அத்தியாயம் 23

Administrator
Staff member
Messages
298
Reaction score
497
Points
63
அத்தியாயம் 23


எவ்வளவு நேரம் அழுதாள் என்றே தெரியாது அப்படியே உறங்கியும் இருந்தாள் பெண்...ஷக்தி அவனோ மாத்திரையின் வீரியத்தில் இது எதுவும் அறியாது படுத்தவுடன் நித்திரையில் ஆழ்ந்திருந்தான்.


காலை அங்கை எல்லோரையும் விரைவாக எழுப்பி இருக்க ஆளுக்கொருபுறம் தயாராகிக் கொண்டிருந்தனர்.. நின்று யாருடனும் பேச நேரமில்லை யாருக்கும்....சனா காலையில் சற்று தெளிந்திருந்தாள் பெண். ஷக்தி குளித்து தயாராகி ஹாலில் அமர்ந்திருந்தான் கையில் குழந்தையுடன்.. சனா முதலில் குழந்தையை தயார் செய்து உடை மாற்றி ஷாலினியிடம் கொடுத்து விட்டு அவளும் குளித்து ரெடியாகி கொண்டிருந்தாள்..


இங்கு காலை உணவை முடித்து அப்படியே குலதெய்வம் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து மொட்டை போடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் அங்கை. மிக முக்கியமானவர்களை மட்டும் அழைத்திருந்தனர்.

தாமரை குடும்பத்துடன் வந்திருந்தார். முதல் அளவுக்கு ஒட்டுதல் இல்லை என்றாலும் அந்தளவிற்கு விலகலும் இல்லை தான். அதாவது தாமரை இலை தண்ணீர் போன்று.. சரண்யா அவளும் வந்திருந்தாள். சிங்காரம் அவரின் பண விஷயம் தெரிந்ததில் இருந்து ஷக்தி அவனையும் இன்னும் பிடித்தது ஒரு வித மரியாதையுடன்.


வந்தவர்களை ஷக்தி வரவேற்க, "என்னாச்சு ஷக்தி?" என்ற தாமரை காயத்தை பார்த்து பதறி விசாரிக்க, சரண்யா குழந்தையை அவனிடமிருந்து வாங்கி கொஞ்ச ஆரம்பித்திருந்தாள்.

"சின்ன ஆக்ஸிடென்ட் அத்தை, லைட்டா விரல்ல மட்டும் தான் அடி" என்றிருக்க, "கவனமா இருந்திருக்க கூடாதா ஷக்தி" என்று குறைப்பட்டிருந்தார் சிங்காரம்...


பைரவிக்கு சரண்யாவை பார்த்ததும் அத்தனை ஆனந்தம். "ஹேய் சரண்யா, நீ வர மாட்டேன் நினைச்சேன். வா வா" என்று பூரித்தவர் கையில் கொண்டு வந்த பூவை சிறிது தாமரைக்கு கொடுத்து மீதி இருந்த முழுவதையும் அவளது தலையில் வைத்து விட்டார்.



மூவேந்தர் கௌசியுடன் தான் வந்திருந்தார். சேதுராமனுக்கும் நிகிலுக்கும் ஏக கடுப்பு தான். ஆனால் இங்கு வைத்து என்ன பேச என அமைதியாகி விட ஷக்தி அவன் தான் அனைவரையும் வரவேற்றான். மான்யா தாயுடன் வந்திருக்க மேலும் சில நெருங்கிய சொந்தங்களும் வந்திருந்தனர்.


