அத்தியாயம் - 10.2

New member
Messages
20
Reaction score
1
Points
3
"நைட் நேரத்துல யாராச்சும் ஒர்க் அவுட் பண்ணுவாங்களா"

"காலைல எழுந்திரிக்க முடியல அது தான் இப்ப பண்றேன்... ஏண்டா இப்புடி எப்ப பாத்தாலும் வேலை பாத்துக்குட்டே இருக்க போர் அடிக்கலயா உனக்கு..." ஆதவன் உதய்யின் கெஸ்ட் ஹவுசில் போடப்பட்டிருந்த டம் பெல்ஸ்ஸை (dumbbells) எடுத்து வேலை பார்த்துக்கொண்டே கேட்டான்...

இயந்திரமாய் வாழ்ந்த பின்பும் இயற்கை நிரம்பாத செயற்கை வாழ்வின் வெறுமையை நொடி பொழுதும் அனுபவித்த வண்ணம் இருந்தது அவன் இதயம் அதன் பிரதிபலிப்பே இந்த வேலையை தன் முழு நேர தொழிலாக மாற்றி இருந்தான் தனக்கென எந்த விருப்பு வெறுப்பும் இன்றி...

"பின்ன உன்ன மாதிரி காலேஜ் காலேஜ்-ஆ போகவா?" நக்கலும் சிரிப்பும் நிறைந்த குரலில் ஆதவனின் கவனம் அவன் புறம் திரும்ப உதய் இன்னும் வேலை தான் பார்த்துக் கொண்டிருந்தான்...

இது தான் உதய் வேலை ஒரு புறம் இருந்தாலும் சுற்றி நடக்கும் ஒவ்வொரு சிறிய அசைவும் அவன் கண்ணில் இருந்து தப்பாது...

"அட நெனச்சேன் ஒரே ஆளு வேற வேற வண்டில என்ன தொடர்ந் வரப்பையே நெனச்சேன்... இந்த வேலை வெட்டி இல்லாத நாய் தான் அந்த வேலைய பாத்துருக்கும்ன்னு"

"உன் கண்ணுல இருந்து யாரு தான் சிக்காம இருக்க முடியும்... ஆனாலும் நான் ஒரு ஆள உன் பின்னாடி வைப்பேன்... சரி சொல்லு யார் அது?"

ஆதவனுக்கு தென்றலும் புயலுமாய் மனம் தொட்டது காற்றின் நினைவுகள்...

"அத உன் ஆள வச்சு நீயே கண்டு புடி... நீ தான் பெரிய ஆள் ஆச்சே..."

"ம்ம்ம் அப்ப யாரோ ஒரு ஆள் இருக்கு? ம்ம்ம் கண்டுப் புடிக்கிறேன்"

"புடி புடி... ஆனா நீ இருக்க பாரேன் எல்லாத்தையும் அமைதியா பண்ணி முடிச்சிடுற"

"நா என்னடா பண்ணுனேன்?" உதய் அப்பாவியாக கேட்டான்...

"என்ன என்ன சொல்றான் பாருங்க" ஆதவன் தலையில் அடித்து கொண்டு வியர்வையால் நனைந்த அவன் சட்டையை கழட்டி உதய் மீது எறிந்தான்...

"ச்சீ ச்சீ நாறுதுடா"

"பின்ன ரெண்டு நாள் குளிக்காம இருந்தா நாறாம மனக்குமா?"

"போட மொத வீட்டை விட்டு..."

"அப்ப சோறுக்கு என்ன பண்ணுவ உங்க சித்தி வேற நீ சாப்புடுறது என் பொறுப்புன்னு காதுல ஓதி ஓதி விட்ருக்காங்க... சரி கதைக்கு வா பேச்சை எப்டி எல்லாம் மாத்தணும்னு உன்கிட்ட தான் கத்துக்கணும்.. அந்த பொண்ண பத்தி என்ன தெரிஞ்சது?"

"வேற என்ன பணம் தான்... ஆனா இன்னும் பெருசா எதுவும் பாக்க சொல்லல..."

"உன் அசிஸ்டன்ட் தான கேக்க வேண்டியது தான... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீ புள்ளி வச்சா போதும் அதுவே எல்லாத்தையும் அடுத்து ஒளறிடும்" உதய்க்கு சிரிப்பு தானாக உதட்டில் குடிக்கொண்டது அவள் அப்படி பட்ட பெண் தானே மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டாள் ஆனால் அவளது இயலாமையை காட்டிக் கொள்ளவும் என்றும் விரும்ப மாட்டாள்...

