• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 1

Administrator
Staff member
Messages
525
Reaction score
717
Points
93
அத்தியாயம் -1



"கேன் யூ அன்டர் ஸ்டான்ட்? ஷேல் வீ மூவ் டூ த நெக்ஸ்ட் சம்?" என்று குரல் கொடுக்க, "எஸ் மேம்" மாணவர்கள் பதிலளிக்க, கருமமே கண்ணாக கரும்பலகையில் அடுத்த வினாவை எழுத ஆரம்பித்திருந்தாள் சாஹித்யா.


முப்பதை தொட துடிக்கும் வயது ஆனால் இப்பொழுதும் இருபத்தி இரண்டு போல் தான் தோற்றமளிப்பாள். ஒரு குழந்தைக்கு தாய் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

தனது நிறத்திற்கு எடுப்பான அடர் நீல வண்ண காட்டன் சேலை உடுத்தி ஒரு மெலிதான செயின், வாட்ச் அணிந்திருந்தாள். ஒரு சிறிய பொட்டு மட்டும் வைத்திருக்க அதுவே அவளை அழகாக காட்டிக் கொண்டிருந்தது. ஒப்பனை செய்யா விட்டாலும் நேர்த்தியாக இருக்க விரும்புவாள்.


பெண்கள் கல்லூரி என்றாலும் சில மாணவிகளே அவளை சைட் அடிப்பதுண்டு.


வேகமாக தனது வகுப்பை முடித்தவள், "ஓகே ஸ்டூடன்ஸ், வீ வில் சீ த ரெஸ்ட் ஆஃப் த சம் டூமாரோ" என்று தனது மொபைலையும் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டாள்.


அவள் ஓய்வறைக்குள் நுழைய வாசலில் அமர்ந்திருந்த வித்யா, "ஹாய் சாஹி, நான் கேட்டது" என்றிட தனது புத்தகத்தில் மடித்து வைத்திருந்த பேப்பரை அவளிடம் கொடுத்தவள், "புரியலைனா கேளுங்க" என்று கூறினாள்.


"தாங்க்ஸ் சாஹி" என்று கூற பதிலுக்கு புன்னகைத்து விட்டு உள்ளே நுழைந்து தனது இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

அவள் செல்வதை உறுதி செய்த திலகா, "வித்யா, அவகிட்ட என்ன கேட்ட?" என்று வினவ,

"நான் தான் அன்னைக்கு உங்ககிட்ட கேட்டேனே ஒரு ப்ராப்ளம், நீங்க கூட தெரியாதுனு சொன்னீங்களே."

"சரி, அதை எதுக்கு அவகிட்ட கேட்குற. உனக்கு வேற ஆளே கிடைக்கலையா?"

"ஏன்க்கா."

"சரியான திமிர் பிடிச்சவ டி அவ. அன்னைக்கு நாங்க மேனேஜ்மென்ட்க்கு எதிரா கிளாஸ் எடுக்காம போராட்டம் பண்ணப்ப இவ மட்டும் க்ளாஸ் எடுக்க போய்ட்டா.
ஏதோ உலகத்திலே இவ தான் நல்லவ மாதிரி. புருஷன்னை விட்டு வந்துட்டாளாமே."

"இது எப்பக்கா?"

"உனக்கு தெரியாதா? எனக்கே இப்ப தான் தெரியும். சரியான அழுத்தக்காரி. இவளுக்கு இருக்க திமிர்க்கு இங்க பேசுற மாதிரியே அங்கையும் எதிர்த்து பேசியிருப்பா. அதான் அவன் துரத்தி விட்ருப்பான்" என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்க அவர்கள் அமர்ந்திருந்த சுவற்றின் மறுபுறம் இருந்த நூலகத்தில் நின்று புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த சாஹித்யாவிற்கு சன்னல் வழியாக தெளிவாக கேட்டது அவர்கள் பேசியது அனைத்தும்.

அவளுக்கு அவ்வளவு ஒரு கோபம், அதை குறைப்பதற்காக புத்தகத்தை இறுக பற்றிக் கொண்டாள்.

சாஹித்யா எதிலுமே சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள். புத்திக் கூர்மை சற்று அதிகம் அதனாலே ஒரே முயற்சியில் பேராசியர் பணிக்கு வந்து விட்டாள்.

இவளை விட வயதிற்கு மூத்தவர்கள் அங்கிருந்தாலும் சாஹியின் திறமைக்கும் உழைப்பிற்கும் மதிப்பளிக்கும் விதமாக அந்த துறையின் தலைவர் அவளை துணை தலைவராக நியமித்து விட்டார்.


அதுவே மற்றவரின் வயிற்றெரிச்சலுக்கு காரணமாகி விட்டது. அதுவுமில்லாமல் இவள் பொறுப்பேற்றவுடன் நேரத்திற்கு வகுப்பிற்கு செல்ல வேண்டும் தேர்விற்கு முன்னதாக பாடத்திட்டத்தை முடித்து விட வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

அதனாலே சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவளை தாக்கி கொண்டிருக்க சாஹித்யா அதை எல்லாம் ஒரு பொருட்டாய் மதிக்காமல் கடந்து விடுவாள்.