குழந்தையை அவர்களது பாரம்பரிய தொட்டிலில் போட்டு, "அகல்விழி" என பெயர் சூட்டி இருந்தனர். சனா குழந்தை உண்டானவுடனே இரண்டு பெயர்களை தயார் செய்து இதை தான் வைக்க வேண்டும் என ஷக்தியிடம் கூறி இருக்க நினைவுபடுத்தி அதை அவனது விருப்பமாகவே தற்சமயம் வெளிப்பட்டிருக்க அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி... பெயர்சூட்டி முடிய ஷக்தி மனைவி குழந்தையுடன் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருந்தான். இருவரும் முகம் எல்லாம் திருப்பவில்லை. அருகருகே நின்றிருந்தனர் ஆனால் மனது தான் வெகு தூரம் விலகி நின்றிருந்தது. மூவேந்தர் பேத்திக்கு அத்தனை செய்திருந்தார் தங்கம் வைரம் என! சனா அவளுக்கு அதில் எல்லாம் பெரிய விருப்பமும் இல்லை ஒட்டவும் இல்லை. அவர் கொடுத்ததை சபையில் வைத்து மறுக்க முடியாமல் வாங்கி கொண்டவள் உடனே ஓரமும் கட்டியிருந்தாள். அவர் எடுத்த உடையை கூட போடாது நிகில் வாங்கி கொடுத்த உடையை தான் குழந்தைக்கு போட்டிருந்தாள். மகளின் செயலில் வருத்தம் தான் அவருக்கு ஆனால் அவள் தன் வருகையை அமைதியாக ஏற்றுக் கொண்டதே பெரிதென அமைதியாகி விட்டார் மனிதர். அதுவும் கௌசி, அவர் மருத்துவமனையில் சனா அவளது செயலை எண்ணி வர மாட்டேன் என மறுத்து நிற்க மல்லுக்கட்டி அழைத்து வந்திருந்தார். குழந்தையை தூக்கி கொஞ்சிய அவரைக் கூட சனா அமைதியாக வேடிக்கை பார்த்திருந்தாள் என்ன தூரமாக தள்ளி நின்றபடி.. மாமியார் அவரை பொருட்டாய் கூட எண்ணாது தன் தேவைக்கு அங்கை, ஷாலினி இல்லை அன்னத்திடம் தான் பேசினாள். சரண்யா அவளையும் புன்னகையுடன் கடந்தவள் தாமரையிடமும் சிங்காரத்திடம், "வாங்க" என்று வாய் திறந்து வரவேற்றிருந்தாள். முகம் நன்றாக மலர்ந்திருந்தது ஆனால் ஷக்தி அவனால் மனம் தான் கசங்கி இருந்தது பாவைக்கு.




வந்தவர்கள் அனைவரும் உண்டு கிளம்பி இருக்க கோயிலுக்கு கிளம்பி விட்டனர். காரை விடுத்து பெரிய வேனை ஏற்பாடு செய்திருந்தனர். சரண்யா, "எனக்கு வொர்க் இருக்கு பாட்டி" என கிளம்பி இருக்க தாமரையும் கணவருடன் கிளம்பி விட்டார். அங்கை வற்புறுத்தியும் பலனில்லை..உறவு கண்ணாடியை போன்றே. உடைந்ததை என்ன தான் பசை கொண்டு ஒட்டினாலும் விரிசல் விரிசல் தான்.


சனா இரவு அவனது நடவடிக்கையில் வெகுவாக காயப்பட்டு போனாள். அதற்கு பிறகு ஷக்தி அவனை பார்க்க கூட இல்லை. ஆனால் அவன் உணவு உண்ணுமிடம் ஆஜராகி ஊட்டி விடும் தன் கடமையை மறக்கவில்லை. அவனும் அவ்வபொழுது மனைவியை அவளுக்கு தெரியாமல் விழிகளால் தழுவி மீண்டபடி மகளுடன் ஆழ்ந்திருந்தான்.



