• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 2

Administrator
Staff member
Messages
525
Reaction score
717
Points
93
அத்தியாயம் - 2


கண்கள் கலங்க தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், "அப்பாவுக்கு வேலை அதிகம்மா, சீக்கிரமே உன் கூடவே இருக்கிற மாதிரி ஏற்பாடு செய்றேன்" என்று கூற அவனது கழுத்தை கட்டிக் கொண்டு, "தாங்க்யூ சோ மச் ப்பா...யூ ஆர் சோ ஸ்வீட்" என மறு கன்னத்திலும் முத்தமிட்டவள் குனிந்து தனது கைக்குட்டையை எடுத்து அவனது கன்னங்களில் ஒட்டியிருந்த சாக்லேட்டை துடைக்க அவளை பார்த்து புன்னகைத்தவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு கிளம்ப எத்தனிக்க நொடிப் பொழுதில் விஷாலி கண்களில் நீர் தேங்கி விட்டது.


அதை கண்டு விட்டு மீண்டும் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அவளது உயரத்திற்கு குனிந்தவன் கண்ணீரை துடைத்து விட்டு, "நீ குட்கேர்ள் தான? இப்படி எல்லாம் அழுக கூடாது. நாளைக்கு இதே மாதிரி டாடி வந்து உன்னை வெளியில கூட்டிட்டு போய் சாக்லேட் ஐஸ்கீரிம் எல்லாமே வாங்கித் தரேன்" என சமாதானம் கூற அந்த பிஞ்சுக் கை அவனது கைகளை இறுக பற்றிக் கொண்டு மறுக்கையில் இருந்த பொம்மைகளையும் சாக்லேட்டையும் கீழே விட்டது.

அதிலே அவளது மனம் புரிந்தது அவனுக்கு. எனக்கு அது எல்லாம் வேண்டாம் நீ மட்டும் தான் வேண்டும் என்பதாக.

மூச்சை இழுத்து தன்னை சமன் செய்தவன் சாஹித்யாவை பார்க்க அவள் உணர்ச்சியற்ற முகத்துடனே நடப்பதை எல்லாம கவனித்து கொண்டிருந்தாள் வெறும் பார்வையாளராக மட்டுமே.


"சரி, நாளைக்கு உனக்கு ஸ்கூல் லீவ் தான. நீ போய் அம்மாகிட்ட பர்மிஷன் கேட்டு வா, நான் உன்னை கூட்டிட்டு போய்ட்டு நாளைக்கு நைட் வந்து வீட்ல விடுறேன் சொல்லி" என அவளிடம் கூற வேகமாக கண்ணீரை துடைத்தவள் சாஹித்யாவிடம் ஓடினாள்.


"ம்மா...ப்ளீஸ் நான் அப்பா கூட போறேன். நாளைக்கு வந்திடுறேன். பர்மிஷன் குடுங்க" என்று வினவ,

அவனது முகத்தை பார்த்த சாஹித்யா எதுவுமே கூறாது தலையை மட்டும் அசைக்க அவளது கன்னத்தில் முத்தமிட்டு, "ம்மா..பாட்டிக்கிட்ட சொல்லீடுங்க" என்றவள் வேகமாக அருளிடம் செல்ல அவளை தூக்கிக் கொண்டு நடந்தான்.


அவர் கார் தன் கண்ணில் இருந்து மறையும் வரை அவர்களையே பார்த்திருந்தவளின் கண்களில் தன்னையும் மீறி கண்ணீர் வழிந்தது.


இப்பொழுதெல்லாம் சாஹித்யாவின் கண்களில் நீர் வருமாயின் அது விஷாலிக்காக மட்டுமே.


அவர்கள் சென்ற பின்பும் வெகுநேரமாக அங்கேயே அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு ஏதோ தனித்து விடபட்டது போன்ற தொரு உணர்வு. அவள் சரி என தலையாட்டியவுடன் விஷாலியின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியே சாஹித்யா ஆழமாக தாக்கியது.

விஷாலியை நான் நல்லா பார்த்துக்கலையா? அப்புறம் ஏன் அவ அருளை தேடுறா. அவங்களை நான் தான் பிரிக்கிறேனே! நான் என்ன தப்பு பண்னேன். அவன் பொண்ணு அழுதா மட்டும் அவனுக்கு வலிக்குது. அப்ப நான் யார்? எத்தனை நாள் அழுதேன். அப்ப எல்லாம இவன் ஏன் வரலை.