உதய்யின் கைபேசி சினுங்க அதை எடுத்து பார்த்தவன் அதில் ஜெயன் அனுப்பி இருந்த படத்தை பார்த்து புருவம் உயர்த்தி தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தான்... மனதில் ஒரு வித தளர்வு நேர்ந்தது போன்ற எண்ணம்... கால்கள் வேரூன்றியது போன்ற உணர்வு உடல் எங்கும் பரவி இருந்தது... நண்பன் இருந்தால் வாழ்வில் துன்பம் தெரியாது... நண்பன் பிரிந்தால் வாழ்வில் இன்பம் தெரியாது... ஆனால் இந்த நொடி எதை அனுபவிக்க வேண்டும் என்று சந்தேகம் மனதை ஆட்கொண்டது...

உதய்யின் அமைதியை பார்த்த ஆதவன் அவனது கைபேசியை வாங்கி பார்க்க அதில் தெரிந்த ஆதியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து நின்றான்...

உடனே ஜெயனை அழைக்க, "சொல்லுங்க சார்"

"எங்க இருக்கான் அவன்?"

"அவரு கெஸ்ட் ஹவுஸ் தெரு முக்குல தான் நிக்கிறாரு சார்"

உதய் கைபேசியை மீண்டும் வாங்கி பார்த்தவன் ஆதியின் தோற்றத்தை ஆழ்ந்து கவனித்தான்... ஆனால் ஜெயனின் வார்த்தைகளும் காதில் விழுக தான் செய்தது...

"இப்பயும் நிக்கிறானா?"

"ஆமா சார்... மதியம்-ல இருந்து இங்க தான் நிக்கிறாரு இணைக்கு மட்டும் இல்ல நெறய நாள் இப்புடி தான் வந்து நின்னுருக்காரு ஆனா வேற ஏதாச்சும் வீட்டுக்கு வந்துருப்பாருனு நெனச்சேன்..." ஆதவன் உதய்யை திரும்பி பார்க்க அவன் மொட்டை மாடியை நோக்கி வேக எட்டுக்களை வைத்து ஓடிக்கொண்டிருந்தான்...

"ஏதாச்சும் பண்ணனுமா சார்?"

"எத்தனை தடவ சொல்றது ஜெயன் அவனை ஒன்னும் பண்ணாத... நம்ம ஆளுங்க அவன் பக்கமே போக கூடாது... புரிஞ்சுதா?" கோவமாக கூறினான் ஆதவன்...

"சரி சார்" என்றான் யோசனையுடன் ஜெயன்... இந்த மனிதனுக்கு மட்டும் ஏன் இத்தனை சலுகைகள் என்று கேள்வி மட்டுமே விருட்சமாய் வளர்ந்து நின்றது ஜெயனின் மனதில்...

உதய் மொட்டை மாடிக்கு சென்று அந்த தெருவின் முனையில் வண்டியில் அமர்ந்து அதில் தலை வைத்து படுத்திருந்த ஆதியை பார்த்தான்... ஏதோ சொல்ல முடியாத உணர்வு தொண்டையை அடைத்தது...

அவன் வலியில் இருப்பது அவன் தோற்றத்திலேயே தெரிந்தது... எத்தனை நாட்கள் இவ்வாறு நின்றிருக்கின்றான்? எதற்காக இங்கே நிற்கிறான்? எவ்வளவு நேரம் இவ்வாறே நிற்கிறான்? கேள்வி மேல் கேள்வி அவன் மூலையில் வரிசை கட்டி நின்றது... ஆனால் எதற்கு? என்ன பிரச்சனையாக இருந்தாலும் இவ்வாறு இரவில் தெருவில் நிற்க வேண்டுமா... மனதில் கசப்பு பரவுவது போன்ற வலி நிறைந்த உணர்வு அலைபாய்ந்தது...

உதய்யின் பின்னால் வந்து நின்ற ஆதவனுக்கு தெரிந்தது அவன் என்ன யோசிக்கிறான் எப்படி தன் உணர்ச்சிகளை அடக்கி வைத்திருக்கின்றான் என்று அவன் முகமே எடுத்து கூறியது... அந்த நொடி உதய் மேல் ஆதவனுக்கு இருந்த கோவம் எல்லாம் காற்றில் கரைந்தோடியது இவ்வளவு பாசத்தை உள்ளுக்குள் வைத்து வெளியில் ஏன் கோவம் என்னும் முகமுடியை போட வேண்டும்...