கோயிலுக்கு சென்று பெரியவர்கள் பொங்கல் வைக்க குழந்தைக்கு மொட்டை எடுத்தனர். நிகில் அவன் மடியில் அமர வைத்திருக்க சனா ஒருபுறமும் ஷக்தி ஒருபுறமும் பிடித்துக் கொண்டிருந்தனர். அத்தனை அழுகை அவள், தலையை சிலுப்பி உடலை வளைத்து என்று ஒரு வழியாக்கி இருந்தாள் பெற்றவர்களை. அவள் அழுகையை கண்டு சனாவுக்கும் கண்ணெல்லாம் கலங்கி இருந்தது. "நேத்து இதை விட அதிகமாவே நீ அழுக வைச்ச தெரியுமா?" என்று கூறி அண்ணன் தங்கையின் முறைப்பையும் பரிசாக பெற்றுக் கொண்டான்.



எல்லாம் நல்லபடியாகவே முடித்து வீடும் திரும்பி இருந்தனர். போகும் பொழுது ஷக்தி பக்கத்தில் இடமிருந்தாலும் நிகில் அருகில் அமர்ந்து கொண்டாள் சனா. ஷக்தி, அவனது அலட்சியம் வலிக்கிறது. அருகில் அமர சென்று அவன் ஏதாவது கூறி விட்டால் கண்டிப்பாக எல்லோர் முன்பும் அழுது விடுவாள். திரும்பும் பொழுது குழந்தை பசிக்காக அழுதிருக்க அதுவும் ஷக்தி கைகளில் இருந்திருக்க அவனருகில் அமர்ந்திருந்த ஆத்விக் மாறி அமர்ந்து இடம் கொடுத்திருந்தான் சனாவிற்கு.


சாரளத்தின் ஓரத்தில் அமர்ந்து குழந்தைக்கு பசியாற்றியவள் குழந்தை உறங்கி இருக்க அவளை இறுக்கி பிடித்தப்படி, காற்றின் வேகத்தில் கண்ணயர்ந்திருந்தாள் சாய்ந்தபடி. உறங்க்கத்தில் எங்கே குழந்தையை விட்டு விடப் போகிறாளோ என்றெண்ணிய ஷக்தி அவளிடமிருந்து குழந்தையை தூக்க முயல பதறி எழுந்து விட்டாள். "ஹே... கூல்" என்றவன் குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டு அவளையும் தோள் மீது சாய்த்து அணைத்துப் பிடித்துக் கொள்ள அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.. வெகுநாட்களுக்கு பிறகான அருகாமை..இடையில் எத்தனை சண்டை சமாதானம்..ம்க்கும் அடி கூட....சட்டென்று ஏற்க இயலாது கண்ணீர் ததும்பி விட்டது... எல்லாம் சரியாகி விட்டதா இன்னும் இல்லை இல்லை தான் என்று மனது அடித்துக் கூறியது. ஆனால் முதலில் இருந்த ஆத்திரமும் கோபமும் மட்டுப்பட்டிருந்தது. அவன் புறமும் ஏதேனும் நியாயம் இருக்குமோ அது தன்னை சமாதானம் செய்து இருவரையும் பிணைத்து விடாதா என்றெல்லாம் மனது ஏங்கியது பெண்ணவளுக்கு....அவனுக்கும் எதுவும் நினைவில்லை இல்லை இல்லை நினைக்க விரும்பவில்லை. இந்த பொழுது இப்படி இருக்கட்டும் அனுபவித்துக் கொள்கிறேன் என்பதை மனதில் பிரதானமாக்கிக் கொண்டான் ஆடவன்.



-------------------------------------------------------


ஆம், சனா கவனிக்க தவறியது உடையை தான்...கூட்டுக்குடும்பத்தில் எல்லாமே சற்று சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு தானே.