அவளை நான் என்ன தான் உருகி உருகி வளர்த்தாலும் கடைசியில அவன்கிட்ட தான போறா என்னை தனியா விட்டு என்றெல்லாம் எண்ணியவள் மனதில் வெறுமை மட்டுமே இருக்க கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டாள்.


விஷாலியை அழைத்துக் கொண்டு கடற்கரை சென்ற அருள் அமர்ந்து கொள்ள அவள் கடலலையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் அவனருகில் வந்தவள், "ப்பா..நீங்களும் வாங்க" என அவனது கைகளை பற்றி இழுக்க அவனும் அவளுடன் இணைந்து கொண்டான்.

அருள் வெகுநாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறான் என்றால் அது விஷாலியுடன் இருக்கும் பொழுதில் மட்டுமே.


எல்லாமே இருக்கிறது. வீடு, சொத்து, பணம், புகழ் எல்லாம். ஆனால் வாழ்க்கை எஞ்சி நிற்பது வெறுமை மட்டுமே. அதை எவ்வாறு நிறைப்பது என அவனுக்கு தெரியவில்லை.


அவனால் சாஹியிடம் சண்டையிட்டு விஷாலியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவளை மேலும் துன்புறுத்தவோ அழுக வைக்கவோ அவனது மனது இடம் கொடுக்க வில்லை.


"ப்பா...அம்மாவும் நம்ம கூட இருந்திருந்தா நல்லா இருக்கும்ல" என்று கண்களில் ஏக்கத்தை தேக்கி விஷாலி கூற பெற்றவனுக்கு ஒவ்வொரு கணமும் மனம் பதைக்க தான் செய்தது.


அவளுக்கு அருள் சாஹியுடன் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்று ஆசை. அவளது தோழிகள் எல்லாம் நாங்க அங்க போனோம் இங்க போனோம் என தங்கள் அப்பா அம்மாவை பற்றி கூற கூற அந்த பிஞ்சின் மனம் தான் வெதும்பி நிற்கும். இருபுறமும் பாசம் கிடைக்கிறது தான் அது தனித்தனியாக அல்லவா?


மகளின் மனதை மாற்றும் பொருட்டு, "விஷாலி, ரெஸ்டாரண்ட் போகலாமா? உனக்கு என்ன பிடிக்கும்?" என கேள்வி கணைகளை தொடுத்துக் கொண்டே அவனை அருகிலிருக்கும் ரெஸ்டாரண்ட் அழைத்துச் சென்றவன் வாஷ்ரும் சென்று கைகளையெல்லாம் கழுவி சுத்தபடுத்தி மகளின் கைகளையும் கழுவி விட்டான்.


இருவருமே நன்றாக நனைந்திருந்தனர். அவனுக்கு ஈர உடையுடன் இருந்தது பழக்கமிருந்ததால் ஏதும் தெரியவில்லை. ஆனால் விஷாலிக்கு அது அசௌகரியமாக இருக்க சற்று நெளிந்து கொண்டிருந்தாள்.


அதை கவனித்த அருள், "என்னம்மா, ஏதாவது செய்யதா?" எனக் கேட்க,

"ட்ரெஸ் ஈரமா இருக்கது ஒரு மாதிரியா இருக்குப்பா" என்றாள்.

அப்போது தான் தன் மடத்தனத்தை நினைத்து நொந்தவன், "சரி வா, வீட்டுக்கு போய் ட்ரெஸ் சேஞ்ஜ் பண்ணீட்டு பக்கத்தில இருக்க ரெஸ்டாரண்ட்க்கு போய்க்கலாம்" என்றிட,

"பரவாயில்லப்பா, நான் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன். சாப்பிட்டே போகலாம்" என பெரிய மனுசியாய் கூறினாள்.

அவனது ஒவ்வொரு நடவடிக்கையும் காணும் பொழுதும் சாஹி அவளை நன்றாக வளர்த்திருக்கிறாள் என்று மனைவியை பெருமையாக நினைக்கவே அவனுக்கு தோன்றும். அவனுடன் இருக்க வேண்டும் என்பதை தவிர வேறெதிலுமே அவள் பிடிவாதம் காட்டியதில்லை என்பதையும் நன்கு அறிவான்.