ஆனால் இன்று அவர்கள் சாஹியின் தனிபட்ட வாழ்க்கையை பேச அவளால் தாங்க முடியவில்லை.

'ச்சை..என்ன ஜென்மங்களோ! தப்பு செய்யாதீங்கனு சொன்னா இப்படி தான் பேசுவாங்களா. வாங்குற சம்பளத்துக்கு தான வேலை பார்க்க சொன்னேன்' என மனதில் குமுறியவள் வெளியில் வந்து விட்டாள்.


அவளை கண்ட திலகா முகம் ஒரு நொடி இருண்டு விட வேகமாக வாயை மூடிக் கொண்டார்.

"திலகா மேம், உங்களுக்கு இந்த ஹவர் க்ளாஸ் இல்லையா?" என பல்லை கடித்துக் கொண்டு கேட்க,



"இந்த கிளம்பீட்டேன் சாஹி" என்று புன்னகைத்துக் கொண்டே சொல்லியவர் தனது புத்தகத்தை எடுத்துக் கொண்டு கிளம்ப,

"ஒரு நிமிஷம் மேம், நீங்க க்ளாஸ் எடுக்கிற பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ஸ்க்கு கொஞ்சம் புரியலையாம். என்கிட்ட பர்சனலா சொன்னாங்க. நீங்க மத்த விஷயத்தை விட்டு அதுல கவனம் செலுத்துனா நல்லா இருக்கும்" என்று அழுத்தி கூற அவளை ஒரு பார்வை பார்த்தவர், "சரிம்மா" என்பதோடு கிளம்பி விட்டார்.

அவளுக்கு பின்னால் எவ்வளவு பேசினாலும் முன்னால் பேசும் தைரியம் யாரிடமும் இல்லை. அவளது பேச்சு அவ்வளவு தெளிவாகவும் திருத்தமாகவும் இருக்கும்.

தப்பு செய்யாத போது நான் எதற்கு பயப்பட வேண்டும் என்ற நிமிர்வு அவளிடம் எப்போதுமே உண்டு.

அதுவே நிறைய இடங்களில் அவளுக்கு எதிரியாக மாறி விட்டது.

ஆனால் அவள் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது தன் வேலையை மட்டும் செய்து கொண்டு முன்னேறுவாள்.


அவளையே பார்த்துக் கொண்டிருந்த வித்யாவை பார்த்தவள், "என்ன மேடம் ஏதாவது புரிஞ்சதா?" எனக் கேட்க பயத்தில் எல்லா புறமும் தலையை ஆட்ட சாஹித்யா மீண்டும் தனது அறைக்குள் நுழைந்து அடுத்த வகுப்பிற்கான குறிப்புகளை எடுக்க புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தாள்.

ஆனால் அவள் மனம் முழுவதும் திலகா கூறியதையே சுற்றி வந்ததது.


அவளுள் ஆயிரம் கேள்விகள்‌.
எல்லா விஷயத்திலும் சரியா இருந்த நான் எப்படி அருள் விஷயத்தில் தவறி விட்டேன் என்பதே அவளது கேள்வி.

பல முறை கேட்டு விட்டாள் அவளிடம் பதிலில்லை. காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம் ஆனால் எந்த இடத்தில் இருவருமே தவறினோம் என ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருந்தவளை கல்லூரியின் அடுத்த வகுப்பிற்கான மணியின் ஒலி கலைத்தது.

தன் தலையை உலுக்கி சமன் செய்தவள் வேகமாக புத்தகத்தை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவள் வகுப்பறைக்கு நடந்து கொண்டிருக்க மொபைல் ஒலித்தது. அழைப்பை ஏற்றவள், "சொல்லுங்கம்மா" என்றிட,

"சாஹிம்மா, மாப்பிள்ளை வந்து விஷாலிய அழைச்சுட்டு போயிருக்கார். அப்படியே உன்கிட்ட வந்து விட்டுடுறேன்னு சொல்லியிருக்கார்" என்று கூற அவள் அமைதியாகி விட்டாள்.

"என்னம்மா, எதுவும் சொல்ல மாட்ற?"

"சரிம்மா, நான் பார்த்துக்கிறேன்" என அழைப்பை துண்டித்தவள் வகுப்பறைக்குள் நுழைந்து அமர்ந்து விட்டாள்.

அவளுக்கு தலை வலிப்பது போல் தோன்ற பாடம் எடுக்க விருப்பமில்லாதவள், "நாளைக்கு டெஸ்ட்க்கு படிங்க" என்று விட்டு அமைதியாக தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.


"அருள்" இந்த பெயரை கேட்டவுடனே அவளது உடம்பு சிலிர்த்த காலமும் உண்டு.

இப்பொழுது அந்த பெயரை மறக்க நினைக்கிறாள் ஆனால் முடியவில்லை.

