காதல் 19:
திருச்சியில் இருந்து மும்பை செல்லும் விமானம் புறப்பட தயாராக உள்ளது என்று மூன்று மொழிகளிலும் ஒலிக்கப்பட திருச்சி விமான நிலையமே சற்று பரபரப்பாக இருந்தது.
வெளியூரில் இருந்து வந்தவர்கள் வெளியே சென்று கொண்டிருக்க பயணம் செய்ய வேண்டியவர்கள் தங்கள் கையில் பெட்டியுடன் உள்ளே சென்றனர்.
அந்த பரபரப்பு எதுவுமே கருத்தில் பதியவில்லை என்பது போல அமைதியாக குருவின் பின்னால் நடந்து சென்றாள் மகிழினி.
மகியின் கையில் பெரிய ட்ராலி இருக்க குருவின் கையில் கவின் இருந்தான். மூவரும் சென்று தங்களுக்கான இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்தில் விமானம் புறப்பட்டது.
கவின், “ப்பா எங்க போறோம். எதுக்கு போறோம்…?” என்று வரிசையாக வினாக்களை தொடுக்க,
குருவும், “மும்பைக்கு அப்பாவோட ப்ரெண்ட்ட பாக்க போறோம்” என்று பொறுமையாக பதில் அளித்தான்.
வழக்கம் போல மகிழ் பார்வையாளர் தான். ஆனால் எப்போதும் அவர்கள் பேசுவதை கேட்கும் சுவாரஸ்யம் அவளது முகத்தில் இருக்கும்.
ஆனால் இப்போது ஒரு ஆழ்ந்த அமைதி இருந்தது. அந்த அமைதிக்கு பின்னால் இருந்த மனப்போராட்டம் அவள் மட்டுமே அறிந்தது.
அவளது பார்வை முழுவதும் கள்ளமில்லா சிரிப்புடன் குருவிடம் அளவளாவி கொண்டிருந்த கவினிடம்.
இதோ இந்த ஒரு மாதமும் அவளுடைய பார்வை கவினிடம். மனது முழுவதும் வேதனையுடன் அவனை தான் பார்வை ஆவி ஆன்மா எல்லாம் சுற்றுகிறது.
‘எப்படி எப்படி… எனக்கு தெரியாமல் போயிற்று. ஏன் என்னிடம் பெற்றவர்கள் கூறவில்லை. அப்படி கூறியிருந்தால் இந்த நான்கு வருடத்தில் எப்பாடுபட்டாவது கவினை குணப்படுத்தி இருப்பேனே… இதோ இப்போது இறுதியில் இந்த ஒரு சூழ்நிலைக்கு ஆளாக நேர்ந்திருக்காதே.’
‘இதோ குரு என்று ஒருவர் என்னுடன் இருக்கிறார். கவினுக்காக வந்து ஆபத்தில் உதவுகிறார். ஒருவேளை இந்த ஒப்பந்த திருமணம் நடக்காது இருந்தால் தான் என்ன செய்திருப்பேன். எப்படி கவினுக்கு மருத்துவம் பார்க்க முயற்சித்திருப்பேன்’ எண்ணவே உடல் நடுங்கியது.
‘என்ன முயன்றாலும் ஐம்பது லட்சத்தை எப்படி ஏற்பாடு செய்திருப்பேன். இதோ கடவுள் போல, போல என்ன கடவுளே தான் இவர் உதவவில்லை என்றால் தன்னால் எதுவும் செய்திருக்க இயலாது’ என்று நினைத்த போது விழிகளின் ஓரம் நீர்ப்படலம்.
சடுதியில் இமை சிமிட்டி தன்னை சமாளித்தவள் விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.
மனதில் கவினுக்கு நல்லபடியாக சிகிச்சை நடந்து அவனை விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பது மட்டும் தான் ஓடியது.
கவினுடைய பிரச்சனையை அறிந்து கொண்டதில் இருந்தே மகியின் மனது இதனையன்றி வேறு எதையும் சிந்திக்கவில்லை.
நினைவில் அன்று மருத்துவமனையில் நடந்தது நிழலாடியது.
மயங்கி சரிந்த மகிழை அருகில் உள்ள மற்றொரு அறையில் அனுமதித்தவன் நேரே மருத்துவரிடம் சென்று கவினுக்கு என்ன ஆயிற்று அவனை குணமாக்க என்ன செய்ய வேண்டும் எங்கு சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்று எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டான்.
அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை மூளை அடுத்தடுத்து திட்டமிட மருத்துவம் பயின்றுவிட்டு இதய அறுவை சிகிச்சை நிபுனனாக பெரிய மருத்துவமனையை நன்முறையில் நிர்வகித்து வரும் தன்னுடைய பள்ளி தோழன் முரளியை தொடர்பு கொண்டு பேசினான்.
கவினுடைய மருத்துவ அறிக்கையை அனுப்பி வைத்து ஒப்புதல் கேட்டான். முரளியும் கவினது அறிக்கையை பார்த்துவிட்டு இதய மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என்று கூறிவிட்டான்.