எப்பொழுதும் புடவை அல்லது சுடிதாருடன் தான் கீழ் இறங்குவாள். ஷக்தியும் கூறி இருந்தான். உன் உடை நம் அறைக்குள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் வீடு வேறு இங்கு ஆத்விக் ஷாலினி என எல்லோரும் இருக்கிறார்கள். மற்றவர்களை உறுத்தாத வகையில் அணிய வேண்டும் என்று. அவளுக்கும் ஏதோ புரிந்தது. ஏன்? என் உரிமை என் உடை எல்லாம் பெண் சண்டையிடவில்லை. அவன் கூறினால் கண்டிப்பாக சரியாக தான் இருக்கும் என்ற எண்ணத்தால் ஷக்தியின் வார்த்தைகள் மிகச்சரியாகவே மூளை அதனிடத்தில் பொருத்திக் கொண்டது. அவனுக்கு செவி சாய்த்திருந்தவள் அதனையே பழக்கமும் படுத்திக் கொண்டிருந்தாள். வெகு நாட்களெல்லாம் இல்லை ஏழு நாட்களை கூட தாண்டியிடவில்லை இங்கு வந்து. ஆனால் சனாவுக்கு பல வருடங்கள் கடந்திருந்தது போல் ஆயாசமாக இருந்தது. சரி தவறுகளை ஓரளவு உணர்ந்து ஷக்தி அவனின் வீட்டிற்கு ஏற்றால் போன்று தன்னை மாற்ற முயற்சித்து கொண்டிருக்கிறாள் சாதரணமாக அல்ல கர்மசிரத்தையுடன்.



உடை விஷயத்தில் பைரவி மகளையும் அத்தனை கண்டித்திருக்கிறார். நைட்டி, இரவு உடை என்பதெல்லாம் அறைக்குள் மட்டும் தான் உபயோகிக்க வேண்டும். துப்பட்டா போடாது வெளியில் வரக் கூடாது. நாளைக்கு உன் வாழ்க்கையும் கூட்டுக் குடும்பத்தில் அமைந்து விட்டால், இங்கு ஷக்தியும் ஆத்விக்கும் உனக்கு அண்ணன், தம்பி, அப்பா தாத்தா தான் ஆனால் இதே பழக்கமும் புகுந்த இடத்திலும் கண்டிப்பாக வந்து விடும். அங்கு எல்லாரின் பார்வையும் ஒன்றாக இருந்திடாதே! இது தான் உலகின் இயல்பும் கூட..? அவரின் எண்ணங்கள் முற்றிலும் சரி தான் ஆனால் மருமகளிடம் கற்பிக்கும் முறையில் தான் தவறிக் கொண்டிருந்தார்.


தங்கள் அறை தானே, மீண்டும் மாலை ஷக்தி வந்த பின் தானே கீழ் இறங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இலகு உடைக்குள் நுழைந்திருந்தவள் அதை மாற்றாது ஒரு நிமிடம் தானே என்ற சோம்பேறி தனத்தினாலும் ஷக்தி அவன் படுத்திய அவசரத்திலும் துப்பட்டா கூட போடாது கீழிறங்கி வாயிலுக்கு விரைந்திருந்தாள். ஹாலில் அமர்ந்திருந்த ஆத்விக், ஷாலினி,சந்தனவேல், உத்தமசோழன் யாரையும் கருத்தில் கொள்ளாது.


உடலோடு ஒட்டியிருந்த அவளின் உடையை கவனித்திருந்த பைரவி மாலையில் மருமகளை தனியாக பிடித்திருந்தார். "உன்னை பார்த்து என் பொண்ணும் கெட்டுட போறா...என்ன ட்ரெஸ் அது, துப்பட்டா கூட போடாம மதியம் கீழ வர . வீட்டில எல்லாரும் உட்கார்ந்திருக்காங்க. கொஞ்சம் கூட அறிவு இல்லை" என்று ஆரம்பித்திருக்க இரண்டாவது முறையாக அவளது செவிகளில் அறிவில்லையா என்ற அவரின் வார்த்தைகள் ஒலித்திருந்தது. ஆம், அன்றும் இதையே தான் கேட்டிருந்தார். இப்பொழுது அழுகை எல்லாம் வரவில்லை கோபம் துளிர்த்திருந்தது அவரின் வார்த்தைகளில்.