"சரி வா" என அவளை தூக்கி வந்து நாற்காலியில் அமர வைத்தவன் உணவுகளை ஆர்டர் செய்து விட்டு மகள் பேச்சுக்களை கேட்டு இரசித்துக் கொண்டிருந்தான்.

தன் பக்கத்து வீட்டு தோழி லிசாவிலிருந்து ஆரம்பித்த விஷாலி பள்ளி ஆசிரியர் வித்யா வரை ஒவ்வொருவரையும் பற்றி கூறிக் கொண்டிருந்தாள்.


அவனுக்கு மகளுடைய பேச்சு சலிப்பு தட்டவில்லை போலும் இன்னும் பேச மாட்டாளா என ஏங்கி அவளது வாயையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளை பார்க்க பார்க்க அவனுக்கு சாஹியே அவன் முன் வந்து நின்றாள். அவளது பேச்சுக்களையும் இவ்வாறே ஒரு காலத்தில் இரசித்து கேட்டவனல்லவா?

ஆர்டர் செய்த உணவு வந்து விட, "விஷாலி, சாப்பிட்டு பேசலாம்" என அவளுக்கு உணவுகளை ஊட்டி விட ஆரம்பிக்க கொஞ்சம் சாப்பிட்டவள்,

"ப்பா..போதும். நீங்க சாப்பிடுங்க" என்று வற்புறுத்த மீதியை உண்டு முடித்தவன் பணத்தை செலுத்தி விட்டு அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

இருட்டி விட்டாலும் அந்த பார்க்கின் பெஞ்சிலே அமர்நதிருந்தாள் சாஹி வீட்டிற்கு செல்ல மனமில்லாது.


வெகுநேரமாகியும் மகளும் பேத்தியும் வராததைக் கண்டு பதறிய சிவகாமி சாஹித்தியாவிற்கு அழைக்க அவள் மொபைல் சைலண்ட்டில் போட்டிருந்ததால் அழைப்பை ஏற்கவில்லை.

சாஹித்யாவிற்கு தனிமை தேவைப்பட்டது. அதனால் சுற்றுபுறம் மறந்து அமர்ந்திருந்தாள்.


அருள் விஷாலியை அழைத்துக் கொண்டு தங்களுடைய வீட்டிற்கு சென்றிருந்தான்.

இருவரது உடையும் அடிக்கும் காற்றிற்கு காய்ந்திருந்தாலும் லேசாக ஈரமாக இருந்தது.

சாஹித்யா உடனிருந்தால் அவளை சில நிமிடங்கள் கூட ஈர உடையுடன் இருந்திருக்க அனுமதித்திருக்க மாட்டாள்.

தந்தையும் அன்பு செலுத்துகின்றனர் தான் ஆனால் தாயை போல் நுட்பமான அன்பையல்ல. அது வேறு விதமான அன்பு தான்.


அருள் காரை நிறுத்தி விட்டு விஷாலியையும் அவளுக்கு வாங்கிய பொம்மைகளையும் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைய அவனது தாய் ஜெயா மடியில் அவன் அக்கா திவ்யாவின் பத்து மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

விஷாலியை இறக்கி விட குழந்தைகளுக்கே உரித்தான ஆர்வத்தில் வேகமாக அவரின் அருகில் சென்றவள் ஆசையாக நெருங்கி நின்று அந்த குழந்தையை கொஞ்ச அவளது உடையின் ஈரத்தை உணர்ந்த ஜெயா அவளை பிடித்து தள்ளி நிறுத்தி விட்டார்.

அதை கண்டு நொடிப் பொழுதில் தந்தை மகள் இருவரின் முகமும் வாடி விட்டது. வேகமாக மகனை கவனித்து விட்ட ஜெயா, "விஷாலி, பாப்பாக்கு சேராது. போய் ட்ரெஸ் மாத்திட்டு வாடா" என போலி சிரிப்புடன் அவளது கன்னத்தை தொட வர இரண்டடி பின்னால் நகர்ந்த விஷாலி, "இதை நீங்க என்னை தள்ளி விடுறதுக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாம் பாட்டி" என்றாள்.