"எதுக்குடா இவன் இங்க நிக்கிறான்?" உதய்க்கு முகம் எல்லாம் சிவந்திருந்தது கோவத்தில்...

"என்ன கேட்டா"

"கேட்டு சொல்லு டா"

"என்னால எல்லாம் முடியாது நீயே பொய் அவன்ட கேளு"

"டேய் சாவடிக்காத செம காண்டுல இருக்கேன் அவனை மொத கிளம்ப சொல்லு இல்லனா ஜெயன் கிட்ட சொல்லிடுவேன் அப்றம் என்கிட்டே மூஞ்சிய தூக்கிட்டு இருக்க கூடாது நீ"

"சொல்லு எனக்கு என்ன வந்துச்சு? நீ ஆச்சு அவனாச்சு" அவ்வளவு அலட்சியமாக ஆதவன் கூறினான்...

"ஏண்டா இப்புடி பண்ணுற...?"

"அவன் நின்னா உனக்கு என்னடா... ஏதோ ஒரு அநாதை பையன் நிக்கிறானு நெனச்சிட்டு விற்று"

உதய்யின் முகம் கோவத்தில் சிவந்து கருத்தது... மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தவன் தான் ஆனால் இந்த வார்த்தை நிச்சயம் அவன் சுமக்க வேண்டிய அவசியமே இல்லை வாழ்க்கையில் வலியை நிறைய அனுபவித்தவன்... இவ்வாறு எல்லாம் அவனை யாரும் பேசி விட கூடாதென்பதற்காக தானே இருபத்தி நான்கு மணி நேரமும் அவனுடனே இருந்தான் அந்த வெறுமையை உணர விடாமல்...

"நீயே இப்புடி பேசுனா மத்தவங்களுக்கு நமக்கும் என்னடா வித்யாசம்?" ஏதோ தன்னையே பேசியது போன்ற வலி தெரிந்தது அவன் கண்களில்... அந்த வலி ஆதவனின் இதயத்தை குளிர்வித்து...

'என்ன என்னமோ பேசுனியேடா ஆனா வெளிய காட்டுற கோவம் எல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டும் தான் என்னைக்கு தான் இதை எல்லாம் மறக்க போறியா தெரியல' மனதில் நினைத்ததை வெளியில் கூறாமல் வண்டியில் தலை சாய்த்து படுத்திருந்த ஆதியை மட்டுமே ஆதவன் பார்த்திருந்தான் உள்ளுக்குள் ஒரு மன்னிப்பையும் சிந்தி, 'மன்னிச்சிருடா உன்ன அனாதைன்னு சொன்னதுக்கு... உனக்கு எப்பையும் நாங்க இருப்போம் இத்தனை வருஷத்து பிரிவையும் சேந்து சந்தோசமா அனுபவிப்போம்... அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருக்கனும்'

"என்னடா கனவு கண்டுக்கிட்டு இருக்க மொத அவனை கிளம்ப சொல்லு அப்றம் கண்ட கண்ட நாய் எல்லாம் அவனை பேசும்" உதய் ஆதவனிடம் எரிந்து விழ...

ஆதவன் உதய்யை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்து, "இவனுகளே சண்டை போடுவானுகலாம் இவனுகளே திடுப்பானுகலாம் அப்பறம் இவனுகளே சப்போர்ட் பண்ணிக்குவானுகலாம்... நல்லா இருக்குடா உங்க கதை... இவைங்க போதைக்கு நாம தா ஊறுகாய்"

"பொலம்பாம ஜெயன்-கு போன் போடு"

"அவன் எல்லாம் வேணாம் நானே பாத்துக்குறேன்" உதய் அவன் மொத கவனத்தையும் ஆதியின் மீதே வைத்திருந்தான்...

அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அந்த இடத்தில விஷ்ணுவும் ஹரியும் அவனுக்கு அருகில் வண்டியை நிறுத்தினர்... சத்தம் கேட்ட ஆதி தலையை நிமிர்த்தி பார்க்க அவர்கள் இருவரையும் கண்டு கேள்வியாய் பார்த்து உதய்யின் வீட்டை ஒரு முறை பார்த்து மீண்டும் சகோதர்களின் புறம் பார்த்து வண்டியை விட்டு இறங்கி அதில் சாய்ந்து நின்றான் ஒரு ஆர்வமற்ற பார்வையுடன்... பேசுறத பேசிட்டு வேகமா போ என்ற பார்வை அது...