அந்த வகுப்பு முடியும் வரை காத்திருந்தவள் வேகமாக வெளியேறி தனது பையை‌ எடுத்துக் கொண்டு வழக்கமாக காத்திருக்கும் அந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

அவளுக்கு இருக்கும் எல்லா பிரச்சனைகளுக்குமே அவளிடம் இப்போதிருக்கும் ஒரே தீர்வு விஷாலி மட்டுமே.

முடிந்து விட்டது என்று நினைத்த வாழ்க்கையை மீண்டும் துளிர்க்க வைத்தவள்.

அருளை வெறுப்பது போல வெளியில் காட்டிக் கொண்டாலும் அவன் மீது எல்லையில்லா காதல் கரை புரண்டு தான் ஓடுகிறது.

ஆனால் இருவரிடமுமே காதலை விட ஈகோ தலை தூக்கி விட அதற்கு பரிசாக கிடைத்தது தான் இந்த பிரிவு.

அவனிடமிருந்து தான் விலகியிருந்தாலும் விஷாலியை விலக்கி வைக்க மனது வரவில்லை.

அவர்களது வாழ்க்கையை நினைத்து சிந்தனையில் இருக்க,


"ப்பா...அம்மா அங்க இருக்காங்க" என்ற அவளது குரல் கலைக்க நிமிர்ந்து பார்த்தாள் இருவரையும்.


அருள் என்ற அருள் மொழி வர்மன் எப்பொழுதும் அளவான தாடி தான் அவனது அழகே. நன்றாக சிவந்த நிறம், அலட்சியமான பார்வை கொண்ட கண்கள் அதிலே தெரியும் அவனது திமிர் தான் அவனுடைய கெத்து.

அவளை நோக்கி குழந்தையுடன் வந்தான். அவனது கண்கள் முழுவதுமே சாஹித்யாவையே சுற்றி வந்தது.



விஷாலி கைகளில் இரண்டு பொம்மைகளையும் மற்றொரு கையில் சாக்லேட் ஐஸ்கீரிம் வைத்திருந்தாள்.

அதை பார்த்தவுடனே சாஹித்யாவிற்கு ஏகத்துக்கும் கோபம் ஏறியது.

அவளுக்கு எளிதில் சளி பிடித்து விடுவதால் ஐஸ்கீரிம் கொடுக்க கூடாது என்பது மருத்துவரின் பரிந்துரை.

அருள் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து விடுபவன் ஆனால் சாஹித்யா அவனுக்கு நேரெதிர்.

காதலிக்கும் போது அவர்களின் குறைகள் பெரிதாக தெரியாது போல. ஆம் அது ஒரு மாய உலகம் தானே! அதிலிருந்து திருமணம் என்ற நிஜ உலகிற்கு அடியெடுத்து வைக்கும் பொழுதில் தான் நிறைகள் கூட குறையாக மாறி விடுவது என்ன மாதிரி விந்தையோ!


தன் கையிருந்த குழந்தையை இறக்கி விட்டவன் சாஹித்யாவை பார்த்துக் கொண்டே விஷாலியின் கன்னத்தில் முத்தமிட அவள் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

இரண்டு நிமிடம் அமர்ந்து இருவருமே தங்களின் பிரச்சனையை பேசி தீர்த்துக் கொண்டிருக்கலாம் தான்.

ஆனால் அதை செய்ய மறுத்து விலகி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.


மீண்டும் அருளின் கன்னத்தில் தனது சாக்லேட் சாப்பிட்ட இதழுடன் முத்தமிட்ட விஷாலி, "ப்பா.... நீங்க எங்க கூடவே இருங்க, ப்ளீஸ் என்னோட ப்ரெண்ட்ஸ் கூட எல்லாம் அப்பா எப்பவுமே இருப்பாங்களாமே. நீங்க மட்டும் ஏன் என் கூட இல்லை?" என தனது மழலை குரலில் வினவ, அவன் நிமிர்ந்து சாஹியை பார்க்க, அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரது பார்வையும் மற்றொருவரை குறை கூறிக் கொண்டிருக்க இடையில் தவித்தது என்னவோ ஏதும் அறியா அந்த பிஞ்சின் இதயம் தான்.

அவளது கேள்வி இருவரையும் தாக்கியது. இருவரையும் நோக்கி வீசப்பட்டாலும் பதில் சொல்வதற்கு தான் வார்த்தை இல்லையே!


அவளை இறுக்கி அணைத்து கொண்டவன் கண்கள் ஒரு நிமிடம் கலங்க சாஹி முகத்தை திருப்பி தனது கண்ணீரை உள் இழுத்துக் கொண்டாள்.

அவளுக்கு வா என்றழைத்தும் செல்ல மனம் வரவில்லை போலும்!

எனக்கு மரியாதை இல்லாத இடத்திற்கு நான் ஏன் செல்ல வேண்டும் என்பது அந்த பேதையின் எண்ணமே.


விரிசல் விரிசல் தான்! ஆனால் அதை சரி செய்திட நேரமில்லாது கால சக்கரத்தில் ஆளுக்கு ஒரு முனையில் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.


தொடரும்...
 
Top