'முளைச்சு மூனு இலை விடலை பேச்சை பார். அப்படியே ஆத்தா மாதிரி. எனக்கும் என் புள்ளைக்கும் சண்டை இழுத்து விட்ருவா போலையே!' என நினைத்தவர் அருள் இல்லையென்றால் அவளை ஒரு அடிக் கூட அடித்திருப்பார்.

வேகமாக மகனை சாமாளிக்கும் பொருட்டு, "அது இல்லை அருள், சின்ன குழந்தைக்கு சீக்கிரமே சளி பிடிச்சிடும்" என ஆரம்பிக்க வேகமாக விஷாலியை தூக்கிக் கொண்டவன், "ம்மா...உங்களுக்கு தெரியுமா? உலகத்திலே தூய்மையானது சின்ன குழந்தையோட மனசு மட்டும் தான். நம்ம என்ன கொடுத்தாலும் அதை தான் பிரதிபலிப்பாங்க" என்றவன் தனது அறைக்குள் புகுந்து கொள்ள இப்போது தாயிற்கு முகத்தில் அடித்தாற் போல் ஆயிற்று.

"நான் என்ன செஞ்சிட்டேன்னு இப்படி பேசிட்டு போறான்" என புலம்பியவர் குழந்தையை தூக்கி தொட்டிலில் போட்டு விட்டு மகளுடைய அறைக்கு சென்றவர், "திவ்யா, அருள் வந்துட்டான். விஷாலியை தூக்கிட்டு வந்திருக்கான்" என்று கூற மொபைலில் இருந்து தலையை நிமிர்த்தியவள், "அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?" என்றாள்.

அவளிடம் பேச்சுக் கொடுத்தால் வேறு எதாவது பேசி சண்டையிழுப்பாள் என உணர்ந்தவர் முறைத்து விட்டு எதுவுமே கூறாது வெளியேறி அருளின் அறைக்கு சென்றார்.

மகளிற்கு உடையை மாற்றி விட்டவன் தன்னுடைய உடைகளையும் மாற்றி விட்டு அவளுடைய தலையை துவட்டிக் கொண்டிருந்தான்.

ஜெயா, "அருள், சாப்பிட வாப்பா" என்றழைக்க, "இல்லம்மா, நாங்க வரும்போது தான் சாப்பிட்டோம். எங்களுக்கு வேணாம். நீங்க எல்லாரும் சாப்பிடுங்க" என்றான்.

"வெளியில சாப்பிட்டா முதல்லே சொல்லியிருக்கலாம்ல இப்ப சாப்பாடு வேஸ்ட்ஸ் ஆகிடுச்சு பார்" என்று புலம்பிக் கொண்டிருக்க வெளியில் சத்தம் கேட்க அருள் விஷாலியை தூக்கி வர ஜெயாவும் வெளியே வந்தார்.

திவ்யாவின் மகன் ஹரிஸ் தான் சாப்பாட்டு தட்டை தூக்கி எறிந்திருக்க ஹால் முழுவதும் அது சிதறியிருந்தது.

திவ்யா அவனை அடித்துக் கொண்டிருக்க பதறி சென்ற ஜெயா அவனை தன்புறம் இழுத்துக் கொண்டு, "எதுக்குடி பிள்ளைய மாட்டை அடிக்கிறது போல அடிக்கிற?" என்றார்.

"ம்மா..இவனுக்கு நூடுல்ஸ் வேணும்மா. சரி நாளைக்கு செஞ்சு தரேன் இன்னைக்கு இட்லியை சாப்பிடுனு சொன்னா இப்படி தூக்கி எறிஞ்சிட்டான். இப்ப இதை யார் சுத்தம் செய்றது. வேலைக்காரம்மாவும் நாளைக்கு தான் வருவாங்க. சாப்பாடு வேற வீணாகிடுச்சு" என்றாள்.

"அது போனா போயிட்டு போகுது அதுக்கு புள்ளைய இப்படி அடிப்பியா?" என்றவர் அருளை பார்க்க அவனும் அழுத்தமாக தாயை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"உங்களால தான் அவன் இப்படி அடம்பிடிக்கிறான். செல்லம் கொடுக்காதீங்கனு சொன்னா கேட்டா தான?" என தாயை கடிந்தவள் அவனை மேலும் அடிக்க அவளது கையை பிடித்து தடுத்த அருள் அவனை தூக்கிக் கொண்டான்.




தொடரும்...

 
Top