அந்த பக்கம் ஆதவன் உதய்யிடம், "இவனுகளுக்குள்ள என்னடா பிரச்னை மூஞ்சிய தூக்கி வச்சிட்டே இருக்கானுங்க?"

"எல்லாம் மாமா பாத்த வேலை தான்"

"மொத அந்த ஆள பாத்து செஞ்சு விடணும்... அவரு போற போக்கே சரி இல்ல நேத்து கூட என்னமோ தப்பு பண்ற மாதிரி அவரு வீட்டுக்கே பயந்து பயந்து போனாரு"

எங்கோப் பொறித் தட்டியது அவரைப் பற்றி கேட்டவுடன் "ஆதிகிட்ட யாரு விசியத்தை சொன்னது-னு ஜெயன் விசாரிச்சானான்னு கேளு"

"விருத்தாச்சலம்-னு ஒருத்தர் சார்" அவர்கள் பின்னே வந்து நின்ற ஜெயன் தனது ஐ-பாட் எடுத்து அவன் முன் நீட்டினான்... அதில் ஐம்பது வயதிற்கு குறையாமல் இருந்த சற்று பூசிய உடல் வாகுடைய ஒரு மனிதர் திரையை பார்த்து சிரித்த வண்ணம் இருந்தார்... கோட், சூட், டை என்று பக்கா தொழிலதிபரின் தோற்றம் ஆனால் அந்த கண்களில் இருந்த எகத்தாளம் ஏதோ ஒன்று சரியாய் படவில்லை...

"இத கண்டு புடிக்கிறதுக்கு உங்களுக்கு ஒரு மாசம் தேவ பட்டுச்சா ஜெயன்?"

"இல்ல சார் அவரை மீட் பண்ணதை வெளிய காட்ட விரும்பாத மாதிரி இருந்துச்சு சிசிடீவி ஃப்பூட்டேஜ் எல்லாமே அழிஞ்சிருந்துச்சு சார் அது தான் கொஞ்சம் லேட்... இவரு ஆதியை நம்ம கான்ஸ்டருக்ஷன் கம்பெனி-கு வெளிய பாத்து மீட் பன்னிருக்காரு அதுக்கு அப்றம் ஒரு காபி ஷாப்-ல மீட் பண்ணி பேசிருக்காங்க அவங்க மீட் பண்ணுன அடுத்த நாள் தான் அவரு நம்ம ஆபீஸ்-கு வந்து உங்கள மீட் பண்ணாரு... இவரு சிங்கப்பூர்ல கான்ஸ்டருக்ஷன் கம்பெனி வச்சிருக்காரு இவருக்கும் ஆதிக்கும் எந்த சம்மந்தமும் இல்ல ஆனா அவங்க கிட்ட தட்ட அரை மணி நேரத்திற்கு மேல பேசிருக்காங்க சார் அதுக்கு அப்றம் அவரு ஒடனே சிங்கப்பூக்கு கெளம்பி போய்ட்டாரு..."

"அவருக்கும் மாமாக்கும் எதாவது சம்மந்தம்?"

"இல்ல சார் ரெண்டு பேரும் இது வரைக்கும் மீட் பண்ணது கூட இல்லை"

மறுப்பாய் தலை அசைத்தவன், "இல்ல ஜெயன் எனக்கு அப்டி தோணல அவரு அன்னைக்கு மீட்டிங்-ல அவனை பாத்ததே சரி இல்லை இன்னும் கொஞ்சம் டீடைல்லா விசாரிங்க எவ்வளவு வேகமா முடியுமோ அவ்ளோ வேகமா எனக்கு தகவல் வேணும்... ஆதவா ஆதியை கிளோஸ்-ஆ வாட்ச் பண்ணு அவனை மட்டும் இல்ல தமிழ், கெளதம் மூணு பேரையும் வாட்ச் பண்ணு உனக்கு டைம் கெடக்கிறப்ப, மாமாவை அவன் பக்கத்துல வர விடாம பாத்துக்கோ அது உன் பொறுப்பு... எனக்கு எதிரா இருக்க எல்லாருமே அவரோட நண்பர்கள்... மாமா மேல ஒரு கண்ணு இருக்கட்டும் ஜெயன்... நீங்களா ஜேர்மன்-ல என்ன நடக்குதுன்னு சொல்லுவிங்கனு நானு எதிர் பாத்துட்டே இருக்கேன் எனக்கு இன்னும் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்குற மாதிரி தெரியல "