"இதை நீங்க என்னை மட்டுமில்லை நம்ம வீட்டில இருக்க ஆளுங்களையும் அவங்க பார்வையையும் சேர்த்து தான் அசிங்கபடுத்துற மாதிரி இருக்கு" என்று மாமியாருக்கு பதிலடி கொடுத்திருந்தாள் சனா.


"நான் என்ன சொல்றேன் அப்படியே என்மேல திருப்பி விட பார்க்கிறீயா? உங்க வீட்டில உன் இஷ்டத்துக்கு ஆடுன மாதிரி இங்க எல்லாம் இருக்க முடியாது. அடக்கமா இருக்க வழியை பார்" என்றவர் அத்துடன் விடாமல் மேலும் சில வார்த்தைகளை விட சனா அவளுக்கு அதிக கோபம் தான் கனன்றது. எப்பொழுதும் கவனத்துடன் இருந்தவள் ஏதோ ஒரு இடத்தில் தவறுவது இயல்பு தானே அதை பைரவி பூதக்கண்ணாடியை வைத்து ஆராய்ந்து விமர்சிப்பது மருகளுக்கு பிடிக்கவில்லை. அதுவும் அவளது உடை விஷயம் பற்றி கூறியது தனது சொந்த விஷயத்தில் மூக்கை நுழைப்பது போல் ஒரு அசூசையை கொடுத்தது.


அவரவரின் பார்வையில் தங்களின் வாதம் சரியாக இருக்க முதல் முறையாக நேரடியாக முட்டிக் கொண்டனர். ஆனால் ஷக்தி அவனின் காதிற்கு மட்டும் அல்ல வெளியிலோ கூட கசியவில்லை இந்த இரகசிய பனிப்போர். நான் என்ன குழந்தையா உங்கம்மா இப்படி அப்படி என்று புகார் வாசிக்க என்ற எண்ணத்தில் அவளும் ஷக்தியிடம் எடுத்துச் செல்லவில்லை. பைரவியும் கணவருக்கும் அங்கையின் வாயிற்கும் பயந்து சத்தமாக அவளை அதட்டவில்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசி மருகளிடம் மல்லுக்கு நின்றிருந்தார். முதலில் எதிர்த்து பேசாதவள் இந்த பரிமாணம் மாமியாரை இன்னும் சற்று ஆழந்து சிந்திக்க செய்திருந்தது. நீயா நானா? என்ற மோதல் தான்! மருமகளின் தவறுகளை இன்னும் பொறுமையாகவும் பக்குவமாகவும் கூறியிருந்தால் பெண் உணர்ந்து தன்னை மாற்றி இருப்பாளோ என்னவோ..? ஷக்தி அவனும் கூறும் பொழுது தவறாக தோன்றாத விஷயங்கள் மாமியாரின் வார்த்தை வழி வரும் கணங்களில் அவளாலும் அதை ஏற்க முடியவில்லை தான்.


ஆனால் இரண்டே நாள்களில் அவளே ஷக்தியிடம், "நம்ம தனியா போய்டலாம் ஷக்தி. என்னால தினமும் போராட முடியாது. குறை சொல்லிட்டே இருக்க நான் ஒன்னும் குழந்தையும் இல்லை நீங்களும் என்கூடவே பஞ்சாயத்து பண்ணிட்டே திரிய முடியாது. கடைசி வரை உங்கம்மாக்கூட நம்ம உறவு எதோ முகம் பார்த்து பேசுற அளவுக்காவது சுமுகமாக இருக்கணும்னு நான் நினைக்கிறேன்" என்றிருந்தவள் மறந்தும் கூட தங்களுக்குள் நடந்த சம்பாஷனைகள் விவரித்திடவில்லை.