குருவும் சரி வேறுவழி இல்லை ஆதலால் அதனையே ண
செய்திடுவோம் என்று எண்ணி அதற்கான ஆயத்தங்களை செய்ய கூறினான். பணம் என்பது இதில் ஒரு பொருட்டே இல்லை. கவின் முழுதாக குணமடைய வேண்டும் என்பதை அழுத்தி கூறியிருந்தான்.
இதற்கிடையில் மகிழ் கண் விழித்து விட்டதாக குருவிற்கு செய்தி வர எழுந்து அழுத்தமான காலடிகளுடன் உள்ளே சென்றான்.
கையில் குளுக்கோஸ் ஏறி கொண்டிருக்க விழிகளை சிரமப்பட்டு திறந்தவள் வாடிய கொடியாய் கிடந்தாள். சில நொடிகளில் தான் இருக்கும் இடமும் நடந்த விடயமும் உறைக்க,
“கவின்…” என்று பதற்றத்துடன் எழுந்து கொள்ள முயற்சிக்க கையில் போடப்பட்டிருந்த குளுக்கோஸை கவனிக்காது விட ஊசி இழுப்பட்டதில் கையில் இருந்து ரத்தம் ஆறாக ஓடியது.
குரு அதில் பதறி, “ஏய் மகிழ்…” என்று அவளருகில் வந்தவன்,
“நர்ஸ்…” என்று உரத்த குரலில் அழைத்திருந்தான்.
இவனது சத்தத்தில் செவிலிப்பெண் ஓடி வர, குரு மகியின் கையைப் பிடித்திருந்தான்.
“அச்ச்சோ என்னாச்சு. ஏன் மேடம் ட்ரிப்ஸ் ஏறும் போது எழுந்து போக ட்ரை பண்ணிங்க” என்று பதறி கையில் இருந்த ஊசியை அகற்றிவிட்டு கையில் கட்டிட முயற்சித்தாள்.
ஆனால் இடையில் இருந்த சில கணங்களிலே குருவின் கை குருதியில் நனைந்திருந்தது. அவனுடைய நீல நிற சட்டை சற்று சிவப்பு நிறம் பூசியிருந்தது.
“நான் கவினை பாக்கணும்” என்று மகிழ் நகர முயற்சிக்க, அவள் நகராதாவாறு அணைக்கட்டி குரு நின்று கொண்டான்.
செவிலியர் கட்டிட்டதும், “எவ்ளோ ப்ளட் லாஸ் ஆகிடுச்சு. ஏற்கனவே அனிமீக்கா இருக்கிங்க. இனி இப்படி பண்ணாதிங்க” என்று அறிவுரை கொடுத்துவிட்டு நகர,
மகிழுக்கு அது எதுவும் மண்டையில் ஏறவில்லை. கவின் மட்டும் தான் மூளையில் இருந்தான்.
செவிலியர் அகன்றதும், “விடுங்க நான் கவினை பாக்கணும்” என்று தன் போக்கில் கூறிட,
“மகிழ் லுக் ஹியர்…” என்றவனது சத்தமான அழுத்தமான குரலிலே அவனது பொறுமையின்மை தெரிந்தது.
மகிழுக்கும் அந்த குரல் உள்ளே நடுக்கத்தை கொடுக்க சட்டென்று அமைதியாகிவிட்டாள்.
“உட்காரு பர்ஸ்ட்” என்றவனது ஆணைக்கு இணங்கி சடுதியில் அமர்ந்தாள்.
அங்கே இருந்த ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அவளருகே அமர்ந்தவன்,
“மகிழினி எமோஷ்னல் ஆகாம. நான் சொல்றதை கேளு…” என்று உத்தரவிட்டவன்,
“கவினுக்கு எதுவுமில்லை. நான் அவனுக்கு எதுவும் ஆகவிட மாட்டேன்.” அதை பர்ஸ்ட் உன் மண்டையில ஏத்திக்கோ என்றிட,
இவளுக்கு விழிகளில் நீர் பெருகியது.
“இனிமேல் இப்படி அழுது சத்தம் போடக்கூடாது. முக்கியமா கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி என் கால்…” என்று தொடங்கியவன்,
“ப்ச் அது மாதிரி எதுவும் செய்ய கூடாது. காட் இட்” என்றவனது குரலே அவளது தலையை அசைக்க வைத்தது.
“நம்ம அக்ரிமெண்ட் உனக்கு ஞாபகம் இருக்கு தானே. இல்லைனா போய் இன்னொரு டைம் படி. இந்த டூ இயர்ஸ் நீங்க நாளு பேரும் என்னோட ரெஸ்பான்ஸிபிலிட்டி. ஸோ கவினுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்து க்யூர் பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு. அதுக்கான பணமும் என்னோட பொறுப்பு தான். இனிமே என் முன்னாடி அழுது ட்ராமா பண்ண கூடாது. எனக்கு அது சுத்தமா பிடிக்காது” என்றவன்,