தலை அசைத்த ஜெயன், "ஒரு வாரம் டைம் குடுங்க சார்... சார் நீரஜ் கொஞ்சம் பிரச்னை பண்ணுறாரு"

"ஆபீஸ்ல நாளைக்கு பேசிக்கலாமா..." அது கேள்வியாய் வராமல் கட்டளையை மட்டுமே வந்தது அதை புரிந்து கொண்ட ஜெயன் அந்த இடத்தை விட்டு நகர இருவரும் ஆதியை நோக்கி தனது பார்வையை திருப்பினர்...

இப்பொழுதும் அதே போல் அவர்களுக்கு தனது வலது புற முகத்தை மட்டுமே காட்டி வண்டியில் அமர்ந்திருந்த ஆதி அவர்களை ஒரு பொருட்டாய் மதிக்காமல் ஒரு சிகரெட்டை எடுத்து பத்தவைத்து, "என்னடா ரொம்ப நேரமா நிக்கிறீங்க என்ன வேணும் பசிக்கிதா காசு இல்லையா?" ஏதோ பிச்சைக்காரனை பார்ப்பது போல பேசினான்...

அதோடு நிறுத்தாமல் ஒரு ஐம்பது ருபாய் எடுத்து அவர்கள் முன் நீட்டியவன், "உங்க அண்ணன் வயசு பசங்களுக்கு காசு கூட தர மாட்டான் போல... இந்தா வச்சுக்கோ... நல்லா முட்ட தோசையை சாப்பிடுங்க இருவது ருபாய் தான்"

தலை சூடேற ஆதியை நோக்கி கை ஓங்கி வந்த விஷ்ணுவை ஹரி தடுத்து நிறுத்த அந்த இடத்தில் அசராமல் அவர்களை சற்றும் மாறாத அதே ஏளன பார்வையை பதித்திருந்தான், "என்ன மயித்துக்கு நீ என்ன தடுக்குற என்ன பிச்சை போடுறானா அவன்? அடிச்சேன்னு வை குறுக்கு எலும்பு ஒடஞ்சிடும்"

அவன் பேச்சில் நக்கலாக சிரித்த ஆதி, "டேய் என்னடா உங்க பிரச்னை?"

"யாருடா நீ?"

"என்ன பத்தி தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?"

"உனக்கு அவளோ சீன் எல்லாம் இல்ல... எதுக்கு இப்ப நீ எங்க வீட்டுக்கு முன்னாடி நிக்கிற?" மேலும் கேள்வி மட்டுமே வந்தது சகோதரர்களிடமிருந்து...

"தோடா உங்க வீட்டுக்கு நான் வந்து குடிச்சிட்டு ஆட்டம் போட்டேனா நான் ரோடு-ல நிக்கிறேன் எவனுக்கும் கேக்க உரிமை இல்ல" என்று தனது சிகெரெட்டை ஆழ்ந்து இழுத்து அவர்கள் முகத்திற்கு நேராக ஊதினான்...

"இன்னைக்கு இவனுக்கு என் கையாள தான் சாவு" என்று விஷ்ணு ஆதியை நோக்கி வர இந்த முறை ஹரியாலும் அவனை தடுக்க இயலவில்லை... ஆனால் அவனை ஆர்வமின்றி பார்த்தவன் தன்னை நோக்கி ஓங்கிய விஷ்ணுவின் கைகளை பிடித்து அவன் முதுகிற்கு பின்னால் பிடித்து வைத்து தனக்கு எதிரே மூன்று வீடுகளை தாண்டி இருந்த உதய்யின் கெஸ்ட் ஹவுஸின் மேல் தலத்தில் நின்றிருந்த உதய்யை பார்த்து விஷ்ணுவை கை காட்டி பிறகு உதய்யை நோக்கி ஒற்றை விரலை நீட்டி வா என்று சைகை செய்து மீண்டும் விஷ்ணுவின் புறம் குறித்து சைகை செய்தான்...

"என்ன எலும்பு உடையிற சத்தம் கேக்குதா"

ஆதி ஹரியிடம் கேட்க ஹரி என்ன செய்வதென்று தெரியாமல் ஆதியிடம், "தெரியாம பேசிட்டான் விற்றுங்களேன்" கெஞ்சினான்...