ஆம், நேற்றைய முன்தினம் ஆண்களெல்லாம் வேலைக்கு சென்றிருக்க மதிய உணவு தயாரிக்கும் வேலையில் பெண்கள் மும்மரமாக இருந்தனர்.. ஹாலில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்க பைரவி உணவுமேஜை மீது அமர்ந்து காய்களை நறுக்கிக் கொண்டிந்தார். அன்னமும் சனாவும் சோபாவில் அமர்ந்து கீரை ஆய்ந்து கொண்டிருக்க அங்கை அவர்களருகில் அமரந்து பேசிக் கொண்டிருந்தார்.. செய்திசேனல் தான் ஓடிக் கொண்டிருந்தது.
முக்கிய செய்தி, "முன்னாள் அமைச்சரும் பிரபல கட்சித் தலைவருமான மூவேந்தர் எதிர்கட்சியை சேர்ந்த பெண் அமைச்சர் கௌசல்யாவுடன் திடீர் திருமணம் புரிந்து கொண்டார்" என்பது தான். செய்தியை கேட்டதும் அனைவருக்கும் தூக்கிவாரி போட்டது. "சனா இது உங்க அப்பா தான?" என்று அன்னம் எச்சில் விழுங்கி இருக்க ஆமாம் என்று தலையசைத்தவளுக்கு அவரின் செயலில் அத்தனை தலையிறக்கமாக இருந்தது. முதலில் திருமணம் செய்திருந்தால் அது வேறு
இப்பொழுது மகளுக்கு திருமணம் முடிந்த பிறகு அவரின் செயல்கள் அவ்வளவு உவப்பானதாக இல்லை.


"என்ன குடும்பமோ? மகனுக்கு கல்யாணம் பண்ற வயசுல அப்பனுக்கு கல்யாணமா..? ச்சீ....தரம் கெட்ட குடும்பமால்ல இருக்கு...இப்படி தரம் கெட்ட குடும்பத்தில் இருந்து வந்த இவக்கிட்ட எங்க நல்ல பழக்கத்தை எதிர்பார்க்க? இந்த பையன் நம்ம மானத்தை கப்பல்ல ஏத்தவே இருக்கான். போயும் போயும் இப்படி ஒரு குடும்பத்தில் இருந்துல்ல பொண்ணை புடுச்சிட்டு வந்திருக்கான். நாளைக்கு எங்க குடும்பத்தில பிறக்கிற பேரப்புள்ளைகளுக்கும் இப்படி தான் சாக்கடை புத்தி வரானு என்ன நிச்சயம்...?" என்ற பைரவின் வார்த்தைகளில் சனா கொதித்து தான் போனாள். அவர் செய்தது தவறு இல்லை குற்றமாக கூட இருக்கலாம் அதை விமர்சிக்க இவருக்கு என்ன உரிமை இருக்கிறது. இதில் சனாவையும் இன்னும் பிறக்கவே இல்லாத அவளின் குழந்தையும் இழுத்ததை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.


"வாயை மூடு பைரவி, முதல்ல என்ன நடந்ததுன்னு தெரியாது நமக்கு. பொறுமையா இரு, வார்த்தைய கொட்டாத அள்ள முடியாது. அப்படியே அவர் கல்யாணம் பண்ணி இருந்தாலும் நீ சனாவை இழுக்கிறது ரொம்பவே தப்பு" என்று அங்கை அதட்டி இருக்க, "நீங்க என்னத்தை, நானா இல்லாததை எதுவுமா சொன்னேன். டி.வியில போட்டு ஊரே காறில்ல துப்புது" என்றவரின் வார்த்தைகள் நீள, "பாட்டீ, நான் எங்க வீட்டுக்கு போய்ட்டு வரேன்" என்ற சனாவிற்கு உடனடியாக அங்கு சென்றாக வேண்டிய தவிப்பு. நிகில், தாத்தா..என்றவளுக்கு சற்று கண்களை கட்டிக் கொண்டு வந்தது.
தந்தையை சட்டையை பிடிக்கும் ஆத்திரம், எல்லை மீறிய கோபத்தை பைரவி அவரின் வார்த்தைகள் இன்னும் சீண்டி இருந்தது.


