொள்வாள். சிவக்குமார், அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகி இருந்தது. அதற்காக தான் அழைத்திருந்தார். ஒரு முறையேணும் வந்து பார்த்துச் செல் என்பதாய். அக்ஷிக்கு சிவக்குமாரை காண்பதில் துளியளவேணும் விருப்பமிருந்திருக்கவில்லை. விஜயன் வேறு நேற்று தங்கையை அழைத்திருந்தான், "அக்ஷி ப்ளீஸ், உனக்கு எவ்வளவு கோபமிருந்தாலும் அதை இந்த நேரத்தில காட்டணுமா?. இன்னும் எத்தனை நாள்னு தெரியாதுனு டாக்டர் சொல்லிட்டாங்க. கடைசியா ஒரே ஒரு தடவை பார்த்துட்டு போ, அவர் ரொம்பவே ஆசைப்படுறார். உனக்கு தெரியும் தானா என்னை விட அப்பாக்கு உன்னை தான் ரொம்ப பிடிக்கும்" என்று பேசி. பெண் அசையவே இல்லை. ஏதோவொரு வீம்பு, அதை விட, 'நான் அவருக்கு முக்கியமா இருந்திருந்தால் இந்த மாதிரி ஒரு கேவலமான வேலை பார்த்திருக்க மாட்டார். என்னை இத்தனை கதற விட்டிருக்கவும் மாட்டார்' என்று ஓங்கி கத்த மனது விழைந்தாலும் அமைதியாய் இருந்து கொண்டாள். ஜோஷூம் கூறினான், "போய்ட்டு வாப்பா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆயிரம் இருந்தாலும் அவர் உன்னோட அப்பா. அவரோட எண்ணம் அவரோடவே போய்ட்டு போகுது" என. ஆனால் பெண் யாருடைய பேச்சிற்கும் செவி சாய்க்கவில்லை. அப்படியே ஒதுக்கி வைத்து விட்டாள். அவரை குறித்து பேச கூட விரும்பவில்லை. புரிந்த ஜோஷூம் எதுவும் செய்ய இயலாதவனாக விட்டு விட்டான். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன் மகனை அழைத்துக் கொண்டு ஒரு முறை சென்று வந்தான் இந்தியாவிற்கு. மகனை மங்கையிடம் கொடுத்து மருத்துவனாக அவரின் உடல்நிலை குறித்து அறிந்து பரிசோதித்து என. அக்ஷி அவர்களை தடுக்கவில்லை ஆனால், 'என்னை மட்டும் அழைக்காதே' என்ற பாவத்தோடு நின்று கொண்டாள்.


அதிலே உழன்ற அக்ஷியை கலைக்கும் விதமாக அலைபேசி ஒலித்தது. எங்கே ஜோஷ்வா, ஹர்ஷித் உறக்கம் கலைந்து விட போகிறதோ என்று பதறி வேகமாக எழுந்து வந்து அலைபேசியை கைப்பற்றியவள் மீண்டும் பால்கனியில் தஞ்சமடைந்தாள். அலைபேசியை ஆராய்ந்தவள் முகத்தில் சட்டென்றொரு புன்னகை வந்து ஒட்டிக் கொள்ள அழைப்பை ஏற்றாள். சில பல நொடியில் அலைபேசி திரையை நவீன் நிறைத்தான். "ஹாய் அக்ஷி" என்று தொடங்கி நலம் விசாரித்தவன் அலைபேசியுடன் தானிருந்த மருத்துவமனை அறைக்குள் நுழைய யாஷ் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அவளருகில் புதிதாக சிறகு முளைத்த இளம்பட்டாம் பூச்சியொன்று கைக்கால்களை அசைத்துக் கொண்டிருந்தது. ஆம், இரண்டாவதாக ஆண் குழந்தையை பெற்றிருந்தாள் யாஷ்வி. அதை கண்டு அக்ஷி முகத்தில் அப்படியொரு பூரிப்பு...





முற்றும்....
 
Active member
Messages
345
Reaction score
231
Points
43
Wow wow azhagana ending story ku but naveen yash and josh ashi indha rendu jodi oda love ku no end vazhkai avangala round katti adichi.aaluku.oru pakkam ah avangala pirichalum last ah avanga love avangaluku kedaichiduthu than sollanum naveen ku epudi yash oda love kedaichitho athae pola ashi ku aval oda josh thirupi kedaichitan
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Wow semma ending 2 couples avaga life la patta kastathuku tha ippo romba romba santhosama irugaga ipadi santhosama life fulla iruganum 💕💕💕💕
 
Top