"ம்ம்ம்ம்ம் உனக்கு இருக்குற விவரம் இவனுக்கு இல்லையே டா தம்பி..." சிகெரெட்டை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து உள் இழுத்தவன் ஹரியை பார்த்து புன்னகையை சிந்தினான்...

இவை எல்லாம் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த உதய் எந்த ஒரு உணர்வும் காட்டாமல் நிற்க விஷ்ணு தான் வலியில் துடித்துக் கொண்டிருந்தான், "ஸ்ஸ்ஸ் டேய் கைய விடு டா"

அங்கு ஆதவன், "என்னடா சொல்றான் அவன்?" என்றான் ஆதியின் சைகை பாஷை புரியாமல்...

"நான் போயி விஷ்ணுவை கூட்டிட்டு போகணுமாம்"

"டேய் போகாத... அங்க பாரு உன் தம்பி அவன் கூட சண்டை போட நெனச்சது மொத தப்பு விடு கொஞ்ச நேரம் அடி வாங்கட்டும் அப்ப ஆச்சும் கொஞ்சம் கம்மியா பேசட்டும்... ஆனா ஏன் டா உன் வாயையும் அவனுக்கு சேத்து குடுத்துட்டியா... என்னம்மா பேசுறான் வாய் வலிக்குமோ வலிக்காதோ?"

உதய் எதுவும் பேசவில்லை அவன் அமைதியே விஷ்ணுவிற்கு மேலும் மேலும் வலியை தர, உதய் ஆதவனை பார்க்க அதை புரிந்து கொண்ட ஆதவன் வெளியே சென்று ஆதியை தடுத்து நிறுத்தினான், "விடு டா அவனை"

ஆனால் அதை கேட்டால் அது ஆதி இல்லையே தனது பிடியை இறுக்கிய ஆதியின் பார்வை அங்கே மொட்டை மாடியில் மார்புக்கு குறுக்கே கை கட்டி நின்ற உதய்யை நோக்கி அனலாய் வீசியது... உதய்யோ நீ என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள் என்று அசராமல் நின்றான்...

"டேய் விடு டா அவனை உன் வீரத்தை சின்ன பையன்கிட்ட காட்டாத விடுன்னு சொல்றேன்ல" என்று ஆதியின் கையை விஷ்ணுவிடமிருந்து தளர்த்தியவன் விஷ்ணுவை பார்த்து முறைத்து...

"எதுக்குடா அவன்கிட்ட வம்பு வளத்துட்டு இருக்க அவனுக்கு பாக்ஸிங் தெரியும் நீ ஒரே அடில செத்துடுவ"

"என்னது பாக்ஸிங்-ஆ" ஹரி வாயை பிளந்து ஆதியை பார்த்தான், "நல்ல வேலை உனக்கு ஹெல்ப் பன்றேன்னு நான் நடுவுல வரலடா" நிம்மதி பெருமூச்சுடன் ஆனந்தமாக ஹரி விஷ்ணுவின் காதில் முணுமுணுக்க விஷ்ணு அவனை தீ பார்வை பார்த்தான்...

"என்ன இன்னும் உனக்கு தனியா பத்திரிகை வாசிக்கணுமா கெளம்பு மொத" என்று ஹரியையும் விஷ்ணுவையும் அனுப்பி வைத்தவன் ஆதியை பார்த்து, "இங்க என்ன பண்ணிட்டு இருக்க நீ?"

"ஏண்டா ஸ்கிரிப்ட் எழுதி வச்ச மாதிரி எல்லாரும் ஒரே கேள்வியை கேக்குறீங்க... உனக்கு எல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல கெளம்பு"

"டேய் ஆதி எதுவுவா இருந்தாலும் மனசு விட்டு பேசுடா உன் முகமே சரி இல்ல" என்று நெருங்கி வந்தவனை நிறுத்திய ஆதி...

"உங்ககிட்ட வந்து சொந்தம் கொண்டாடுற அளவுக்கு நா கிறுக்கு புடிச்சு சுத்தலை... அப்புடியே சுத்தினாலும் ரோடு ரோடா சுத்துவேனே தவற கண்டிப்பா உங்க கிட்ட வர மாட்டேன்... வந்துட்டானுக நல்லவன் மாதிரி" வார்த்தைகளை அல்லி வீசியவன் மறு பேச்சின்றி தனது வண்டியை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்...
 
Top