"நீ தனியா போக வேண்டாம்மா, ஷக்தியை கூப்பிடு அவன் அழைச்சுட்டு போகட்டும்" என்ற அங்கையின் வார்த்தையில் பைரவி கொதித்து தான் போனார்.

"அவளே இனி அங்க போகக் கூடாதுத்தை, அப்படி போன வீட்டுக்குள்ள வரக் கூடாது. இதுல என் புள்ளைய வேற போகச் சொல்றீங்க?" என்ற பைரவின் வார்த்தையில் இன்னும் சூடானவள் மிகச் சிரத்தையுடன் கோபத்தை இழுத்து பிடித்து கார் சாவியை கையில் எடுக்க, "நான் சொல்லிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு கிளம்புனா என்ன அர்த்தம். காது கேட்கலையோ, நீ போகக் கூடாது" என்று பைரவி அவளை வழி மறித்திருக்க,


"இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? இனி நீங்களே கூப்பிட்டாலும் நான் இங்க வர ஐடியால்ல இல்லை" என்று அனைவரின் தலையிலும் குண்டை தூக்கி போட்டு மாமியாரை வாயடைக்க வைத்து கிளம்பி இருந்தாள்.



நிகில், சேதுராமனும் அதை கண்டு கொதித்து தான் போயினர். "உனக்கு பிள்ளைகளை பத்தி கவலை இல்லை, நாளைக்கு வாழ போன உம்பொண்ணை அந்த வீட்டில எப்படி மதிப்பாங்க. இவனுக்கு எப்படி போய் பொண்ணு கேட்பேன். நீ அடிக்கிற கூத்தை பார்த்தும் யார் பொண்ணு தருவா?" என்று நின்றிருக்க நிகிலும், "ப்பா..இது ரொம்பவே தப்பு" என்று சண்டைக்கு நின்றிருக்க தற்பொழுது சனாவும் அவர்களுடன்.


"ஏன்ப்பா, என்னைக்கு தான் எங்களுக்கு அப்பாவா இருக்க போறீங்க? ஒவ்வொரு தடவையும் நீங்க பண்ற அசிங்கத்துக்கு எங்களால தான் வெளிய தலைகாட்ட முடியலை. உடம்பு கூசுது" என்ற மகளிடம் திரும்பியவர், "உனக்கு தான் கல்யாணமாகிடுச்சுல்ல அப்புறம் எதுக்கு இங்க வந்து ஆடிட்டு இருக்க. உன் வாழ்க்கையை மட்டும் பார்" என்றவர், "ப்பா..கௌசியை நான் ஏன் கல்யாணம் பண்ணேன்னு அவங்களுக்கு புரியாது ஆனா உங்களுக்கு புரியும் தான" என சேதுராமன் வாயையும் அடைத்திருந்தார். ஆம், கௌசல்யா அவரின் முன்னால் காதலி மற்றும் அவர் திருமணம் செய்து கொண்டாலும் இன்னும் மூவேந்தர் நினைவுகளிலே தனக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ளாதவர்....இந்த உலகில் ஒவ்வொருவரின் பார்வையின் கோணங்களும் நிச்சயம் முற்றிலும் வேறு தான். நமக்கு அபத்தம் என்பது வேறொருவரின் பார்வையில் புனிதமாக இருக்கலாம்....சரி தவறு எல்லாம் சூழலை பொறுத்தே கட்டமைக்கப்படுகிறது.


சனா அவரின் வார்த்தையில் இன்னும் எரிச்சலாகி போனாள். அதாவது உனக்கு திருமணமாகி விட்டது உனக்கு இங்கு பேச உரிமையில்லை எனும் விதமாக தந்தையின் பேச்சு இருந்தது. தந்தையையும் நிகிலையும் அடக்கி விடுபவரை திணற செய்வது சனாவும் அவளது கேள்விகளுமே தான். அதை எதிர்கொள்ள திரணியற்று மகளை இவ்வாறு விலக்கி நிறுத்தி இருந்தார் மனிதர்.


சனாவுக்கு கண்ணீர் தான் ஆறாய் ஓடியது பைரவியின் வார்த்தைகளில் உடைந்திருந்தவளை மூவேந்தர் வார்த்தைகள் மேலும் உடைய செய்திருந்தது.


"நான் கிளம்புறேன் நிகில்" என்றவள் எங்கு என்று கூறவும் இல்லை நடந்த கலவரத்தில் அண்ணனுக்கு அதை கவனிக்கும் எண்ணமும் இல்லை.


ஷக்தி வீட்டிற்கு செல்ல அவளுக்கு விருப்பமில்லை. ஏனோ பைரவி அவரது வார்த்தைகளில் தள்ளி நிற்கவே பேதை மனது விரும்பிற்று. மான்யா அவளது ஹோட்டலில் தான் அமர்ந்திருந்தாள். வந்தவள் எதுவுமே கூறாது அழுது ஆர்பார்ட்டம் செய்திருக்க மான்யா தான் திணறி விட்டாள். அவளுக்கும் விஷயம் தெரிந்தது தான் ஆனால் இவள் இந்தளவிற்கு அழுகை தான் ஏன் என்று புரியவில்லை.


"சரி விடு சனா, அவரோட வாழ்க்கை அவர் இஷ்டம். உனக்கு அப்பான்றதுக்காக அவருக்கு பசிக்கு நீ சாப்பிட முடியாது. எதையும் ஒரு கட்டத்துக்கு மேல இழுத்து பிடிச்சா தலைவலி தான் மிஞ்சும். டேக் இட் ஈஸி" என்றவள் அவளை சமாதானம் செய்து ஷக்திக்கு அழைத்து விட்டாள்.

அவனிடமும் அத்தனை அழுது கரைந்திருந்தாள். "சனா ரிலாக்ஸ், நீ இவ்வளவு ஆர்பாட்டம் செய்ய தேவையில்லை சரியா. முதல்ல சூழ்நிலைய ஹாண்டில் பண்ண கத்துக்கோ" என்று அவளை சமாதானம் செய்தவன் வீட்டிற்கு அழைக்க அப்பொழுது தான் கூறி இருந்தாள் அந்த வார்த்தையை.


"ஏன்?" என்று ஷக்தி அவளிடம் கேட்கவில்லை. ஆனால் சம்மதம் கொடுத்து தாத்தாவிடமும் தந்தையிடமும் பேசி இருந்தான். அங்கை பைரவி நடந்துக் கொண்டிருந்த முறைகளையும் பேச்சினையும் வீட்டில் கைலாசம் மற்றும் சந்தனவேலிடம் கூறி இருக்க அவரோ கோபத்தில் பைரவியை இரண்டு அடியே அடித்திருந்தார்.


"ப்பா....ஷக்தி சொல்றது சரி தான், இவளே அவங்களுக்குள்ள சண்டை இழுத்து விவாகரத்து வாங்கி கொடுத்தாலும் கொடுத்திடுவா..அவன் தனியாவே இருக்கட்டும் கொஞ்ச நாள்" என்று சந்தனவேலே ஷக்தியின் முடிவிற்கு ஆமோதித்திருக்க அங்கைக்கு தான் பொறுக்க முடியவில்லை பேரனை தனியே அனுப்ப. அரைமனதாக ஒப்பு கொடுத்திருக்க இரண்டே நாளில் வீடு பார்த்து எல்லாவற்றையும் தயார் செய்து மான்யா வீட்டில் இருந்த மனைவியை அழைத்து சென்றிருந்தான் ஷக்தி..



தொடரும்...

 
New member
Messages
5
Reaction score
1
Points
3
Nice going sis.. pavam sakthi indha kudumba arasiyal la mattikittu thavikkiran.. seekiram avana kappathi vidunga..
 
Top